3. நாயகி

0
899
Naayagi Jansi Rani

அத்தியாயம் 3

தன் பைக்கை வெகு ஸ்டைலாகப் பார்க்கிங் செய்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த ஒற்றை நோட்டுப் புத்தகத்தைக் கையில் சுழற்றியவாறு உள்ளே வந்து கொண்டிருந்தான் பிரசன்னா.

அவன் அதே கல்லூரியின் மூன்றாம் வருட மாணவன் ஆறேகாலடி அழகன் பிரசன்னா, அவனது கன்னத்தில் குழி விழும் அழகே அழகு. அவன் பேச்சும் மிகவும் ஆளுமையோடு இருக்கும். அவனுக்கான விசிறிகள் குறிப்பாகப் பெண் விசிறிகள் மிக அதிகம்.

அவன் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்ப வகையைச் சேர்ந்தவன். அரசு அலுவல் காரணமாக ஊர் ஊராக மாற்றல் ஆகும் அப்பாவோடு, அம்மாவும் கூடவே பயணித்துக் கொண்டிருக்கச் சிறு வயதிலேயே இரண்டு வருடங்கள் படிப்புத் தடைப் பட்டு இருந்தது. அவன் தற்போது தனியாய் கல்லூரிக்குச் சமீபத்தில் அறையெடுத்து தங்கி இருந்தான்.

தன்னுடைய தோற்றத்திற்குக் கிடைக்கும் அதீத ஆராதனைகள் அவனுக்கு மிகவுமே பிடிக்கும்தான் ஆனாலும் அதை அவன் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.பதிலுக்கு அவனும் வழிந்தானென்றால் பிறருக்கு அவன் மேல் இருக்கும் பிரமிப்பு என்னாவது?அந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கின்றா
னோ? அந்த அளவுக்கு அவன் மேல் பெண்கள் பித்துக் கூடும் என்பதை அவன் அறிந்தே இருந்தான்.அதை அப்படியே பின்பற்றியும் வந்தான்.

‘அழகு மட்டுமா? படிப்பும் அவனிடத்தில் கொட்டிக் கிடக்கிறதே?’

இது அவனைப் பார்த்து வயிறெரியும் சக மாணவர்களின் பொருமல். தன் தாய் தந்தை விருப்பப் படி ஐபிஎஸ் ஆவதொன்றே அவனது இலட்சியம். அதனால் அவன் மிகவும் இஷ்டப்பட்டுப் படித்துக் கொண்டு இருந்தான்.

அன்று கல்லூரி நூலகத்தில் தனக்குத் தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு வளைவு, வளைவான வழியில் திரும்பிக் கொண்டு இருந்தான் பிரசன்னா. அங்கே அவனைப் பார்த்த சில கல்லூரிப் பெண்கள் தாங்கள் வந்த வேலையை விட்டு விட்டு, அவனையே பார்க்கவும், அவனைக் குறித்துக் கிசுகிசுக்கவும் ஆரம்பித்தனர்.

அவனது அலட்சிய நடையைப் பார்த்து சில பெண்கள் அவனைச் சிலாகித்துப் பேசுவதை உணர்ந்தவனாய், இன்னும் உல்லாசமாய் அந்தத் திருப்பத்தில் திரும்புகையில் தான் அவன் மேல் வந்து மோதியது அந்தப் பூப்பந்து.
திடீரெனத் தான் எதிர்பாராத கணத்தில் எதிரில் வந்த ஒருவனோடு மோதியதில் முதலில் சுலோச்சனா மிகவும் வெட்கமுற்றாள். தான் கொஞ்சம் நிதானித்துச் சென்றிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது.

தன் கைகளில் இருந்த புத்தகம் விழுந்து வைக்கவும் அதை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள். தவறு செய்து விட்டிருந்த பதட்டம் அவள் கண்களில் குடியிருந்தது. அவள் நின்று கொண்டிருந்த நிலையில் தன் எதிரில் நிற்பவன் சட்டை மட்டும் அவள் பார்வைக்கு அகப்பட்டது. தனக்கு அதிகமாய்ப் பழக்கமில்லாதவர்களோடு சட்டென்று பழகத் தடுமாறுபவள் என்பதால் அதற்கு மேல் நிமிர்ந்துப் பார்க்க வழக்கமான அவள் தயக்கம் தடுக்க, ‘ஸாரி ஸாரி’ என்று பலமுறை மன்னிப்பைக் கேட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

ஒட்டு மொத்தக் கல்லூரியே ஒரு திரைப்பட நாயகனைப் போல அவனை ஆராதித்துக் கொண்டிருக்க, தன்னைப் பொருட்படுத்தாமல், ஏன் நிமிர்ந்தும் பாராமல் சென்றவளை இமை தட்டாமல் பார்த்தான் பிரசன்னா.

அவளைப் பார்க்கையில் தன் அம்மாவைப் போன்ற அடக்க ஒடுக்கமான பெண் என மனதிற்குள் ஒரு பிம்பம் வந்து சென்றது, பெண்ணுக்கு தேவையான அச்சம், மடம், நாணம் அனைத்தும் அவளில் ஒரு சேரக் கண்டதில் மிகவும் உற்சாகமாகிப் போனான். அவளை இப்போதே மறுபடிப் பார்க்க வேண்டுமே என்று மனம் உந்தித்தள்ள,

‘ஏய் ஏய்’ என்றவாறு சுலோச்சனா பின்னால் அவன் செல்ல எத்தனிக்க, அதற்குள் அவள் புத்தகத்திற்குப் பதிவு செய்து விட்டு விரைந்து விட்டாள்.

“எனைப் பூப் போல் கொய்து விட்டாள்…
எனைப் பூப் போல் கொய்து விட்டாள்”

சமய சந்தர்ப்பம் உணராது அவனது கைப்பேசி சப்தமாய் இசைக்க நூலகர் போனை சைலண்டில் போட சொல்லி அவனை எச்சரிக்கை காண்பிக்கவும், உடனே போனை சைலண்டில் போட்டவன் நூலகத்தினின்று வெளியே சென்று கைப்பேசியை இயக்கி தன்னை அழைத்திருந்த அம்மாவிற்கு அழைப்பு விடுத்திருந்தான்.

‘என்னடா பிரசன்னா எப்படி இருக்க?’

‘நல்லாயிருக்கேன் அம்மா, நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா எப்படி இருக்காங்க?’

‘நல்லா இருக்கோம்டா… வேளாவேளைக்கு நல்லா சாப்பிடற இல்ல…?’

‘ஆமாம்மா’

‘படிப்பு எப்படிப் போகுது?…’

‘அது வழக்கம் போல நல்லாவே போகுது, நீங்க சொல்லுங்க சண்டிகர்லாம் எப்படி இருக்கு?’

‘விட்ரா… என்ன இருந்தாலும், நம்ம ஊர் போல வருமா? உன்னை வேற விட்டுட்டு ஊர் ஊரா உன் அப்பா கூட அலையறேன். மனசு கஷ்டமாதான் இருக்கு.’

‘அதுக்கென்னமா? உங்க பையன் இனி சின்னப் பையனா என்ன? ஐபிஎஸ் ஆனா நானும் தான் ஊர் ஊராதான் அலையணும். இப்ப நீங்க அப்பா பின்னாடி அலையறது போல உங்க மருமக என் கூட அலைவா? எப்படி?’

‘ஏண்டா டேய் மருமக பேச்சுல்லாம் இன்னிக்கு வருது? மருமக பார்த்து கீர்த்து வச்சிட்டியா? ம்ம்…’

‘கிடைச்ச மாதிரிதான்மா… கொஞ்ச நாள்ல கன்பர்ம் செய்றேன்.’

‘டேய் ரொம்ப ஓவரா போறடா’ விளையாட்டாய் தாய் கடியவே.

‘போங்கம்மா நீங்க மட்டும் அப்பா கூட ஊர் ஊரா போவீங்களாம், நான் மட்டும் தனியா இருக்கிறதா?’

‘அடிங்க…’

‘ஹா ஹா…’

சிரித்துக் கொண்டே இருவரும் உரையாடலை நிறைவு செய்தனர். அன்று இரவில் பிரசன்னா தன் அறையில் ஒரு வகையான பரபரப்பான உணர்வுக்குள் ஆட்பட்டிருந்தான். தன் மீது அவள் மோதிய இடத்தை, தன் நெஞ்சை இதமாய் வருடிக் கொண்டு இருந்தான்.

‘என்னவளே அடி என்னவளே
என் இதயத்தைத் தொலைத்து விட்டேன்….’

ஹெட்போனில் உன்னிக்கிருஷ்ணன் உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.

அந்த மருண்ட பார்வை, மூக்குத்தி அணிந்த மூக்கு, துடித்துக் கொண்டிருந்த உதடுகள் அவளின் பதட்டம், அவள் பணிவாய் அவனிடம் சொல்லிய ஸாரி. அதில் இருந்த பயம் மற்றும் பவ்யம் அதை எண்ண எண்ண அவன் அவள் மேல் உன்மத்தமாகிக் கொண்டிருந்தான்.

இப்படிப் பொண்ணு தானடா நீ ஆசைப்பட்ட? இவளை விட்டா இது போல நீ தேடுனாலும் கிடைக்காதுடா? மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தான். தன் முகத்தைப் பாராமல் தவிர்த்த, அவளை எப்படியாவது தன்னைப் பார்த்து விட வைக்க வேண்டுமென்ற பிடிவாதம் எழ தூக்கத்தில் அமிழ்ந்தான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here