18. நாயகி (நிறைவு)

0
859
Naayagi Jansi Rani

அத்தியாயம் 19

பிரபலமானதொரு மகளிர் கல்லூரி அது, அங்கே மூன்று நாட்களாக நடத்தப்படும் பல்வேறு கருத்துப் பரிமாற்றத்தின் நிகழ்வு அது. அதில் ஒரு உரையாகச் சுலோச்சனாவின் உரை இருந்தது. கல்லூரி மாணாக்கர் வருகின்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்று மேடையில் அமர வைத்துக் கொண்டிருந்தனர். சுலோச்சனா மேடையில் அமர, சுனிலும் ரீனாவும் எதிரில் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

மாணவ மாணவிகள் விருந்தினர்களிடம் கேள்வி கேட்பதுவும் பதில்கள் பெறுவதுமான உற்சாகத்தில் காணப் பட்டனர்.

சுலோச்சனாவின் முறை வந்த பொழுது பெண்ணின் வாழ்விற்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி இரண்டு நிமிடம் பேசி முடித்தாள். கேள்வி பதில் நேரம் ஆரம்பித்தது.

‘நீங்கள் வீரப் பெண்மணி என்று பலராலும் கொண்டாடப் படுகின்றீர்களே அது பற்றி…?’

‘நான் வீரப் பெண்மணி அல்ல, கோழை… அதாவது கோழையாக இருந்ததால் அல்லவோ பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானேன். வீரப்பெண்மணியாக இருந்திருந்தால் தீங்கு நேராவண்ணம் முதலிலேயே என்னைக் காத்துக் கொண்டிருப்பேன்.அதனால், என் வாழ்க்கையிலிருந்து யாரும் எதையும் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அது ஒன்றேதான். யாரேனும் உங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கின்றார்களா? முற்றிலும் அனுமதிக்காதீர்கள். உடனே அதனை முறியடியுங்கள்… ஏனென்றால், உங்கள் உடல், அது உங்கள் உரிமை…’

கைத்தட்டல் எழுந்து அடங்கியது. மற்றொரு மாணவியின் கேள்வி…
‘இது நாங்க செய்தித் தாள்களின் மூலமா அறிந்து கொண்டது, பிரசன்னா உங்களை விரும்பியதாகவும், திருமணம் செய்வதற்காகவே வல்லுறவு செய்ததாகவும் சொல்லிக்கிறாங்களே? அது உண்மையா?

‘உண்மை’

‘அப்படியென்றால் நீங்கள் அவரைத் திருமணம் செய்திருக்கலாமே?’

‘இப்போது உங்களிடம் ஒரு சில கேள்விகள் உங்களிடம் மட்டுமல்ல பொதுவான கேள்விகள் இவை’, எனச் சுலோச்சனா ஆரம்பித்தாள்.

‘கேளுங்க அக்கா …’

‘காதல்னா என்ன?’

‘அன்பு, நேசிக்கிறது’, எனப் பல பல பதில்கள் வந்தது.

‘அடுத்தக் கேள்வி காதலிக்கிற ஒருவரால் மற்றவரை காயப்படுத்த முடியுமா?’
மௌனமானது அந்த அரங்கம்.

‘ஒருவர் காதல் என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்ணைக் காயப்படுத்தினால், துன்புறச் செய்தால் அது காதலா? அகங்காரமா? பதில் என்ன? என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அது காதலா?’ உரக்கக் கேட்டாள்.

‘இல்லை’ என அரங்கம் அதிர பதில் வந்தது.

‘இதோ நீங்கள் கேட்டதுக்குப் பாதிப் பதில் வந்து விட்டதுமா… பிரசன்னா என்னைக் காதலிப்பதாகச் சொல்லியிருக்கலாம் ஆனால் அது காதலில்லை அகங்காரம். ஆணாகிய என்னுடைய விருப்பத்திற்கு மாறாக எப்படி இவள் பேசலாம்? நான் கேட்டதும் உடனே சரி என்றிருக்க வேண்டாமா? எனும் ஆணவம். என்னை அவன் சிதைத்து விட்டுச் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?.. அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா?’

…………….

குரலெழுப்பாமல் அவளையே எல்லோரும் பார்த்திருக்க,

‘ஐ லவ் யூ சொல்லியிருப்பான்னு நினைச்சு வீணா ஏமாந்து போகாதீங்க…’

பெரிதாய் புன்னகைத்தாள்.

‘இனி என்ன செய்வ? இனிமே நீ என்னைக் கட்டித்தானே ஆகணும். பிடிக்கலை பிடிக்கலைன்னு துள்ளுனீல்ல, யார் கிட்ட ம்ம்…’ அவனைப் போலவே பேசிக் காட்டினாள்.

‘அதாவது என் உடலை காயபடுத்தி விட்டதால் நான் இனி அவனைச் சரணடைந்தே ஆக வேண்டும் எனும் ஆணவம்…’

… அரங்கத்தில் தொடர்ந்த அமைதி

‘இது காதலா?’

அவள் கேட்க, அரங்கம் மறுபடியும் ‘இல்லை’ எனக் குரலெழுப்பியது.

‘இப்படி ஆணவமாக பேசி இருக்காவிட்டாலுமே, ஐ லவ் யூ வென சொல்லி இருந்தாலுமே கூட இது காதலல்ல காதலாக இருக்கவும் முடியாது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் பெண்களே’

‘கத்தியால் குத்திவிட்டு, அன்பால் குத்தினேன் என்று கூறினால் அது மன நிலை பாதிப்பாகக் கூட இருக்க முடியும் ஆனால், காதலில் சேராது’… ஆமோதிக்கும் வண்ணம் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

மைக்கைப் பிடித்துக் கொண்டு நிற்கும் பெண்ணிடம் சுலோச்சனா,

‘இன்னொரு கேள்வி உங்க கிட்ட மட்டும்’ முறுவலித்தாள்.

‘கேளுங்க அக்கா…’

‘நீங்கள் பிரசன்னா என்னை விரும்பினாரா இல்லையா? எனக் கேள்விக் கேட்டீர்களே, நான் அவரை விரும்பினேனா இல்லையா? எனக் கேட்கவில்லையே அது ஏன்?’

… மௌனம்….

‘ஆக ஒரு பெண்ணுக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ ஒரு ஆண்மகனின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உங்களைப் போன்ற நன்கு கற்றுத் தேர்ந்த மாணவ மணிகள் மனதிலும் இருக்கின்றது இல்லையா?’

மறுபடி மௌனம் சூழ,

‘நான் உங்களுக்கான பதிலை தெரிவித்து விட்டேன் என நினைக்கிறேன்’

புன்னகைத்தாள். அந்தப் பெண் அமர்ந்தாள் மற்றொரு பெண் எழுந்தாள்.

‘அக்கா இதுவும் இப்போதெல்லாம் வெளியில் அதிகமாகப் பேசப்படும் ஒரு கருத்துத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.’

‘கேளுங்கம்மா’

‘பிரசன்னா விடுதலை ஆனதும் நீங்க அவரைத்தான் திருமணம் செஞ்சிக்கப் போறதா சொல்லிக்கிறாங்க…’

‘உங்களுக்கும் ஒரு கேள்வி வச்சிருக்கிறேன்’, என்றாள் சுலோச்சனா… அவளது நகைச்சுவை தொனியில் அனைவரும் சிரித்தனர்.

‘உங்க வீட்ல ஒருத்தன் களவாடுறான்…’

‘ம்ம்…’

‘நகை நட்டு எல்லாம் கொண்டு போயிடறான்.’

‘ம்ம்…’

‘அவனைக் காவல்துறையிடம் பிடிச்சு கொடுத்திடறீங்க… தண்டனை அடைஞ்சு தண்டனை காலம் முடிஞ்சு அவன் திரும்ப வாரான்.’

‘ம்ம்…’

‘இப்ப அந்த நகை நட்டெல்லாம் போய் அவன் கிட்ட திருப்பிக் கொடுத்திடுவீங்களா?’

‘ங்கே…’ என விழித்தாள் அந்தப் பெண்.

‘பதில் சொல்லும்மா…’

‘மாட்டோம்…’

‘ஏன் கொடுத்திடலாம் தானே, அவன் திருட நினைச்சதாலயோ, அல்லது திருடினதாலயோ அந்த நகை தீட்டாயிடுச்சில்ல, அதை எப்படி மறுபடி வேற ஒருத்தர் பயன்படுத்த முடியும்?’

பதிலற்று மௌனம் சாதித்தது அரங்கம்.

‘தங்கம் ஒரு உலோகம், ஒரு உலோகத்துக்கு இருக்கிற மரியாதை கூடப் பெண்ணுக்கு இல்லையா? பெண்ணை ஒருவன் அந்தரங்கமாய்த் தொட்டதாலேயே அவள் தீட்டாகி விடுவாளா? அந்தக் கொடூரத்தை செய்தவனிடமே வாழ் நாள் முழுவதும் துன்புற அவள் ஒப்படைக்கப் பட வேண்டுமா? பதில் சொல்லுங்கள்.’

அரங்கமே அவள் திடனானப் பேச்சுக் கண்டு ஆரவாரித்தது. சுலோச்சனா தொடர்ந்தாள்.

‘நீங்கள் எல்லோரும் பாலியல் வல்லுறவை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசுவதை உணர முடிகின்றது. உங்களுக்காக ஒரு காணொளியை பகிர விரும்புகின்றேன். அவள் அமரவும் காணொளி ஆரம்பித்தது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்கள், சிசுக்கள், இவர்களின் உடற் காயங்கள், அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட உடல், மன சிகிட்சைகள் சுருக்கமாய் மனதில் பதியும் வண்ணம் கொடுக்கப் பட்டு இருந்தது. அதில் சுலோச்சனா குறித்த பதிவும் இருந்தது. குறிப்பாகச் சில வருடங்கள் முன்பு 4 வயது குழந்தையைப் பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசிச் சென்ற உத்தரப் பிரதேச ஆசிரியரின் செயல், உயிருக்குப் போராடிய அந்தக் குழந்தைக்கு அவசரமாய்க் கொடுக்கப் பட்ட சிகிட்சைகள், பல்வேறு தையல்கள், ஆபரேஷன்கள், குழந்தையின் சரிந்துப் போன குடலை சரி செய்தது எல்லாம் விளக்கிய போது அரங்கமே கண்ணீர் விட்டழுதது. தற்போது அந்த ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பு வெளியாகி உள்ளது என அந்த ஸ்லைடில் காட்டப் பட்ட போது அனைவரும் உரக்கக் கைத்தட்டினர்.

இந்தக் காணொளி உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என்றவள் மறுபடி கேள்விப் பதிலுக்காக எழுந்து நின்றாள்.

‘இதுவும் கொஞ்சம் பர்சனல் தான் அக்கா’, என்றவாறு கேள்வி கேட்க எழுந்தாள் அந்த மாணவி.

‘நீங்க கல்யாணம் செஞ்சுக்குவீங்களா? உங்க கல்யாணம் எப்போது?’

‘இப்போது புன்னகையால் மலர்ந்தன சுலோச்சனாவின் இதழ்கள்… ஆம், ஏற்கெனவே என் திருமணம் நிச்சயிக்கப் பட்டு இருக்கின்றது. அடுத்த மாதம் திருமணம் இருக்கும், இன்னும் தேதி முடிவு செய்யப் படவில்லை. அவர் என் அலுவலக நண்பர்’, எனக்கூறவும் வாழ்த்து சொல்லி மாணவி அமர்ந்தாள்.

தொடர்ந்த சில கேள்வி பதில்களுக்குப் பின் கேள்வி நேரம் முடியும் முன் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

‘அக்கா ஒருவரும் உங்களுக்குத் துணையில்லாத நிலையில் நீங்க எப்படி உங்கள் நீதிக்காகப் போராடுனீங்க? உங்களுக்கான உத்வேகம் தந்தது என்ன?’

‘You never know how strong you are untill being strong is the only choice you have’ எனும் Bob Marley என்பவருடைய ஒரு பிரபலமான வாசகம் ஒன்று உண்டு.
அது போலவே நான் திடமானவளாக, வலுவுள்ளவளாக இருப்பதைத் தவிர அந்நேரம் எனக்கு வேறு ஆப்ஷன்கள் தரப்படவில்லை. என்னைக் காப்பாற்ற வேறு யாரோ பறந்து வந்து சண்டையிடப் போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்டதால் நான் எனக்காகப் போராடினேன்.’

‘எனக்குத் துணையாகச் சில நல்ல உள்ளங்கள் இருந்து ஊக்கப் படுத்தியதாலும், (சுனிலின் பக்கம் கண் செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை) என் பக்கம் உண்மை இருந்ததாலும் நான் வென்றேன். ஏனென்றால் என் வாழ்வின் நாயகி நான்தான் நான் மட்டுமே தான் என்று நான் என்னைக் கண்டு கொண்டேன்.’

……….

‘நீங்களும் உங்களுக்குள் இருக்கும் நாயகியைக் கண்டு கொள்ளுங்கள். ஆம், நாம் அனைவரும் அவரவர் வாழ்விற்கு நாயகிகள், வெற்றிப் பெரும் தகுதியுள்ள, ஆற்றலுள்ள நாயகிகள் அதை மறவாதீர்கள்.’

அவளுக்கான பேசும் நேரம் பெரும் கைத்தட்டலோடு நிறைவுற்றது.
தொடர்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் நிறைவுப் பெற, நிகழ்ச்சிகள் முடிய வந்திருந்தது. மேடையில் இருந்தவளிடம் சுனில் தூரமாய் இருந்து கைக்காட்டினான். போனில் அவன் செய்தி வந்திருந்தது.

‘உன் ஆள் வந்திட்டார், அவர் கூட வந்திடு நாங்க போறோம் பாய்…’

என்றிருந்தான். ஓகே எனப் பதிலளித்தாள். அனைவரோடு கைக் குலுக்கி செல்பிகள், போட்டோக்கள் எடுத்து அவள் கார் பார்க்கிங்கிற்குச் செல்ல அங்கே கதிரவன் காத்திருந்தான்.

‘என்ன மேடம் உங்க பேச்சுக்கு ரொம்ப அப்ளாஸ் போல…’
சுலோச்சனா சிரித்தாள்…

‘அதான் நான் இங்க வர மாட்டேனோன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு, என்னைக் கிளப்பி விட ரீனாவையும் சுனிலையும் அனுப்பிச்சீங்க இல்லை…’ பொய்க் கோபம் காட்டினாள்.

‘இதிலயே தெரியுது நீ என் பேச்சைக் கேட்கிறியோ இல்லையோ அந்தப் புள்ளப்பூச்சி ரீனா, உன் நண்பன் பேச்சத்தான் கேட்பேன்னு…. வருங்காலப் புருசன் பேச்சுக்கு மரியாதையே இல்லப் போ…’

அவன் தோளில் செல்லமாய்க் குத்து விட்டவள் காரில் முன் இருக்கையில் அமர்ந்தாள். அவன் சுற்றி வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்து அவன் காரை எடுத்தான்.

நாயகி தன் நாயகனோடு பயணமானாள்.

[center]முற்றும்[/center]

(பின் குறிப்பு: இந்தக் கதையில் வரும் நீதிமன்றம் மற்றும் காவல்துறை நடைமுறைகள் அனைத்தும் பெருமளவு நிஜத்தையும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனும் வகையில் சிறிதளவு கற்பனைகளையும் கலந்து எழுதப் பட்டுள்ளது.)

நாயகி கதையோடு பயணித்து கருத்துகள் பகிர்ந்துக் கொண்ட நட்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்த நாவல் இந்த 2019ம் வருடம் ஃபெப்ருவரி மாதம் கிண்டில் போட்டிக்காக எழுதப் பட்ட ஒன்றாகும். மக்கள் இப்படிப் பட்ட கதைக் கருவை இரசிப்பார்களோ மாட்டார்களோ? என எண்ணியதற்கு மாறாக எதிர்பாராத பல்வேறு பாராட்டுக்களை பெற்றதில் மன நெகிழ்ச்சி கொண்டுள்ளேன்.

கதையில் நாயகி சுலோச்சனா அவளது துன்பங்கள், அதனின்று அவள் வெளிவந்த விதம் இவற்றை (மட்டும்) காட்ட விரும்பியதால் மட்டுமே மற்ற எந்த கதாபாத்திரங்களையும் விரிவாக்கி காட்டவில்லை.

ஆனால், பெரும்பாலான நட்புக்கள் சுலோச்சனா மற்றும் கதிரவன் பகுதியை விரிவாக வாசிக்க விரும்புவதாக கருத்து தெரிவித்தனர். எனவே, அவர்கள் பகுதியை நாயகியின் இரண்டாம் பாகமாக எழுத தீர்மானித்து இருக்கின்றேன். ஆயினும், தற்போது உடனே இரண்டாம் பகுதி எழுதும் சூழல் இல்லாத காரணத்தால் சில காலம் கழித்து எழுதுகிறேன்.

உங்கள் பொறுமைக்கு நன்றிகள்.

வணக்கம்.

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here