தொண்ணூறும் இரண்டும்_2_ஜான்சி

0
139

அத்தியாயம் 2: புதிய ஊர் இது எனக்கு புதிய ஊர்

தற்போதைய ‘சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் முன்பு விக்டோரியா டெர்மினஸ் என்று அழைக்கப் பட்ட மும்பையின் ரயில்வே நிலையமாகும். யுனேஸ்கோவினால் உலகப் பாரம்பரிய இடங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்ட பகுதியாகும்.

விக்டோரியா டெர்மினஸ் பரபரவென மக்கள் கூட்டம் அங்கும் இங்கும், எங்கும் ஓடிக் கொண்டிருக்கத் தமிழகத்திலிருந்து வந்த குடும்பங்கள் ஒவ்வொன்றாகக் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டு இருந்தன.

இரண்டு இரவுகள் மூன்று பகல் என நீண்டிருந்த பயணத்தில் அலுத்து, களைத்து இறங்கியது அந்தக் குடும்பம். கையில் குழந்தையோடு இறங்கிய தம்பதியின் பின்னால் இறங்கினான் அந்தச் சிறுவன். குட்டையாக இருந்தான், வயதிற்கு மீறிய துறுதுறுப்பு அவனில் காணப்பட்டது.சுற்றும் முற்றும் அந்தப் புதிய ஊரை கண்களை விரித்து உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தான். தன்னருகெ வந்த ஒன்றுவிட்ட அண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டுக் கொண்டு வந்தான்.

“இந்தாங்க பிள்ளையைப் பிடிங்க”, மகளைக் கணவனிடம் கொடுத்த சுமதி தான் மற்றோர் இடுப்பில் பிடித்திருந்த குடத்திலிருந்த மீத தண்ணீரை கீழே கொட்டினாள்.

“ஐயோ அண்ணி, அது நம்ம ஊர் தண்ணி, இப்படிக் கொட்டிட்டீங்களே?”

“சுமந்து முடியலைடா குமரா, அதெல்லாம் இங்கே உள்ள தண்ணியும் நல்லா தான் இருக்கும் கவலைப் படாத இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடலாம்”

“அதான் நல்லா தெரியுதே?”

“என்னடா நல்லா தெரியுது?” அழுத குழந்தையைத் தன்னிடம் வாங்கிக் கொண்டு தண்ணீர் குடத்தைக் கணவனிடம் கொடுத்தவள் கேள்வியை மறந்திருக்க,

“அண்ணி கல்யாணத்தோட இருந்த கருப்பென்ன? இப்ப இருக்கக் கலரென்ன? அப்படின்னா இந்த ஊர் தண்ணி நல்லாதான இருக்கணும்?”

நல்ல வேளை மனைவியின் காதில் பேச்சு விழவில்லை என்று நினைத்த சுரேஷ் பொத்தாம் பொதுவாய் சிரித்து வைத்தான்.

“ஆமாடா நான் ரொம்பக் கருப்பு, உங்க நொண்ணன் மட்டும் ரொம்ப வெளுப்போ? அதெல்லாம் அவருக்கு நானே அதிகம் தான்… ம்ம்க்கும்”, நொடித்துக் கொண்டாள் சுமதி.

லோக்கல் ட்ரெயினில் தங்கள் லக்கேஜீக்களுடன் சிரமப்பட்டு ஏறினர். இரவானதால் அதிகம் கூட்டமில்லை.

“ஏன் அண்ணே, நான் சீக்கிரம் வேலை செஞ்சு பணக்காரனாகிடுவேன்ல?”

தொணதொணத்துக் கொண்டு வந்தவனிடம் நம்பிக்கையாய் புன்னகைத்தான் சுரேஷ்.

லோக்கல் ட்ரெயின் தங்களது ஸ்டேஷனில் வந்து நிற்க குழந்தையைத் தோளில் வசதியாய்ப் போட்டுக்கொண்டு இறங்கியவன்,

“வா, வா வெளியே போய் ரிக்ஷா பிடிக்கணும்” விரைந்தவனிடம்

“இதோ, போய்ட்டு இருங்கண்ணே நான் பின்னாலயே வரேன்”, என்று குனிந்தான். அண்ணன் சென்ற திசையை அவதானித்தவன் குழந்தையின் கையிலிருந்து கீழே விழுந்திருந்த இருபது ரூபாய் நோட்டை சாவகாசமாய் எடுத்து தனதுச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு இரண்டு பைகளையும் தோள்களில் போட்டுக் கொண்டு அண்ணன் சென்ற திசை நோக்கி வேக எட்டுக்கள் வைத்தான்.

எங்கும் ஹிந்தி ஒலிக்க, இப்போது அவனுடைய கேள்விகள் மாறின.ரிக்ஷாவில் இருந்து இறங்கி அந்தக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய

“கித்னா ஹீவா பாய்சாப்? இப்படின்னா என்னன்னே அர்த்தம்?”

“எவ்வளவு ரூபா ஆச்சுன்னு கேட்டேன், ரிக்ஷா மீட்டர் இவ்வளவு ரூபான்னு உண்டு இல்லையா? அதான் கேட்டு கொடுத்திட்டு வந்தேன்.”

“சித்தப்பா நல்லாயிருக்கீங்களா?”

எதிரில் வந்த ஜேம்ஸீக்கு சுரேஷ் வணக்கம் செலுத்தினான்.

“வா வா ஊருக்கு போயிட்டு வந்தாச்சா? பிரயாணம் நல்லா இருந்ததுல்ல…”

“ஆமா சித்தப்பா…”

“பையன் யாரு ஊர்ல இருந்து அழைச்சுட்டு வந்திருக்கப் போல?’

“ஆமா, அப்பாவோட ஒன்னுவிட்ட தம்பி பையன்…”

“ஓ” விபரம் கேட்டு “சரி” என்றுச் சொல்லி அவர் நகர்ந்து விட,

“யார்ணா இது?”

“இவங்க நம்ம தூரத்துச் சொந்தம் தான் ஜேம்ஸ் சித்தப்பா…”

“நமக்கு ஏது கிறிஸ்டின் சொந்தம் எல்லாம்?”

“அது அப்படித்தான் நம்ம குடும்பத்திலருந்து ஒருத்தங்க அவங்க மதத்தில கட்டிக் கொடுத்திருக்கு அப்படிச் சொந்தம்…”

“ஓ… அந்தப் பன்னுக்காக மதம் மாறுனவங்கன்னு சொல்லுவாங்க அவங்க தான?’

“ஏன் நீ வேணா இப்ப பன்னு வாங்கிக் கொடுத்துப் பாரேன்…”

நன்றாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்த அண்ணன் குரலில் அனலைக் காணவும் குமரன் வாயில் சற்று நேரத்திற்கு கோந்து ஒட்டிக் கொண்டது.

வீட்டை அடைந்தனர். ஒற்றை அறையைத் திறந்து உள்ளே சென்று முதலில் தான் இயற்கை உந்துதலை தீர்த்து வந்தவன்.

“போ ஒன்னுக்குப் போகணும்னா போயிட்டு வா.”

“அப்ப ரெண்டுக்கு?”

“அதோ அந்த ஓரத்துல ஒரு சின்ன வாளி இருக்கு பாரு, அதில தண்ணி நிறைச்சுக்கிட்டுக் கவர்மென்ட் டாய்லெட்டுக்கு போகணும்.”

“ஐயோ வெட்கமால்ல இருக்கும்…”

“ஏன் சாரு ஊருல எங்க போவீங்க?”

“அது நம்ம காடு, நம்ம சுதந்திரம். போகும் போதே நல்ல காத்து வரும் தெரியுமா?”

அவன் முகம் போன போக்கில் பக்கென்று சுரேஷ் சிரித்து விட்டிருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here