9. நாயகி

0
896
Naayagi Jansi Rani

அத்தியாயம் 9

அவனது இந்த அடாவடித்தனத்தை அவளால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனை அடிக்க முயற்சி செய்யவும் கைகள் அவன் வசமானது. அவனை உதறித்தள்ள எத்தனையோ முயன்றும் அவளால் அவனை உதறித்தள்ள முடியவில்லை. தன்னுடைய தொடர் முயற்சிகளின் தோல்வியால் அவள் கண்களில் நீர் பெருகியது.

அவனிடமிருந்து விடுதலைப் பெற்று உலகமே வெறுத்தவளாக வகுப்பறை நோக்கிச் சென்றவளுக்குத் தன் பின்னே ஒரு சிலர் கைத்தட்டும் சத்தம் கேட்டது. மது ப்ரேமியின் பாராட்டும் சிரிப்பதுவும் கூட அவளுக்குக் கேட்டது.
இப்படிப் பாராட்டி பாராட்டித் தானே தப்பு எல்லாவற்றுக்கும் இரத்தினக் கம்பள வரவேற்பு கொடுத்து வச்சிருக்கிறீங்க. இதுவே உனக்கு நடந்திருந்தால் தெரியும் என்று மதுப்ரேமியை குறித்து மனதிற்குள் ஆவேசமாக எண்ணிக் கொண்டாள்.

இப்போது சுலோச்சனா மிக அதிகமாய் அவமானமாக உணர்ந்தாள். அந்தப் பூங்கொத்தை தவறி விட்டதற்காக மதுப்ரேமி அவளைத் திட்டிக்கொண்டே சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எப்படித்தான் இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

தன் குடும்பத்தினருடைய ஆதரவு இல்லாத நிலையில் எந்த முடிவையும் எடுக்க அவளால் முடியவில்லை. இன்னும் சில மாதங்கள்தானே என்று அவள் அவனிடமிருந்து விலகி இருந்தாலும் அவனது இம்சைகள் தொடர்ந்து வருவது அவள் மனதை தளர்த்திக் கொண்டு இருந்தது.

அவள் தோளில் கை விழுந்தது. இன்னொரு கை கண்ணீரை துடைத்தது.
அவளைத் தாண்டிப் போய்ச் சுமதி உட்கார இந்தப் பக்கம் ஈஸ்வரி அமர்ந்தாள் இருவரும் அவளை அணைத்துக் கொண்டனர்.

‘ஸாரிடி’
இருவரும் கூறியவர்கள். எதிரில் நின்ற லிஸியும் வருத்தமாய் நின்றாள்.

‘அவன் நல்ல பையன்னு தான் நாங்களும் அவனுக்குச் சப்போர்ட் செஞ்சோம். நீ இவ்வளவு அழறன்னா நிச்சயம் உனக்குப் பிடிக்கலைன்னு தெரியுது. அதுவும் அவன் செஞ்சது ரொம்ப ஓவர். நாம பிரின்ஸி கிட்ட போகலாமா?’

கண்ணீரோடு வேண்டாம் எனத் தலையசைத்தாள் அவள்.

‘எங்க அப்பாவை கூப்பிட்டு விட்டாங்கன்னா நான் டி சி வாங்கிட்டு போய்ட வேண்டியது தான். உடனே யாரையாவது பிடிச்சி கட்டி வச்சிருவாங்க. என்னதான் ஆணோட தப்பா இருந்தாலும், இவ பொம்பளையா அடக்கமா இருக்காம திரிஞ்சிருப்பா, மேனா மினுக்கித்தனம் பண்ணியிருப்பான்னு என் வீட்ல என் மேலயேதான் தப்பு சொல்வாங்க…’ கண்ணீர் தெரித்தது.

அவள் கண்ணீரை மீண்டும் துடைத்தாள் சுமதி…. ‘அழாதே டி’

‘எனக்கு எப்படியாவது படிச்சு முடிச்சி என் சொந்த கால்ல நிக்கணும்டி…’
அழுகையில் தேம்பினாள்.

‘சரி அப்ப என்னதான் செய்யறதா நினைச்சிருக்க?’

‘இன்னும் ரெண்டு மாசம் தானே அவன் கண்ல படாம இருந்திடலாம்னு நினைச்சேன். அவன் படிப்பு முடிஞ்சு போயிட்டான்னா எனக்குப் பிரச்சனை இல்லில்ல?’

‘ம்ம்’ பெருமூச்செழுந்தது ஈஸ்வரிக்கு…

‘பொம்பளைப் பொறப்பு கேவலமான பொறப்புடி…யார் தப்பு செஞ்சாலும், தப்பு நம்ம தலையில தான் விடியும்.
சரி நீ கவலைப் படாதே, நாங்க உனக்குச் சப்போர்ட்டா இருக்கிறோம்.’

‘இப்ப எதுக்கு அழுது கரையுற நீ?’ அதட்டினாள் லிஸி…

‘எதுக்கு அவன் உன்னைக் கிஸ் செஞ்சதுக்கா?…’

‘இல்ல…’

‘பின்ன?’ கடுப்பாக இது இப்போது ஈஸ்வரி…

‘அவன் கிட்டேயிருந்து என்னை நானே காப்பத்திக்க முடியலை, அவனோட வலுவுக்கு முன்னாடி நான் தோத்துப் போயிட்டேன்ல. என்னோட இயலாமையை நினைச்சு எனக்கு அழுகை வருது. கேவலமா இருக்கு…’

கேவினாள்.

‘சரி சரி அழுகாச்சிப் பாப்பா, போய் முகத்தைக் கழுவிட்டு வா…ஒரு காட்டு மாடு வந்து உராய்ஞ்சுட்டு போச்சுன்னு நினைச்சுக்கோ விடு…நல்லா தேச்சுக் கழுவிடு சரியாப் போகும்’,

முகம் கழுவி வந்தவளுக்கு வகுப்பில் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லவும் வகுப்பின் மணி அடித்தது. மெல்ல மெல்ல தன்னை வருத்திய நிகழ்வுகளினின்று வெளி வந்தாள் சுலோச்சனா.

நாட்கள் கடந்தன, பிரசன்னா நாளுக்கு நாள் சுலோச்சனாவின் புறக்கணிப்பைக் கண்டு வெகுண்டு கொண்டு இருந்தான். அன்றைய முத்த சம்பவத்திற்குப் பிறகு மனம் மாறுவாள் என்று பார்த்தால் அவளோ அவனுக்கு டிமிக்கி காட்டிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய தோழிகளும் அவளுக்கு அரணாக மாறி இருக்க அவனால் அவளை எளிதாக அணுக முடிவதில்லை.

இதோ அவனது ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிக்கப் போகின்றது. இன்னும் சில நாட்களில் இந்தக் கல்லூரிக்கு அவனால் வழக்கம் போல வர முடியாமல் போகும். அப்படி அவள் தன் கண்பார்வையில் இல்லாத நேரம் யாரையாவது அவள் காதலித்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது? இவன் பெயர் என்னாவது? பிரசன்னா காதலித்தவள் அவனுக்கு நோ சொல்லிவிட்டு இன்னொருவனுக்கு யெஸ் சொல்வதா?

வழக்கம் போல மனம் புலம்பித் தள்ளியது. அவ்வளவு திமிரா உனக்கு? என் பின்னால எத்தனையோ பொண்ணுங்க வர, நான் உன் பின்னாலே வரேன்ல, உனக்கு அந்தத் திமிர்தான்.இதுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டியதுதான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here