தொண்ணூறும் இரண்டும்_8_ஜான்சி

0
169

அத்தியாயம் 8: அந்நாள் கரிநாள்.

அடுத்த நாள் விடிந்ததிலிருந்து ஆரம்பித்தது வன்முறை. ரோட்டிற்கு யாரும் செல்லாதீர்கள் எனக் கூறப்பட்டது. அனைவரும் தத்தம் வீட்டில் பயந்த வண்ணம் அமர்ந்து கொண்டிருந்தனர்.

காற்றில் எங்கும் ஏதோ தீயின் வாசனை. சற்றே கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள் ராணி. ‘ஆ ஊ என அலறிக் கொண்டு அங்கு ஓடிக் கொண்டு இருந்தவர்கள் கோழிக் களவாணி அல்லது பிக்பாக்கெட்காரர்கள் என அழைக்கப் படும் அந்த மக்களல்லவா? இவர்களுக்கு என்ன பிரச்சனையாக இருக்கக் கூடும்?’ அவளுக்கு இன்னும் கூட முழுதாய் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

காவல் துறை முன்பாகவே அத்தனை சண்டைகள் நடைபெறுகின்றதுவாம், யாராலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லையாம்.

“அந்தக் கடைகளை உடைச்சிட்டானுங்களாம்.”

ஒரு சிலர் செய்தி சொல்லி சொல்லி செல்ல,

ஒவ்வொரு நொடியும் திக் திக்கென்று கடக்கின்றது.

கரும் புகை பரவுகின்றது, கீழே ரோட்டுப் பக்கத்தில் பல இலட்சங்களை முதலீடாகக் கொட்டி, பற்பல கனவுகளை விதைத்து அறுவடை செய்யக் காத்திருந்தவர்களின் கடைகள் மட்டும் அன்று எரியவில்லை, கனவுகள் எரிந்து கொண்டு இருந்தன.

திடீரெனப் பெரும் கூச்சல்… என்னவென்று பார்க்க கதவை திறக்க, செருப்பையே கண்டிராதது போலப் பெரிய பெரிய டிரேக்களில் விதவிதமான செருப்புகளை அள்ளிக் கொண்டு தத்தம் வீட்டை நோக்கி ஆலாய் பறந்து கொண்டிருக்கின்றது மக்கள் கூட்டம். அதில் திருடர் கூட்டம், கோழி களவாணி என்று அழைக்கப் பட்ட மக்களல்லாது அனுதினம் பழகும் பலரும் இருக்க,

“நீங்கள் எல்லோரும் நல்லவர் வேடத்திலிருந்த திருடர்கள் தானா?” ராணியின் முகத்தில் இகழ்ச்சி முறுவல் மலர்கின்றது.

“பாப்பா, அங்கே என்ன வேலை கதவை அடைச்சி வை” ஜேம்ஸின் குரலில் செயலற்று நின்றவள் முன்பாகக் குமரன் வந்து நிற்கிறான்.

அவன் கையில் ஒரு பெரிய ட்ரே அதில் ஐம்பது நூற்றுக் கணக்கில் விதவிதமான நிறங்களில், அளவுகளில் சில தங்கள் ஜோடி இல்லாதவையாய் ஒற்றையாய் பற்பல செருப்புகள்…

“அக்கா கதவை திற அக்கா இதை உள்ள வை நான் இன்னொரு ட்ரே கொண்டு வரேன்”

அதே போல ஒரு ட்ரே நிறையச் செருப்புகளோடு கவர்மெண்ட் வேலை செய்யும் பக்கத்து வீட்டுக்காரன் தன் வீட்டில் நுழைவதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

“கதவை திற அக்கா உள்ளே வச்சிடுறேன்.”

“இதையெல்லாம் இங்கே கொண்டு வரக் கூடாது”

கதவை இழுத்து மூடி அடைத்துக் கொண்டாள்.

“நரகம் எரியும் நெருப்பும் புகையுமாய் இருக்குமாமே? அன்று அந்த நகரம் அப்படித்தான் இருந்தது. பாதி நெருப்பு அந்நகரத்தை சுட்டெரிக்க மீதி நெருப்பு மனங்களைச் சுட்டெரித்து விட்டிருந்தது.

அன்பு, கருணை, இரக்கம் எல்லாம் காய்ந்து சருகாகி போய் அந்நகரத்தில் நெருப்பில் வெந்துக் கொண்டிருந்தன. அல்லது அந்நகரத்தினை வேக வைத்துக் கொண்டிருந்தன.

இரவு நெருங்க நெருங்க செய்திகளின் பரிமாணங்கள் அயர வைத்தன. பொருட் சேதங்கள் அல்லாத உயிர் சேதங்கள் ஒவ்வொன்றாய் அலசப் பட்டன.

பற்ற வைத்த நெருப்பு அணைந்தும் புகை இன்னும் தீர்ந்திருக்கவில்லை. கரி நாள் என்றொரு பெயர் இருப்பின் அதனை அந்த நாளுக்குச் சூட்டலாம் அத்தனை கருமை சூடியிருந்த நாள் அது.

அடுத்த நாள் அனைத்து தாண்டவங்களும் அடங்கி நகரம் அமைதி கொண்டிருந்தது. மயான அமைதி என்பது இதுவாக இருக்குமோ? அச்சம் என்ற ஒன்று அறியாத உள்ளங்களை அச்சங்கள் மற்றொரு தோலாய் போர்த்திக் கொண்டன.

இரண்டாவது நாளாக ஒருவரும் பள்ளிக்கோ வேலைக்கோ சென்றிருக்கவில்லை. எல்லோரும் தெருவில் கூடி இருந்தனர். கூட்டமாக இருந்தது, எல்லோரிடமும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. நிகழ்ந்த சில பேச்சுக்களும் தயக்கத்தினைத் தாண்டிய பேச்சுக்களாக அல்லாமல் பேச பழகும் குழந்தையை ஒத்ததாக இருந்தன. யாருமே தவறு செய்யாமல் எல்லோரும் தவறு செய்ததாக உணர்ந்தனர். அங்குக் குதூகலமோ, மகிழ்ச்சியோ ஒன்றும் காணப்படவில்லை.

அந்தக் கூட்டத்தில் இருந்த பேதமை நிறைந்த குழந்தை ஒன்று எல்லோரும் இணைந்து இருந்த அந்தத் தருணத்தை அற்புதமாக எண்ணியதோ என்னவோ? தனது தந்தையிடம் வினவியது

“அப்பா இந்தத் திருவிழா மறுபடி எப்போது வரும்?”

‘இந்தத் திருவிழா என் நாட்டில் எப்போதுமே வரவேண்டாம்’, ராணி தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here