10. நாயகி

0
1036
Naayagi Jansi Rani

அத்தியாயம் 10

மூன்றாமாண்டு மாணவர்களுக்குப் பிரிவுபச்சார விழாவும் அதைத் தொடர்ந்து ஸ்டடி ஹாலிடேஸீம் விரைவில் இருப்பதாக அறிந்ததிலிருந்து சுலோச்சனா மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தாள்.அன்று நிதானமாகப் புறப்பட்டு வந்திருந்தாலும் வழக்கம் போலவே சிறிது நேரம் முன்பே கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள். சுனிலும் பத்மினியும் கொஞ்ச தூரத்தில் நிற்கவும் அதிலும் சுனில் முகம் கலக்கமாகத் தெரியவும் சற்று அருகே சென்றாள்.

பிக்னிக் மட்டுமல்லாமல் அவளது தனிப்பட்ட செலவுகளுக்கெல்லாம் பத்மினி அவனை உபயோகப் படுத்திக் கொண்டிருப்பதாக ஒருமுறை பத்மினியின் தோழியே மனம் நொந்து கூறிக் கொண்டிருந்ததை இவளும் இவள் தோழிகளும் கேட்டிருந்தனர்.

ஒருவன் காதல் சொன்னதற்காகவே அவனை எத்தனை விதமாய்ப் பயன்படுத்த முடியுமோ அத்தனை விதமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள் பத்மினி. அவளது ஒற்றைப் புன்னகைக்காக அவன் என்னவும் செய்யத் தயாராக இருந்தான். ஏதோ ஒன்று இவ்வளவு காலம் பொய்யாக நடித்தாலும் அவர்களிடையே எல்லாம் நன்றாகத் தானே போய்க் கொண்டிருந்தது என எண்ணினாள்.

இப்போது என்ன பிரச்சனை? என்றறியாமல் அவளால் அங்கிருந்து நகர முடியவில்லை.

‘பத்மினி நம்ம காலேஜ் முடியற வரைக்கும் உன் கல்யாணத்தை நிறுத்தி வைக்க முடியாதா? நான் உடனே வேலையில் சேர்ந்து வந்து உன் வீட்டுல பேசி நம்ம கல்யாணத்தை நிச்சயம் பண்ணிடுவேன்ல…’

‘அதான் முடியாதுன்னு சொல்லுறேன்ல சுனில்…நான் என்னிக்கு உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னேன்? நீயே சொல்லேன்.’

பேயறைந்த மாதிரி நின்றான் சுனில்.

‘நான் தான் முதல்லயே சொன்னேன்ல? எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்க, நாம வேணும்னா ப்ரெண்ட்ஸா இருப்போம்னு?’

‘இப்ப எங்க மாமாக்கு வெளி நாட்டுக்கு போகிற முன்னாடி திருமணம் செய்யணும்னு ஜாதகம் சொல்லுதாம். அதனால அடுத்த முகூர்த்தத்திலேயே எங்களுக்குக் கல்யாணம். படிப்பை முடிச்சிட்டு நானும் யூ எஸ் போயிடுவேன். மேரேஜ் இன்விடேஷன்க்குக் கார்ட் கொடுக்க வந்தா நொய்யு நொய்யுன்னு ஏதேதோ பேசறியே?’ …. அவன் கையில் தனது திருமண அழைப்பிதழை திணித்து விட்டு அலட்சியமாய்ச் சென்று விட்டாள்.

இடி தாக்கியது போல நின்றுக் கொண்டிருந்தவனை அருகில் சென்று கையைப் பற்றினாள் சுலோச்சனா. ஆண் பெண் என்ற பேதமெல்லாம் அப்போது அவள் மனதில் இல்லை. அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதே அவள் மனதில் நின்றது.

‘சுனில்…ஏ சுனில்…’

‘ம்ம்…சுலோ…’ சிறுபிள்ளையாய் அலங்க மலங்க முழித்தான்.

‘நீ உங்க அம்மா அப்பாக்கு எத்தனாவது பிள்ளைடா?…’

இப்ப இந்தக் கேள்வி எதற்கு என்று புரியாவிட்டாலும்…

‘நான் எங்க வீட்ல ரெண்டாவது, மூத்தது அக்கா…’ சுரத்தின்றிச் சொன்னான்.

‘மூணு பேர்ல உன்னை யார் அடிக்கடி அடிப்பாங்க உங்க வீட்ல?’

‘அடிப்பாங்களா?’

‘ம்ம்…’ ஊக்கினாள்…

‘யாரும் அடிக்கமாட்டாங்க சுலோ… யாருமே அடிக்க மாட்டாங்க … நான் அவங்களுக்கு அவ்வளவு செல்லம்.’

‘உன்னை உங்க வீட்டில உள்ளவங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு உனக்கும் அவங்களை எல்லாம் பிடிக்கும் தானே?’

‘ம்ம் ஆமாம்’, சிறுபிள்ளையாய் தலையசைத்தான்.

‘இப்பச் சொல்லு உனக்கு ஆசைக் காட்டி ஏமாத்தினாளே இந்தப் பத்மினி பெருசா உங்க வீட்டில உள்ளவங்க பெரிசா?’

ஓவெனக் கதறி அழுதவனைத் தாங்கிக் கொண்டாள் சுலோச்சனா.

‘வேணான்டா அழாதேடா… அவ சரியில்லைன்னு எனக்கு ஏற்கெனவே தெரியும், சொன்னா நீ நம்புவியோ மாட்டியோன்னு நினைச்சேன்…’

‘நீ சொல்லியிருக்கனும்டி…’ கண்ணீரை துடைக்கத் துடைக்கப் பெருகியது.

‘உனக்கெல்லாம் எனக்குக் கிடைச்ச அம்மா அப்பா மாதிரி கிடைச்சிருக்கணும், சும்மாவே வாரியலாலே சாத்துவாங்க… செல்லம் கொஞ்சி உன்னை வளர்த்து வீணாக்கிப் புட்டாங்க.’

மெலிதாய் புன்னகைத்தான்… தோழியில் தோளினின்று விலகி நின்றான்.

இன்னும் அவன் கண்கள் கலங்கி இருந்தன.

‘இங்க பாரு நான் உன் கூடவே எந்நேரமும் தொத்திட்டுல்லாம் அலைய முடியாது. உனக்கென்னாகுமோன்னு பயந்தும் திரிய முடியாது. காதல் தோல்வி தாங்க முடியலைன்னு எதுவும் தப்புத் தப்பா செஞ்சு வச்ச? நீ செய்வ?’

‘இல்ல சுலோ… எனக்கு மனசில ஆசைகளை நிறைய வளர்த்து வச்சிட்டு அவளை இழக்கிறது கஷ்டம் தான். ஆனால், அதுக்காகவெல்லாம் நான் ஒன்னும் செஞ்சிக்க மாட்டேன். நீ பயப்படாதே…’

‘ம்ம்… நல்லது…. ரொம்ப நல்லது. உன் தெளிவை நான் பாராட்டுறேன். சொல்லப் போனா நீ அந்த ஜோசியக்காரனுக்கு நன்றிதான் சொல்லணும்…’

‘எந்த ஜோசியக்காரன்?’ … புதிராகவே பேசுகிறாளே என்றெண்ணி விழித்தான்.

‘இப்பவே அவ மாமாக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு சொன்னான்ல அந்த ஜோசியக்காரன் தான். இன்னும் இரெண்டு வருஷம் கழிச்சு மட்டும் அவன் இதைச் சொல்லியிருந்தா, அதுக்குள்ள அவ உன் பேங்க் பேலன்ஸை காலியாக்கிருப்பா…’

சங்கடமாய் நெளிந்தான் அவன்.

‘அப்படி சொல்லாதே சுலோ, அவ ப்ரெண்ட்லியா தான் கேட்டா… ப்ரெண்டுக்கு உதவின்னா செய்ய மாட்டோமா என்ன?’

‘அடேய் நல்லவனே… உன்னை நல்லா ஏமாத்தலாம் போலிருக்கேடா… தயவு செய்து உன் நல்லத்தனத்தை மூட்டைக் கட்டி வை சரியா?’

மென்மையாய் புன்னகைத்தான்…

‘இங்க பாரு…அறிவுரை சொல்லறது ஈஸி, அதைப் பின்பற்றுறது ரொம்பக் கஷ்டம் அது எனக்கும் தெரியும்….வேணும்னா ரெண்டு மூணு நாள் லீவு எடுத்து நல்லா அழுது கரைஞ்சிக்கோ… இதுக்காகப் போயி குடிக்கிறேன்,புகை புகையா வளையமா விடறேன்னு புதுசா ஏதாவது ஆரம்பிச்சியோ… மவனே கொலைதான் விழும்… ம்ம் ஆமா நான் தான் அந்தக் கொலைகாரி பார்த்துக்க. மறுபடி நீ பழைய மாதிரியே இருக்கணும். நம்ம பின்னாடி ஒருத்தன் தேவதாஸா அலையுறான்கிற பெருமையை அந்தச் சுயநலக்காரிக்கு கொடுத்திடாதே…’

‘என்ன? நான் அவளைத் திட்டறது உனக்குப் பிடிக்கலை அதானே… சரி திட்டலைப்பா விடு.’

‘நான் காலேஜ் மாறிடட்டுமா?’

‘ஏன்? எதுக்கு நீ காலேஜ் மாறணும்? நீ எதுவும் தப்பா பண்ணின?’

‘அவளைக் குறித்து நிறையக் கனவுகள் கண்டுட்டேன்…அவளை இன்னொருத்தன் மனைவியா பார்க்கிறதுக்கு ரொம்ப வலிக்கும்… மறுபடி அவன் கண்கள் நிறைந்தன.’

வகுப்பு ஆரம்பிப்பதற்கான பெல் அடித்தது. வகுப்பை நோக்கி நடைப் போட்டவாறு நகர்ந்தனர்.

‘இப்ப என்ன? நீ அவளைக் காதலிச்சியே? அவ இன்னொருத்தனை கட்டிட்டாளேன்னு உன்னை மத்தவனுங்க கேலி பண்ணிடுவாங்கன்னு வெட்கப் படறியா? கேவலமா இருக்கா?’

மௌனம் சாதித்தான்.

‘நீ அவளை என்னிக்கவது தப்பா தொட்ட?’

இல்லையெனத் தலையசைத்தான்.

‘கொஞ்ச நாள் முன்னாடி அவக்கிட்ட என்னைக் காதலிக்கிறியான்னு கேட்டேன், இல்லைன்னு சொன்னா… தொண்டையைச் செருமிக் கொண்டான். அப்புறம் அவளாவே வந்து ப்ரெண்ட்ஸா இருப்போம்னு சொன்னா… பிக்னிக் பணம் கேட்டதும் நானாகவே அவ என் கிட்ட உரிமை எடுத்துக்கிறா விரும்பறான்னு நினைச்சுக்கிட்டேன்.’

‘ம்ம்…’

‘நீ செஞ்சது தப்புன்னு நினைக்கிறியா?’

‘இல்லை…’

‘விரும்பின, அதைச் சொன்ன அதுக்கப்புறம் அவக்கிட்ட எந்தத் தொல்லையும் செய்யலை. அவளாவே வந்து பேசினா நீயும் பேசின இதில எந்தத் தப்பும் இல்லையே… உன் கிட்ட உன் ப்ரெண்ட்ஸ் வந்து உன் லவ்வர் வேற ஒருத்தனை கல்யாணம் செய்யப் போறாளாமேன்னு சீண்டுனா என்ன சொல்வ?’

‘அவ கல்யாணம் அவ விருப்பம் அதைப்பற்றி என்கிட்ட ஏண்டா கேட்கிறீங்கன்னு கேட்பேன்?’ எஃகாய் ஒலித்தது அவன் குரல்.

‘குட் வெரி குட்’ தோழனின் மனதை மாற்றிய உற்சாகம் அவள் குரலில் வெளிப்பட்டது.

தன் திருமண அழைப்பிதழ் கண்டு கலங்கியவன் ஒன்று வகுப்பிற்குள் வராமலேயே வீட்டிற்குத் திரும்பச் சென்று விடுவான். அல்லது சவக்களையோடு வருவான். அவனது முகம் பார்த்து மற்றவர் உச்சுக் கொட்டுவதை ரசிக்கலாம் என்று காத்திருந்த பத்மினியின் முகம் புன்னகைத்தவாறு தன்னம்பிக்கையோடு வகுப்பிற்குள் நுழையும் சுனிலை பார்த்துப் பொலிவிழந்தது என்றால் சுனிலோடு சுலோச்சனாவை ஆரம்பம் முதலே கண்டு கொண்டிருந்த இன்னும் இரண்டு விழிகள் கொலைவெறியோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here