13. நாயகி

0
794
Naayagi Jansi Rani

அத்தியாயம் 13

இரவு மணி நான்கு…

காவலர் நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது. எப்படியோ தன் கைகளைச் சுற்றியிருந்த டேப்பை பிரசன்னாவின் வீட்டில் இருந்த கூர்மையான பொருளால் வெட்டி கைகளைப் பிரித்திருந்தாள். தன்னை நாசப்படுத்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் கீழானவனை அடிக்கவோ, நியாயம் கேட்கவோ அவளுக்கு விருப்பமில்லை. அவன் தன்னைத் துடிக்கத் துடிக்கச் சிதைத்த பின்னர் ஏளனமாகப் பேசிய பேச்சுக்களே அவள் காதில் ரீங்கரித்தது.

‘இனி என்ன செய்வ? இனிமே நீ என்னைக் கட்டித்தானே ஆகணும். பிடிக்கலை பிடிக்கலைன்னு துள்ளுனீல்ல, யார் கிட்ட? ம்ம்…’
அலட்சியமாய்ப் பேசி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

அவள் உடைகள் தாறுமாறாய் கிழித்துப் போடப்பட்டிருக்க, உடையில்லாமல் தப்பித்து இருளில் வெளிவந்த அவளுக்கு முதலில் அங்கிருந்து வெளியில் வரவேண்டும் என்பது மட்டுமே கவனத்தில் இருந்தது. வெளியில் வந்ததும் தான் தன் உடலை மறைக்க ஆடையைத் தேடினாள்.

சற்றுத் தூரத்தில் கொடியில் ஒரு நைட்டி தொங்கிக் கொண்டிருக்க வெகு சிரமத்தோடு அதனை எடுத்து அணிந்துக் கொண்டாள்.

பிரசன்னாவிற்கு அங்கிருந்து சுலோச்சனா தப்பிச் செல்வது அரைப் போதையிலும் உணர முடிந்தது. ஆனால், என்ன ஆகிவிடும்? நானே அவளைத் திருமணம் செய்து கொள்ளுகிறேன் என்று சொன்னால் விஷயம் முடிந்து விடப் போகின்றது? என்ற இறுமாப்பில் இருந்தான்.

அந்தப் பழைய நைந்த நைட்டியில் தானும் மிக நைந்தவளாகக் காவலர் நிலையத்தில் அமர்ந்திருந்தாள் சுலோச்சனா. அவள் முகம் கற்பாறையை ஒத்திருந்தது. அவளது கம்ப்ளெயிண்ட் வாங்கப் பட்டது. அவளை ஓரமாக இருக்கச் சொல்லினர். அவளது உடல் காயங்கள் பெண் காவலர் ஒருவரால் பரிசோதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்களில் இருந்த டேப்பை பிரித்து எடுத்தனர். அத்தனையும் ரிப்போர்ட்டுகளில் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. தலைவிரிக் கோலமாய்க் கண்ணகியை நினைவு படுத்திக் கொண்டு அங்கே அமர்ந்திருந்தாள் அவள்.

விட்டால் நகரத்தையே தீக்கிரையாகும் சீற்றம் அவளிடம் இருந்தது.அவள் சொன்னபடி தகவல்கள் கல்லூரி ஹாஸ்டல் வார்டனையும், கல்லூரி பொறுப்பாளர்களையும் போய்ச் சேர ஒவ்வொருவராய் அவளைத் தேடி வர ஆரம்பித்தனர். வார்டன் பல்லவி அவளைப் பார்த்து அதிர்ந்து விட்டார். இவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் மனித மிருகமாய்த் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

’ சார் உட்கார முடியலை கொஞ்சம் படுத்துக்கட்டுமா?’ என அனுமதி கேட்டு அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் படுத்திருந்தாள் அவள்.

தன் வீட்டிலிருக்கும் குருத்துக்கள் கண்முன் வந்தாட பல்லவியின் உடலே குலுங்கிற்று. மாணவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப் படாததால் அவர்கள் யாரும் இன்னும் வரவில்லை.

காவலர்கள் தமக்குள் விவாதம் செய்து கொண்டு இருந்தனர். விடிய ஆரம்பித்திருந்தது. பிரசன்னாவை பிடிக்க ஒரு குழு சென்றிருந்தது.
திடீரெனக் காலை ஏழு மணி போலக் கல்லூரிக்குச் சென்று பார்த்து விட்டு, அங்கிருந்து தகவல் கிடைக்கப் பெற்று சூறாவளியாய் வந்து சேர்ந்தனர் மாத்தையனும் தங்கம்மாவும். வந்ததும் தங்கம்மா அவளைப் போட்டு அடி அடியென்று அடிக்க ஆரம்பித்தார்.

‘நான் பொட்டப்பிள்ளைய படிக்க அனுப்பாதீங்கன்னு இந்த மனுசனுக்குச் சொன்னேனே? அவரு கேட்டாரு இல்லையே? இன்னிக்கு இந்த நிலைமையில என்னைச் சந்தி சிரிக்க வச்சுட்டாளே…பாவி பாவி’ ஒப்பாரி வைத்தாள்.

மாத்தையன் உக்கிரமாக நின்றார். லேடி கான்ஸ்டபிள் வந்து சுலோச்சனாவிடமிருந்து தங்கம்மாவை பிரித்து விட்டாள்.

அடித்து அடித்து அவர் கைகள் நொந்திருந்தனவே தவிர ஒரு சொட்டுக் கண்ணீரும் சுலோச்சனா விட்டாளில்லை.

‘வாடி ஊருக்கு, இந்தக் கண்ட கருமாந்திரமும் வேணாம். போலீஸ் கம்ப்ளெயிண்டும் வேண்டாம். வாடி வாடிங்கிறேன்ல?’ மறுபடியும் அடிக்கப் பாய்ந்தார் தங்கம்மா.

‘ஏன்டி எங்க மானத்தைச் சந்தி சிரிக்க வச்சவளே, இன்னும் விடியலை அதுக்குள்ளாக ஊருக்குப் போய்ச் சேர்ந்திடலாம். வாடி வீட்டுக்கு…’

அவள் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தார். அந்த வேகத்தில் பெஞ்சிலிருந்து இருந்து தொப்பெனக் கீழே விழுந்தாள் சுலோச்சனா.

‘ஏம்மா இங்க வந்து எதுக்கும்மா பிரச்சனை செய்யறீங்க? போங்க அங்கிட்டு’ கான்ஸ்டபிள் விலக்கினார், அதட்டியும் வைத்தார்.

‘அவளை எங்க கூடக் கூட்டிட்டுப் போகணும் மேடம், அனுப்பி வைங்க…. அது சின்னப்புள்ள மேடம் அதுக்கு விபரம் தெரியாது. தப்பே நடந்தாலும் அதை இப்படியா வெளி உலகத்துக்குச் சொல்லுவாங்க… புரியாத புள்ள மேடம்…வாழ்க்கை பிரச்சனை மேடம்… எங்களோட அனுப்பி வச்சிடுங்க’ கைக் கூப்பி அழுதார்.

மாத்தையன் எங்கோ பார்த்தவாறு உர்ரென நின்றிருந்தார்.

‘பொண்ணோட வயசு என்ன?’

‘பத்தொம்போது …’

‘அப்ப அவ மேஜர், அவ விருப்பமில்லாம நாம எதையும் செய்ய முடியாது, அவக்கிட்ட கேட்டுட்டு வாரேன். பொறுங்க’

சுலோச்சனாவை நோக்கி விரைந்தார் கான்ஸ்டபிள்.

‘ஏ பொண்ணு…’

அதட்டலாய் கான்ஸ்டபிள் கேட்க, தன் தாய் இழுத்த போது விழுந்த இடத்திலேயே தரையில் அமர்ந்து இருந்தவள் எட்டிப் பார்த்தாள்.

‘நீ உங்க ஊருக்கே போயிடறியா? கேஸ் திரும்ப வாங்கிக்கிறியா?’

தலையை இல்லையென அசைத்தாள் அவள்.

‘உங்க அம்மா சொன்னதைக் கேட்டீல்ல?’, அவள் தலை ஆமென அசைந்தது.

‘அதனாலத்தான் கேட்கிறேன். போறியா?’

இல்லையென வெகு திடமாய்த் தலையை அசைத்தாள் அவள்.
பார்த்துக் கொண்டிருந்த மாத்தையன் இப்போது வேகமாய் ஓடி வந்தார். அடி விழுவது உறுதி என்று கண்களை இறுக்க மூடி அமர்ந்து உடல் நடுங்க அமர்ந்திருந்தாள் சுலோச்சனா…. அடி விழவில்லையே எனக் கண்ணை விரித்துப் பார்க்கவும் காவலர் பிடியில் திமிரும் தகப்பனைப் பார்த்தாள்.
மனதில் பயமோ எந்த உணர்வும் ஏற்படாததை ஒரு நிமிடம் கண் மூடி அவதானித்தாள். தன்னை ஒருவன் ஒரு தவறும் செய்யாமலேயே எத்தனை கீழ்தரமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டான் எனும் நினைவே கசந்தது. கண்ணிலிருந்து கண்ணீர் நில்லாமல் சொட்டியது.

‘உங்க பொண்ணுதான சார் அது…எத்தனை வேதனைல இருக்கு. உடம்பெல்லாம் நாய் கடிச்சா மாதிரி குதறி வச்சிருக்கிறது உங்களுக்குப் புரியலையா? நீங்களும் இன்னும் அடிக்கணுமா? இதுக்கா சார் பெத்து வளர்க்கிறீங்க?’

‘அவளை அனுப்பி வச்சுடுங்க சார், என் ஊர் சனம் முன்னாடி என்னோட மானம் மருவாதையெல்லாம் போயிடும்.’

‘ஏன் சார்? உங்க மானம் மருவாதைய அந்தப் பொண்ணு உடம்புலயா இத்தனை நாளும் ஒளிச்சு வச்சிருந்தீங்க? அது சின்னப் புள்ளை சார்… கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க சார்.’

‘அவளை ஊருக்கு கூட்டிப் போய்ச் சரியாக்கிடறேன் சார். என் பொண்ணு இந்த விசாரணை நீதிமன்றம், காவல்துறை இந்தப் பிரச்சனையெல்லாம் தாங்கிக்க மாட்டா சார். என் கிட்ட பணம் இல்லை சார், இருக்கிறதெல்லாம் மானம் மருவாதி தான். அவ கூடத் தப்பே நடந்திருக்கட்டும் சார், அதை எதிர்த்து கேட்டு போராடுற நிலைமையிலயா நான் இருக்கேன்?’

‘… வயித்துப் பொழப்புக்கே பெரும்பாடா இருக்கு, ஆடு மாடெல்லாம் விட்டுட்டு ரெண்டு நாள் வெளியில கூடப் போக முடியாது சாமி… அப்படி ஒரு பொழப்பு எங்க பொழப்பு… தினம் சம்பாதிச்சா தான் சோறு இல்லன்னா பட்டினி…இதில இந்தப் பொண்ணு இப்படிப் பிடிவாதம் பிடிச்சிட்டு கிடக்குதே…’ ஓவென அழுதார்.

இத்தனை வருடங்களில் கணவன் அழுது பார்த்திராத தங்கம்மாவும் கூடவே சேர்ந்து அழுதார். காவல் நிலையமே அல்லோலப் பட்டது. கொஞ்சம், கொஞ்சமாய்க் கூட்டம் சேரத் தொடங்கியது.

யாருக்கும் என்ன நடந்திருக்குமெனப் புரியவில்லை. பிரசன்னாவை கைது செய்து கொண்டு வந்த போது சுலோச்சனாவை மருத்துவப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். அவளை உடனே அட்மிட் செய்யச் சொல்லி இருந்தும் மேலும் விசாரணைக்காக மறுபடி காவல் நிலையத்திற்கே அழைத்து வந்திருந்தனர். திரும்ப வந்ததும் அவள் முடியாமல் மறுபடி பெஞ்சில் படுத்துக் கொண்டாள்.

பிரசன்னாவையும் தனியாகச் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அவன் ஒத்துழைப்புக் கொடுத்து அமைதியாக நடந்து கொண்டான். அவன் பெற்றோர்கள் உடனே வருவதாகத் தகவல் கொடுத்தனர் அடுத்துச் சில மணி நேரத்தில் கிடைத்த ப்ளைட் பிடித்து வந்து நின்றனர்.

முதலில் சுலோச்சனா கொடுத்த வாக்குமூலத்தின் படி சுலோச்சனாவையும், பிரசன்னாவையும் அழைத்துக் கொண்டு அவள் கடத்தப் பட்டதாகச் சொன்ன இடத்திற்கு நடத்திக் கூட்டிச் சென்றனர். கல்லூரியின் தோட்டத்தின் அருகில் சென்று அனைவரும் நின்றனர். அங்கே அந்த உடைந்த சுவரையும் காணோம், முன் தினம் நிகழ்ந்த களேபரத்திற்குச் சாட்சியே இல்லாமல் எல்லாம் துடைத்து வைக்கப் பட்டிருந்தது. சுலோச்சனா கொடுத்த கம்ப்ளெயிண்ட் ஸ்டேட்மெண்ட் அத்தனையும் அர்த்தமில்லாததாக மாறியது. ஒரு நிமிடத்திற்குள்ள்ளாக அனைவர் முன்பும் அவள் பொய்யளானாள். வழக்குத் திசை மாறி விட்டிருந்தது.

திகைத்து விழித்தாள் சுலோச்சனா. தனக்குச் சாதகமாக இன்னொரு விஷயம் கிடைத்து விட்டதென முறுவலித்தான் பிரசன்னா. அவளோ ஒன்றும் புரியாதவளாய் திகைத்து திரும்பிப் பார்க்கையில் பல்லவி மேடம் தலை குனிந்து நிற்பது மட்டும் தெரிந்தது.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here