2. நாயகி

0
981
Naayagi Jansi Rani

அத்தியாயம் 2

கிருஷ்ணன் காலெஜ் ஆப் ஆர்ட்ஸ், சயன்ஸ் & காமர்ஸ் அது. நகரத்தின் அருகாமையில் இருப்பது போலச் சொல்லப் பட்டாலும் கூட, அந்தக் கல்லூரி கொஞ்சம் உள்பகுதியில் அமர்ந்த ஒன்றுதான். அரசு மானியம் பெறும் மாணக்கர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் நன்கு பெயர் பெற்ற கல்லூரி என்பதாலேயோ அங்கு மாணவர் கூட்டத்திற்குக் குறைவில்லை. குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நிறைய டொனேசன் கொடுத்து பல பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் அங்கு இடம் பெற்றிருந்தனர்.

அதனால் பல்வேறு பொருளாதார நிலைமையில் உள்ளவர்களும் அங்குக் காணப்பட்டனர். ஹாஸ்டல் வசதி இருந்ததால் உள்ளடங்கிய பகுதியானாலும் பிள்ளைகளைத் தங்க விடப் பெற்றோர்கள் தயங்கவில்லை. ஹாஸ்டல் மெஸ்ஸீம் ஓரளவுக்குத் திருப்தியாக இருந்தது. படித்து முடித்து, வேலைக்குச் சென்று, சம்பாதித்துத்தான் சாப்பிட்டாக வேண்டும் என்கிற நிலை இல்லையென்பதால் பணக்கார வீட்டு கன்றுக்குட்டிகள் அங்கே வெகு ஜாலியாகத் திரிவார்கள்.

வழக்கம் போலத் தன்னிடமிருந்த சில சுடிதார்களை வார இறுதியில் துவைத்து, நன்கு உதறிப் போட்டு காய வைத்ததில் அவை வெயில் உபயத்தில் மொடமொடவெனக் காய்ந்திருந்தன. சுலோச்சனா அவற்றை எடுத்து அவசர அவசரமாய் அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாகவே அடக்குமுறைகளை அனுபவித்து விட்டதால் இப்போது இருக்கும் இடத்தில் எந்தப் பிரச்சனைகளைப் பார்த்தாலும் கூட இது ஒரு பெரிய விஷயமா? என்பது போல இலகுவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள்.

அடிப்பட்ட குழந்தை வலி மறந்ததும் சிரிக்குமே அப்படி ஒரு குணத்தைப் பெற்றிருந்ததாலோ என்னவோ அவளைக் குறிப்பாக அவளது உடையை இகழ்ச்சியாய் பார்வையிடும் சில பெண்களின் ஏளனப் பார்வையை அவளால் சுலபமாய்க் கடந்து வர முடிந்திருந்தது.

கிராமத்திலிருந்து வந்த அவளுக்குச் சுற்றிலும் நிகழுவன சற்று வியப்பையே அளித்தது.

பக்கத்து அறை சுனிதா இரவும் தூங்காமல் காரிடாரில் நடந்து கொண்டு போன் பேசிக் கொண்டு இருப்பாள். யாரிடம் தான் அவ்வளவு பேசுவாளாக இருக்கும்? எனக் கேட்டபோது அவளுடைய காதலர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று இவளது அறைத் தோழி ரேவதி சொன்னாள்.

ஒரு புறம் படிப்பதற்காகவே பல்வேறு போராட்டங்களில் இருக்கும் தன்னைப் போல வாழும் பெண்கள்.மற்றொரு புறம் கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் கொண்ட இப்படிப் பெண்கள் என அந்த வித்தியாசம் கண்டு வியந்தாள்.

‘லீவு நாள் தானே என்ன அவசரம்டி? இப்படித் துணியை மடிச்சு வச்சிட்டு இருக்க?’

அங்குமிங்குமாய்ச் சுலோசனா அறைக்குள் நடந்து கொண்டிருக்கத் தூக்கம் தடைப்பட்டதில் ரேவதி சிடுசிடுப்பாகக் கேட்டாள்.

‘இல்ல கீழே கார்டனுக்குப் போகப் புறப்படுறேன்’ புன்னகைத்தாள்.

‘அந்த மரம் கொடிச் செடியில உனக்கு என்னதான் இருக்கோ? போ, போகும் போது கதவை இறுக்க அடைச்சுட்டுப் போ, மதிய நேரம் தூங்க விடாம…’

‘ரேவதி…’

‘என்னடிடி….?’

‘இப்ப மணி ஆறு…இது மதியம் இல்லை சாயங்காலம்…’

‘அடிங்க…’

கையில் கிடைத்த சீப்பை தூக்கி எறிய… தப்பித்து ஓடியவள் கதவைச் சாற்றி விட்டு படபடவென அந்த மூன்றாம் மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

போகிற போக்கில் அவள் ஹாஸ்டல் வார்டனைப் பார்த்து வணக்கம் சொல்ல அவரும் அங்கீகரித்துத் தலையசைத்தார்.ஆனால், அவர் கவனம் முழுவதும் அவளிடம் இல்லை, முகமே கொஞ்சம் எரிச்சலைக் காட்டியது.

‘நூத்துக்கணக்கான பொண்ணுங்க இருக்கிற இடம் சார். யாருக்கு ஒன்னுன்னாலும் நான் தான் பதில் சொல்லணும். தயவு செய்து அந்தப் பின் சுவரை முதல்ல கட்டச் சொல்லுங்க…’ தன்னெதிரே நின்றுக் கொண்டிருந்தவரிடம் சற்றுக் காட்டமாகவே பேசினார்.

‘மேடம் பக்கத்தில நம்ம கல்லூரிக்கான பில்டிங்க் வேலை நடந்திட்டு இருக்கு. எல்லாமே நம்ம இடம் தான், யாரும் வரமாட்டாங்க பயப்படாதீங்க. நான் ஏற்கெனவே இது குறித்து மேனேஜ்மெண்ட் கிட்ட தெரிவிச்சிருக்கேன். சீக்கிரம் அந்தச் சுற்றுச் சுவரைக் கட்டிடுவாராம். எல்லாவற்றையும் கவனமா பார்த்துக்கச் செக்யூரிட்டியும்தான் இருக்காரே.’

அவரது பதிலில் வார்டன் பல்லவியின் தலை திருப்தி இல்லாமல் அசைந்தது. அவரும் நிர்வாகத்திற்குச் சொல்லி, சொல்லி ஓய்ந்து விட்டார், இவர் பேச்சிற்குச் செவிமடுத்தால் தானே?

அவர்கள் நோக்கமெல்லாம் கல்லூரியை விரிவாக்கம் செய்ய வேண்டும், நிறைய மாணவர்களைச் சேர்க்க வேண்டும், நிறையச் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். பணம் காசு சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறை மற்ற விஷயத்தில் இல்லை மனதிற்குள் முணங்கியவாறே தன் அறைக்குச் சென்றார்.

சுலோச்சனா அந்தக் கார்டனில் நின்றுக் கொண்டிருந்தாள். பெரிய அந்த ஹாஸ்டல் கட்டிடத்திற்குப் பின்புறம் சற்று விஸ்தாரமான இடத்தில் அந்தத் தோட்டம் அமைந்திருந்தது. அதன் அருகாமையிலிருந்த சுவர்தான் சிதிலமாகி இருந்தது. பின்புறம் ஆகையால் அத்துமீறி யாரும் நுழைந்தாலும் சட்டெனத் தெரிய வராது. அது குறித்துத் தான் வார்டன் கவலைக் கொண்டது. அங்கே இருந்த பலவித செடி கொடிகள், அழகுக்குப் பல நிறங்கள் கொண்ட மலர்களும், சில காய் கறிகளுமாய்ப் பச்சை பசேலென்றிருந்தது. அதைக் கவனித்துக் கொள்ளத் தோட்டக்காரர் இருந்தார். வயல் வரப்பு என்று வளர்ந்தவளுக்கு அங்கு வந்து சில மணித்துளிகள் செலவிட மிகப் பிடிக்கும்.
அவற்றை வருடி, பேசி தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here