4. நாயகி

0
822
Naayagi Jansi Rani

அத்தியாயம் 4

கல்லூரி வகுப்பு இப்போது ப்ரீ ஹவர்… தோழியர் இளமைத் துள்ளலும், உற்சாகமுமாக அமர்ந்திருந்தனர். வகுப்பில் கல்வி கற்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் மாணாக்கருக்கு ஜாலியோ ஜாலிதானே. வகுப்பில் மூன்று வரிசை பெஞ்சுகள் நீள நீளமாய்ப் போடப்பட்டிருந்தன. ஆண்களும் பெண்களும் தனித் தனியாக அமர வைக்கப் பட்டிருந்தனர்.

;ஏய் சுனிலைப் பாரேன்…’ சுலோச்சனாவை இடித்தாள் சுமதி அவளது பக்கத்து இருக்கைக்காரி.

‘ஏன் என்னாச்சு சுனிலுக்கு?’ கிசுகிசுப்பாய் கேட்க,

‘அவனுக்கென்ன ஆச்சு? ஒன்னுமாகலை பத்மினியை ஒரே லுக்கு…அதான்பா சைட்டடிக்கிரான்…’

கேட்டவளுக்குப் பல்ப் சட்டென்று எரிய… ஓஓ… அதுவரை அவன் ஏன் பெண்கள் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனப் புரியாதவளாய் அமர்ந்தவளுக்கு இப்போது காரணம் புரிந்தது.

அத்தனையும் புரிந்து கொள்ளக் கொஞ்ச நேரம் எடுத்தவள், அவளது ட்யூப்லைட் எரிந்து பிரகாசமாகியதும் புதுக் கேள்வி கேட்டாள்.

‘நம்ம சுனில் நல்ல பையனாச்சே? அவனா இப்படி?’

‘ஏன்டி நல்ல பையன் காதலிக்கக் கூடாதா?;

கேட்ட சுமதிக்குப் பதில் சொல்ல முடியாமல் ங்கே எனப் பதிலுக்கு முழித்து வைத்தாள்.பின்னாலிருந்து ஈஸ்வரி தலையை முன் நீட்டினாள்.

‘என்னடி ஒரே பையனுங்க பக்கம் பார்வை?’

பின்னால் தலை சாய்த்து சுமதி தன்னுடைய ஆகாசவாணியைப் பரப்ப, ஈஸ்வரிக்குப் பக்கத்தில் இருந்த லிஸி அதைக் கேட்டுக் கமுக்கமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

இந்த செய்தி இதே வேகத்தில் சில நொடிகளில் வகுப்பு முழுவதும் பரவி விடும் என்பதில் அங்கு எவருக்கும் சந்தேகமே இல்லை.

‘விடுங்கடி அந்தச் சுனில் கதையை… நானே அந்தக் கல்லுப்பு நம்ம ரவியை உராய்ஞ்சுட்டு இருக்கிறதைப் பார்த்து பொறுக்க முடியாம இருக்கேன்…’
பொருமினாள் ஈஸ்வரி

‘யாருடி?’

‘அதான் அந்தக் கல்லுப்பனா… பொண்ணாடி இவ? ரவி உட்கார்ந்திருக்கிற சீட் பின்னாடி வலுக்கட்டாயமா உக்காந்துக்கிட்டு எப்பப் பாரு அவன் காதைக் கடிக்கிறா? அவன் என் சைட்டுடி’, முகம் கோணினாள்.

ரவி க்ளாஸ் டாப்பர், நல்ல அழகனும் கூட. வகுப்பில் உயரமானவன். நட்புணர்வோடு பழகுபவன். கல்பனா கொஞ்சம் மேல் தட்டுப் பெண். அவள் முடிவெட்டும், நடை உடை ஸ்டைலும் மற்ற பெண்களுக்கு அவள் மேல் பொறாமை உணர்வை உண்டாக்கி இருந்தன.

‘உனக்கு ஆசைன்னா நீயும் போய்ப் பேச வேண்டியதுதானே? ’ இது சுமதி

‘அவளுக்குப் போய்ப் பேச வெட்கமாயிருக்காம்…’ லிஸி சிரித்தாள்.

‘ஏய் உன் கிட்ட எனக்கு வெட்கமாயிருக்குன்னு நான் சொன்னேனாடி?’ சண்டை மேகம் மூழும் முன்னர் அடுத்தப் பீரியடுக்கான பெல் அடித்தது.

‘சோ ஸ்டூடன்ஸ்… ஹேவ் யூ டன் வித் யெஸ்டர்டேஸ் லெஸ்ஸன்ஸ்?’

அடுத்து ஆரம்பித்ததன வகுப்புகள். தமிழ் வழியில் கற்ற சுலோச்சனாவிற்கு ஆங்கில வழிப் பாடங்கள் மிகவும் சவாலாகவே இருந்தன. ஆரம்பக் காலத்தில் இன்னும் வெகுவாகத் திணறிப் போயிருந்தாள். அதற்காகவே, அடிக்கடி நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வாசித்துப் பயிற்சி பெறுவதை வழக்கமாக வைத்திருந்தாள்.அவள் மனதில் இருந்த ஒரே விஷயம் படிப்பை முடித்துத் தன் சொந்தக் காலில் நிற்பது.

என்னதான் மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்பதைப் போல ‘காதல் கீதல் என்பதே கூடாது’ என அவள் தந்தை அவளைப் பலமுறை அதையே சொல்லித் தூண்டி இருந்தாலும் அவள் மனதிற்குள்ளாக அந்தச் சிந்தனைகள் துளியும் இல்லை, தன் அன்னையைப் போன்று அடிமை வாழ்க்கையை வாழ்வது குறித்து அவளால் ஒரு பொழுதும் கூட நினைத்தும் பார்க்க முடியவில்லை.

தன்னுடைய சுய மரியாதையைக் கட்டிக் காக்க தேவையானது மரியாதையான ஒரு வேலை, அதற்காகவே அத்தனை பாடுகளும்… எனவே, வகுப்பில் தனக்குப் புரியாத ஆங்கில வார்த்தைகளை ஒவ்வொன்றாய் கோடிட்டு வைத்துக் கொண்டாள். நூலகத்தின் பெரிய டிக்ஷனரியில் தேடிப் பார்க்கும் முடிவில் இருந்தாள்.

அடுத்தடுத்து வகுப்புகள் நடந்து முடிந்தன.

வழக்கமாக அங்கு இறுதி வகுப்பிற்கடுத்து நடக்கும் ப்ரேயருக்காக எழுந்து நின்றனர். ப்ரேயர் முடியவும், ஒவ்வொருவராய் தங்கள் பைகளை எடுத்து வகுப்பை விட்டு வெளியேறிக் கொண்டிருக்க,

‘சரிடி பாய்’ என்று சுமதியிடம் சொல்லி நகர்ந்தவள் மேலும் செல்ல முடியாதவளாய் எதனாலோ கட்டி இழுக்கப் பட்டவள் போல ஸ்ப்ரிங்க் போலத் தன் அருகில் நிற்கும் சுமதியை நெருங்கி வந்து இடித்து நிற்கவும், பின்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரி க்ளுக்கெனக் கைக் கொட்டிச் சிரித்தாள்.

ப்ரேயர் நேரத்தில் தனக்கு முன் சீட்டில் வெகு சிரத்தையாய் நின்று கொண்டிருந்த சுலோச்சனா, சுமதி இருவரின் துப்பட்டாக்களையும் பின்னாலிருந்து முடிச்சிட்டு வைத்து விட்டிருந்தாள் ஈஸ்வரி. அதனால் தான் அத்தனை குழப்பமும்.

‘ப்ரேயர் டைம்ல செய்யற வேலையாடி இது?’ ஈஸ்வரி மீது கொலைவெறியில் இருந்தாள் சுமதி.

‘என்ன வால்தனம்… இருடி வரேன்’

என்றவளாய் தன்னையும் சுமதியையும் கட்டிப் போட்டிருந்ததைப் பிரித்துக் கொண்டே பொய்யாய் கோபித்தாள் சுலோச்சனா. ஒருவகையில் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன.

‘எருமை மாடே இதை நீதான் இப்ப பிரிச்சு விடற இல்ல உன் துப்பட்டாவை பிடுங்கிருவேன்’, எவ்வளவு முயன்றும் இறுக்கமாய் இருந்த முடிச்சை அவிழ்க்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சந்திரமுகியாகிக் கொண்டு இருந்தாள் சுமதி.

‘இவளுக பெரிய பக்திப் பழங்கள். துணியில ஒருத்தி முடிச்சுப் போடறதுக் கூடத் தெரியாம ப்ரேயர் செய்றாளுங்களாம்’

நக்கலடித்துக் கொண்டே ஈஸ்வரி துப்பட்டாக்களைப் பிரித்து விடவும், சுதாரிக்கும் முன்பு இருவரிடமும் ஓரிரு கும்மாங்குத்துக்கள் வாங்கினாள்.

அடித்துப் பிடித்துத் தங்கள் வகுப்பின் வாயில் வரை சென்றவள். உள்ளே இருந்தவர்களிடம் பொண்ணுங்களாடி நீங்க, பேயிங்க எனச் சொல்லிவிட்டு ஓட, அவளை அடிப்பதற்காகப் பின் தொடர்ந்து சுமதியும் ஓடினாள்.

நடந்த களேபரத்தில் மெதுவாகவே தன் பையை எடுத்துக் கொண்டு சிரித்த முகமாக அமைதியாய் வெளியேறினாள் சுலோச்சனா.

காரிடாரில் அவள் வகுப்பினர் ஒருவரும் இல்லாதிருக்க, அக்கம் பக்கம் பாராமல் தன் வழிப் பார்த்து நடந்தவளை எதிர்பார்த்தவனாக எதிரில் சிரித்த முகமாய் நின்று கொண்டிருந்தான் பிரசன்னா.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here