7. நாயகி

0
813
Naayagi Jansi Rani

அத்தியாயம் 7

வகுப்பில் கவனம் இல்லாமல் யோசனையில் அமர்ந்திருந்தவளை உலுப்பினாள் சுமதி.

‘சுமதி என்னடி?’ சலிப்பாக ஒலித்தது சுலோச்சனாவின் குரல்.

‘ஏய்…’

கிசுகிசுப்பாகப் பேசினாள் சுமதி.

‘சுனில் பத்மினியிடம் காதலை தெரிவித்து விட்டானாம் உனக்குத் தெரியுமா?’
என்று அவளிடம் சொன்னாள் .

‘என்னது?’

அதிர்ந்து அவளைப் பார்த்தாள் சுலோச்சனா. அவளுக்குச் சுனில் இப்படிச் செய்வானா? என்பது குறித்து ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவன் மிகவும் மென்மையாகப் பேசும் அமைதியான பையன். அவனோடு பேசுகையில் எப்போதுமே ஒரு சகோதர உணர்வு அவளுக்கு ஏற்படுவது உண்டு.

காதலை சொல்வது என்றதும் அந்தப் பிரசன்னா தன்னிடம் காதலை சொன்னதும், நடந்து கொண்ட முறையும் அவளுக்கு ஞாபகம் வந்தது.
ஒருவேளை இவனும் அப்படித்தான் சொல்லி இருப்பானோ? என்று அவளுக்கு மனதில் தவறாகப் பட்டது. ஒருவர் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்துவது எந்த விதத்திலும் தவறு இல்லை. ஆனால், தான் விருப்பம் தெரிவித்த உடன் அதற்கு உடனேயே எதிரிலிருப்பவர் உடன்பட வேண்டும் என்கின்ற எண்ணம் ஒரு வகையான அடக்குமுறை அல்லது அதிகாரம் என்று அவளுக்குத் தோன்றிற்று.

இத்தனையையும் மனதில் நினைத்து இருந்தாலும் வாய்த் தன்னால் கேள்விக் கேட்டது.

‘அதற்குப் பத்மினி என்ன சொன்னாளாம்?’ என்று கேட்டாள்.

‘பத்மினி வீட்டில் ஏற்கனவே அவளுக்கு உறவில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார்களாம். அதனால், அவள் அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாளாம்’…

‘ஓ …’

அதைக்கேட்ட முதல் அவன் தேவதாஸைப் போல அலைந்து கொண்டு இருக்கின்றான் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவன் முகத்தைக் கொஞ்சம் பாரேன் அவன் எப்படிச் சோகமாக இருக்கிறான்.

உண்மையாகவே சுனிலின் முகம் மிகவும் வருத்தத்தோடு இருந்தது. படிக்கின்ற வயதில் இந்தக் காதல் கீதல் எல்லாம் தேவையா? உற்சாகமான ஒரு பையனை ஒரு நாளில் இந்தக் காதல் முடக்கிப் போட்டுவிட்டதே? என்று எண்ணிக் கொண்டாள்.

அன்று சுமதியை தன்னோடு அழைத்துக்கொண்டு நூலகத்திற்குச் சென்று புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துத் தேவையான புத்தகங்களை உடனடியாக எடுத்து விட்டு அவசர அவசரமாக ஹாஸ்டலுக்குத் திரும்பிவிட்டாள். ஆனால், எவ்வளவு நாட்கள் தான் பிரசன்னாவிடமிருந்து அவள் தப்பிக்க முடியும்?

ஃபீஸ் கட்டிவிட்டு திரும்பி வருகையில் கூட்டமில்லாத இடத்தில் பிரசன்னாவிடம் மறுபடி சுலோச்சனா மாட்டினாள் . ஆனால் இந்த முறை அவள் மயங்கி விழவில்லை.

‘ஏய் என்ன ஒருத்தன் ப்ரபோஸ் பண்ணிட்டு நாயா உன் பின்ன அலையறான். நீ என்னன்னா கையில அகப்படாம திரியற? என்ன திமிரா?’ பல்லைக் கடித்தான் அவன்.

தன்னை ஒருத்தி மறுப்பதா? ம்ம் என்று சொல்லும் முன் மடியில் கிடந்திருக்க வேண்டாமா? எனும் எண்ணம் விஷம் போல அவன் மூளையை அரித்துக் கொண்டிருந்தது. அவள் மறுப்பைச் சரிக்கட்டும் வரைக்கும் தன் காதலை வெளியில் தெரிய விட அவனும் விரும்பவில்லை. அவனை ஒருத்தி மறுத்து விட்டாள் என அடுத்தவர் அறிய நேர்வது அவனுக்கல்லவா அவமானம். அவள் எப்படியாவது தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என்ற மித்மிஞ்சிய நம்பிக்கை அவளிடம் இருந்தது. சும்மா பிகு செய்கிறாள் என்பதே சுலோச்சனா குறித்த அவளது எண்ணம்.

‘இங்க பாருங்க பிரசன்னா, நீங்க அன்னிக்கு என் கிட்ட நடந்துக்கிட்டதெல்லாம் ரொம்பவே அதிகம். போனாப் போகட்டும் பிரச்சனை வேணான்னு ஒதுங்கி போயிட்டு இருக்கிறேன்னு நீங்க அதிகமா நடந்துக்க வேணாம்’, விரலை நீட்டிப் பேசினாள் அவள்.

என்னை இவள் விரல் நீட்டிப் பேசுவதா? சட்டெனக் கோபத்தில் கிளர்ந்தன அவனது செல்கள். அவளைத் தொடும் நெருக்கத்தில் கிட்டே வர தீச்சுட்டார் போலத் திடுக்கிட்டு அவள் நாலெட்டுக்கள் பின் எடுத்து வைத்தாள் .

‘இந்த தொடற வேலைலாம் என் கிட்ட வேணாம். பிரின்ஸி கிட்ட கம்ப்ளெயிண்ட் செஞ்சிடுவேன்’.

‘என்னடி ஓவரா பேசற? என்னை விட்டா உன்னை யார் தொட முடியும்?’

‘கேட்கவே நாராசமா இருக்கு, படிக்க வந்திருக்கப் பொண்ணுக்கிட்ட வாலாட்டுனா போலீஸ் வரைக்கும் போவேன். பின்னே என்ன நடக்கும்னு யோசிச்சுக்கோங்க’.

தன்னை மீறிய கோபத்தில் அவள் வெடித்து விட்டாள். பெற்றவர்களிடம் வாழ்நாளெல்லாம் போராடி படிக்க வந்தால் இங்கேயும் பிரச்சனை என்றால் என்னதான் செய்வது? அதுவும் அவளைத் தொடும் அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தந்தது யார்?

ஏதோ தைரியமாகப் பேசிவிட்டாளே தவிர உடம்பெல்லாம் வெடவெடத்து விட்டது. நா வறண்டு போய்த் தலை சுற்றுவது போலிருக்க அங்கிருந்து உடனே க்ளாஸீக்குப் போய் அமர வேண்டும் என்று நினைத்திருக்கச் சுனில் அவள் வழியை மறித்தான்.

‘சுலோ….’

‘ஹாய் சுனில்…’ தீனமாக ஒலித்தது அவள் குரல்.

‘ப்ரீ பீரியட் தான், இப்ப எதுக்கு க்ளாஸ் போற? சரி இப்ப அங்கே எங்கே போயிட்டு வந்திட்டு இருக்க?’ அவன் முகம் பளீரிட்டது.

‘பீஸ் கட்ட இப்பதான் கூட்டம் இருக்காது அதனாலப் போயிட்டு வரேன்…’

‘ஓ…’

சில நாட்களாகச் சோகச் சித்திரமாக இருந்த அவன் முகத்தில் இப்போது ஒளியின் கீற்று… எப்படியென்று யோசித்தாள் சுலோச்சனா.

‘என்னாச்சுச் சுனில்? முகமே பல்ப் போட்ட மாதிரி ஆகிருச்சு. நீ இப்படியே இரு அப்பதான் நல்லாயிருக்கு’ தானாகவே அவள் குரலில் உற்சாகம் வந்து சேர்ந்தது.

‘எனக்கு ஒரு குட் நியூஸ்…’

‘என்னது அது?’

‘பத்மினி என்கிட்ட பேசினா, என்னை உரிமையா அவளோட பிக்னிக் பீஸ் கட்டச் சொன்னாள். இப்ப ப்ரெண்ட்ஸா இருப்போம்னுதான் சொல்லியிருக்கா. ஆனா, நிச்சயமா அவ மனசை மாத்தி அவ குடும்பத்தையும் மனசை மாற்றிடுவேன். அவதான் என்னோட வாழ்க்கை எல்லாமே’, தன் மனதில் இருப்பதைக் கொட்ட ஆள் கிடைக்காமல் அவளிடம் கொட்டிக் கொண்டு இருந்தான்.

பத்மினி குறித்து அவள் கொஞ்சம் அறிந்து வைத்திருந்தாள். அவளுக்கு வீட்டு வறுமைக்கும் மீறிய ஆசைகள் அதிகம் டிபனுக்காக ஒரு சிலரை நட்பு கொண்டு அவர்களோடு சேர்ந்து சாப்பிடுவது உண்டு. கூழைக் கும்பிடுப் போட்டு யாரிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்வது அவளது வேலை.
சுற்றுலாவின் கட்டணம் ஆயிரக்கணக்கில் இருக்கச் சுலோச்சனா போலப் பணப்பிரச்சனைகள் உள்ளோர் பலரும் அதில் கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால், பத்மினியோ சுனிலின் காதலை ஒருபுறம் மறுத்து விட்டு, பணத்தேவைக்காக நட்பாக இருப்போம் என்று சொல்லி, அவன் செலவிலேயே சுற்றுலாச் செல்லும் அளவிற்குத் துணிந்து விட்டாளே?

இப்போது பத்மினி குறித்துச் சுனிலிடம் குறை கூறினால் அவன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. என்றாவது ஒரு நாள் அவள் குணம் குறித்துத் தெரிய வந்தால் இவன் என்ன ஆவான்? அப்போது மறுபடியும் இவன் மனம் உடைந்து விடுவானே? மனதிற்குள் வேதனையாக இருந்தாலும் அவனுக்காகச் சிரித்துப் பேசி காதல் வயப்பட்டவனின் அத்தனை கிறுக்குத்தனமான பிதற்றல்களையும் கேட்டு விட்டே வகுப்பிற்குத் திரும்பினாள்.

இவனுடன் பேசியதும் நல்லதுதான் இருந்த மன அழுத்தம் தீர்ந்து விட்டதே! என எண்ணும் போதே வகுப்பில் சலசலப்பு. சுனில் முகம் கன்றிப் போயிருந்தது.

‘வாடா அதெப்படி சீனியரா இருந்தாலும் உன்னை அடிக்கலாம்? வா என்னன்னு போய்க் கேட்கலாம்?’, எனச் சொல்ல அமளி துமளியாகி அடங்கியது.

‘இல்லடா என் தப்புதான் மேல மோதிட்டேன், அதனால கோபம் வந்துடுச்சு, சரி விடுங்க…’

அமைதியான சுபாவமாக இருந்ததால் அவன் பொறுத்துப் போனான்.
யாரந்த சீனியர் என்று தெரிய வந்த போது தான் சுலோ திடுக்கிட்டுப் போனாள் அது பிரசன்னா.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here