7. TKSN

3
1670

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 7

இரவு பல்வேறு மன சஞ்சலங்களில் தாமதமாக தூங்கி, அவசரமாக எழுந்து, கையில் கிடைத்ததை உடுத்து தயாராகி அலுவலகம் வந்துச் சேர்ந்தாள். ஐந்து நிமிடம் முன்பு வந்து விட்டதால் ஆசுவாசமாக உணர்ந்தாள். தனது குழுவிற்கு வேலையின் சமீபத்திய மாற்றங்களை புரிய வைத்தாள். அவளது வழி நடத்துதலின் படி அவர்கள் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

பசி பொறுக்க முடியாமல் சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லி கஃபேடேரியா சென்று மொக்கினாள். நிஜமாகவே மொக்கினாள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிக மன அழுத்தத்தில் அவள் அதிகமாக சாப்பிடுவதுண்டு. தனது சுற்றளவு பெருகுவதை அவள் அறியாமல் இல்லை. ஆனால், என்ன செய்வதென புரியவில்லை. வயது முப்பதை நெருங்குவதால் இப்படி உடலளவில் மாறிக் கொண்டு இருக்கிறோம் என எண்ணிக் கொள்வாள். ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி சற்று கண்கள் உதடுகளை அலங்கரிக்கவும் பார்க்கும் படியாக இருந்தாள். முன் தினத்தின் கவலைகளின் மிச்சம் தெரிகின்றதா? எனக் கூர்ந்து பார்த்தாள். தெரியவில்லை என்றதும் திருப்திக் கொண்டாள்.

“ஆலிஸ் யூ ஆர் லுக்கிங்க் ப்ரெட்டி’ (அழகாயிருக்கிறாய் ஆலிஸ்) என சக பணியாளர் பாராட்டவும் புன்னகை விகசித்தது. மலர்ந்த முகத்தினளாக வெளியே வந்தாள். அவளை வழியில் கண்ட முந்தைய டீம் மெம்பர்கள் அவளிடம் அளவளாவ ஆரம்பித்தனர். அரட்டை, சிரிப்பு என களைக்கட்டியது. தனது இருக்கைக்கு திரும்பவும் அங்கே மணிவண்ணன் டீம் மெம்பர் சாதிக்கிடம் எதையோ கேட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.

“ஆலிஸ் லெட்ஸ் மீட்” அழைத்த மணிவண்ணன் அவளை கேபினுக்குள் அழைத்துச் செல்ல எதிர்பார்த்தது போலவே சில திட்டுக்கள் கிடைத்திருந்தன.

‘உன்னை இவற்றை உடனே செயல்படுத்த வேண்டாமென கூறியிருந்தேனே? நினைவில்லையா?”

“நேற்று நாம் பேசும் போது இதைத்தானே தீர்மானித்தோம் மணிவண்ணன்?”

“அதன் பின்னர் நான் சொன்னது உன் மூளைக்குள் ஏறவில்லையா என்ன? நமது திட்டத்தை பிரனீத்திடம் ஒருமுறை காட்டி அனுமதி வாங்கிய பின்னர் செய்ய சொல்லி இருந்தேன் இல்லையா?”

“நான் டாகுமெண்டில் குறிப்பிட்டிருந்தது போலத்தான் செய்தேன்…”

“இது அதிக பிரசங்கித்தனம் ஆலிஸ்” அவன் குரல் உயரும் முன்னே அந்த கேபினின் கதவு தட்டப்பட்டது. இருவரும் வாசலைப் பார்க்க கதவை திறந்தவனாக வெளியிலிருந்து உள்ளே எட்டிப் பார்த்தான் பிரனீத். ஆலிஸிற்கு அவமானத்தில் தொண்டை உலர்ந்துப் போனது.

‘இந்த நேரத்திலா இவன் இங்கு வரவேண்டும்?’ அவன் முன்னால் அவமானப்பட தெம்பில்லாதவளாக நின்றாள், கண்களில் ஒரு நாளும் இல்லாமல் ஈரப்பதம் உணர, கண்ணீர் விட்டுவிடுவோமோ? எனும் கலக்கத்தில் நின்றாள்.

“கேன் வி ப்ரிபோன் அவர் மீட் … ஐ மீன் கேன் வீ செட் தி மீட் நவ்?” (நாம நமது மீட்டிங்கை கொஞ்ச நேரம் முன்னதாக அதாவது இப்போது வைத்துக் கொள்ள இயலுமா?)

“ஓ ஷ்யூர்” மணிவண்ணன் சரியென சம்மதிக்க, உள்ளே வந்தவன் ஆலிஸிடம் கேள்வி மேல் கேள்விகள் கேட்கலானான். அவள் தனது திருத்தப்பட்ட புதிய வேலைமுறையைக் கூறி இதை இவ்வாறு செய்ய பணித்திருக்கிறேன் எனக் கூறவும்,

‘எக்ஸெலெண்ட்” (பிரமாதம்) எனும் குரல் ஒலித்தது… சொன்னவனை ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்தவள் தனது மேனேஜர் முகத்தைப் பார்த்தாள்.

“ஓ நல்லது, ஆலீஸின் திட்டம் முழுவதும் சரிதானா? இல்லை எதுவும் மாற்றங்கள் வேண்டுமா? என்று பார்த்து சொல்ல முடியுமா? என பணிவாக கேட்டான்.

“ஆலிஸ் மெயில் அனுப்பி விடு, அவர் மற்றொரு முறை பார்த்துவிட்டு சொல்லட்டும்?”

“சரி நான் பார்த்து சொல்கிறேன்” விடைப்பெற்றான் பிரனீத். அவன் சென்றதும் மணிவண்ணன் மறுபடி சில அர்ச்சனைகளை பொழிந்தே அவளை வெளியே செல்ல விட்டான்.

ஆலீஸிற்கு அனுமதி பெறாமல் புதிய திட்டத்தை செயல்படுத்திய தனது தவறும் புரிந்தது, மணிவண்ணனின் எச்சரிக்கை உணர்வில் தவறில்லை என்பதை புரிந்துக் கொண்டாள். நல்ல வேளை பிரனீத் முன்பு என் மூக்கு பிழைத்துக் கொண்டது என தடவிக் கொண்டாள்.

அந்த பழைய தாள் கையில் கிடைக்கவும் கிறுக்கலானாள்,

டேய் மணிவண்ணா

கரு மேக கண்ணா

உன்னை நல்லவன் என்றே நினைக்க,

நீ திட்டினாயே முட்டைக் கண்ணா…

“ஹேவ் யூ செண்ட் தேட் மெயில் ஆலிஸ்?”(அந்த மின்னஞ்சல் அனுப்பி விட்டாயா ஆலிஸ்?) மணிவண்ணன் குரல் கேட்கவும், ‘செண்டிங்க் மணிவண்ணன்” ( அனுப்பிட்டே இருக்கிறேன்) என்று பதிலளித்தவாறே தூரம் செல்பவனைப் பார்த்து முறைத்தவள் தன் வேலையில் ஆழ்ந்தாள்.

“இது என்ன எழுதி இருக்கீங்க ஆலிஸ்?” அவள் கிறுக்கி வைத்ததை எடுக்க வந்த விக்ரமை பார்த்தவள் அவன் எடுக்கவிருந்த அந்த பேப்பரை எடுத்து தனது டைரிக்குள்ளாக வைத்துக் கொண்டாள்.

இவன் தான் மணிவண்ணன் நியமித்திருக்கும் ஒற்றன் என்பதை அவள் அறிவாள், பல மேனேஜர்கள் கையாளும் உத்தி இது. தனக்குப் பின்னால் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள ஒவ்வொரு குழுவிலும் ஒருவரை வைத்திருப்பது உண்டு. இன்று வேலை மாற்றம் செய்ததும் மணிவண்ணனுக்கு இவன் தான் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் மதியம் வேலைக்கு வருகின்றவன் இவ்வளவு விரைவில் வருவானேன்?

அடுத்ததாக ஒற்றன் கிளம்பிச் செல்ல அவனுக்கும் கவிதாயினியால் வெகுச் சிறப்பாக கவிதை வரையப்பட்டது.

தன்னைச் சுற்றி ஆயிரம் நடக்க, வழக்கம் போல கண்டுக் கொள்ளாமல் தன் வேலையில் ஆழ்ந்தாள். மதிய உணவிற்கு பின்னர் தனது டீமிற்கு எதையோ சொல்ல குரல் எழுப்பியவள் எதிரில் டீம் மீட் நடப்பதைக் கண்டு கவனித்தாள். சில நேரங்களில் வேலை நேரம் கெடாமல் இருக்க அவர்கள் இருக்கும் இடத்திலேயே சூப்பர்வைசர்கள் மீட்டிங்க் நடத்துவதுண்டு.

‘ஓ இந்தக் குழு காலையில் அவர்களது ஜோனுக்கு (zone) மாறி வந்தவர்கள் தானே? ஏதோ குழப்பத்தில் அந்த டீம் யாருடையது எனக் கவனிக்காமல் விட்டிருந்தாள். அங்கு மீட்டிங்க் எடுப்பவர் யார்? டெஸ்கில் சாய்வாய் அமர்ந்தவாறு பின்பக்கம் மட்டும் தெரிந்தபடி, இவர் தெரிந்த நபர் போலவே இருக்கின்றாரே? யாராக இருக்கும்? எண்ணியவளுக்கு குப்பென்று வியர்த்தது.

‘இது நம்ம பிரனீத் இல்ல? , அட ஆமாம் பிரனீத்தே தான். நேற்று ஒரு டீம் இவர்களது பகுதிக்கு மாறப் போவதாகச் சொன்னபோது கவனமில்லாமல் கேட்டுக் கொண்டு இருந்தாளே?

திடீரென மனதிற்குள்ளாக அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. பழைய சாதமாவது கிடைத்தால் சரி என ஆசைப்பட்டவனுக்கு பிரியாணி கிடைத்தால் எப்படி இருக்கும்? அது போல ஒரு மகிழ்ச்சி. தான் தனக்குப் பிடித்தவனோடு இணையராய் ஆக வாய்ப்பில்லை என்று அவளுக்குத் தெரியும். தனக்கு அவன் மீது இருப்பது க்ரஷ்ஷா? (ஈர்ப்பா?) காதலா? என முடிவிற்கு அவள் இன்னும் வரவில்லைதான் அதுவும் தெரியும். ஆனால், அவன் டீம் இவளது இடத்திற்கே மாறி இருக்க,  தினம் தினம் அவனை இனி பார்க்க கிடைக்கும், கண்ணெதிரே சில மணி நேரங்கள் உலா வருவான் என்பதே கோடி ரூபாய் லாட்டரி அடித்தது போல உணர்ந்தாள்.

என் பூஸ்டு

என் காம்ப்ளானு நீதானே

உன்னை பார்க்க

தவமான தவம் நானும் நின்னேனே

தவமும் நிறைவேறியதே

தினம் பார்க்க வழி கிட்டியதே

கிறுக்கி ட்ராவில் வைத்தவள் ‘லலலாலா லலலாலா லலலாலா லலலாலா’ சின்னதாய் பாடலை மனதிற்குள் இசைத்தவளாக உற்சாகமாக உலா வந்தாள். முன்னை விட குரல் கணீர் கணீர் என்று வர “கொஞ்சம் மெதுவாக பேசலாமே?” எனும் கோரிக்கைகள் வர ஆரம்பித்தன.

நான் கொஞ்சம் ஜாலியா இருந்தா இவனுங்களுக்கு பொறுக்காதே? பொறாமை பிடிச்சவனுங்க எண்ணிக் கொண்டவள் வேலை முடிந்ததும் ராகவன் கொடுத்த டின்னரில் கலந்துக் கொண்டாள்.

அன்றும் இரவு தாமதமாகவே வந்தவள் ரிஷாவில் இறங்கி படபடவென நடக்க ஆரம்பித்தாள். வழக்கம் போல அப்பகுதி கும்மிருட்டாக இருந்தது. குமரேஷின் பேச்சு வரம்பை மீறிப் போய்க் கொண்டிருந்தது.

“இங்கப் பாரு … உனக்கொரு திட்டம் வச்சிருக்கேன். நல்லா இருட்டுனதும் உன் வீட்டுக்கு வந்து மூணு முறை உன் கதவை தட்டுறேன், சத்தமே காட்டாம கதைவை தொறந்தீனா நான் உனக்கு சொர்க்கத்தையே காட்டுறேன். நாம குஜாலா இருக்கலாம், உன்னைப் பத்தி வெளியில ஒரு தப்பான பேச்சும் வராம நான் பார்த்துக்கிறேன், ஏய் என்ன சொல்லுற? சீக்கிரம் பதில் சொல்லு, உன்னை ஒரு நாள் இல்ல ஒரு நாள் ………..விட மாட்டேன்டி, பெரிய பத்தினின்னு நடிக்கிறியோ?, தினம் தினம் யார் கூட எல்லாம் ………..வரேன்னு எங்களுக்கு தெரியாதா?………” குடித்திருந்தான் போலும் பேச்சுக்கள் எல்லைகள் கடந்திருந்தன.

வீட்டு உரிமையாளரின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது, கீழ்த்தளத்தில் இருந்த ஏனையோர் வீடுகளும் அப்படியே… குமரேஷ் தன் வீட்டை பூட்டிக் கொண்டு இவனை தொல்லை செய்ய வந்திருக்க மற்ற மூன்று வீடுகளும் நேரமே பூட்டப் பட்டு இருந்தது. யாரிடம் அவள் பாதுகாப்பு கேட்க முடியும்? பயந்தவாறே விறுவிறு என கேட்டை திறந்த போதும் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. இவனிடமிருந்து தப்பித்து எப்படி தன் அறைக்குச் செல்வது? அடிக்கப் போனால் குடிப் போதையில் தன் மேல் பாய்ந்து விட்டால் இவனை என்னால் எப்படி சமாளிக்க முடியும்? இரவு வந்து தன் வீட்டைத் தட்டினால் என்னச் செய்வது? பல்வேறு சிந்தனைகள் அவளை பயமுறுத்த கேட்டை திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு பெரிதான இரு சப்தங்கள் கேட்டன.

ஓடியவள் மேல் மாடிக்கு ஏறிய பின்பே குமரேஷ் தன்னைப் பின் தொடராததை கண்டு எட்டிப் பார்த்தாள். எடக்கு மடக்காக விழுந்து கிடந்தவன் நெற்றியில் ஏதோ காயம் முகமெங்கும் இரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது. இரத்தத்தை வழித்து எறிந்தவன் எழும்ப முயற்சித்துக் கொண்டு இருந்தான். இவளோ அஞ்சியவளாக தனது அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here