5. நாயகி

0
951
Naayagi Jansi Rani

‘சுலோ ஒரு நிமிஷம்…’

‘என்னது சுலோவா? என்னைச் சுருக்கமாகப் பெயர் சொல்லி அழைக்கும் இவன் யாராக இருக்கும்?’

என்றெண்ணியவாறு திரும்பினாள். நெட்டையாய் வசீகரமாய் நின்றுக் கொண்டிருப்பவனைத் தான் முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை என மூளை நினைவுறுத்தியது.

‘நான் தர்ட் இயர் பிரசன்னா’ அவன் வலக் கையை நீட்ட…

சட்டென்று கைக்குலுக்கத் தோன்றாமல் ஒரு நொடி நின்றவள், அது மரியாதையாக இராது எனத் தோன்றியதும் தன்னையறியாமல் வலதுக் கையை அவன் பக்கமாய் நீட்ட, அவள் கையைப் பற்றியவன் அழுத்தமாய்க் கைக்குலுக்கி விடுவித்தான்.

‘சொல்லுங்க?’ என்றவளாய் அவனை எதிர் பார்வை பார்த்தவளிடம் ரசனையாய்…

‘என்ன சொல்லனுங்க?’

‘இல்ல நீங்க யாரு? எதுக்காக என்னைக் கூப்பிட்டீங்கன்னு?..’

அவனது ஆளுமையான குரல், அதில் தெறித்த கிண்டலில் இவளது குரல் தேய்ந்தது.அவள் பேச்சைக் கேட்டு அவன் உல்லாசமாய்ச் சிரித்தான். அவன் சிரிப்பு அசட்டுத்தனமாய் இல்லாமல் ஆண்மை மிக்கதாய் இருந்ததை அவளும் கவனிக்கத்தான் செய்தாள்.

‘நான் யாருன்னா? … அன்னிக்கு லைப்ரரில நீ கூட என் மேல வந்து மோதினியே? அதுதான் நான்’, எடுத்துக் கொடுத்தான் பிரசன்னா.

அன்றைக்கு நூலகத்தில் ஒருவர் ஒருவரோடு மோதிக் கொண்டதில் கவனிக்காமல் திரும்பிய சுலோச்சனாவின் பங்கு எந்த அளவுக்கு உண்டோ அந்த அளவுக்குக் கண்ணைப் பிடறியில் வைத்துக் கொண்டு வந்த பிரசன்னாவின் பங்கும் உண்டே? ஆனாலும் சுலோச்சனாவைப் பொறுத்தவரையில், தான் படித்து முடிக்கும் வரை எந்தப் பிரச்சனையிலும் மாட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாள். அதனால் அவன் அந்த நிகழ்வைக் குறித்துக் கூறியதும், ஒருவேளை அன்று தாம் மோதியதால் கோபத்தில் தன்னைத் தேடி வந்திருக்கின்றானோ எனப் பதறிப் போனாள்.

‘அச்சோ சார் நான் அன்னிக்கே ஸாரி சொல்லிட்டேனே? வேணும்னு இடிக்கலை சார், தெரியாமத்தான்… ஸாரி சார்.’

‘ஸ்டாப் இட், ஸ்டாப் இட் ஐ சே…’

…திருதிருவென முழித்தாள் சுலோச்சனா.

‘நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறதுக்காகத்தான் அன்றைக்கு நடந்த நிகழ்வைச் சொன்னேன். அதுக்கு ஏன் பதறுற?’

முயன்று அவனிடம் மென்மையாய் புன்னகைத்தாள் சுலோச்சனா.

‘சரி அப்புறம் எதுக்காக?’

எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? எனக் கேட்கிறாள் எனப் புரிந்தவன்.

‘ம்ம்… கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசணுமே…’

‘என் கிட்டேயா?’ விழிகள் விரியக் கேட்டாள் அவள்.

அவள் விழிகளுள் மற்றொரு முறை விழுந்து எழுந்தான் அவன்.

‘ஆமா…’

‘எனக்கு லைப்ரரி போய்ட்டு அப்படியே ஹாஸ்டல் போகணுமே? நேரமாகுதே? சீக்கிரம் சொல்லுங்களேன்’.

அவளோடு நட்பு பாராட்டி, காதல் சொல்லும் வாய்ப்பும் இல்லை பொறுமையும் இல்லை என்பதால் பட்டென்று உடைத்தான்.

‘அதொன்னுமில்லை, நான் உன்னை விரும்பறேன், அதாவது காதலிக்கிறேன்’.

பின்னால் இடக்கையில் மறைத்து வைத்திருந்த செக்கச் சிவந்திருந்த ரோஜாப்பூவை அவளிடம் நீட்டவும் அவள் மூளை செயலிழந்தாற் போல ஆனது.
ஒருவேளை விளையாட்டுக்கு அதாவது ராகிங்கிற்காகச் சொல்கிறானோ? என அவன் முகத்தையே பார்த்தவள். ஒன்றும் புரியாதவளாய்ப் பின்னால் இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தாள். மனம் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

‘ஸாரி தப்பா நினைச்சுக்காதீங்க’ ( இப்போதெல்லாம் காதல் மறுப்பவர்களுக்கு நேரும் ஆசிட் அர்ச்சனைகள் அவள் மனதிற்குள்ளாக வலம் வந்தனவோ என்னவோ? ) தணிவாக ஆரம்பித்தாள்.

‘எனக்கு இந்தக் காதல் கீதல்லாம் விருப்பம் இல்லைங்க, என்னை விட்ருங்க…’ விருவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

நாலு எட்டு நடந்திருப்பாள், பின்னாலிருந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.வெடவெடவென நடுங்கிய அவள் நடுக்கத்தைத் தீர்க்க எண்ணி அவள் தலையில் வலதுக் கை வைத்து உரிமையாக வருட ஆரம்பித்தான். இடதுக்கை அவள் இடையைப் பற்றிக் கொண்டிருந்தது.
சுலோச்சனாவின் குரல் தொண்டைக்குள் அமிழ்ந்து போனது, வியர்வை ஊற்றுகள் பெருக்கெடுக்க நடுங்கலானாள். வலுக்கட்டாயமாய்த் தான் கொண்டு வந்த சிகப்பு ரோஜாவை அவள் முடியில் செருக, பயத்தின் பிடியில் மயங்கிச் சரிந்தாள் அவள்.

தன் கைப் பிடியினின்றும் நழுவி தொப்பென விழுந்தவளை தன் கைகளால் அள்ளக் குனியவும்.

‘சுலோச்சனா இன்னும் அங்க என்ன செஞ்சிட்டு இருக்கடி?’

படியில் ஏறியவாறு அவள் தோழியின் குரல் கேட்கவும் அவளை அப்படியே விட்டுவிட்டு வேறு வழியில் சென்றான் பிரசன்னா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here