9. TKSN

0
962

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!

அத்தியாயம் 9

அன்றைக்கு வழக்கம் போல புனிதாவிற்காக காத்திருக்க தான் இன்று வரப் போவதில்லை என அவள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். அதனை வாசித்து பதில் அளித்தவள் மணிவண்ணன் கடைசி நேரம் கேட்டிருந்த ஒரு சந்தேகத்திற்கு பதில் அளிக்க (MsExcel) எக்ஸல் ஃபைலுக்குள் தன் தலையை விட்டு ரொம்ப தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தபோது எதிரில் ஏதோ நிழலாடிய உணர்வு. ஃபைலில் ஆழ்ந்திருந்தவள் தனது தலையை மிகவும் கஷ்டப் பட்டு நிமிர்த்திப் பார்த்தாள் ‘அட நம்ம பிரனீத்…’ அவனைக் கண்டதும் மனம் அவளது கட்டுப்பாட்டை மீறி கூப்பாடு போட்டது.

‘”உங்களுக்கு என்னோட மெயில் கிடைக்கலயா?” கேட்டான் அவன்.

“எந்த மெயில்?” கேள்வியோடு ஆலிஸ்

“நாளைக்கு பெங்களூர் புறப்படறேன், அதான் ஒரு கெட் டுகெதெர் மாதிரி…”

“நாளைக்கேவா? இன்னும் இரண்டு நாள் இருக்குன்னு சொன்னாளே? புனிதா சொன்னதை நினைவுக் கூர்ந்தவளின் மனதை ஏதோ கவ்வ,

“இல்லையே மெயில் வரலை…” எனக் கூறியவளின் புன்முறுவலை ஏற்றுக் கொண்டவனாக…

“அதுக்கென்ன இப்போ வரலாமே? …”

“ஓ… சரி இதோ இந்த ரெண்டு மெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன்.நீங்க வேணா காஃபேடேரியால வெயிட் செய்றீங்களா?”

“பரவாயில்ல இங்கயே நிக்கிறேன்…” நின்றான்.

“சரி …” பத்து நிமிடங்கள் செலவழியும் வரை காற்றசையாத மௌனம் அங்கே….

கஃபேடேரியாவில் ட்ரீட் இருக்கும் போல என அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் ஆஃபீஸை விட்டு கீழிறங்கி கார்டனுக்குள்ளாக நுழையும் வரை ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலவில்லை.

‘ஓஹோ அந்த காம்பஸின் நடுவில் கார்டனோடு சேர்ந்து இருக்கும் ரெஸ்டாரெண்டில் ட்ரீட் இருக்குமாக இருக்கும், மற்றவர்கள் எல்லோரும் அங்கே காத்திருக்கிறார்கள் போலும்? ஆனால், பிரனீத் குறிப்பாக எனக்காக காத்திருந்து  ஏன் அழைச்சுட்டுப் போகணும்?, ஒரு வேளை எல்லாரும் வந்திருப்பாங்க, என்னை கூப்பிடலன்னா நான் தப்பா நினைச்சுக்குவேன் நினைத்து இருக்கலாம்’ என்றெண்ணியவளாக பின்தொடர்ந்தாள்.

 இரவின் இருள் முழுமையாக கவ்வாத நேரம், சென்றுக் கொண்டிருக்கும் போதே பிரனீத்தின் மொபைல் ஒலித்தது. வீடியோ காலிங்க் எடுத்து, முகத்திற்கு முன்பாகப் பிடித்து தன் தாய் மொழியில்(?) பேசத் துவங்கினான். ‘நமக்குத்தான் கன்னடம் புரியாதே இருந்தாலும் கூட அவர்களது தனிப்பட்ட பேச்சில் நாம் எதுக்கு இடைஞ்சலாக?’ என்றெண்ணியவளாக சற்றுத் தள்ளிச் செல்ல துவங்க, இரண்டெட்டு எடுத்து வைக்கும் முன் ஆலிஸின் விரல்களை மென்மையாகப் பற்றி பின் இழுத்தான் அவன்.

“மீட் மை மாம்…” என்றுச் சொல்லியவனாக அவளை தனது மொபைல் பக்கம்ப் பார்க்க தூண்டினான்.

அவள் அவனது இந்த செயலால் சற்றுத் தடுமாறிய போதும் “ஹலோ ஆன்டி” என்று மரியாதைக்காக பேச,

“நல்லாயிருக்கியா ஆலிஸ் பொண்ணே” என்று அவனின் அம்மா அவளிடம் தமிழில் பேச, என் பெயர் தெரிந்திருக்கின்றதே? அதுவும் தமிழில் பேசுகிறார்கள் என ஆச்சரியமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“எங்க அம்மா தமிழ்” என்றான் அவளிடம்… ஆங்க்… மூளை ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்ய, ‘ இவனுக்கும் தமிழ் தெரியும் போல? இதுவரை யாரிடமும் அவன் தமிழில் பேசிப் பார்த்ததில்லையே’ என தட்டுத்தடுமாறி வந்த சிந்தனையை தாய் பின்னே தலையை நுழைத்தவளாக ஸ்கிரீனுக்குள் நுழைந்து உற்சாகமாக “ஹாய்ய்ய்”  சொன்ன அழகான யுவதியின் குரல் கலைத்தது.

“மை சிஸ்டர்” என்று அவளிடம் சொல்லிப் புன்னகைத்தான்.

இப்போது தாயும் மகளும் விலகி நிற்க, பிரனீத் தலையில் ஒரு டப்பா பவுடரைக் கொட்டினால் எப்படி இருக்குமோ? அப்படி ஒருவர் ஸ்க்ரீனில் வந்து புன்னகைத்தார்.அறிமுகப்படுத்தவே தேவையில்லை இவர் அவன் அப்பா என்றெண்ணியவளாக மரியாதைக்காக “ஹாய் அங்கிள்” என்றுச் சொல்லிப் புன்னகைத்தாள். பதிலுக்கு அவர் புன்னகைத்ததில் பிரனீத்திற்கு இந்த அமைதியான புன்முறுவல் எங்கிருந்து வந்தது? எனும் ரகசியம் அவளுக்கு புரிந்தது.

“அடுத்து என்ன மீட் மை வைஃப்” என்றுச் சொல்லப் போகிறான் என்று எண்ணும் போதே அவன் பெர்ஃப்யூம் வாசனை அவளருகே உணர்ந்தாள்.அவனது நெருக்கம் அவளை கலவரப் படுத்தியது தோளணைப்பு மாத்திரம் தான் நிகழவில்லை அவ்வளவாக நெருங்கி வந்தவன் வீடியோ காலில் இருப்பவர்களிடம் ஏதோ ஒன்றைக் கேட்கும் தொனியில்…

“மம்மி…” என்று கையில் பிடித்திருந்த போனில் இருவரும் வரும் வகையில் பிடித்துக் கேட்டான்.எதிரில் அனைவர் பார்வையிலும் அளவில்லாத ஆர்வத்தைக் கண்டாள்.

ஒரு வகையான உணர்வில் இருந்தாள் அவள். அது ஒரு பொருள் விளங்கா உணர்வு, இதெல்லாம் ஒன்றுமில்லை சும்மாதான் வீண் கற்பனை வேண்டாம் மனமே…..என்று தன்னை தேற்றிக் கொண்டாள்.

போனில் பேசி முடித்தவன், ரெஸ்டாரெண்ட் செல்லும் எண்ணமே இல்லாதவன் போல அவளிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

“இங்க சென்னை மாதிரியே பெங்களூர்லயும் ஸ்டாப் எல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க….உனக்கு அவ்வளவு வித்தியாசமா தெரியாது”

ஒருமைக்கு மாறி இருந்தான்… அவளுக்கென்னவோ அவளது கனவில் வருகையில் பிரனீத் பேசுவானே அது போலத் தோன்றியது. இது கனவு தானோ? வெகுவாகக் குழம்பினாள். அவன் கூறியதில் கவனம் வைத்தவள்…

“சரி நான் ஏன் பெங்களூர் ஸ்டாப் பத்தி கவலைப் படணும், அவங்க எப்படி இருந்தா என்ன? எனக்கு ஏன் வித்தியாசமா தெரியணும்?” எதற்காக இதையெல்லாம் என்னிடம் சொல்கிறான்? 

இங்க உன் மேனேஜர் உனக்கு பதிலா பேக் அப் (back up) ரெடியானதுனால எதுவும் பிரச்சினை செய்ய வாய்ப்பில்லை…

‘பேக் அப்?? அப்ப புனிதா என் பேக் அப்பா?’ சற்று சுரணை வந்தது.

‘நான் ஏற்கெனவே உங்க டிபார்ட்மெண்ட் லீட் கிட்ட கேட்டுட்டேன், இங்க இருந்தா என்ன? இல்ல வேற பிராஞ்ச்ல இருந்தா என்ன? எங்களுக்கு ஒண்ணும் பிரச்சினையில்லன்னு சொன்னாங்க.’

‘###@@………….. ‘என்னது? என்னைச் சுற்றி என்ன நடக்குது?’ மனதிற்குள்ளாகப் போட்டு உழன்றாள், புதிரை விடுவிக்க அவள் மனம் போராடிக் கொண்டு இருந்தது.

“நீ பெங்களூர் வர்றதைப் பத்தி நிறைய பேருக்கு ரொம்ப சந்தோஷம், குறிப்பா ராகவன் சாருக்கு … உன்னோட டீம் ஹேண்ட்லிங்க் ஸ்கில்ஸ் அவ்வளவு பிரசித்தம்….”

???………….வாட்?

“அம்மா கூட ஏண்டா என் மருமவ வேலைக்கு போகணும்? வேண்டாம்டான்னு சொன்னாங்க…..”

——-

“நான் தான் சொன்னேன் அவளுக்கு வேலைப் பார்க்கிறதுல அவ்வளவு ஆர்வம் அம்மா, அவளை தடைச் செய்ய கூடாதுன்னு…”

——

இப்படி தன்னை பேசவே விடாமல், விளக்கமாய் எதையும் சொல்லாமல் ஒன் வேயில் (one way) வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பிரனீத்தை எப்படி  நிறுத்துவதெனப் புரியாதவளாக ஆலிஸ் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். பிரனீத்தோ அவள் எதிர்பாராத நேரம் சட்டென்று அவள் கையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்திருந்தான். இழுத்த வேகத்தில் திரும்பி நடந்த விதத்திலேயே அவன் மீது தன் முதுகு இடிக்க நின்றாள்.

 அவளது காதோரமாகக் குனிந்த பிரனீத் அவளிடம்,

“மேரி மீ” (Marry me) என்றதும் ஆலிஸிக்கு கோபத்தில் முகம் கனன்றது. வந்த நேரம் முதலாக தானே ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாக பேசுவதும் நடந்துக் கொள்வதும்… இவன் நாம் பார்த்த அதே ஊமைக் கோட்டான் பிரனீத் தானா?’ என்று அவளுக்கு சந்தேகமே வரப்பார்த்தது.

அது, “வில் யூ மேரி மீ?”( Will you marry me?) ன்னு கேட்பாங்க “மேரி மீ”ன்னு ஆர்டர் போட மாட்டாங்க…” என்று துடுக்காக பதில் கொடுத்தவள் நொடித்துக் கொண்டாள்.

இன்னும் அவன் கை வளைவுக்குள் இருப்பது வேறு பதட்டமாக இருந்தது… “என் கையை விடுங்க” பலகீனமாகச் சொல்ல அவள் கூறியது அவளுக்கே கேட்டதோ என்னவோ? பிரனீத் அவளை அவள் சொன்னதை கண்டுக் கொள்வதாக இல்லை.

“அது தான் எனக்கு தெரியுமே…”

“வாட்? என்னத் தெரியுமாம் உங்களுக்கு?”

“தேட் யூ வில் மேரி மீ?” ( நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாய் என்றறிவேன்)

இறுகிக் கொண்டே போன அவன் அணைப்பினின்று விடுபட எண்ணியவள் முன்பு அதை நீட்டினான்.

அந்த பழுப்புக் காகிதம்… அதில் அவளது கவிதை, அடக் கடவுளே இதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேனே? ….

“எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும்” என பிரனீத் சொல்ல இவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.அவன் எப்படி புன்னகைத்துக் கொண்டிருப்பான் என்று அவன் முகம் பாராமலேயே அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவன் முகத்தை திரும்பி பார்க்க துணிவில்லாதவளாக குனிந்து வெட்கத்தை மறைத்துச் சிரித்துக் கொண்டாள்.

தான் எழுதியதேதான் இருந்தாலும், அந்த தாளை திறந்து மறுபடி படித்தாள். கசங்கி இருந்த அந்த தாளின் நிலைப் பார்த்து அது ஏற்கெனவே பல முறை படிக்கப் பட்டிருந்ததைப் புரிந்துக் கொண்டாள்.

என் செய்வேன்?

வெகு நாளாய்

எவர் முகமும் காண,

எனக்குள்

இத்தனை

ஆர்வம் துளிர்த்ததில்லை.

வெகு சில நாளாய்

உன் முகம் கண்டிடவே

முகமும்,அகமும்

மலர்கின்றது.

ஆண் என்றாலே அதட்டல் தான்

காரணமில்லா அரட்டல் தான்

என்று பதிவிட்டிருந்த என் மனதோடு

உந்தன் கருத்துக்கள் தவறென்று

சொல்லிச் சென்றது உன் வருகை.

அரங்கம் நடுவில் நீ நின்று

உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,

அவை அதிராத மென்மையில்

உன் பேச்சும்,

அதனினும் மெலிதாய்

புன்னகையும் கொண்டே

என் உள்ளத்தில்

பிரளயம் வர வழைத்தாய்.

நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க

நீ சென்ற பின் எவ்வாறு

நான் உனை காண்க?

மீண்டும் சந்திப்பது

வாழ்வில் உண்டோ  இல்லையோ?

என்றொரு புறம்

மனம் அங்கலாய்க்க

நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.

இன்று இருப்பதில்

நிறைவுக் கொள்வோம்.

என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது

உன் முகம் காணவே மலர்ந்திடுதே

உனை நோக்கியே மயங்கிடுதே

என் செய்வேன்.

நான் என் செய்வேன்? …..

என்னும் வரிகளுக்கு கீழாக இடக்கையால் எழுதினால் எப்படி அலங்கோலமாக கையெழுத்து வருமோ அப்படி ஒரு எழுத்தில் தமிழில் ஒரு வரி எழுதியிருந்தான்.

என்னை கல்யாணம் செஞ்சுக்கோ problem solved” … என்று,

“எனக்கு தமிழ் வாசிக்க வரும் அவ்வளவு அழகா எழுத வராது” என்றவன், குனிந்து அவள் முகம் திருப்பி chelluve (செல்லமே) என முனகியவன் அவள்  நெற்றியில் முத்தமிட்டான்.

“வில் யூ மேரி மீ?”

அவள் திரும்பி அவன் மார்பில் சாய்ந்து அவன் முகம் நோக்கி புன்னகைத்தாள். அவள் இதை எதிர்பார்க்கவே இல்லையே? மனம் நிறைந்துக் கிடந்தது.

முதலில் பெற்றோரைக் காட்டி தங்கையைக் காட்டி என் வீட்டினருக்கும் சம்மதம் என்று சொல்லாமல் சொல்லி திருமணம் என்ற ஒரே வார்த்தையில் தான் அவளிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதைச் சொன்னவனிடம் முடியாது என்றுச் சொல்ல என்ன இருக்கின்றது?

அந்த நெற்றி முத்தம் அவள் முகம் அதை எண்ணி எண்ணியே சிவந்துக் கிடந்தது… இருளில் நின்றாலும் கூட அது பொதுவெளி என உணர்ந்த அடுத்தக் கணம் அவனிடமிருந்து விலகி நின்றாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here