14. நாயகி

0
853
Naayagi Jansi Rani

அத்தியாயம் 14

பிரசன்னாவை அங்கே பார்த்ததும் கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்வெல்லாம் அனைவருக்கும் ஞாபகம் வர ஆரம்பித்தது. கதை பல விதமாய் உருமாறிக் கொண்டிருந்தது. ஏதோ லவ்வர்ஸ் க்வார்ரல் ( ஊடல்) என்பது போல ஆண்கள் அதை உருமாற்றிக் கொண்டு இருந்தார்கள்.

‘பணத்துக்காகச் சேர்ந்து பழகிருப்பா, இப்ப மனசு மாறி அவனுக்கு எதிராவே கேஸ் கொடுத்தாச்சு. ஆனாலும், பொம்பளைப் பிள்ளைகளுக்கு ரொம்பத் தெனாவட்டுடா?’

ஆயிரம் விதமாய்ச் சுலோச்சனா அனைவர் வாயிலும் அரைப்பட்டாள்.
பல்லாயிரம் விதமாய்ச் சித்தரிக்கப் பட்டாள்.

‘அன்னிக்கு அத்தனை பேர் முன்னாடி லிப் டு லிப் கிஸ் அடிச்சிருக்கான். அப்பவே பப்ளிக்கா கிஸ்ஸீக்கு துணிஞ்சவதானே? இப்ப பத்தினி மாதிரி வேஷம் போடுறதைப் பாரு.’

ஒவ்வொன்றையும் கேட்டு தனக்குள் அவமானத்தால் செத்துக் கொண்டிருந்தனர் தங்கம்மாவும், மாத்தையனும். இப்போது மறுபடி காவல் நிலையம் வந்து சேர்ந்திருந்தனர் அவர்கள்.அவர்களை நோக்கி ஒரு பெண் அவசரமாய் வருவது மங்கலாய்த் தெரிந்தது. அருகில் வந்து அதிகாரமாய்ப் பேசினாள் அவள், அவள் வேறு யாருமல்ல பிரசன்னாவின் தாய் மாதுரி.

‘இங்க பாருங்க, உங்க மக என் மகன் கூட அலைஞ்சு திரிஞ்சிட்டு இப்ப என் மகனையே குற்றவாளியாக்க பார்க்கிறா? அவனோட எதிர்காலமே வீணாப் போயிடும். தயவு செய்து கேஸை வாபஸ் வாங்க சொல்லுங்க. எத்தனை ரூபா வேணும் சொல்லுங்க வந்து கொட்டுறேன்.’

பிரசன்னாவின் அன்னையின் பேச்சை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர் சுலோச்சனாவின் பெற்றோர். அவர்கள் பார்வையில் இருந்தது என்ன? வாழ்க்கையை வெறுத்த கோலமோ?

பிரசன்னா மறுபடியும் மறுபடியும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்,

‘அவ கூட எப்பவுமே நான் வீக்கெண்ட்ல டைம் ஸ்பெண்ட் செய்யறதுதான் சார். எப்பவுமே அவதான் என்னைத் தேடிக்கிட்டு வருவா, இப்பவும் அப்படித்தான் வந்தா. இந்த முறை கொஞ்சம் முரட்டுத் தனமா நடந்துக்கிட்டேன். அதுக்குக் கோச்சுக்கிட்டு வந்திட்டா. என்ன இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் தான் கட்டிக்கப் போறோம். அதில என்ன சார் இருக்கு? இப்ப எல்லாம் இது சகஜம் தானே?’

மகனின் பேச்சைக் கேட்க சகியாதவராக நின்றிருந்தார் பிரசன்னாவின் தந்தை வினாயகம். அவன் பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்றே அவருக்குப் புரியவில்லை. அந்தப் பெண்ணைப் பார்த்தால் தவறாக எண்ணும் படி ஒன்றுமே அவருக்குத் தெரியவில்லை. உலகமே வெறுத்தார் போல அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்தால் அவருக்கு உள்ளுக்குள் கிலி ஏற்பட்டது.

ஆம் அவர் தெய்வ பயம் மிக்கவர், மனைவியைப் போல மகன் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்புகிறவர் அல்ல. என்ன ஒரு ஆசுவாசம் என்றால் மகன் தானே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்வது தான்.

‘இதென்ன கொடுமை இப்படி நடந்திருக்கிறானே? குடும்பத்திற்குத் தீரா சாபம் கொண்டு வந்து விடுவானோ?’ என்றவரது கலக்கம் இப்போது கொஞ்சம் தீர்ந்திருந்தது.

‘கை கால்ல டேப் வச்சு சுத்தி கடத்திருக்கீங்க சார்… இதுக்கு என்ன சொல்லுறீங்க?’

காட்டமாக வந்தது காவலரின் கேள்வி.

‘அது அவளே சுத்திட்டு இருந்திருப்பா சார், சும்மா ஏதோ என்னைப் பயம்காட்ட இதெல்லாம் செஞ்சிருக்கா நீங்களும் அதை நம்பிக்கிட்டு…’ அலட்சியமாய் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னான் அவன்.

பொய்க்கு மேல் பொய்யாய் சொல்பவனைக் கண்களால் எரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் சுலோச்சனா.

‘உங்க வீட்ல அவங்க துணிலாம் வெட்டிப் போட்டிருந்தீங்க, அதை நாங்க கைப்பற்றிருக்கிறோம். அதைப்பற்றி என்ன சொல்ல வர்றீங்க?’

‘அதான் நான் சொன்னேன்ல சார், நேத்து எனக்குக் கொஞ்சம் வெறி கூடிருச்சு, அந்த வேகத்தில அப்படி நடந்துக்கிட்டேன். ஆனால், அது வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் இல்ல சார், சாதாரண உடலுறவு தான். அவளே என் வீட்டுக்கு வந்தா நாங்க சந்தோஷமா இருந்தோம், இப்ப அவ எங்க ரெண்டு பேர் நடுவில இருக்கிற விஷயத்தை ஊர் முழுக்கத் தண்டோரா அடிச்சு மானத்தை வாங்கிட்டு இருக்கிறா?’

‘நீங்களே சொல்லுங்க சார் வீட்டு விஷயம் காவலர் நிலையம் வரை வரலாமா? இது ஒரு பெண்ணுக்கு அழகா சார்?’

‘இவன் பொய் சொல்லுறான் சார் வீறிட்டாள் சுலோச்சனா…’ அவனை அடிக்கப் பாய்ந்தவளை தடுத்தனர் பெண் காவலர்கள்,

‘உன்னை உன் வீட்டுலயே கொன்னுட்டு வந்திருக்கணும்டா, உன்னை விட்டு வச்சது தப்பு, அதனாலத்தான் நீ இப்படிப் பொய் பொய்யா பேசற… என்னையே தப்பா சொல்லுறியா? உனக்கு மன சாட்சியே இல்லையாடா… நீ மனுசனாடா திமிறினாள்’, அழுதாள் முடங்கினாள்.

‘நீ என்னம்மா சொல்ற?’

‘இவன் என்னை ஈவ் டீஸிங்க் செஞ்சான் சார்…’

‘ஏய் பொட்டச்சி நீ என் மவனை அவன் இவன்னு பேசின பல்லை கழட்டி, கையில கொடுத்திடுவேன்…’ இப்போது திமிறிய பிரசன்னாவின் அன்னை மாதுரியை காவலர் அடக்கினார்.

‘அதான் அவளைக் கட்டிக்கிறேன்னு சொல்லுறான்ல மேடம், அதைக் கேட்காம என்னவெல்லாம் பேசறா பாருங்க?’

ஆண் மகனைப் பெற்ற திமிர் மாதுரியிடம் வார்த்தைக்கு வார்த்தை வெளிப்பட்டது.

‘சார் …’ சுலோச்சனா சுற்றிலும் நடப்பதை பொருட்படுத்தாதவளாகத் தொடர்ந்தாள்.

‘நான் கிராமத்திலருந்து ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிக்க வந்தேன் சார். நான் ஒரு நாளும் வலிய இந்தப் பிரசன்னாவை பார்க்க போனதில்லை சார். வேணும்னா என் தோழிகள் கிட்ட கேட்டுப் பாருங்க சார். முடிஞ்சவரை விலகிப் போனேன் சார். அன்னிக்கு வலுக்கட்டாயமா பிடிச்சு முத்தம் கொடுத்தான் சார்…’

‘ஏய் உனக்கு அவ்வளவுதான் மரியாதை… அவன் இவன்னு பேசாத மரியாதையா பேசுடி…’

‘மேடம் உங்களால இங்க அமைதியா இருக்க முடியும்னா இருங்க இல்லைன்னா வெளியே போங்க… ‘அதட்டலுக்கு அமைதியானது காவல் நிலையம்.

‘ஏம்மா இவ்வளவு நடந்திருக்கே ஒரு முறையாவது உங்களோட பிரின்ஸிபலுக்குத் தெரிவிச்சிருக்கலாம்ல? இப்ப பாருங்க நீங்க சொல்லுறதை நம்பற மாதிரி எதுவுமே இல்லையே?’

‘எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா படிப்பை நிப்பாட்டிடுவாங்க சார்… அதுக்குப் பயந்து நான் கம்ப்ளெயிட்ன்ட் செய்யலை சார்… அன்னிக்கு நான் தோட்டத்தில் நின்னு காத்து வாங்கிட்டு இருந்தப்ப, இவன் குடிபோதையில வந்து என் வாயை துணியால அடைச்சு, கையைக் காலை டேப்பால சுத்தி, தூக்கிட்டுப் போயிட்டான் சார், அப்ப நான் திமிறினதில என் தலை சுவர்ல பட்டு இங்கே கூடக் காயம் சார், இங்க பாருங்க முடியை விலக்கிக் காட்டினாள். என்னை நாசப்படுத்திட்டான் சார், என்னை ரணமாக்கிட்டான் சார்’ பொங்கிப் பெருகியது அவள் கண்ணீர்.

‘என் உடம்பெல்லாம் பாருங்க சார், என்னை அடிக்கக் கூடச் செஞ்சான் சார் இரணம் சார், இங்க பாருங்க இங்க பாருங்க கன்னங்களைக் காட்டினாள்… நான் பொய் சொல்லலை சார்.’

‘அவ பொய் சொல்றா சார், நீங்களே பார்த்தீங்கள்ல அந்தச் சுவரு அத்தனை உயரம் அது வழியா நான் எப்படிச் சார் அவளைத் தூக்கிட்டு வர முடியும்? அவளே தான் என் கூட வந்தா சார். நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம் சார், அது சும்மா ஒரு சண்டை அதில பட்டுருச்சு, வாய் கூசாம பொய் பேசறா சார். அவ அம்மா அப்பாக்கு பயந்து பொய் சொல்லுறா சார்…’ இடையிட்டான் பிரசன்னா.

சுலோச்சனாவின் வெறித்த விழிகளை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.

‘நாங்க ரெண்டு பேரும் மேஜர் சார், எங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைங்க சார்.’

‘அதான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லுறாரே சரின்னு சொல்லேன்டி மூதேவி’, இப்போது வீறிட்டாள் தங்கம்மா. அவளுக்குத் தன் மகளின் வாழ்க்கையை எப்படியாவது சீராக்கி விட வேண்டும் எனும் துடிப்பு.

‘சார் யார் நம்பினாலும் சரி, யார் நம்பாவிட்டாலும் சரி நான் தப்பு செய்யலை சார், இவனைக் காதலிக்கவும் இல்லை, சேர்ந்து பழகவும் இல்லை. என்னை அத்துமீறி தொட்டதுக்கு இவன் மேல கேஸ் போடுங்க சார். நான் உங்க மகளா இருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க சார்? எனக்கு யாருமே இல்ல சார். எனக்கு உதவுங்க…’

கைக்கூப்பியவள் அங்கேயே மயங்கிச் சரிந்தாள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here