தொண்ணூறும் இரண்டும்_6_ஜான்சி

0
188

அத்தியாயம் 6: தீபாவளி வந்ததே

புதுப் பட்டுப் பாவாடை சட்டை தீபாவளி உடையோடு ராணி வெடிகள் வெடித்துக் கொண்டிருக்கக் குமரன் ஒவ்வொரு வெடியாய் எடுத்துக் கொண்டிருந்தான்.

“அக்கா உனக்குப் பயமாவே இல்லையா?”

“வெடி வெடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா தம்பி” கையில் இருந்த கனல் இருந்த அகர்பத்தியால் வெடியின் முனையைப் பற்ற வைத்து விட்டு ஓடோடி வந்து விட்டாள்.

“ஏற்கெனவே உன் ட்ரெஸ்ஸில் இரண்டு இடத்தில வெடி வெடிச்சதில் ஓட்டை விழுந்துடுச்சு”

“சரி பரவால்ல விடு, அப்பா வீட்டுக்கு வர்றதுக்குள்ள வெடிச்சு முடிக்கணும், இல்லைன்னா திட்டு விழும்”

ஜேம்ஸ் அந்தப் பக்கம் வந்ததும் உள்ளே சென்றதும் தெரியாமல், வெடி வெடிப்பதில் மும்முரமாக இருந்தவள் அத்தனை வெடிகளையும் வெடித்து முடித்த பின்னரே எழுந்தாள்.

“அக்கா…”

“என்னடா?”

“அந்தச் செல்வம் அண்ணன் அங்கே நின்னு உன்னையெ பார்த்துட்டு இருக்கு”

“அந்தாளா? ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கான்டா”

“உனக்கு ஏற்கெனவே தெரியுமா?”

“அதெல்லாம் நல்லா தெரியும், எங்கப்பா கிட்ட திட்டு வாங்கிக் கொடுக்காம போக மாட்டான் பொல இருக்கு, எப்ப பாரு முறைச்சிட்டே நிக்குறான்.”

“அக்கா அது மொறைக்கிறது இல்ல காதல் அக்கா காதல்”

“போடா நீ வேற’…”

“அக்கா எங்க கடையில இருந்து அந்தப் பிரசாத் அண்ணன் உன் பின்னாலயெ ஸ்கூலுக்கு வந்திருந்தான்ல, நீ அவனுக்கு இன்னும் பதில் சொல்லலியாம் என்னன்னு கேட்டான்.”

“அடப்பாவி அவனுக்கு இவ்வளவு திமிரா? எங்கப்பாட்ட சொல்லி அவன் தோலை உறிக்கிறேனா இல்லையான்னு பாரு.”

பின்னாலிருந்து வயலட் குரல் கொடுத்தார்.

“ராணிம்மா…”

பதிலே கொடுக்காமல் இவள் நிற்க,

“அக்கா சித்தி உன்னைக் கூப்பிடுறாங்க…”

“ஏதாச்சும் வேலையா இருக்கும் இல்லைன்னா ராணிம்மான்னு உன் சித்தி கூப்பிட்டுட்டாலும் …”

அவள் கையில் பையைத் திணித்த வயலட்,

‘போ போய்ச் சாம்பாருக்கு அரைக் கிலோ mixed baaji (கலவையான காய்கறி)யும் அரை லிட்டர் பாலும் வாங்கிட்டு வாம்மா… ஏ குமரா நீயும் அக்காவுக்குத் துணையா போயிட்டு வாடாப்பா”

“வாக்கா அட வாக்கா… எனக்கும் பிரசாத் விஷயம் கேட்க வேண்டி இருக்கில்ல?”

இருவரும் சில நிமிட தொலைவில் இருந்த மார்க்கெட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

சாயங்கால நேரம் என்பதால் தீபாவளி வெளிச்சம் அந்தப் பகுதியை தகதகக்க வைத்துக் கொண்டு இருந்தது.

“அந்த செருப்புக் கடையைப் பாரேன் அக்கா…”

குமரனின் கவனம் அழகான அந்தச் செருப்புக் கடையில் இருந்தது. அத்தர் தரித்த பெரியவர் செருப்பு வாங்க வந்த ஒருவரிடம் விலை சொல்லிக் கொண்டு இருந்தார். வேலையாட்கள் பம்பரமாய்ச் சுழன்றனர். அங்குத் தொடர்ந்து வியாபாரம் சக்கை போடு போட்டது.

எத்தனை எத்தனை கடைகள்?, பார்க்கவே அத்தனை அழகாக இருந்தன.

இந்தியாவில் தீபாவளி மட்டும் தானே போனஸ் என்று அதிகப் பணம் புழங்கும் மாதம். அதனால் தான் மக்கள் மிக மகிழ்ச்சியாய் சாரை சாரையாய் அங்கும் இங்குமாய் வலம் வந்து பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர்.

“அந்தக் கடையில் இருக்கிற விலை கூடின ஷீ ஒன்னு வாங்கணும்”

செருப்புக் கடையைப் பார்த்து குமரனின் கண்களில் ஆசை மின்னியது.

“வாங்கலாம் வாங்கலாம் நீ நிறையச் சம்பாதிச்சு வாங்கு”

“எப்ப சம்பாதிச்சு? எப்ப வாங்கி?”, அவன் குரலில் ஏக்கம் தெரித்தது.

“சரி அக்கா இப்ப விஷயத்தைச் சொல்லு”

“எந்த விஷய்ம்டா?”

“பிரசாத் …”

“அவன் நான் ஸ்கூல் போகிறப்ப பின்னாடி பின்னாடி வரான், நான் பயந்துட்டேன்.”

“ம்ம்ம்”

“என்னன்னு கேட்டா லவ் பண்ணுறானாம்…”

“ம்ம்ம்”

“அவன் அப்படிச் சொல்லவும் வெடவெடன்னு என் கையும் காலும் நடுங்கிடுச்சு…பயப்படாத மாதிரி காண்பிச்சுட்டு நான் ஸ்கூலுக்கு ஓடியே போயிட்டேன்.”

“ம்ம்”

“என்னடா உம்மு கொட்டுற? நான் என்ன கதையா சொல்லுறேன்?”

“அதான் நான் நின்னு பேசலையே பின்ன என்ன இவனுக்குப் பதில் வேணும்?”

“ஆமாவா இல்லையா?’”

“நீ ரொம்பத் தான் பண்ணுற.. நீ என் தம்பியா அவன் தம்பியா? இல்லைதான் பதில்…”

“அப்படியில்ல அக்கா நீ மட்டும் சரின்னு சொன்னா?”

ஏதோ ஆர்வம் உந்த, “சரின்னு சொன்னா என்னவாம்?”

“உன்னை அவன் சுத்த கூட்டிட்டு போவான்…”

“அப்புறம்?”

“நல்லா தின்ன வாங்கிக் கொடுப்பான்…’

“அப்புறம்?”

“அப்புறம் எனக்குத் தெரியாது, அவன் உன்னை உண்மையாவே லவ் பண்ணுறான்கா அதான் நான் சொன்னேன், சுரேஷ் அண்ணன் கிட்ட நான் உன் கிட்ட இதைக் கேட்டதா நீ சொல்லிக் கொடுத்திடாத. அடி தோலை பிச்சிடும். முக்கியமா உங்க அப்பா கிட்ட சொல்லிக் கொடுத்திடாத முதுகு தோல் அவ்வளவுதான்”

என்றதும் ஹா ஹா சிரித்தவாறே இருவரும் காய்கறியும் ,பாலும் வாங்கி வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருக்க வனஜா அக்கா ராணியை அழைத்தாள்.

“என்ன அக்கா?”

“தம்பியை பிடிக்கிறியாம்மா?” தன் கைகளில் இருந்தவற்றைக் குமரனிடம் கொடுத்து வீட்டில் கொடுக்கச் சொன்னவள்.வனஜா அக்கா கையில் இருந்த ராஜாவை தூக்கி கொண்டாள்.குட்டிப் பையன் வயிற்றை நிமிண்டி இவள் விளையாட்டுக் காட்ட அவன் சிரித்தான்.

“எங்கேக்கா போறீங்க?”, எனக் கேட்க, அவர் கையில் தட்டில் தீபாவளி பலகாரம் அதை மூடிய அலங்கார துணியைப் பார்த்து புரிந்துக் கொண்டாள்.

“யார் வீட்டுக்கு போகிறீங்கக்கா?” பின் தொடர்ந்தவள் நின்றது ஃபர்ஜானா வீட்டில் தான்.

வனஜா அவர்கள் வீட்டிற்குள் செல்ல,“Ammi Teri bahu aa gayi (அம்மா உன் மருமக வந்திட்டா)”, வழக்கம் போல ஃபாத்திமா தீதீ இவளைக் கண்டதும் கிண்டலடிக்க,

ராணியோ “didi mai baad me aathi hoon ( அக்கா நான் அப்புறமா வரேன்)” என்று தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தெரித்து ஓடி வந்து விட்டாள்.

அவள் பின்னால் ஃபாத்திமா தீதியின் சிரிப்பு ஒலித்தது.

‘போங்கப்பா இனி உங்க வீட்டுக்கு வந்தா என்னன்னு கேளுங்க…’

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here