தொண்ணூறும் இரண்டும்_5_ஜான்சி

0
138

அத்தியாயம் 5: நீ என் நண்பன் தானா? நண்பனே தானா?

பள்ளி விட்டு வந்து ட்யூசன் செல்கையில் வழக்கம் போல அந்த மறைவான இடத்தில் பையன்களுக்கு மட்டும் ஏதோ பயிற்சிகள் நடந்து கொண்டிருந்ததை நின்று கவனித்தாள்.

பரத்தும் அவளும் ஒரே ட்யூஷன் தான்.

“பரத் நீயும் இந்த ஸ்கூலில் படிக்கிறியா? என்ன கத்து தருவாங்க?”

எதிரில் வந்தவனை கேட்க, அவளை அவன் வெறுப்பாக நோக்கினான்.

“அதெல்லாம் உங்களைப் பத்திதான் சொல்லி தருவாங்க?”

“எங்களைப் பத்தியா? ஏன்டா என்னது?”

“நீங்க எல்லோரும் பலி கொடுக்கிறவங்க தானே?”

“அப்படி இல்ல பரத்…. அண்ணனுக்கு ஏதோ பிரச்சனைன்னு நேர்ந்திருப்பாங்க போல ஒரு ஆட்டை அந்தோணியார் கோயிலுக்குக் கொண்டு போய்ப் பலி கொடுத்தாங்கடா… நான் கூட ரொம்ப அழுதேன். ஆனா, கேட்கலையே…”

“அதுதான் உங்க பைபிள்லயெ கொடுத்திருக்குதே பெத்த பிள்ளைங்களையே பலி கொடுக்கிற மதம் தானே உங்க மதம். ச்சீ ச்சீ உன் கிட்ட பேசவே எனக்குப் பிடிக்கலை”, விலகி சென்றவனைப் பார்த்தபடியே நின்றாள்.

“அப்படியா பைபிளில் கொடுத்திருக்கு?” யோசித்தவாறே டியூஷனுக்கு நடந்தவளுக்குப் பரத்தின் கோபம் ஒன்றும் புரியவில்லை.

பரத் இவளுக்கு முன்பாக வீட்டுக்கு சென்று புத்தகப் பை எடுத்து விறுவிறுவென்று டியூசனுக்குச் சென்று படிக்க அமர்ந்து விட்டான்.

வினியும் டியூசனுக்கு வந்து சேர இவர்கள் அருகருகே அமர்ந்துக் கொண்டாள்.

பரத் வினியையும், ராணியையும் வெறுப்பாகப் பார்ப்பதும், பாடத்தைக் கவனிப்பதுமாக இருக்க வினி ராணியிடம் என்னவென்று கேட்டாள்.

“என்னவோ தெரியலை, பரத் என்னைத் திட்டினான்.”

“எதுக்கு?”

“தெரியலைடி, ஏதோ நம்ம பைபிள்ல பலி கொடுக்கிறோமாம்…”

“அப்படியா?”

“அப்ப உனக்கும் தெரியாதா?”

“தெரியாதுடி”

“எனக்கும் தெரியாது… நான்லாம் சர்ஸ்ல ஃபாதர் சொல்லுற கதையைக் கேட்கிறதோட சரி…”

“ஆமாம் ஆமாம் முதல் வரிசையில் போய் உட்கார்ந்து இருப்பியே?”

“ஃபாதர் சொல்லுற கதை எல்லாம் நல்லாயிருக்கும் தெரியும்ல…’

“ஹ ஹா உன் கிட்ட வந்து பைபிள் பத்தி பேசிருக்கான் அவன என்ன சொல்லுறது?” வினி வாயை பொத்திக் கொண்டு சிரிக்க,

ட்யூசன் டீச்சர் அதட்டினார்.

“என்ன செய்யறீங்க அங்க? ஹோம் வொர்க் எங்க?”

“இதோ டீச்சர்”, நல்ல பிள்ளைகளாக டீச்சர் முன்பாக நோட்டை நீட்டிக் கொண்டு நின்றனர்.

டீச்சர் அருகில் இருந்து ராணியை முறைத்த பரத்தை பார்த்து அவளுக்கு நடுக்கமாக இருந்தது. ‘இவன் என் நண்பன் தானா? இல்லை இவனுள்ளே வேறு ஏதேனும் ஆவி புகுந்து விட்டதா?’

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here