15. நாயகி

0
844
Naayagi Jansi Rani

அத்தியாயம் 15

உடல் முழுக்க அத்தனை காயங்கள் இருந்தும் எப்படித்தான் அவள் உடம்பு தாங்கியதோ? அத்தனை நேரம் தாக்குப் பிடித்தவள் தன் தாயின் அடிகளும் வசவும் தகப்பனின் கோபமும் கண்ணீரும், பிரசன்னாவின் பொய்யும் புரட்டும், அவனைப் பெற்றவள் தானும் ஒரு பெண்தானென்று மறந்து ஆடிய ஆட்டத்தையும், காவலரின் கிடுக்கிப்பிடித்தனமான கேள்விகளையும், அதில் பல அந்தரங்கமான மற்றும் அவளையே சந்தேகப் படும் படியான கேள்விகளும் என இத்தனை பேரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மனதளவிலும் சோர்ந்துப் போனாள்.

கூடவே மற்றொரு குழப்பம் பல மாதங்களாக இடிந்துக் கிடந்த, முன் தினம் தான் கடத்தப் படுவதற்குப் பயன்பட்ட அந்த உடைந்த கல்லூரிச் சுவர் இப்போது கட்டப்பட்டது எப்படி? குழப்பமும் சோர்வும் தாக்க மயங்கியவள் மருத்துவமனையில் ஒரு வார காலம் உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தாள்.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்து விட்டிருக்க, அவளது உடலில் இருந்தது பிரசன்னாவின் இந்திரியமே என்று மருத்துவ அறிக்கை கூறியது. பிரசன்னாவும் அதை மறுக்கவில்லை ஆனால் வல்லுறவு அல்ல சாதாரண உடலுறவு என அவனும் அவன் வழக்கறிஞரும் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

மருத்துவப் பரிசோதனை முடிவு, மற்றும் சுலோச்சனாவின் புகாரின் அடிப்படையில் பிரசன்னா கஸ்டடியில் எடுக்கப் பட்டான். அவனைக் காவலர்கள் அடிக்கக் கூடாதென்பதற்காகக் கொள்ளை கொள்ளையாய் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தனர் அவன் பெற்றோர்.

உன்னை கஷ்டப்பட்டு வளர்த்தது இந்த நிலையில் பார்க்கத்தானா? தினமும் கண்ணீர் சிந்தினாள் மாதுரி. தன் மகனின் எதிர்காலம் அழிந்து விடும் என்பது அவள் கண்முன் இருந்ததே தவிர, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை மகன் அழித்து விட்டான் எனும் குற்றவுணர்ச்சி அவளிடம் இல்லை.

சில தாய்மார்களின் தாய்பாசம் நியாயத் தர்மம் அறியாதது போலும்.
‘நான் அவ கால்ல விழுந்தாவது கேஸை திரும்ப வாங்க சொல்றேன்டா நீ பயப்படாதே…’ மாதுரி மகனுக்கு உறுதி அளித்துக் கொண்டிருந்தாள்.

ஏன் இப்படிச் செய்தாய்? என மகனை ஒரு முறை கூடக் கேட்காமல் அவனைத் தப்புவிக்கும் மார்க்கம் ஒன்றையே நாடும் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார் பிரசன்னாவின் தந்தை வினாயகம்.

சிறு வயதிலிருந்தே இவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தே பழக்கியவளை பரிதாபமாய்ப் பார்த்தார். தங்கள் வளர்ப்பு பொய்த்துப் போனது அவருக்கு மிக வலித்தது. தோல்விக்குப் பழக்காமல் கானும் யாவற்றிலும் வெற்றி மட்டுமே காண வேண்டும் எனப் பழக்கியது தவறாகிப் போனதோ?

தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது அனைத்தும் காவலர்களுக்கு லஞ்சமாய்ப் போவது அவரது மனதைக் கொன்றது. கேஸில் அந்தப் பெண்ணைத் தவறானவளாகச் சித்தரித்து விடலாம் என்று தாயும் மகனுமாக வழக்கறிஞரோடு சேர்ந்து திட்டம் போடுவதைக் கண்டு வாளாவிருந்தார்.

அவராலும் என்னதான் செய்து விட முடியும்? அனைவரும் குடும்பம் என்கிற நுகத்தடியில் கட்டப்பட்ட மாடுகள் தானே? விரும்பினாலும் கூடத் தன்னைச் சார்ந்தவர்களிடம் வெளிப்படையாக அவர்கள் குற்றம் குறைகளைக் கூற முடிவதில்லையே. பாசமெனும் சிறையிலிருந்து விடுபட மார்க்கமில்லையே?

இப்போது ஒருவேளை மருத்துவ அறிக்கை காரணமாகவோ? அல்லது தற்போது அரசாங்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதுவும் வல்லுறவு வழக்குகள் மீது அதிகத் தீவிரம் செலுத்துவதன் காரணமாகவோ, பிரசன்னாவின் பக்கம் கேஸ் நிற்காது என வழக்கறிஞர் சொல்லியிருக்க வேண்டும். அதனால் தான் முதலில் அகம்பாவத்தில் குதித்துக் கொண்டிருந்தவள் மறுபடி சுலோச்சனாவின் கால்களில் விழுந்தாவது கேஸை திரும்ப வாங்குவதாக மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என எண்ணிக் கொண்டார்.மனைவியைப் பற்றி அவர் அறியாதவர் அல்லவே.

சிலையாய் தன் எதிரே நின்றவரை கவனித்துக் கொண்டிருந்தான் பிரசன்னா. தகப்பன் புகழும் பிள்ளையாக இருந்தவன் இப்போது அவர் முகம் பார்க்கவும் வெட்குமளவு ஆகிவிட்டது. தான் நினைத்தது என்ன? நிகழ்ந்தது என்ன? என்ன இருந்தாலும் ஒரு முறை உடல் தீட்டுப் பட்ட அவள் என்னைத் தானே திருமணம் செய்தாக வேண்டும். அதை உணராமல் அவள் ஏன் இப்படி முட்டாளாக நடந்து கொள்கின்றாள். இதையெல்லாம் வெளியே சொன்னால் அவளுக்குத் தானே அவமானம். புரிந்து கொள்ள மாட்டேன்கிறாளே?

தான் கொட்ட கொட்ட குனிந்தவள் தற்போது பரப்பிரம்மமாய்த் தன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்பது அவன் எதிர்பாராதது. புழுவைக் கூடக் கொட்ட, கொட்ட அது என்றோ ஒரு நாள் எதிர்த்து நிற்கும். அதிலும் அவன் சீண்டியது புழுவல்ல பெண்ணாயிற்றே? அதை உணர்ந்தானா?

இப்போது அவளுக்கு என்னதான் வேண்டுமாம்? அதுதான் என்னைத் திருமணம் செய்தாலே எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துப் போகுமே? அம்மா சொன்னால் கேஸை திரும்ப வாங்கிவிடுவாளா? மாட்டாளா? இவளிடம் என் அம்மா போய்க் காலில் விழுவதா? ச்சேய் மனம் வித விதமாய்க் கணக்குப் போட்டது.

மன்னிப்பு கேட்டாளென்றால் கொஞ்சம் அலைய விட்டு விட்டு தான் அவளை மன்னிக்க வேண்டும்… முற்றும் முழுதாய் தீர்மானித்துக் கொண்டான். அவளுக்குத் தன்னை விட்டால் போக்கிடம் இல்லை என்பது அவனது மனதில் பதிந்து விட்டிருந்தது.

அப்போதுதான் வழக்கின் முதல் விசாரணை வந்தது.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here