8. TKSN

1
1061

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 8

அடுத்த நாள் கீழ்ப் பகுதியில் இருந்த குடும்பத்தினர் பேச்சுக்களிலிருந்து குமரேஷ் குடித்து விட்டு கீழே விழுந்து அடிப்பட்டதாக அவளுக்கு தெரிய வந்தது. அவனது தொல்லை சில நாட்கள் இல்லாதிருக்க சில வாரங்கள் நிம்மதியாக இருந்தாள்.

அன்று வழக்கமானதொரு மாலைப் பொழுது, தனது ரிப்போர்ட்டுகளை எல்லாம் மேனேஜருக்கு அனுப்பி வைத்தவள் இனி புனிதாவுக்கு வேலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். அந்த இரண்டு நாட்கள் பிரச்சனைகளுக்குப் பின்னர் தனது பாதுகாப்புக் கருதி அவள் விரைவாக தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு புறப்பட்டு விடுவதுண்டு. மணிவண்ணனும் அதற்கு ஒன்றும் தடைச் சொல்லியதில்லை.

சமீப காலமாக அவன் அவளைப் பார்த்து வினோதமாக புன்னகைப்பதாக தோன்றிற்று. ‘புள்ளக் குட்டிக்காரனாச்சே நல்ல மனுஷனாச்சே எதுக்கு என்னைப் பார்த்து அனாவசியமா சிரிச்சிங்க்? நாம கொஞ்சம் அலர்ட்டா இருப்போம்’ என முடிவுக்கு வந்தாள்.

நீ முறைப்பதைக் கூட சகித்துக் கொள்வேன்

மணிவண்ணா

சிரிக்காதே… சற்றும் புன்னகைக்காதே

பயந்து பயந்து வருதடா

திகிலு திகிலா இருக்குதடா

கரு நிறக் கண்ணா!

மணிவண்ணா, கண்ணா இது தவிர உனக்காக எதையும் எழுத வரலைடா… அதெல்லாம் என் ஆளுக்கு நான் எழுதுவேன் விதவிதமா… அஞ்சு காசுக்கு பிரயோஜனம் இல்லாம உனக்கெல்லாம் எஃபெர்ட் போட்டு எழுத முடியுமா? கற்பனையை சிதறடிக்க இயலுமா? மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டாள். மறவாமல் அந்த தாளை வீட்டிற்கு போகும் முன்பாக தன் டைரியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டாள் நம் கவிதாயினி.

இன்றைக்கு என் ஆளு லெமன் யெல்லோ கலர் சட்டை… என்னமா இருந்தான்யா? பிரனீத்தை எண்ணி சிலாகித்துக் கொண்டாள்.

நீ மஞ்சள் மேகத்திலிருந்து

தவழ்ந்து விழுந்தாயோ?

எழுந்து நான் காணவே

ஆஃபீஸ் வந்தாயோ?

அடடா அடடா பேஷ் பேஷ் என்னா கவிதைய்யா? தன்னைத் தானே சிலாகிக்கும் போதே புனிதா வந்திருந்தாள்.

கையிலிருந்த தாளை ட்ராவில் பத்திரப்படுத்தி விட்டு புனிதாவை வரவேற்றாள்.

“ஸாரி டியர், லேட் பண்ணிட்டேன்” புனிதா இனிமையானவளாய் இருந்தாள். இந்த டீமில் இன்னும் பலர் சேர இருப்பதாகவும் கூடுதலாக ஒரு டீம் லீடர் தேவைப்படும் என்பதாலெயே இவளிடமிருந்து தான் வேலையை கற்றுக் கொள்வதாக கூறியிருந்ததால் ஆலிஸின் நெருடல்கள் மறைந்து விட்டிருந்தன. அது போக கடந்த வாரங்களில் அவளது குழுவின் வேலை சிறப்பாக அமைந்திருந்தது பாராட்டுக்களும் பெற்றிருந்தாள். எனவே, முன் போல உற்சாகமாக இருந்தாள்.

எப்போதும் அதிகமாய் யாரிடமும் நெருங்காத ஆலிசிற்கு புனிதாவினால் உண்டான நன்மை அவள் மூலமாக அலுவலகத்திலுள்ள பல்வேறு தகவல்கள் அவளுக்கு தெரிய வந்திருந்தன.

அது போல அவள் வேலை கற்றுக் கொள்வது ஒரு பக்கம் இருக்க தகவல்கள் பலவற்றை அள்ளித் தெளித்தாள். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ப்ரொஜெக்டிற்காக வந்திருந்த எல்லா வெளியூர் மேனேஜ்மெண்டும் திரும்ப போய்விடும் என்றாள்.

‘ஓ, இவளுக்கு மட்டும் எல்லா விஷயமும் எப்படி தெரிஞ்சிருக்கு?” என ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டவளுக்கு அப்போது அவள் கூறியது முழுமையாய் உரைக்கவில்லை. வீட்டில் சமையல் செய்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று ஞாபகம் வந்து தொலைத்தது.

வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்றால் அதில் பிரனீத்தும் உண்டு தானே? ஆம் அப்படியென்றால் அவனும் சென்று விடுவானா?  இன்னும் ஒரு வாரத்திலா? கவலை மனதை அரித்தது. பலூனிலிருந்து காற்று குறைவது போலவே சர்ரென்று உற்சாகம் குறைந்துப் போகவே, இயந்திரத்தனமாக வேலைகளை செய்து முடித்து உறங்கிவிட்டிருந்தாள். துன்புறும் மனதிற்கு ஒரே ஆறுதல் தூக்கம் அல்லவோ?

அடுத்த நாள் மதியம் தன் டீமிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு இன்னும் சில நாட்கள் கழித்து இவனைக் காண இயலாது என தன் இதயத்தை யாரோ பிடுங்கி எடுப்பதைப் போன்ற வலி எழுந்தது. இப்போதும் அதே மென்மையோடு யாருக்கோ சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொண்டு கொண்டிருந்தான்.

‘கோட்டான், ஊமைக் கோட்டான் இப்படியே பேசிக்கிட்டிரு, கிட்டத்தான் இருக்கிற. என் மனசு உனக்கு புரியவே இல்லில்ல?’ மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தாள்.

‘ஊமைக் கோட்டான் நீயா? அவனா? உன் மனதில் இருப்பதை அவனிடம் சொன்னாயா?’ அவள் மனம் பதிலுக்கு அவளை திட்டித் தீர்த்தது.

‘அதெப்படி சொல்ல முடியும்? அவருக்கு திருமணம் ஆகிருச்சோ என்னமோ? நான் எதையாவது கேட்டு அவர் என்னைப் பற்றி தப்பா நினைச்சுட்டா? … அதுக்கு இப்படியே இருந்துக்கலாம்’ தனக்குத் தானே பதிலளித்தாள்.

‘அப்புறம் எதுக்கு அந்தாளை திட்டுற? சரி இந்த ஒரு வாரமாவது ஆசைத் தீர பார்த்துக்கிறேன்’ அவள் மனம் ஜொள்ளியது.

இப்படி ஒரு சூழலை அவள் சிந்தித்து இருக்கவில்லை. இந்த அளவிற்கு ஒரு ஆண்மகனை தான் நேசிப்போம் என்று அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை. இந்த முறை படுபயங்கரமாக பாதிக்கப்படப் போகிறோம். இந்தப் பிரிவில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி கண்டுப்பிடிக்க வேண்டும்? மனம் கண்ணீர் விட்டழ அதன் சுவடே தெரியாதவள் போல உணர்வுகளை துடைத்தவாறு புன்னகைத்துக் கொண்டாள். கரம் வழக்கம் போல அருகிருந்த தாளொன்றைத் தேடி தன் மன உணர்வுகளைக் கிறுக்கத் தொடங்கியது.

என் செய்வேன்

வெகு நாளாய்

எவர் முகமும் காண,

எனக்குள்

இத்தனை

ஆர்வம் துளிர்த்ததில்லை.

வெகு சில நாளாய்

உன் முகம் கண்டிடவே

முகமும், அகமும்

மலர்கின்றது.

ஆண் என்றாலே அதட்டல் தான்

காரணமில்லா அரட்டல் தான்

என்று பதிவிட்டிருந்த என் மனதோடு

உந்தன் கருத்துக்கள் தவறென்று

சொல்லிச் சென்றது உன் வருகை.

அரங்கம் நடுவில் நீ நின்று

உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,

அவை அதிராத மென்மையில்

உன் பேச்சும்,

அதனினும் மெலிதாய்

புன்னகையும் கொண்டே

என் உள்ளத்தில்

பிரளயம் வர வழைத்தாய்.

நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க

நீ சென்ற பின் எவ்வாறு

நான் உனை காண்க?

மீண்டும் சந்திப்பது

வாழ்வில் உண்டோ  இல்லையோ?

என்றொரு புறம்

மனம் அங்கலாய்க்க

நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.

இன்று இருப்பதில்

நிறைவுக் கொள்வோம்.

என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது

உன் முகம் காணவே மலர்ந்திடுதே

உனை நோக்கியே மயங்கிடுதே

என் செய்வேன்?

நான் என் செய்வேன்? …..

கையில் கிடைத்த பழுப்புக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தவளுக்கு சந்தேகம் என்றுக் கேட்கவந்த டீம் மெம்பர் வந்தவுடனே தான் தாம் ஆஃபீஸில் இருப்பதே ஞாபகம் வந்தது. இந்த அளவிற்கா நாம் மெய்மறந்து போய் விட்டோம்? என எண்ணியவள் தாளை மடித்து  வழக்கம் போல ட்ராவில் வைத்து விட்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த வாரம் அவளுக்கு சற்று மந்தமாகவே நகர்ந்தது. நகர்ந்தும் புதன் கிழமையை தொட்டு விட்டிருந்தது. ‘இன்னும் இரண்டே நாட்கள் தான் அதன் பின்னர் அவனை பார்க்க இயலாது’, என எண்ணிக் கொண்டு கள்ளத்தனமாக அவன் முகத்தை பருகினாள். வாட்சப்பில் பகிரப்பட்டு இருந்த புது க்ளையண்டுக்கான முதல் நாள் வேலையன்று கேக் வெட்டியபோது, பாராட்டு கிடைத்ததென்று கொண்டாடியபோது என கடந்த மாதங்களில் சிலவிழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவன் முகம் இருந்த புகைப்படங்களை மிகவும் அக்கறையாக பத்திரப்படுத்தினாள்.

இன்னும் அவனுடன் சென்று பேச பயந்தாள், ‘அவனிடம் கேட்பாய் அதன் பின் என்ன செய்வாய்? அவன் உன்னை திருமணம் செய்துக் கொள்வான் என எண்ணுகின்றாயா? தாய் தந்தை இல்லாதவள் எனத் தெரிந்து மற்றவர்கள் நடந்துக் கொண்டது போன்ற அதே உதாசீனம் தானே கிடைக்கும். அவனிடமிருந்து உதாசீனத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக இந்த இனிமையான உணர்வை மனதிற்குள் வைத்துக் கொள்ளலாமே? வயது ஆகிக் கொண்டிருப்பதை மறந்து உனக்கு இந்த ஆசைகள் வந்தது மிகத் தவறு’ மனம் அவளை வாட்டியது.” நீ திருமண வயதை கடந்து விட்டாய், கொஞ்சமாவது வயதிற்கேற்றபடி நடந்துக் கொள்” மனம் உள்ளூர அலறிக் கொண்டே, அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here