1. நாயகி

0
1164
Naayagi Jansi Rani

அத்தியாயம் 1

அது ஒரு கல்லூரி வளாகம், அதிகாலை நேரம். அதிகமாய் மாணவர்கள் வந்து சேர்ந்திராத நேரம். அங்கு நிழல் பரப்பிக் கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தின் கீழே தான் அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. ஆவேசமாய்ப் பிணைந்திருந்த அவ்விருவர்கள் இதழ்கள் பிரியவும், அந்நேரத்தில் அவர்களைச் சுற்றியிருந்த சிலர் உற்சாகமாய்க் கைத்தட்டினர்.

வாவ் என்ன சீன்…ரியல் சீன் டி

அதிசயித்துத் துள்ளினாள் மதுப்ரேமி. சீனின் நாயகியாக இருந்த சுலோச்சனாவுக்குத்தான் என்ன செய்யவென்று புரியாத நிலை?

கண்களில் நீர் கோர்த்தவளாக, தன் கையில் வலுவந்தமாய்த் திணிக்கப் பட்டிருந்த பூங்கொத்தை சுரணையில்லாதவள் போல ஏந்தியவாறு அங்கிருந்து நகர்ந்துச் சென்று கொண்டிருந்தாள்.

அவள் பின்னே யார் வந்தார்கள்? என்ன சொன்னார்கள்? ஏன் அழைத்தார்கள்? என்ற ஒன்றுமே அவள் மண்டைக்குள் ஏறவில்லை.

பிறந்த நாள் அதுவுமாக காலையில் தன்னிடமிருந்த நல்ல உடைகளுள் ஒன்றை உடுத்து, கோயில் சென்று அர்ச்சனை செய்து விட்டு வந்திருந்தாளே? சட்டென்று அந்த மகிழ்ச்சி மறைந்து, மனமெல்லாம் தவிப்பு சூழ ஆரம்பித்து விட்ட ஒரு தோற்றம் எழுந்தது.

அவளிடமிருந்த அந்தப் பழைய நோக்கியா போன் இசைத்தது.

“பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டிமா’ தன் வயதான பாட்டிமாவின் குரல் கேட்டு எழுந்த கேவலை மனதிற்குள் அடக்கிக் கொண்டாள்.

நல்லாயிருக்கீங்களா பாட்டி?

போனை காதுக்குள் அமர்த்தும் வேகத்தில் கையிலிருந்த பூங்கொத்துத் தரையில் விழுந்து புரண்டதை அவள் கவனிக்கவில்லை. பாட்டியும் பேத்தியுமாய்ப் பேசியவாறு கல்லூரி வகுப்பிற்கு முன் வந்து சுலோச்சனா சேர்ந்திருக்கப் பாட்டியிடம் விடைப் பெற்றுப் போனை அமைதியாக்கினாள்.

சிலைப் போலவே போய் வகுப்பில் அமர்ந்தாள். கண்ணீர் அதன் பாட்டிற்கு அவள் கண்களினின்று வடிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு அருவருப்பில் அவள் தனக்குள் குமைந்துக் கொண்டிருந்தாள்.

அழுதுக் கொண்டிருந்தவள் முன் வந்து அமர்ந்திருந்தாள் மது எனும் மதுப்ரேமி.
அட என்னதுக்கு இப்ப சீன் போட்டுட்டு இருக்க?, அதுதான் உன் பின்னயே வந்தான்ல நீதான் அவனைக் கண்டுக்கலை. அவன் வந்து உன் கிட்ட கெஞ்சணுமாக்கும். எவ்வளவு நல்லவன் தெரியுமா? இதுவரை எந்தப் பொண்ணையும் எட்டிப் பார்த்ததே இல்லை. நீ வந்த அன்னிலிருந்து உன் பின்னாடியே சுத்துறான் உனக்குப் பெருமையா இல்ல இருக்கணும்? இப்படி அழுது வைக்கிற? நல்லவேளை அந்தப் பூங்கொத்துத் தரையில் விழுந்ததை அவன் பார்க்கவில்லை. இல்லைன்னா நீ ஒரு வழியாகியிருப்ப?

அவள் டெஸ்கில் அந்தச் சிகப்பு நிற பூங்கொத்தை அதிகாரமாய் வைத்துவிட்டு நகர்ந்தாள். யாருக்கு வேணும் இந்தப் பூங்கொத்தும், வாழ்த்தும்? …
மண்ணாங்கட்டி என மனதிற்குள் முறுமுறுத்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு மண்ணாங்கட்டி எனச் சொல்லவும் தன்னுடைய ஊர் ஞாபகம் வந்துவிட்டிருந்தது.

ஊர் முழுவதுமே புழுதி பறக்கும் அப்படி ஒரு கிராமம். மழையின்றி வாடும் வயல்கள். எப்படியோ கிணற்றுப்பாசனம் ஒரு சில இடத்தில் இருக்கக் கொஞ்சமாய்ப் பயிர் பச்சைகளோடு சிலர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. கிராமத்திற்கேயுரிய கட்டுப்பாடுகளோடு வளர்ந்தவள் தான் சுலோச்சனா.

பொட்டப்புள்ளைக்கு எதுக்கு இத்தனை சிரிப்பு? அடக்கமாயிருடி…
அவள் அடங்கிப் போனாள், சிரிப்பும் அவள் கூடவே அடங்கிற்று.

உன் கூடப் படிக்கிற பையனானாலும் ஸ்கோலுல பேசறதோட நிறுத்திக்க, வழியில பார்த்தோம் பேசினோம் பல்லக்காட்டினோம்னு இருந்தா நல்லா இருக்காது?

சிறுவயதில் கோலிக்குண்டு விளையாடிய நட்புகள் பதின் வயதில் பறிபோனது.
பள்ளிக் கோடத்துக்குப் போனாமா வந்தோமான்னு இருக்கணும், வார வழியில எங்கேயாவது நின்னே, யாரு வீட்டுக்கு போனேன்னு இருந்தா வாலை வெட்டிப் புடுவேன்.

பழகிய ஒரு சில தோழிகளும் தூரமாகினர்.

திட்டுவது அவளைப் பெற்ற தாய் தங்கம்மா, திட்டுவதில் எதுவும் அவள் சொந்த சிந்தனையாக இருக்காது. கணவன் மாத்தையன் என்ன சொல்வானோ? அதுவே அவள் மந்திரம்.
அதுதான் அடிக்கடி பெருமையாகச் சொல்வாளே? நீ பொறந்த அன்னிக்கே உன் அப்பாரு சொல்லிப்புட்டார் புள்ள… என்ன சொன்னார் எனக் கேட்க மனமிருக்காவிட்டாலும் தங்கம்மா சொல்லாமல் விடுபவளா என்ன?
இங்க பாரு தங்கம், பொறந்தது பொட்டப்பிள்ள இதை நல்லா வளர்க்கிறது உன் கையில தான் இருக்கு. ஏதாச்சும் கெட்ட வழி போகாம நல்லபடி வளர்க்கிறது உன் பொறுப்பு. வளர்ந்து காதல் கீதல்னு ஓடிப் போச்சோ உன்னைக் கொன்னு தொலைச்சுப்புடுவேன்.

தாயின் வாயிலிருந்து பெருமிதமாகத் தந்தையின் சொற்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும்
“ச்சீ என அவள் மனம் அருவருக்கும்.
பிறந்த உடனே மக ஓடிப் போயிடுவான்னு சிந்திச்ச மகா அறிவாளி நீதான்யா?”

தகப்பனை மனதிற்குள் சாடிக் கொள்வாள்.

தகப்பனுக்கும் அவளுக்கும் ஆகவே ஆகாது. தேவையில்லாவிடில் பேசிக் கொள்வதும் இல்லை.ஆனால், என்ன செய்வது? படிப்பிற்காக எல்லாச் செலவையும் இப்போது அவரிடமிருந்து பெற்றுத்தானே ஆக வேண்டும்.
ஒவ்வொரு முறை அவள் படிப்பு நிறுத்தப்படும் நிலை வரும் போதும் அவளது பாட்டிதான் அவளுக்குத் துணிவு கொடுத்துப் படிப்பை தொடர உதவுவார். மாத்தையன் என்னதான் கடுமையானவராக, முட்டாள்த்தனமான சிந்தனைக் கொண்டவராக இருந்தாலும் தாய் மேல் உள்ள கரிசனையால் அவர் சொல்வதைத் தட்டாமல் செய்வார்.

இப்போதும் கூடச் சுலோச்சனா பன்னிரெண்டாவது முடித்த பின்னர் மேற்படிப்பிற்காக வீட்டில் வெகுவாகப் போராடி வெகு சிரமத்தோடு தன் கிராமத்திலிருந்து வெளிவந்து அருகாமையிலுள்ள நகரத்தின் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்.தங்கியிருப்பதும் கல்லூரி ஹாஸ்டலில் தான். அவளுக்குத் துணையாகப் படிக்கக் கூட அவள் ஊரிலிருந்து ஒருவரும் கிடையாது.

படிப்பில் அவளைப் போல அவள் ஊரின் மற்ற பெண்களுக்கு நாட்டமில்லை என்பது ஒரு காரணமென்றால், ஆண்கள் உள்ளூரில் பத்து அல்லது பன்னிரெண்டு வரை படித்து விட்டு நகரங்களில் வேலை தேடி செல்வதும் கூட மற்றொரு காரணம்.
நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் கிடைத்திருந்த கல்வித்தொகைக் காரணமாக அவளது படிப்புச் செலவுகள் ஓரளவு சமாளிக்கப் பெற்றிருந்தன.
மாத்தையன் அவள் படிப்பை தொடரச் சொல்வதற்கு அவள் படிப்பை தொடர்வதில் அவருக்கு அதிகமாய்ச் செலவாகப் போவதில்லை என்பதும் ஒரு காரணம்.

வயதான தன் தாயின் அதாவது சுலோச்சனாவின் ஆச்சியின் பேச்சைக் கேட்டு மாத்தையைன் அவளைப் பலமுறை பல்வேறு சட்ட திட்டங்களைச் சொல்லி, கட்டுப்பாடுகளை விதித்தே அவளைக் கல்லூரிக்கு அனுப்பி இருந்தார்.

படிக்கப் போறேன்னு சொல்லிட்டு காதல், கீதல் கண்ட கருமாந்திரம்னு வந்து நின்னியோ? பொலிப் போட்டுருவேன் பார்த்துக்க? ரொம்பப் படிச்சிட்டேன்னு ஆடறதும் என் கிட்டே கூடாது. நான் எந்த மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கிறேனோ அந்த மாப்பிள்ளையைக் கட்டிக்கிடணும்” என்பது அவரது கடைசி எச்சரிக்கையாக இருந்தது.

உன்னைப் போல ஆம்பளைங்களைப் பார்த்ததுக்கு அப்புறமாவும் என்னால காதல் கீதல்னு போக முடியும்னு நினைக்கிறியா என்ன? மகளை மகளா பாருங்கடா டேய், நான் என்ன வெத்து உடம்பா? எனக்குன்னு நீ நினைக்கிற மாதிரி கீழான ஆசைகள் தான் இருக்குமா என்ன? காதல் கல்யாணம் தாண்டி வேற விஷயமே இல்லையா இந்த உலகத்துல? “தான் கள்ளன் பிறரை நம்பான்” வயக்காட்டு வேலைக்கு வர்ற பொம்பளைங்க ஒருத்தியை இவரு விட்டு வைக்கிறது இல்ல, தன்னைப் போலத்தானே அடுத்தவங்களையும் சொல்லத் தோணும்?… அப்போது இவற்றைத் தன் மனதிற்குள்ளாக மட்டும் அவளால் பொரும முடிந்தது.

சுலோச்சனா தன் முகத்தை அதிகமாய் ஒரு முறை கழுவினாலும் கூட, யாருக்காக இந்த அலங்காரமெல்லாம் எனச் சிடுசிடுத்து மனதை ரணமாக்கும் நிகழ்வுகள் ஏராளம். தன் பள்ளியிலிருந்து திரும்புகையில் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலும் கூடச் சந்தேகம் நிறைந்த பல கேள்விப் பதில்கள் அவளைத் தொடரும்.
தனக்குத் தெரிந்த அதுவும் பெண் பிள்ளைகளிடம் கூடப் பேச அனுமதிக்காத அவளின் கட்டுப்பாடுகள். ஏழாம் வகுப்பிலேயே இனி படிக்கவே வேண்டாம் எனச் சொல்லி அவளைப் பாடாய் படுத்தின நிகழ்வுகள். பேசவும் சிரிக்கவும் அனுமதிக்காத பெற்றோர் இவைகளால் அவளுக்கு ஆண் என்றாலே மனம் திடுக்கிடும் ஒரு உருவகம் அவள் உள்ளத்தில் உருவாக்கப் பட்டு விட்டது.

‘நீ காதலித்து விடுவாய்’ என்று அவளை அடிக்கடிச் சொல்லி சொல்லியே சலிக்க வைத்துக் கொண்டிருந்தார் மாத்தையன்.
அத்தனை தடைகளையும் தாண்டி சுலோசனா கல்லூரியில் வந்து சேர்ந்தாள்.
ஹாஸ்டலில் விட வந்து சென்றவரது பொருளாதாரம் மகளை அடிக்கடி கல்லூரிக்கு வந்து கண்காணிக்க அனுமதிக்காததால், மகளுக்கு லீவில் மட்டுமே வீடு திரும்ப வர எனக் கொஞ்சம் காசு கொடுத்து விட்டு, பலவித மிரட்டல்களோடு அவர் விடைப் பெற்றுச் சென்ற போது பிரிவாற்றாமையை விட அவளுக்கு விடுதலை உணர்வே ஏற்பட்டது.

புதிய பிரம்மாண்டமான கல்லூரி, அட்டகாசமாய் வண்ண வண்ண உடைகளில் கலக்கும் தன் வயதையொத்த இளமைத் துள்ளலோடு கொண்டாடும் மாணவ மாணவியர், அவர்களின் நுனி நாக்கு ஆங்கிலம் இவை அவளை மிரட்டினாலும் கிடைத்த நல்ல, எளிய தோழமைகளால் அவளால் கொஞ்சம் தன் கூட்டை விட்டு வெளியே வர முடிந்தது. பெரிதாக இல்லையாயினும் சிறிதாகப் புன்னகைக்கக் கற்றிருந்தாள்.
கண்களோடு கண்கள் சந்தித்து நிமிர்வாகப் பேசும் திடம் பெற்றுக் கொண்டிருந்தாள். முதல் சில மாதங்கள் கல்லூரி வாழ்க்கை மிக நன்றாகத்தான் சென்றது. பின்னர்தான் யார் கண் பட்டதோ?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here