தொண்ணூறும் இரண்டும்_1_ஜான்சி

0
186

அத்தியாயம் 1. காலங்கள் மாறுபாடுள்ளன

வருடம்: 1992

இடம்: மும்பை மாநகரத்தின் அதிகப் பரபரப்பில்லாத மிகச் சாமான்யமான ஓர் பகுதி, மஹாராஷ்ட்ர மாநிலம்.

நவம்பர் மாதம் அதன் ஜில்லிப்பை ஆரம்பித்து விட்டிருந்தது. மும்பை மாநகரம் எப்போதுமே அப்படித்தான் காலத்திற்கேற்ப செயல் புரியும் தன்மையுடையது. ஜீன் முதல் வாரத்தில் பெய்யும் மழை தன் வருகைப் பதிவை என்றைக்கும் பின் தாழ்த்தியது இல்லை.அதன் பின்னர்த் தசரா விழாவை தொடர்ந்து குளிர் ஆரம்பித்து விடும். அந்தக் குளிர் கடும் குளிராகித் தணிந்து ஹோலிப் பண்டிகை முடிய வெயில் கொடூரமாய் வதைக்கத் தொடங்கும். மறுபடி மழை, குளிர், வெயில் கால மகள் மிக ஒழுங்குடையோளே.

நியமங்கள் மாறாமல் லோக்கல் பஸ் மற்றும் டிரெயின்களில் ஓடிக் கொண்டிருக்கும் உழைப்பாளர் வர்க்க மக்கள் போலவே நியமங்கள் மாறாத நகரத்தின் இயற்கை ஒரு வரமே.

அது ஒரு நடுத்தர மக்கள் வாழ்விடப் பகுதி, பல ஆண்டுக் காலமாக மக்கள் வாழ்ந்து எல்லா வசதிகளும் உள்ள இருப்பிடம் தான் அது. எனினும், ஸ்லம் என மிகச் சாதாரணமாகப் பணக்காரர்களால் அழைக்கப் படும் வகையைச் சார்ந்தது. வரிசைக் கிரமமாக வீடுகள் அமைந்திருக்கும் அமைப்பு சால் chawl என்று அழைக்கப் படுகின்றது ஒவ்வொரு சாலுக்கும் ஒவ்வொரு உரிமையாளர்கள் உண்டு. அங்கிருக்கும் அறைகள் உரிமையாளர் அந்த வீடுகளை விற்ற பின்னரும் கூட அடையாளத்திற்காகக் குறிப்பிட்ட சாலின் எண் 1,2 ,3 என்றே குறிப்பிடப் படும்.

அப்படிப்பட்ட சால் உரிமையாளர் ஒருவராகிய ஜேம்ஸின் இல்லம்.

அதிகாலையில் எழும்பி அம்மாவிடம் கொட்டுக்களும் திட்டுக்களும் வாங்கிக் கட்டிக் கொண்டு இருந்தாள் ராணி, வயலட் மற்றும் ஜேம்ஸின் மகள் அவர்களுக்கு இன்னும் ஒரு மகன் உண்டு, பெயர் வில்சன் படிப்பிற்காகத் தமிழகத்தில் தனது தாத்தா பாட்டியின் வீட்டில் இருந்து வருகிறான்.

“காலையாச்சே ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பிள்ளை கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? சட்டுன்னு எழும்பி புறப்படுவோம்னு இல்லாம என்ன இவ்வளவு தூக்கம்?”

“ராத்திரி பதினோரு மணி வரைக்கும் நீங்க தானே வெளியில உட்கார்ந்து வாய் பேசிட்டு இருந்தீங்க?”

“அது பக்கத்து வீட்டு வனஜா வீட்டுக்காரர் வரும் மட்டும் பேசுவோம்னு உட்கார்ந்தது. நாங்க கதை பேசுனா உனக்கென்னட்டி? நீ படுத்து தூங்க வேண்டியது தானே?”

“முன்னேர் போகுற வழியில தான் பின்னேர் போகுமாம்”

“அடியே, நீ உங்க அப்பா கிட்ட அடி வாங்கிட்டு தான் ஸ்கூல் போகப் போறன்னு நினைக்கிறேன்” வெடுவெடுவெனப் பேசியவாறு இரட்டை சடைகளையும் வலிக்க வலிக்க மடித்துச் சுருக்கிட்டு (bow) பௌ வைத்து பள்ளிக்கு செல்ல சொல்லி விரட்டினார். பஸ்ஸீக்கு போக வர தேவையான பத்து ரூபாய்க் கூடுதலாக ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டார்.

“வயலட்டு…”

“இதோ வரேங்க…” கணவர் ஜேம்ஸின் குரலுக்கு ஓடினார் வயலட்.

‘அம்மாடியோ, ஹிட்லர் வர்றதுக்குள்ள ஓடிருவோம்’, என்று தனது பள்ளிப்பை எனும் பொதிமூட்டையை முதுகிற்கு ஏற்றிக் கொண்டு பக்கத்துத் தெருவில் இருக்கும். தோழியின் வீட்டு வாசலில் போய் நின்றாள்.

“ஏ வினி சீக்கிரம் வாடி…” இவளது குரல் கேட்டதும் வினியின் பக்கத்து வீட்டு டேப் ரெகார்டர் பாடல் மாற்றி ஒலித்தது.

சமீபத்திய சல்மான் கான் ஹிட் காதல் ததும்பும் வரிகள் அவை தனக்காகத்தான் என்பது ராணிக்கும் தெரியும். மூன்று மாதங்களாக அந்த வீட்டு ரோமியோவிற்குத் தன் மேல் நோக்கம் வந்திருப்பது குறித்து அவள் அறியாமலில்லை.

அந்தக் குடியிருப்பு பகுதி ஒரு குட்டி இந்தியாவே தான். பெரும்பாலான தமிழ் மக்கள் இருந்தாலும் வட இந்தியர்கள், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி என்று எல்லோரும் ஒருமித்து வாழும் பகுதி அது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் எல்லோருமெ அடுத்தடுத்த இல்லங்களில் இருந்ததும் வெகு சாதாரணமான ஒன்றே.

பள்ளிக்கு போகும் போது வினியோடு செல்ல வேண்டும் என்று வரும் போதெல்லாம் அந்தப் பக்கத்து வீட்டு செல்வன் அவளுக்கு ரூட் விடுவது எல்லாம் அவளுக்குத் தெரியாமலில்லை. அதனால் எழும் ஒருவிதமான உணர்வை, பதின் வயது மயக்கத்தை அவள் இரசிக்கவே செய்தாள். மற்றபடி காதலெல்லாம் கெட்ட வார்த்தை வகையறா அல்லவா?

“Sun beliya Shukriya meharbaani

Tu kahe toh naam tere kar dhoo saari jawaani… ho

Tu kahe toh naam tere kar dhoo saari jawaani”

இப்போது பக்கத்து வீட்டில் பாடல் மாறி எஸ் பி பி பாடலை உருகி உருகி பாடிக் கொண்டிருக்க ஒரு மாதிரியான சங்கடமான நிலையில் நின்றுக் கொண்டிருந்தவள்.

“வா லூசு, நேரமாச்சு” வீட்டிற்கு வெளியே வந்த வினியை தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றாள்.

“ஏ உன்னை அந்த அண்ணன் பார்த்துக்கிட்டே நின்னுச்சு…”

உள்ளுக்குள் கர்வமாக இருந்தாலும், “சும்மா இருடி” தடுமாறினாள்.

பஸ் கிடைக்கவும் அவசரமாக ஏறினார்கள்.

பஸ்ஸீக்குள்ளாகக் குளிர்காற்று அவசர அவசரமாக இவர்கள் உடலை தழுவ தொடங்கிற்று. இருக்கையில் அமர்ந்தவர்கள் பையை இறக்கி மடியில் வைத்துக் கொள்ள ராணி தனது இரண்டு கைகளையும் பிணைத்துக் கொண்டு ஸ்வெட்டரை முழுவதுமாகக் கைகள் முழுக்க மூடியவாறு செய்து கொண்டாள்.

ஆங்கில எழுத்து யூ போல இணைந்திருந்த கரங்களைத் தோழியிடம் காண்பித்து,”பாரு என் விரலை காணலை வினி.”

அவள் கையைப் பிரித்து விட்டவள் “போடீ லூஸீ மாதிரி பேசிக்கிட்டு … வா பஸ் ஸ்டாப் வந்திருச்சு.”

அவசர அவசரமாகப் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தார்கள் அந்தக் காட்டின் ஒரு பகுதியாகிய நேவி காலனியை கடந்து அவர்களது தமிழ் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

“ஏ ராணி டெஸ்டுக்கு படிச்சாச்சா?”

கேட்டவாறே அவள் வகுப்பு நண்பன் பரத் அவளைக் கடந்து செல்ல,

 “ஆமாடா…”

என்றவள் ஓரமாய்ப் பூத்திருந்த காட்டுச் செடியிலிருந்து சில மலர்களைப் பறித்தவாறே… இயற்கையை இரசிக்க அப்பாதையெங்கும் பார்க்கவே அழகாகப் புல்லின் மேல் பனித்துளியோடு நிற்க, மண்புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தன.

மண்புழுக்கள் கால் பட்டு நசுங்கி விடும் என்று அதன் மேல் கால் வைக்காமல் நடப்பதே மிகுந்த சவாலாக இருந்தது.

“இந்த மண்புழுவெல்லாம் நாம மதியம் ஸ்கூல்லருந்து வரும் போது வெயில்ல செத்து போயிருக்கும்லட்டி ச்சே பாவம்”

“நேரம் ஆகிடுச்சுச் சீக்கிரம் வா, வழி நெடுக புழு பூச்சி, பூ, செடின்னு ஒன்னும் விடறது இல்லை.”

“போடீ உனக்கெங்க இந்த இரசனைலாம் தெரியும்? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை, அப்படியும் என்னால ஒன்னும் லேட்டாகலை நீ தான் பத்து நிமிசம் லேட்டாக்கின இன்னிக்கு”

“பேசிக் கொல்லாத, சீக்கிரம் இங்கிருந்து போயிடலாம், அங்க பாரு அந்தக் குதிரைக்காரன் நம்மளையே பார்த்திட்டு இருக்கான்”

“அவன் தான் ஒரு பொண்ணு விடாம பார்ப்பானே, பேசாம குதிரை கிட்ட சொல்லி ஒரு எத்து விடச் சொல்லணும்.”

வாயில் கை வைத்து வினி சிரித்து விட்டிருந்தாள்

“அதெல்லாம் யாருக்கும் பயந்து நாம ஓடக் கூடாது, நம்ம மனசுல பயம் இருந்தாலும் காட்டாம சும்மா தைரியமா நாம கடந்து போகணும், அப்பதான் அவன் நமக்குப் பயப்படுவான்.”

“ஓ சரி அப்படியே செய்வோம்”

வினியும் நிமிர்ந்தே அந்தப் பாதையைக் கடக்க, அந்தக் குதிரைக்காரனை தாண்டிச் செல்கையில் இந்த முறை வினிக்கு அவ்வளவாய் நடுக்கம் வரவில்லை.

வகுப்பு முடிந்து மதியம் அதே பாதையில் திரும்பி வர காலையில் இருந்த குளுமை மாறி வெயில் கொளுத்தியது. காலையில் சுவர்க்கமாய்த் தோன்றிய அந்தக் காட்டுப் பாதையின் வழித்தடம் இப்போது பாளம் பாளமாய்ச் சிதறிக் கிடந்தன. காலையில் மிதித்து விடக் கூடாதே என்றெண்ணி கடந்து சென்றிருந்த மண் புழுக்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் சுருண்டு மடிந்து காய்ந்து சருகாகி விட்டிருந்தன.

காலமும், அதன் கோலங்களும் இத்தகையதே ஒரு நேரம் போல மற்றொரு நேரம் இருப்பதில்லை அல்லவா!

“வினி அந்தப் பரத் வீடு பக்கம் அன்னிக்கு ஏதோ பரேட் நடந்துச்சுடி”

“பரத் வீடு பக்கமா?”

“ஆமா?”

“நிறையப் பரத் வயசு பசங்க அதில் இருந்தாங்க, நம்ம ஸ்கூல் யுனிபார்ம் மாதிரி அரை ட்ரவுசரும் சர்ட்டும் போட்டிருந்தாங்க. இது வேற ஸ்கூலா இருக்குமோ?”

“என்னன்னு தெரியலியே?”

“சரி அப்புறமா அவன் கிட்டயே கேட்டுடறேன்.”

“அது சரி…”காட்டுப் பகுதி கடந்து பஸ்ஸீற்காகக் காத்திருக்கப் பஸ் வந்ததும் பேசிய வண்ணமே புறப்பட்டுச் சென்றனர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here