தொண்ணூறும் இரண்டும்_3_ஜான்சி

0
128

அத்தியாயம் 3. ஆட்களும் நம்பிக்கைகளும்

“விளையாடிட்டே திரிகிறது, முடியில் ஒரே தெத்து, வா இங்கின உட்காரு” மகளை அமர்த்தி நீண்ட பின்னல்களைப் பிரித்துச் சிக்கலின்றி வார தொடங்கினார் வயலட்.

“அம்மா வலிக்குது” கத்தியவளை பொருட்படுத்தாமல் வறட் வறட்டென வாரினார்.

கேரளத்து பெண்மணி வாயில் வெத்தலை குதப்பியவாறு வந்து நின்றார் வயலட் அவரிடம், “அக்கா வாங்க” என்றார் வயலட்.

“குட்டி ஸ்கூல் போயாணு?”

“ஸ்கூல் போய்ட்டு வந்தாச்சு பெரியம்மா”

“இருங்க அக்கா நம்ம அம்மா இன்னும் வரலை”, என்றதும் அவர்களுக்குள்ளே பேச்சும் சிரிப்பும் கிண்டலுமாக நேரம் கடந்தது.

இருவரும் அம்மா என்றழைக்கும் அந்தப் பாட்டி வந்து அமரவும், வயது பேதமில்லாமல் ஒருவரை ஒருவர் காலை வாரிச் சிரிக்க அம்மா வெடுக் வெடுக்கென்று தன் தலைமுடியை சீவுவதைக் கண்டு கொள்ளாமல் வாய் பார்க்க தொடங்கினாள் ராணி.

“ராணி கொஞ்சம் தண்ணி கொண்டாம்மோ” பாட்டி கேட்க அந்நேரம் அந்த பெண்கள் கூட்டம் அவர்களைக் கடந்து சென்றது. அவர்களுள் சில ஆண்களும் சேர்த்து ஐந்தாறு பெண்கள் இருப்பர்.

“இன்னிக்கு அவங்க முகத்தில சிரிப்ப பார்த்தியா?”

கடந்து சென்றவர்களைக் குறித்துப் பேச்சு திரும்பியது.

மாநில எல்லையில் அமைந்துள்ள இரு மொழி பேசும் ஒரு சில குடும்பங்கள் அங்கிருந்தனர். அவர்களது பிரதான தொழில் திருடுவது மட்டுமே. கோழித்திருடர்கள் என்பது அவர்களுக்கு மக்கள் வைத்திருக்கும் அடைப் பெயர். கோழி மட்டுமல்ல, பிக்பாக்கெட் திருட்டும் அவர்களது தொழிலே.

அவர்கள் களவு எடுப்பதற்குச் செல்வதற்கு முன்பாக ஏராளமான ஏற்பாடுகள் செய்வதுண்டு. பிளேடுகளை நான்காக உடைத்து நாக்கிற்குக் கீழாக வைத்துக் கொள்வர் அது பாக்கெட்டை கிழிப்பதற்கு உதவும்.

களவு எடுப்பதற்குச் செல்வதற்கு சாமி அது எந்தச் சாமியானாலும் அதற்குக் கும்பிடு போட்டு விட்டு செல்வது, சகுனங்கள் பார்ப்பது என பலதும் உண்டு. சகுனம் சரியில்லையெனில் புறப்பட்ட வண்ணமே திரும்பி விடுவர். போலீஸில் அகப்பட்டு அடிவாங்க யாரால் முடியும்? அவர்கள் செல்லும் போது யாராவது தலைமுடியை விரித்து வைத்திருந்தால் அது அவர்களுக்கு நல்ல சகுனம்.

ராணியின் தலையை வயலட் வாரிக் கொண்டு இருந்ததில் அவர்களுக்கொரு மகிழ்ச்சி.

“இன்னிக்கு அவங்க முகத்தில சிரிப்ப பார்த்தியா?”

தன்னிடம் கேட்ட மலையாளத்து அக்காவிடம்

“ஆமா அக்கா யாராவது அவங்க திருட்டுக்கு போகும் முன்பாக முடி விரிச்சுப் போட்டு இருக்கிறதை பார்த்தா நிறையத் திருட்டு கிடைக்குமாம்ல?” அவர்களுக்குள்ளாகச் சிரித்துக் கொள்ள,

“பொல்லாத கூட்டமப்பா இதுங்கள் கிட்ட பேச்சு வச்சுக்கக் கூடாது.” பாட்டி கூறினார்

“ஆமாம், நல்ல பாம்பு கிட்ட பழகுறதும் இதுங்க கிட்ட பழகுறதும் ஒன்னு தான் போங்க”

ராணி கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துச் சொம்பை திரும்பக் கொடுத்த பாட்டி

“என்னதான் சொல்லு ? திருட்டுத் தொழில் செய்யுறவங்கனாலும் நம்ம அக்கம் பக்கத்து வீட்டில கைய வைக்க மாட்டாங்க அது ஒரு நல்ல விஷயம்”

“ஆமாம், அதான திருடாதீங்கன்னு புத்தி சொல்லப் போனா நாங்க என்ன எவனும் தூங்குறப்பவா திருடறோம்? முழிச்சு இருக்கிறவன் கிட்ட தானே திருடுறோம். அது எங்களோட தொழில் திறமை, அதைப்பத்தி எதையும் சொல்லாதீங்கன்னு சொல்லிடுச்சுங்க.”

“சரி தான் நம்ம கிட்ட கையை வைக்காதவரை சரிதான், நம்ம பொழைப்பை பார்ப்போம்” பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்குக் குமரன் வந்து நின்றான்.

“சித்தி ஒரு குடம் தண்ணி வேணும்”

அவன் பக்கத்துக் கடையில் கையாளாகச் சேர்ந்திருக்க அவ்வப்போது அங்கு வந்து வாய் பேசுவதும் குடிக்க தண்ணீர் தேவையென்றால் வாங்கிச் செல்வதும் உண்டு.

“தம்பி உனக்குப் பாடம் சொல்லி தரட்டா…”

“அதெல்லாம் வேண்டாம் நான் தான் படிப்பை முடிச்சிட்டு, இப்ப வேலை பார்க்குறேன்ல” சிலிர்த்துக் கொண்டான்.

“அம்மா ஃபாத்திமா அக்கா வீட்டுக்கு போய்ட்டு வரேன்”, சிட்டெனப் பறந்து சென்றாள் ராணி.

“வரேன் சித்தி”, என்று குமரனும் புறப்ப்ட்டு விட,

“என்ன நீ வயசுப் பொண்ண இந்நேரம் யார் வீட்டுக்கும் அனுப்பி வைக்கிற?”

“அவளுக்கு பக்கத்தில ஒத்த வயசு நட்பில்ல அங்கே ஃபர்ஃஜானா வீட்டுல போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டு வருவா போய்ட்டு வரட்டும்” என்றார் வயலட்.

அரட்டைகள் தொடர்ந்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here