6. நாயகி

0
786
Naayagi Jansi Rani

அத்தியாயம் 6

இரவின் மடி…எத்தனை சரியான வார்த்தைப் பதம்!

நாள் பொழுது முழுக்க உழைக்கும் வர்க்கம் சாயும் மடி இரவின் மடிதானே?

துன்ப துயரங்களை மறைத்துத் தன்னை வலியவனாய் காட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன் இயலாமைகளோடு மனம் புழுங்குவது இரவின் மடியில் தானே?

அன்று கல்லூரியினின்று திரும்பும் போது நிகழ்ந்தவைகளை உள்ளுக்குள்ளேயே வைத்து மருகி அழுதுக் கொண்டிருந்தாள் சுலோச்சனா.
தன்னை ஒருவன் தொடவும் அவனை எதிர்க்காமல் கோழைத்தனமாய் மயங்கி விழுந்தது குறித்து எண்ணும் போதே அவள் மனதில் கத்தியைச் செருகியது போன்ற துன்பம் எழுந்தது. தன்னைத்தானே சாடிக் கொண்டவளாய் அழுதுக் கொண்டிருந்தாள்.

அன்று சனிக்கிழமை இரவு, அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. ஆதலால் சீக்கிரம் எழ வேண்டிய அவசரம் இல்லையென்று ரேவதி அடுத்த அறையில் ஏதோ விளையாட்டில் பங்கு கொள்ளச் சென்று விட்டிருந்தாள். தான் அழைத்தாலும் சுலோச்சனா வரப் போவதில்லை என்று தெரிந்ததால் அவளை அழைக்காமலே அவள் சென்றுவிட்டிருந்தாள். அதனால் தான் அறையில் தனியளாக இவளுக்கு மனம் விட்டு அழ வாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ந்தவைகளில் தன் தவறு எதுவும் இல்லை எனத் தெரிந்தாலும் கூட அந்த நிகழ்வு தன் தகப்பனின் காதுக்குச் சென்று விட்டிருந்தால், தன்னைக் குற்றம் சாட்டி தன் படிப்பையே நிறுத்தி விடுவாரே? என்பதை எண்ணி அவள் கலங்கிப் போனாள்.

அவன் அந்தப் பிரசன்னா தன்னைச் சந்திக்க வந்ததும், சென்றதும் தன் தோழிக்குத் தெரியாது என்பது அப்போது அவளுக்கு மிகவும் ஆசுவாசமாய் இருந்தது. ஆனாலும், சுமதி அவளிடம்,

‘உனக்கு என்னாச்சு, எதுக்கு அங்க விழுந்துக் கிடந்த?’

என்று இவளை துளைத்தெடுத்து விட்டாள். ஒருவேளை அவளுக்குப் பசியாகத்தான் இருக்கும் எனும் முடிவுக்கும் அவளே வந்து விட்டாள். அப்போது அக்கம் பக்கம் யாருமில்லாததால் தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீரை முகத்தில் தெளித்து அவளே தான் சுலோச்சனாவை எழுப்பி விட்டிருந்தாள்.

அடுத்து என்ன? என யோசிக்கும் போது முதலில் தனக்கு நிகழ்ந்ததை யாருக்கும் சொல்லாமல் மறைக்கச் சுலோச்சனா முடிவு செய்தாள். எப்படியும் அவன் மூன்றாம் ஆண்டு மாணவன் என்பதால் இன்னும் சில மாதங்கள் தான் அவன் கல்லூரி வருவானாக இருக்கும். அதன் பின்னர் அவன் தொல்லை இராது. நாளாவட்டத்தில் அந்தப் பிரசன்னாவின் பிரச்சனை சரியாகி விடும். அதுவரைக்கும் அவன் கண்களில் படாமலே தப்பித்துக் கொள்ள வேண்டும் என அவள் மனதில் தீர்மானம் செய்து கொண்டாள்.

அவள் தீர்மானம் சரி வருமா?!

கண்கள் வீங்கியவளாய் அடுத்த நாள் கல்லூரிக்கு வந்தவள் இங்கும் அங்குமாய்ப் பார்வையைச் சுழற்றினாள். தனக்குச் சில மாதங்களாய் கிடைத்த சுதந்திரத்தை மீண்டும் இழந்து விட்டதைப் போன்றே அவளுக்குத் தோன்றியது. தூரத்தே பிரசன்னா நிற்பதைக் கண்டவள் அவன் அவளைக் காணும் முன்னதாகச் செடி கொடிகளில் புகுந்து வேறு வழியாகத் தன் வகுப்பை அடைந்தாள்.

ஆனால் பிரசன்னா இவள் நினைத்தற்கும் மாறாக நடந்து கொண்டான். முதல் மாடியிலிருக்கும் முதலாம் வகுப்பு மாணவர்கள் பகுதிக்கு மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வருவதற்கான எந்தத் தேவைகளும் இல்லை. ஆயினும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஓரிரு முறைகள் இவளது வகுப்பைச் சுற்றிக் கொண்டு வந்தான். சில நேரம் அவளது வகுப்பாசிரியருக்கு ஏதோ தகவல் சொல்ல வந்தவன் போல் வந்து ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துச் சென்றான்.

சுலோச்சனா அத்தனையும் உணர்ந்தாலும் ஒன்றும் தெரியாதது போல அமர்ந்திருந்தாள். தலையைக் குனிந்து பாட புத்தகத்திலேயே ஆழ்ந்தவள் போல அமைதியாக இருந்தாள். அவள் சிரிப்பில்லாமல் கலகலக்காமல் இருப்பதைக் கண்டு சுமதி குழம்பிப் போனாள்.

தன்னிடம் கேள்வியாய் கேட்டுத் துளைத்தவளுக்கு சுலோச்சனா ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்தாள்.

கல்லூரிப் பருவத்தில் உள்ள மாணாக்கர் நல்லது கெட்டது அறியாமல் செயல் படுகின்ற பருவத்தினர். அவள் பிரசன்னா குறித்துத் தெரிவித்தால் அது கல்லூரி முழுவதும் பரவி விட ஒரு மணி நேரம் கூட ஆகாது. எனவே, அவளுக்குத் தன் பிரச்சனைகளை எவரிடமும் வெளிப்படுத்திக் கொள்வதில் சற்றும் விருப்பம் இல்லை.

வகுப்பு முடிந்ததும் வழியில் நின்று கொண்டு இருந்த பிரசன்னாவை கவனியாதது போலக் கூட்டத்தோடு கூட்டமாய் விரைந்து ஹாஸ்டலுக்குச் சென்று விட்டாள்.

ஒருவேளை நூலகத்திற்குச் சென்றாலும் பின் வருவானோ? எனப் பயந்து அவள் அங்கும் சில நாட்களாகச் செல்லாமல் தவிர்த்து வந்தாள். அவளோடு இருப்பவர்கள் கல்லூரியில் படிப்பதோடு சரி, நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிக்கும் அளவிற்கு அதிகப்படியான படிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. பரீட்சைக்கு முன் தினம் தான் அவர்களுடைய அக்கறைகள் எல்லாம் மொத்தமாய் வெளிப்படும். அதனால் எப்போதுமே நூலகம் செல்கையில் அவளோடு யாரும் செல்வது இல்லை. இத்தனை நாள் இல்லாமல் திடீரென யாரையும் துணைக்கு வரச்சொல்லி அழைத்தாலும், அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடியாது என்ன செய்வது எனச் சிந்தனையில் ஆழ்ந்தாள் சுலோச்சனா.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here