தொண்ணூறும் இரண்டும்_7_ஜான்சி

0
168

அத்தியாயம் 7: என்னவாயிற்று?

“இந்த டிசம்பர் மாசம் வந்தாலே வேலை தான்”

“ஹம்மாடி எவ்வளவு வேலை?”

கிறிஸ்மஸ்ஸிற்காக வீட்டை ஒட்டடை அடிப்பது கதவிற்கும், சீலிங்கிற்கும் பெயிண்ட் பூசுவது மட்டும் இன்னும் மிச்சமிருந்தது.

மதியம் வழக்கம் போலத் தன்னுடைய பேச்சுத் துணைக்கான மக்களோடு சேர்ந்து வயலட் பேசிக் கோண்டு இருந்தார்.

“அப்பா கதவுக்கு நான் சொல்லுற கலர்தான்.”

“சரிம்மா”

“குடிலும் நான் தான் கட்டுவேன்…”

“சரி..”

“என்னப்பா அடிக்கடி நியூஸ் சேனல் வைக்கிறீங்க?”

“ம்ம் ஏதோ பிரச்சனை?”

“என்னதுப்பா?”

“அதெல்லாம் உனக்குப் புரியாது, சின்னப் பிள்ளையா படிச்சியா உன் வேலையைப் பார்த்தியான்னு இருக்கணும்.”

வெடுக்கென அவர் பதில் சொல்லவும் அங்கிருந்து நகர்ந்து அம்மாவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

“என்ன இருந்தாலும் அப்படி ஒருத்தர் வழிபடுற இடத்தை எப்படி உடைக்கப் போகலாம்? எவ்வளவு பெரிய தவறு?” மலையாளத்து பெரியம்மா பகவதி பேசிக் கொண்டு இருந்தார்.

டிவியில் ஏதோ சப்தம் கேட்க அனைவரும் உள்ளே வர செய்தி சானலில் எதையோ காண்பித்துக் கொண்டு இருந்தனர்.

“என்னதும்மா?”

‘அந்த மசூதியை உடைக்குறாங்க…”

“ஏன் மா?”

“தெரியலையே?…”

ஜேம்ஸ் படபடவென்று பேசலானார்,

“எல்லோரும் அவரவர்க்கு வாங்க வேண்டிய எல்லாவற்றையும் வாங்கி வச்சுக்கோங்க. அரிசி, பாலு, சர்க்கரை எல்லாம் வீட்டுல இருக்கில்ல?”

“மாசம் மாசம் சாமான் நிறைக்கிறது போல நேத்து தானே எல்லாம் நிறைச்சோம், அதனால எல்லாம் இருக்கு பால் மட்டும் தான் வாங்கணும், இனிதான் வாங்க போகிறதா இருந்தேன்”

“அப்படியா? நான் போய் வாங்கி வரேன். யாரும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது சரியா? பாப்பா நீயும் தான் ரெண்டு நாளைக்கு வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. நாட்டில நிலவரம் சரியில்ல புரியுதா?”

அங்கு நின்றிருந்த மலையாளத்து பெரியம்மாவையும் அந்தப் பாட்டியையும் அவ்வாறே சொல்லி அவரவர் வீட்டிற்குப் போகச் சொல்ல எல்லோர் மனதிலும் கலவரம் பூண்டது.

ஜேம்ஸ் வீட்டை விட்டு அவசரமாகச் சென்று பொருட்களோடு திரும்பி வந்தார். ராணிக்கு மனதிற்குள்ளாகப் படபடப்பாக இருந்ததே அன்றிக் காரணம் புரியவில்லை.

“என்னவாயிற்று?”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here