தொண்ணூறும் இரண்டும்_4_ஜான்சி

0
175

அத்தியாயம் 4: சலீமும் அவளும்

ஃபர்ஜானா வீடு பக்கத்துத் தெருவில் இருந்தது கணவன் வெளி நாட்டில் வசிக்கப் பன்னிரண்டு வயது சலீமும், பதினெட்டு முதல் இருபத்தி ஒரு வயதிலான மூன்று பெண் பிள்ளைகளோடு துலங்கும் வீடு அது.

அவர்கள் வீடு ராணிக்கு மிகவும் பிடித்ததொன்று, அவர்கள் எல்லோரும் எப்போதுமே கலகலவென்று இருப்பார்கள். ஒரு விதமான பால் போன்ற வாசனை எப்போதும் அவ்வீட்டில் ததும்பும். அவளுக்கு அந்த வீட்டின் மூத்த அக்காவின் பெயர் மட்டும் தான் தெரியும் மற்றவர்களைத் தீதீ என்று சொல்வதோடு விட்டு விடுவாள்.

மூன்று பெண்களும் அவ்வளவு அழகு வாய்ந்தவர்கள் அதுவும் தம்மை அழகு படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டவர்களும் கூடப் பேச்சும் எந்நேரமும் சிரிப்பும் கலகலப்பும் அவ்வீட்டிற்கு அவை மிக அழகு.

“ஃபாத்திமா தீதீ”

என்றவளாகத் தயக்க எட்டுகள் எடுத்து உள்ளெ சென்றாள். வா என்பது போல இருந்தது இரண்டாவது தீதியின் சிரிப்பு.

அப்போதுதான் தொழுகையை முடித்து விட்டு தீதியின் அம்மா எழுந்தார். வழக்கம் போல

“வா ராணிமா வா” என்றார் ஹிந்தியில்

புன்னகைத்தவாறே ராணி அமர்ந்திருந்தாள். சின்னத் தீதி கண்ணாடி முன் நின்று தன் தலையலங்காரத்தை ஏதோ சரி பார்த்துக் கொண்டு நின்றாள். அந்தக் கண்ணாடி மீது ராணிக்கொரு பித்து.

அந்த கண்ணாடி மிக பெரியது பாதி சுவரை அடைத்து கொண்டு அமைந்து இருந்தது. முழு ஆள் உயரம் கொண்ட ஐந்து கண்ணாடிகள் இணைக்கப் பட்டு இருந்தன. நீளமாய் அது சுவற்றில் பொருத்தி இருக்க, வேறு யார் விட்டிலும் காணக் கிடைக்காத அந்தக் கண்ணாடி மீது அவளுக்கு அளப்பரிய காதல்.

“Teri bahu aa gayi kya? (உன் மருமக வந்திட்டாளோ?)” எனக் கிண்டலடித்துக் கொண்டே ஃபாத்திமா தீதி சமையலறையினின்று டீ கப்போடு வர என்னதான் கிண்டலடித்தாலும் தீதியின் அழகான சிரிப்பில் ராணிக்கு கோபமே வருவதாக இல்லை.

அப்போது அங்குச் சலீம் வந்து நின்றான் வீட்டில் ராணி இருப்பதைக் கண்டதும் அவன் தன் போலத் தன் வேலையைச் செய்ய

சலீமையும் ராணியையும் கிண்டலடித்து ஓய்ந்தனர் அந்த அக்காமார்கள்.

‘வந்தாகிற்று, இனி கிண்டல் செய்தாலும் பதிலுக்கு என்ன சொல்வது?’ என புரியாமல், என்ன செய்வது என நெளிந்து கொண்டே எங்கோ பார்த்த வண்ணம் சிந்தனையில் இலயித்து இருந்தவளை இடறியது சலீமின் கிண்டல்…

“ammi aap ko hi dekh rahi hai’ ( அம்மா அவள் உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்)”

‘ஐயோடா அவள் பார்வை இருந்த தூரத்தில் ஃபர்ஜானா ஆண்டி தனது உடையை மாற்றிக் கொண்டிருக்க, இவ்வளவு நேரம் இங்கா கண்ணை வைத்துக் கொண்டு இருந்தோம்?’ கூச்சம் மிக இனியும் இங்கிருக்க முடியாதென வெட்கத்தில் வெளியே ஓடியே வந்து விட்டிருந்தாள். அவளது பின்னே மெல்லிய சிரிப்புச் சப்தம் கேட்டுக் கொண்டு இருந்தது.

ராணியின் மனதிலோ ‘இனி தீதீ வீட்டிற்குச் சலீம் இல்லாதபோது செல்ல வெண்டும்; எனும் தீர்மானங்கள் உதயமானது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here