17. நாயகி

0
866
Naayagi Jansi Rani

அத்தியாயம் 17

சுனிலின் அம்மா வந்து அவளது கரத்தைப் பற்றிக் கொண்டார். அவரது கண்கள் கலங்கியது.

‘சுனில் உன்னைப் பற்றி எப்பவுமே சொல்லுவான். நீ கலங்காதே மகளே…’ தன் தாயிடம் தேடிய வாஞ்சை தோழனின் தாயிடம் கிடைக்க அடைத்து வைத்திருந்த அழுகையை வெளியிட்டாள்.

வாழ்வதற்கான ஆசையின் ஊற்று ஒரு ஆறுதலினின்று அங்குத் தொடங்கியது.அவர்களொடு உரையாடும் போது தான் சுனில் தனக்காக எவ்வளவு சிரமப்பட்டு வழக்கறிஞர் வாசனை ஏற்பாடு செய்திருந்து இருக்கிறான் எனப் புரிய வந்தது. அவர் ஒன்றும் எல்லோருக்கும் உடனடியாக நேரம் ஒதுக்கி கேஸை நடத்துபவர்களல்ல, மிகவும் பிரபலமான பிஸியான வழக்கறிஞர்.

அவள் உள் நோயாளியாக இருந்த ஒரு வாரமும் சுனில் அவளுக்கு ஆதரவாகப் பேச கல்லூரியில் வகுப்புத் தோழர்களை அணுகி பார்த்து இருக்கிறான். நிர்வாகத்தின் மிரட்டல் காரணமாகப் பயந்து எவரும் முன் வராத நிலையில் பெற்றோரிடம் நிலைமையை விளக்கவும் அவர்கள் உதவ முன் வந்தனர். சுனில் குடும்பத்தினர் கல்லூரிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும், அவற்றை நிறுத்தாவிட்டால் விரும்பத் தகாதவை நிகழும் எனும் மிரட்டல் வந்திருக்கின்றது.

அதனால் தானாகவே கல்லூரியிலிருந்து நீங்கிக் கொண்ட சுனில் பெற்றோருடன் சேர்ந்து சுலோச்சனாவிற்காக என்ன செய்யலாம்? எனத் தீவிரமாக யோசிக்கத் தனது தொழிற்முறை நட்புக்கள் பழக்கத்தின் மூலமாக வாசனை அணுகி பல இலட்சங்கள் தனது சம்பளமாகப் பெறும் அவரையே வழக்கிற்காக நியமித்து விட்டார் சுனிலின் அப்பா.

கேட்டவளுக்கு, ‘என்ன தவம் செய்தனை?’ எனும் உணர்வு பெருக்கே தான். தனது இக்கட்டான நிலையில் பெற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில் நட்பு அவளை அரவணைத்துக் கொண்டதே! உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் பார்த்திருந்தாள்.

‘டோண்ட் வொர்ரி மை டியர் சைல்ட், வீ ஆர் தெர் வித் யூ’ சுனிலின் அப்பா பெரிதாய் புன்னகைத்தார்.

உடல் நிலை சரியானதும் அரசு பொறுப்பில் இருந்த இடத்திற்கு மாற்றப் பட்டாள். சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது.
கடந்தது ஒன்றரை வருடக் காலம்… முதலில் சுவற்றைக் கட்டி, தவறை மறைக்க முயன்ற கல்லூரிக்கு பெரும் தொகை நஷ்ட ஈடாகச் செலுத்த தீர்ப்பு வந்தது. உண்மையை மறைத்த குற்றத்திற்காகப் பல்லவிக்குச் சில மாதங்கள் சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது.

சுலோச்சனா பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கான விசாரணைகளைப் பல மாதங்களாகத் திடமாய் எதிர்கொண்டாள். ஒரு வழியாகச் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது. பிரசன்னாவிற்குச் சுலோச்சனாவை கற்பழித்ததற்காக ஏழு வருட சிறைத் தண்டனையும், கடத்தலுக்காக 2 வருட சிறைத் தண்டனையும் தீர்ப்பானது. ஏற்கெனவே, இரண்டு வருடக் காலம் அவன் சிறையில் கழித்ததால் இன்னும் ஏழு வருடக் காலம் அவன் கழிக்க வேண்டி இருந்தது.

பிரசன்னாவின் தாயார் மாதுரி கடந்த காலங்களில் மிகவே மாறியிருந்தார். ஆன்மீகம், தான தருமம் இவற்றில் அவரது கவனம் செல்ல ஆரம்பித்தது. தீர்ப்பு கிடைத்த அன்று செய்தித் தாளின் ஓரத்தில் அது ஒரு சிறு செய்தியாக வெளியானது. இப்போது யாரும் அதனை அவ்வளவாய் கண்டு கொள்ளவில்லை.

சிலர் தீர்ப்பைக் குறித்துச் சொந்தக் கருத்துக்களைச் சொல்லி விவாதப் பொருளாக்கினர். அதற்கு அப்பால் எத்தனையோ பாலியல் வல்லுறவுக்களையும் கொலைகளையும் பார்த்ததால் அந்தச் சம்பவம் இப்போது அத்தனை பரபரப்பாகத் தெரியவில்லை. செய்தியிலும் புதிது தேடும் மனதல்லவா?

நடுத்தர மக்கள் தனது தினசரி ஆற்றாமைகளுக்கு வடிகாலாக்க தேடுவது புதிது புதிதாய் விவாதிக்கத் தூண்டும் செய்திகள் மட்டுமே? என்னதான் நாட்டுப் பற்று எனச் சொல்லிக் கொண்டாலும் அது நாட்டுப் பற்றல்ல. நாட்டுப் பற்றைக் காட்ட விரும்புகின்றவன் தன் குப்பையை ஒழுங்காகக் குப்பைத் தொட்டியில் போடுவதிலிருந்து, சாலைகளில் துப்பாமலிருப்பது வரை செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே? செய்திகளுக்கு மட்டும் பொங்குவதில் என்ன சாதித்து விட முடியும்?

வருடங்கள் கடந்திருந்தன… கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்திருந்தாள் சுலோச்சனா. நட்புக்களைச் சந்திக்க நேரிட்டது… கல்லூரிக் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தங்களால் அவளுக்கு உதவ முடியவில்லை என்று சுமதி, லிஸி, ஈஸ்வரி மற்றும் ரேவதி வருந்தினர். அவள் அதனை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. தன் நட்புக்களோடு இறுகிக் கொண்டாள்.

சுனில் மற்றும் அவர்கள் குடும்பம் அவளுக்குக் கொடுத்த உற்சாகம் மிக அளப்பரியது. அவர்கள் இல்ல விழாக்களில் ஒன்றும் விடாமல் அவள் பங்குக் கொண்டிருந்தாள்.

எதிர்பாராத இடங்களில் இருந்து கிடைத்த உதவிகள் அனைத்தும் இறை உதவிகளாகவே அவள் கண்டாள். இறைவன் என்றொருவன் இருக்கின்றான் போலும் என்று அவளுக்கும் அத்தனை துன்பங்கள் தாண்டியும் நம்பிக்கை பிறந்தது, நம்பிக்கைத்தானே வாழ்க்கை இல்லையா?

தான் வாடகைக்கு எடுத்திருக்கும் அபார்ட்மெண்ட் வாயில் மணி சப்திக்கக் கதவை திறந்தாள் சுலோச்சனா. சுனில் தன் துணைவி ரீனாவுடன் நின்று கொண்டிருந்தான்.

‘அட சுலோ நீ இன்னும் புறப்படலை?’ கேள்வி எழுப்பிய துருதுருப் பெண் ரீனா உரிமையாய் கேள்விகள் கேட்டாள். சுனிலின் அம்மாவின் தேர்வு அவள் சுலோச்சனாவுக்கும் தோழியாகி இருந்தாள்.

‘நான் அங்கே நிச்சயமா போகணுமா?’ சிணுங்கினாள் சுலோச்சனா.

‘ப்ளீஸ் ப்ளீஸ் சுலோ…’ இது ரீனா.

‘சுலோ நீ ரொம்ப ஸ்லோ’, பின்னாலிருந்து மொபைலை நோண்டியவாறே மொக்கைப் போட்டான் சுனில்.

‘வேணாண்டா மறுபடி மறுபடி அதே விஷயம் பேசணுமா? புண்ணைக் கிளறி விட்ட மாதிரி வலிக்கும்’.

‘இன்னும் வலிக்குதா சுலோ?’ தன் நெஞ்சில் கை வைத்தவாறு கவலையாய் அவளிடம் வினவினான் சுனில்.

‘இல்லைடா, அதைத் தாண்டி வந்துட்டேன், அதான் மறுபடி எதுக்கு?’

‘ஒருத்தர் பார்த்து ஒருத்தர் இன்ஸ்பயர் ஆகுவாங்க சுலோ. உன்னைப்பார்த்து நிறையப் பேருக்குத் துணிவு கிடைக்கும்ல… எத்தனை பேர் இதெல்லாம் சகிச்சுட்டு வாழறாங்களோ? இப்படியும் வெளியே வரலாம், இந்தத் துன்பத்தையும் உதறித் தள்ளலாம்னு உன் பேச்சு அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கலாம் இல்லையா?’

‘ம்ம்…’

‘சரி அம்மா பத்திரமா ஊர் போய்ச் சேர்ந்திட்டாங்களா?’

‘ஆமாம் போன் பேசினோம், சரியான நேரத்தில ரெயில் போய்ச் சேர்ந்திடுச்சாம்.’

ஆம், இப்போது தாய் தகப்பனுடன் தொடர்பில் இருக்கிறாள் சுலோச்சனா. தனக்குத் தேவையான நேரத்தில் அவர்கள் தோள் கொடுக்காவிட்டாலும் முதுமையும் வறுமையுமாய் இருப்பவர்களைத் தன் சம்பாத்தியம் ஆரம்பித்ததும் தாங்கிக் கொண்டாள். ஆச்சியின் உடல் நிலை இவள் வரவால் கொஞ்சம் நலமாகி இருந்தது.

இப்போதெல்லாம் அவர்கள் ஊரிலும் கூட யாரும் அவளைக் குறித்துக் குறைவாய் பேசுவதில்லை. அவளது படிப்பு, பணியில் முயன்று அடைந்திருந்த உயரங்கள் அவர்களைப் பேச விடாமல் செய்திருந்தன.

‘நாமளும் குடும்பம், சமையக்கட்டுன்னு வாழ்நாள் முழுக்கச் செலவழிச்சும் என்னத்தக் கண்டோம்?’ எனத் தங்கம்மா முனக ஆரம்பித்திருந்தாள்.

தங்கள் எளிய ஊரில் விவசாயத்திற்கோ, அல்லது தேவையான எந்த உதவிக்கோ ஆதரவுக் கரம் நீட்டுவதிலும், பொருளாதார உதவி செய்வதிலும் முன் இருக்க அக்கா அக்காவெனச் சொல்லி அந்தத் தலைமுறை அவளைக் கொண்டாடத்தான் செய்தது.

சுனில் சொன்னதைக் கேட்டதும் சட்டென ஐந்து நிமிடங்களில் புறப்பட்டாள் சுலோச்சனா…

‘வா ரீனா, வா சுனில் நாம போகலாம்.’

கார் அரங்கம் நோக்கி விரைந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here