16. நாயகி

0
843
Naayagi Jansi Rani

அத்தியாயம் 16

அன்று நீதிமன்ற வளாகத்தில் மிகுதியாக கூட்டம் இருந்தது. கொஞ்சமாக பத்திரிக்கை நிருபர்களும் செய்தி சேகரிக்க கூடியிருந்தனர். அதற்குள்ளாக இந்த செய்தி மிகவும் வைரலாகி இருந்தது.

கல்லூரியின் பெயர் மாணவி, மாணவனின் பெயர்கள் என் சுலோச்சனா மற்றும் பிரசன்னா பெயர்கள் அவர்களைக் குறித்த குறிப்புகள் பிரசன்னாவின் முகநூல் பக்கத்திலிருந்த புகைப்படங்கள் வெகுவாய் பகிரப்பட்டன.

‘வெரி ஹாண்ட்ஸம் யா… ஐ பி எஸ் ஆகறது தான் அவனோட இலட்சியமாம். அந்தப் பொண்ணு ஏதோ பழி வாங்குறதுக்காக பொய் பேசி கேஸ் போட்டிருப்பா போலிருக்கு என்றுச் சிலரும்…’

‘பார்த்தீங்களா கலிகாலத்தை எங்க காலத்தில எல்லாம் இப்படி இல்லடியம்மா’ என பலரும்…

முகநூலில் சுலோச்சனா தரப்பில் என்ன நடந்திருக்க கூடும் என அவளுக்கு ஆதரவாக பல பெண்ணிய பதிவுகளும்…

இப்போதெல்லாம் பொய் கேஸ் போட்டு பணம் பிடுங்குவது இதுவும் அப்படி ஒரு கேஸாக இருக்கும் என்று பார்த்தறியாத பிரசன்னாவுக்காக ஆதரவாக சில ஆணீய பதிவுகளும்….,

அதை படித்தே பாராமல் பகிர்ந்து தன் வட்டத்தில் தான் தான் மிக அப்டேட்டாக இருப்பதாக காட்டிக் கொள்ள பகிரும் பல பலரும், என எல்லாவிடமும் பிரசன்னா, சுலோச்சனாவை கற்பழித்த கேஸ் அமளி துமளிப் பட்டுக் கொண்டிருப்பதை சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரும் அறியார்கள்.

காவல் துறையின் வண்டி வந்து நிற்க, மழிக்கப் படாத தாடியுடன் இறங்கியவன் முகத்தை ஒரு கல் வந்து மோதியது. சில பெண்கள் கூட்டாக சேர்ந்து குரல் எழுப்பினர், கோஷங்கள் இட்டனர். அவசர அவசரமாக அவன் முகத்தை மூடி, கூட்டத்தை விலக்கி, பிரசன்னாவை உள்ளே கொண்டுப் போய் சேர்த்தனர் காவலர்கள்.

அடுத்து வந்த ஹாஸ்பிடல் வேனிலிருந்து காவலர்கள் இறங்கினர், தளர்ந்தவளாக சுலோச்சனா இறங்கினாள். கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் அவள் துப்பட்டாவால் முகத்தை மூடி இருந்தாள். அவளிடம் பேசி கேஸை திரும்ப வாங்கச் சொல்ல கூட்டத்தினூடே மாதுரி முண்டியடித்து முன்னே வர முயன்றாலும் அவரால் வர முடியவில்லை.

பத்திரிகையாளர்கள் ஒரு பக்கம் இருக்க, தத்தம் மொபைல்களை மீடியாவாக பாவித்து ஒவ்வொரு கோணமாய் அவளைப் புகைப்படம் பிடிக்க துடித்த சுற்றியுள்ளவர்களை வியப்பாய் ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டு நேராக வழியைப் பார்த்து நடந்தாள் சுலோச்சனா.

அவள் முன் ‘ப்ளீஸ் ப்ளீஸ் மேடம்’ என்றவாறு ஒரு மைக் நீட்டப்பட்டது.

‘உங்களுக்கு நடந்த இந்த பாலியல் வல்லுறவுக் குறித்து நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க மேடம்?’ என்றவாறு கேமராமேனை அவள் பக்கம் திருப்பினாள் அந்த பெண்.

அதனைக் கண்டுக் கொள்ளாமல் காவலர்களின் நடையின் வேகத்தில் அவளும் முடிந்தவரை விறுவிறுவென்று நடந்து விசாரணை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள். தன்னால் தன் பெற்றோருக்கு சிரமம் என அவளுக்குப் புரிந்தது. ஒவ்வொரு முறையும் தன்னிடம் பேசி கேஸை வாபஸ் செய்யுமாறு சொல்லி, சொல்லி அவர்களும் அலுத்துப் போயிருந்தார்கள். ஊரில் பிழைப்பை விட்டு, அவர்கள் இங்கு பழியாய் கிடப்பது ஒரு புறம், ஊரில் போய் மற்றவர்கள் கேள்விக்கு பதிலென்ன சொல்வதென ஒரு புறம் என அலைக்கழிப்பில் இருந்தனர் அவளது பெற்றோர்.

வழக்கிற்கான ஆரம்ப நிலை. வாதி, பிரதிவாதி இருவரையும் தனித் தனியாக விசாரணைக் கூண்டில் ஏற்றி பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் ஒப்படைக்கப் பட்டன.

தனக்கென வாதாட அரசு தரப்பு வழக்கறிஞர் வருவார் என சுலோச்சனா நினைத்திருக்க வந்து நின்றதோ பிரபல வழக்கறிஞர் வாசன். நாற்பத்தைந்து வயதை எட்டியிருந்த அவர் தாம் எடுத்த கேஸை தோற்றதாக இதுவரை சரித்திரம் இல்லை என பெயர் பெற்றிருந்தார்.

இந்த கேஸை முதலில் பலாத்கார வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார். நீதிபதியோ ‘இந்த வழக்கு தற்போது குற்றம் சாட்டப்பட்ட பிரசன்னா மற்றும் சுலோச்சனா இவர்களுக்கிடையே நிகழ்ந்தது சாதாரண உடலுறவே அன்றி அவர் சுலோச்சனாவை கடத்தவும் இல்லை, கற்பழிக்கவும் இல்லை என்ற நிலையில் இருக்கின்றதே? இந்த நிலையில் வழக்கு பாலியல் வல்லுறவுக்குரியதே என முடிவு செய்யப்பட்டால் அன்றி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும், துரிதமாக தீர்ப்பு சொல்லவும் இயலாது’, என்று உறுதியாக கூறினார்.

‘இது அவர்களுக்கு இடையேயான வழக்கமான உடலுறவு இல்லையென்றும், அன்றைய தினம் தான் என் கட்சிக்காரர் முதன் முறை வல்லுறவுக்கு ஆட்படுத்தப் பட்டிருக்கிறார் என்றும் இந்த மருத்துவ பரிசோதனை சொல்கிறது யுவர் ஆனர்’ பரிசோதனைக்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தார் வாசன்.

இந்த மருத்துவ பரிசோதனை சான்றிதழை அதாவது பிரசன்னா மற்றும் சுலோச்சனா இருவருக்கிடையேயான உறவு வழக்கமானதல்ல முதன் முறை என பெண்ணின் உடல் நிலை ஆராய்ந்து சமர்ப்பிக்கப் பட்ட மருத்துவச் சான்றிதழை எதிர்பார்க்காததால் எதிர்தரப்பு வழக்கறிஞர் சுந்தர் அதிர்ந்து அமர்ந்திருந்தார். பரிசோதனை முடிவு தாங்கள் வாதிடும் கருத்துக்கு ஆப்பு வைக்கவே போகின்றது, ஆனாலும் எதுவாயினும் இறுதி வரையில் போராடிப் பார்த்து விட வேண்டுமென தன்னுடைய குறிப்புகளை சரி பார்த்துக் கொண்டார்.

‘மருத்துவ பரிசோதனையில் வலுவந்தமாக உடலுறவு கொண்டது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறதே யுவர் ஆனர்…அதனால் என் கட்சிக்காரருக்கு ஏற்பட்ட உடல் காயங்களையும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது … மேலும் காவலர்கள் முதல் அறிக்கையின் படி என் கட்சிக்காரர் சுலோச்சனா கைகளிலும், கால்களிலும் டேப் ஒட்டப் பட்டு இருந்தது. தலையில் அடிப்பட்டு இருந்த காயம் இவற்றையும் சமர்ப்பிக்கிறேன்’ என காவலர் அறிக்கையையும் சமர்பித்து தன் கருத்தை வலியுறுத்தினார் வாசன்.

எதிர்கருத்து தெரிவிக்க அனுமதி வாங்கிக் கொண்ட சுந்தர்…’ வாசன் அவர்கள் சொல்வதுப் போல எதிர்கட்சிக்காரர் உடலில் உள்ள காயங்களை வைத்தெல்லாம் அவர்களுக்குள்ளான அந்த நிகழ்வு வல்லுறவு என ஏற்றுக் கொள்ள இயலாது யுவர் ஆனர். அதைக் குறித்து ஏற்கெனவே என்னுடைய கட்சிக்காரர் பிரசன்னா காவல் நிலையத்தில் நிகழ்ந்த விசாரணையில் தெரிவித்து விட்டிருக்கிறாரே. ?’

‘அன்று பிரசன்னா போதை மற்றும் காதலின் வேகத்தில் சற்று முரட்டுத் தனமாக அவர் தன் காதலியோடு உறவாடி இருக்கிறார், சின்ன சண்டையும் ஊடலும் ஏற்பட்டிருக்கின்றது. அன்று நிகழ்ந்தது இருவருக்கும் இசைவான ஒரு நிகழ்வு தானன்றி பாலியல் வல்லுறவு அல்ல. எனது கட்சிக்காரரின் பெயரைக் கெடுப்பதற்காக எதிர்கட்சிக் காரர் சுலோச்சனா அவர்கள் எனது கட்சிக்காரர் பிரசன்னா மீது வழக்குத் தொடுத்து, தானாகவே தன் கைகளிலும் கால்களிலும் டேப்பைச் சுற்றி பொய்யான தடயங்கள் ஏற்படுத்தி இருக்கிறார். இதனால் பிரசன்னாவை தீராத மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், எதிர் கட்சிக்காரருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.’

இப்போது வாசனின் முறை… ‘பிரசன்னா வீட்டிற்கு தான் செல்லவில்லையென்றும், பிரசன்னாவே தன்னை கல்லூரி ஹாஸ்டல் பின்னால் இருந்த இடிந்தச் சுவற்றில் வழியாக உள்ளே வந்து கடத்தியதாக எனது கட்சிக்காரர் சுலோச்சனா குறிப்பிட்டிருக்கிறாரே யுவர் ஆனர். பெண்ணை வலுவந்தமாய் கடத்தியதற்கும், வல்லுறவுக் குற்றத்திற்கும் எதிர் கட்சிக்காரர் பிரசன்னாவிற்கு உரிய தண்டனை வழங்கவும், இந்த வழக்கை பாலியல் வல்லுறவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன்.’

இதைக் கேட்டதும் சுந்தரின் முகம் மலர்ந்தது. அவர்களது கேஸில் மிக முக்கியமாக அவர்களுக்கு ஆதரவாக ஒரு விஷயம் இருக்கின்றதென்றால் அது அந்த சுவர் தானே?

‘எதிர் கட்சிக்காரர் சொல்வது பொய், கட்டுக்கதை யுவர் ஆனர். அவர் குறிப்பிட்டதைப் போல அங்கு இடிந்த சுவர் ஒன்றையும் காவலர்கள் காணவில்லை என குறிப்பிடப் பட்டுள்ளது. என்னைக் கேட்டால் எதிர் கட்சிக்காரர் சுலோச்சனா அவர்கள் இப்படி ஒரு உண்மைக்கு புறம்பான தகவல் அளித்திருப்பதில் இருந்தே அவருடைய மனநலத்தில் ஏதோ பாதிப்பு இருக்கக் கூடும் என ஐயம் கொள்கிறேன். உரிய நேரத்தில் அவருக்கு மன நிலை சிகிட்சை அளிப்பது மிக தேவையான ஒன்று என நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.’

ஆணவமாக பேசி அமர்ந்தார் சுந்தர்.

‘வழக்கை விசாரித்த காவலரை விசாரணைக்கு அழைக்க விரும்புகிறேன் யுவர் ஆனர்…’ வாசன் கூறியதும், அன்றைய தினம் வழக்கை விசாரித்த காவலர் வரவும் விசாரணை ஆரம்பமாகியது.

காவலரும் அங்கு தான் உடைந்த சுவரை காணவே இல்லை என நீதி மன்றத்தில் உறுதி அளித்தார். பிரசன்னா மற்றும் சுந்தர் மிகுந்த கெக்களிப்பில் இருந்தனர்.

‘அப்படியென்றால் நீங்கள் அங்கே குறிப்பிட்ட இடத்தில் சென்றபோது அப்படியொரு உடைந்த சுவரையே கண்ணால் காணவில்லை…அப்படித்தானே?’

‘ஆம்’ பதிலளித்தார் காவலர்.

‘நீங்கள் அந்த சுவற்றைக் குறித்து யாரிடமாவது, குறிப்பாய் அங்கே தங்கியிருந்த மாணவர்களிடம் விசாரித்தீர்களா?’

‘இல்லை…. அதற்கான தேவை ஏற்படவில்லை…’ தணிவாய் ஒலித்தது குரல்,

‘அதுதான் அங்கே ஏற்கெனவே சுவர் இருந்ததே?’

‘கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
என்பதை காவலராக இருந்தும் எவ்வாறு மறந்தீர்கள்? என நான் ஆச்சரியம் கொள்ளுகின்றேன்…’ என தன் கருத்தை முன் வைக்கவும்,

‘இவர் காவலரை தேவையில்லாமல் திசை திருப்ப பார்க்கிறார் யுவர் ஆனர்…’
இடையில் குறுக்கிட்டார் சுந்தர்.

‘நீங்கள் அந்த கோப்புகளை கவனித்தால் ஹாஸ்டல் வார்டன் பல்லவி அவர்களின் வாக்குமூலத்தில் முன்பெப்போதும் அப்படி சுவர் உடைந்திருக்கவே இல்லை, அது நன்கு கட்டப்பட்ட சுவர் தான் என வாக்குமூலம் கொடுத்திருப்பதைக் காணலாம்’ அந்த விபரத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார் சுந்தர்.

‘சரி நீங்கள் போகலாம்’ என காவலரை செல்ல அனுமதித்து விட்டு வாசன்… அடுத்து வார்டன் பல்லவியை விசாரணைக் கூண்டிற்கு அழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பல்லவியோ தான் காவலரிடம் கொடுத்த அதே வாக்குமூலத்தை பிரசன்னாவின் வழக்கறிஞர் கேட்க, அனைவர் முன்பாக மற்றொரு முறை கூறினார்.

‘அப்படியென்றால் அந்த தோட்டத்திற்கு பின் பக்கம் இருந்த சுவர் உடைந்திருக்கவே இல்லை அப்படித்தானே?’ வாசனும் குறுக்கு விசாரணையில் உறுதிப் படுத்திக் கொண்டார்.

பல்லவி தான் மனப்பாடம் செய்வித்ததை மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பொய்யானது ஒரு முறைச் சொல்லத்தான் கசக்கும், மறுமுறை சொல்லச் சொல்ல வழக்கமாகிவிடும் பின்பு சில நாட்கள் கழித்து மிகவும் இனிக்கவும் கூட ஆரம்பித்து விடும் அல்லவா?

‘இப்போது நான் ஒரு சில சாட்சியங்களை உங்கள் முன் வைத்து பல்லவி அவர்களின் வாக்குமூலத்தின் உண்மையை வெளிக் கொணரப் போகிறேன்’ என்றார் வாசன்.

பல்லவி கைகளை பிசைந்துக் கொண்டார்.

வாசன் பல்லவியிடம் சில பெண்களின் க்ளோஸப்பிலுள்ள புகைப்படங்களைக் கொடுத்தார். ‘இவங்க எல்லோரும் உங்க ஹாஸ்டலில் உள்ள பெண்களான்னு பாருங்க…’

பார்த்து விட்டு ஆமென தலையசைத்தவராக புகைப்படங்களை திரும்பக் கொடுத்தார் அவர்.

‘நீதிபதி அவர்களே, இப்போது மிகவும் உண்மையான சில புகைப்படங்கள் உங்கள் முன்பாக சமர்ப்பிக்கப் போகிறேன்.’ தன்னுடைய லேப்டாப்பை எடுத்து விரித்தார்.

வாசனின் தன்னம்பிக்கையைப் பார்த்து, பிரசன்னாவின் இதயத்துடிப்புகள் தாறுமாறாய் அடித்துக் கொண்டன. உண்மையாகவே ஏதேனும் தடயங்கள் இருக்கின்றனவோ? தான் மாட்டிக் கொள்வோமோ? தான் செய்தது மிகப் பெரிய தவறோ? எனும் உணர்வு அப்போது அவனுக்கு வந்துக் கொண்டிருந்தது. சற்று எட்டி சுலோச்சனாவைப் பார்த்தான். முகத்தில் களையற்றவளாக இழந்தவளாக காவலர் துணையோடு அமர்ந்திருந்தாள் அவள்.

சில நாட்களாக முகமூடிகள் கழற்றப் பட்ட எத்தனை முகங்களைப் பார்த்து விட்டாள். அவள் கண்கள் வார்டன் பல்லவி மீது நிலைத்திருந்தது. வெறும் சோற்றில் பூசணிக்காயை மறைப்பதுப் போல எனும் வாக்கியம் அங்கே அர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய தோழிகள் ஏன் எனக்கு ஆதரவாக பேச வரவில்லை. இங்கே பல்லவி மேடம் சொல்வது பொய் என்று ஒருவர் வந்துச் சொன்னாலும் போதுமே? வாசனின் குரலில் சுயம் திரும்பினாள்.

‘இதோ நான் இப்போது லாகின் செய்திருப்பது என்னுடைய முகநூல் கணக்கு, இந்த கணக்கிலிருந்து நான் சுலோச்சனா மற்றும் பிரசன்னா படித்துக் கொண்டிருக்கும் கல்லூரியின் முக நூல் பக்கத்திற்குச் சென்றால் இந்த புகைப்படங்கள் அனைத்தும் பதிவேற்றப் பட்டு இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாய் காட்டிக் கொண்டு வந்தார். அததனையும் ப்ரொஜக்டரில் பார்வைக்கு வந்தன.

‘இதனை நன்கு பாருங்கள் நீதிபதி அவர்களே, இவற்றில் உள்ளப் புகைப்படங்களில் எதிலும் என்னுடைய அல்லது என்னுடைய கட்சிக்காரருடைய பங்கு இல்லை.ஏன் சொல்லப் போனால் என் கட்சிக்காரரிடம் இருப்பது சாதாரண போன் தான், அவரிடம் முகநூல் கணக்கு கூட இல்லை. இந்த போட்டோக்கள் அனைத்தும் கிருஷணன் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளால் பதிவுப் படுத்தப் பட்டவை.’

‘சம்பவம் நிகழ்ந்த அன்று மூன்றாமாண்டு மாணவர்களின் பிரிவுபச்சாரவிழா. அன்று விழா முடிந்ததும் ஹாஸ்டலுக்கு திரும்பிய பெண்கள் அவர்கள் ஹாஸ்டலின் பின் புறம் இருக்கும் தோட்டத்தில் அந்த பூக்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்திருப்பதைப் பாருங்கள் யுவர் ஆனர். பல்வேறு கோணத்தில் அவர்கள் எடுத்திருக்கும் பின்புறம் இருக்கும் சிதிலமடைந்த சுவர் தெரிகின்றதா? யுவர் ஆனர். ஆம் இது என் கட்சிக்காரர் கடத்தப்பட்ட அன்று அதே நாள் சில மணி நேரங்கள் முன்பு பதிவிடப்பட்ட புகைப் படங்கள். இதுதான் நீங்கள் கேட்ட ஆதாரம்.’

‘அன்றைய தினம் வரையிலும் சுவர் உடைந்தே இருந்திருக்கின்றது. சுலோச்சனா அதன் வழியாகவே கடத்தப்பட்டிருக்கிறாள். அவளது மண்டை இடிப்பட்டு அதன் இரத்தம் அவள் அங்கிருந்து கடத்தப்பட்டதற்கு சாட்சியாய் இருப்பதை நிர்வாகம் தெரிந்துக் கொள்ளவும் தங்கள் கல்லூரியின் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாதென நினைத்த கல்லூரி நிர்வாகம் பிறரை அந்தப் பக்கம் போகாமல் அப்புறப்படுத்தி, இரவோடிரவாக பிறர் அறியா வண்ணம் சுவற்றையும் கட்டி முடித்திருக்கின்றது.’

‘அது மட்டுமல்ல யுவர் ஆனர் ஹாஸ்டல் வார்டன் பல்லவியும் அந்த பொய்யை உண்மையென இது வரை சொல்லியே வந்திருக்கின்றார்.நீதிமன்றம் கேட்ட சான்றை நான் அளித்து விட்டேன் யுவர் ஆனர். இதனை உரிய சாட்சியாக ஏற்று, இந்த வழக்கை பாலியல் வல்லுறவு வழக்காக மாற்றி, சிறப்பு நீதி மன்றத்தில் இந்த வழக்கை தொடர அனுமதி வேண்டுகின்றேன்.’

வாசனின் அதிரடி வாதத்தில் பிரசன்னாவும் அவனது வழக்கறிஞரும் முகம் செத்தவர்களாய் மாறிப் போனார்கள். எப்படி ஒரு நிமிடத்தில் உண்மை பொய்யானதோ? அதே வேகத்தில் பொய் உண்மையாக மாற்றப் பட்டிருந்தது.

நீதிபதி காவலரை அழைத்து அந்த சுவர் முன்பு இடிந்திருந்ததா? இல்லையா? என உரிய முறையில் ஆராயாமல் விட்டதற்கு தன் கண்டனத்தை தெரிவித்தார். உடனே கல்லூரி ஹாஸ்டல் சென்று அந்த சுவற்றை ஆராயவும், மாணாக்கரிடம் உரிய விதத்தில் விசாரணை நடத்தவும், அந்த கேஸை தனிப்பட்ட விதத்தில் நடத்த வேண்டுமென்று புதியச் சுவர் கட்டப்பட்டதன் உண்மை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும் ஆணையிட்டார்.

ஹாஸ்டல் வார்டன் பல்லவியிடம் நீதிபதி உங்கள் ஹாஸ்டல் சுவர் குறித்து நடக்கப் போகும் வழக்கில் காவலர் விசாரித்து நிரூபிக்கும் வரை நீங்கள் காத்திருக்கப் போகின்றீர்களா? இல்லை இப்போதே உண்மையைச் சொல்கிறீர்களா? எனக் கேட்கப் பட அதுவரை மனசாட்சியின் குரலால் உந்தப் பட்டிருந்தவர் தான் உண்மையை சொல்லி பணிந்தார்.

இப்போது கேள்வி பதில் பிரசன்னாவுடன் நடக்க, அவனும் தன் கீழான செயலை ஒத்துக் கொண்டான். பெண்ணைக் கடத்தியது, கற்பழித்தது என பல்வேறு சட்ட வகையில் அவன் மேல் வழக்குப் பதியப்பட்டு உடனே பாலியல் வல்லுறவுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப் படும் எனக் கூறப்பட்டது.

இறுதியாக சுலோச்சனாவிடம் கேள்வி பதில்கள் கேட்கப் பட்டன.

‘என்னை தப்பில்லாதவன்னு நிரூபிச்சதுக்கு நன்றிகள் ஐயா…’ அவள் கைகள் வழக்கறிஞர் வாசனை நோக்கி கூப்பியிருந்தது.

‘எனக்கு ஒரு சில உதவிகள் தேவை ஐயா…’ இப்போது நீதிபதியிடம் கை கூப்பினாள்.

‘சொல்லும்மா…’

‘என்னுடைய மருத்துவமனை தொடர் சிகிட்சைக்கான செலவு இவற்றையெல்லாம் செய்யும் நிலையில் என் குடும்பம் இல்லிங்கய்யா…’

‘ம்ம்…. அவற்றையெல்லாம் அரசாங்கமே பொறுப்பெடுத்துக்கும் அம்மா ‘தலையசைத்தார் நீதிபதி…

‘எனக்கு என்னோட …தயங்கினாள்… கண்ணில் நீர் பெருகியது… சொல்ல கூச்சமா இருக்குங்கய்யா… கைகளில் முகத்தை தாங்கினாள் கண்ணீர் சொட்டு சொட்டாய் வழிந்தோடியது. இந்த நாசக்கார சம்பவத்தினால என் உடம்பு புண்பட்டது போதுமைய்யா… எனக்கு வயித்துல… தேம்பினாள் இதுக்கான எந்த அடையாளமும் இல்லாம சுத்தப்படுத்தித் தர சொல்லி ஆணை போடுங்கய்யா…’ஓவென கதறினாள்.

அவள் கூறக் கூற அவர் ஆணையிட்டுக் கொண்டிருக்க, உதவியாளர் வெகு வேகமாய் தட்டச்சு செய்துக் கொண்டிருந்தார்.

‘இன்னொரு விஷயம் ஐயா…’

‘இனி நான் அங்க போய் படிக்கிறது சாத்தியம் இல்லை அய்யா… அதனால தயவு செஞ்சு, என் படிப்பை முழுவதும் முடிக்க எனக்கு உதவிப் பண்ணுங்க’ கையை கோர்த்து தலைக்கு மேலாய் உயர்த்தினாள்.

‘அம்மா அப்பா மறுபுறம் திரும்பியவள். கண்ணீர் மல்க… என்னை மன்னிச்சிடுங்க நான் ஒரு தப்பும் செய்யலை, நான் ஊருக்கு வந்தாலும் உங்களுக்கு அவமானம் தான். நான் செத்துட்டதா நினைச்சு நீங்க ஊருக்கு போயிடுங்க… என்னிக்காவது எனக்கு தலைவிதி இருந்தா நான் வந்துப் பார்க்கிறேன். ஆச்சியை நல்லா பார்த்துக்கோங்க…’ சில நாட்களாய் நில்லாமல் பெய்துக் கொண்டிருந்த அவள் கண்ணீர் ஊற்று இப்போது வற்றிப் போயிருந்தது. தனக்கு நியாயம் கிடைத்து விடும் எனும் நம்பிக்கை அவளது சோர்ந்த மனதை திடமாக்கி இருந்தது.

சிறுபெண் இத்தனை தெளிவோடு பேச பேச சுற்றியிருந்தவர்கள் வியந்து தான் போனார்கள்.

நீதிபதியோ அவளுக்கு கிடைத்த துன்பத்திற்கு மருந்தாய் தன்னாலானதை செய்ய எண்ணியவராய் தன் அதிகாரத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்ட அவளது அத்தனை கோரிக்கைகளுக்கும் செவி மடுத்தார். உரியன செய்ய ஆணையிட்டார்.

நீதிமன்றத்தை விட்டு வெளிவருகையில் மாதுரி கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி சுலோச்சனாவின் காலில் விழப் போனார். காவலர்கள் அவரை விலக்கி விட்டனர். ஹாஸ்பிடல் வேனில் மறுபடி ஏறினாள் சுலோச்சனா.

விதி விட்ட வழி என்று தங்கம்மாவும் மாத்தையனும் தங்கள் ஊர் நோக்கி புறப்பட்டார்கள். மைக்கை நீட்டிக் கொண்டு அலைந்துக் கொண்டிருந்த காக்கைக் கூட்டத்தை கவனிக்க யாருமில்லை. தானாகவே வழக்கறிஞர்களிடம் விளக்கத்தைக் கேட்டு செய்திகளை இஷ்டம் போல கோர்த்துக் கொண்டனர், ஒரு நாள் பிழைப்பிற்கு அவர்களுக்கு இவ்வளவு போதுமானது.

மருத்துவமனையில் தன்னிடம் ஏதோ ஒரு தாளில் கையொப்பம் வாங்க வந்திருந்த வழக்கறிஞர் வாசனைப் பார்த்ததும் நெற்றிப் புருவம் சுருங்கினாள். இவரை யார் அனுப்பி இருக்க வேண்டும்?

வாசலில் நின்றுக் கொண்டிருந்தது ஒரு தம்பதி ஒரு வாலிபப் பெண் மற்றும் சுனில்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here