11.நாயகி

0
853
Naayagi Jansi Rani

அத்தியாயம் 11

அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பிரிவு உபச்சார விழா. ஆண்கள் அனைவரும் போல் சூட்டில் கலக்கிக் கொண்டிருந்தனர். பெண்களும் கூட மிக அழகான உடைகளில் வந்திருந்தனர். கல்லூரியே வண்ணமயமாக இருந்தது.

அனைவரும் அடுத்து என்ன? எனும் நினைவில் இருந்தனர். பல்வேறு கற்பனைகள், எதிர்பார்ப்புகள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுந்திருந்தது. கூடவே நட்புகளைப் பிரியப் போகும் துன்பமும் இழையோடியது.

பிரசன்னாவும் கூட மிக அழகாக இருந்தான். அவனைச் சுற்றி சுற்றி பெண்கள் வருவதும் ஆட்டோகிராப் வாங்குவதுமாக இருந்தனர். இனி இந்த அழகனைப் பார்ப்பது எப்போது? என்கின்ற எண்ணமே அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. எல்லோரும் அவனைத் தேடி தேடி வந்து கொண்டிருக்க இவனை நாடாத ஒருவள் பின்னால் அலைவது அவனுக்கே வெட்கக்கேடாக இருந்தது.

அவனுடைய நட்புகளும் கூட எத்தனையோ முறை அவள் தான் உன்னை விரும்பவில்லை என்கிறாளே விட்டு விடுடா என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தனர்.

அவளுடைய ஒவ்வொரு மறுப்பும் இவனுக்கு மனதில் தீயை பெரு நெருப்பாகக் கூட்டிக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை. என்னுடைய படிப்பு, என்னுடைய அழகு, குடும்பம் எத்தகையது? இவள் என்னை எப்படி உதாசீன படுத்தலாம் என மனதிற்குள் அவன் நெருப்பு காய்ந்து கொண்டிருந்தது.

அதிலும் அன்று சுனில் அவளை அணைத்து நின்றிருந்த விதம். அதைக் கண்டபோதோ அவன் உடலே மிளகாய்ப் பொடி தூவினார் போலக் காய்ந்தது. சுனிலை இழுத்து வைத்து அடிக்கலாமா? என்றும் கூட எண்ணினான். ஆனால், பெண் அவளே வெட்கம் கெட்டுப் போய் அணைத்து நிற்க ஆண் தான் என்ன செய்வான். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்வான் என எண்ணிக் கொண்டான். அவளை விட்டுக் கொடுக்கவே முடியாது. நான் தொட்ட, முத்தமிட்ட பெண்ணை மற்றவனுக்கு விட்டுக் கொடுப்பது ஆண்மகனுக்கு இழுக்கு என்று ஆத்திரத்தில் மிகக் கனன்றான்.

பிரிவுபச்சார விழா கல்லூரியில் நிறைவு பெற்ற பின்னர்ப் பிரசன்னாவின் வீட்டில் நெருங்கிய நட்புகளுக்காக மட்டும் தண்ணீர் பார்ட்டி நடைப் பெற்றது. நேரமாக ஆக ஒவ்வொருவனாய் விடைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர்.

கடைசியாய் சிலர் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்க,

அவர்களுக்குள்ளேயே பேச்சு…

‘என்னடா போன வாரம் அவசரமா ஊருக்கு போயிட்டு வந்த?’

‘எங்க அண்ணனுக்குக் கல்யாணம் இருந்துச்சுடா…’

’ நீ சொல்லவேயில்லை பார்த்தியா?’

பேச்சைக் கேட்டவாறு சோடாவை சரக்கில் கலந்தான் பிரசன்னா.

‘அதெல்லாம் எங்க யாருக்குமே தெரியாதுடா, திடீர்னு செஞ்சு வச்சிட்டாங்க…’

‘யாரு உன் அம்மா அப்பாவா?’

‘இல்லியே பஞ்சாயத்துக்காரங்க…’

‘ஏனாம்?’

‘அந்தப் பொண்ணு அதான் என் அண்ணி அவ கூட இவன் ஏதோ டைம்பாஸீக்கு பழகிருக்கான். அவங்களுக்குள்ள கசமுசா எல்லாம் ஆகிருச்சாம்.’

‘ம்ம்… வெகுளி மாதிரி இருந்தான்டா உன் அண்ணன் போட்டோல… ஆனா, எவ்வளவு வெவரம் பார்த்தியா?’

‘ம்ம்…. பாரேன் பொண்ணு ரொம்பவே அழகுடா…’

‘அட்ச்சீ வீணாப் போனவனே இப்ப அவ உன் அண்ணிடா… மீதி விவரத்தை சொல்லித் தொலை.’

‘அந்த பொண்ணு வயித்துல குழந்தை உண்டாகிடுச்சாம்… இவன் கலைக்கச் சொன்னானாம்… என்னைக் கட்டிக்கச் சொல்லுங்கன்னு பஞ்சாயத்தைக் கூட்டிடுச்சு அந்தப் பொண்ணு. அப்புறம் என்ன கல்யாணத்தை ரெண்டு நாள்ல வச்சிட்டாங்க… அதான் போயிட்டு வந்தேன்.’

‘இந்தப் பொண்ணுங்களே இப்படிதாய்யா கசமுசா நடந்தா அவனையே கட்டிக்கணும்னு சொல்வாளுங்க… ஆம்பளைங்க அவசரம் புரிஞ்சிக்க மாட்டாளுங்க…’

இன்னும் ஏதேதோ பேசி விட்டு இருந்த மீதி பேரும் புறப்பட்டனர்.

‘நல்லா கண்ணைக் கட்டிட்டு வருது, போய் நல்லா நீட்டிட்டு தூங்கிடனும். ’

குடித்து விட்டு அதை மறைக்க ஒவ்வொருவர் வாயிலும் சோம்பும் பானும் அரைப்பட்டது.

இப்போது பிரசன்னாவின் வீடு வெறிச்சென்று இருந்தது. இன்னும் கொஞ்சம் சரக்கடித்தான். பிரசன்னாவிற்கு ஏதேதோ எண்ணங்கள் தோன்றின. செய்து முடித்து விடலாம் என்று உள்ளே போன சரக்கும் துணிச்சலாக உறுதி அளித்தது.

வழக்கமான அளவை விடக் கொஞ்சம் அதிகமாகக் குடித்திருந்தாலும் ஸ்டெடியாக நின்றான். நண்பன் ஒருவன் தன் காரை அங்கே நிப்பாட்டி விட்டு, அவனது பைக்கை எடுத்துச் சென்றிருக்கவும், அதை எடுத்துப் புறப்பட்டான்.

சில மணித் துளிகளில் அவன் அறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தாள் சுலோச்சனா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here