1. நீயும் நானும்

0
1136
Neeyum Naanum
Neeyum Naanum Episode 1

அத்தியாயம் 1

காலை இளம்பொழுது சூரியன் சுறுசுறுப்பாய் புலர்ந்து இருந்தது. இதமான கால நிலைக்குப் பெயர் போன பெங்களுரில் இருந்த அந்த அபார்ட்மெண்டில் தன் காலை நேரப் பணிகளில் பரபரவெனப் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தார் மந்திரா. கணவருக்குச் சுடச்சுட அடைகளைப் பறிமாறியவர் அவர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல டிபன் பாக்ஸை அருகில் வைத்து உள்ளே செல்ல திரும்பினார். மனைவியைப் போக விடாமல் தடுத்து அவரது கைகளைப் பற்றிக் கொண்ட சிதம்பரம்,

“உக்காரு மந்தி, ஸாரி மந்து சேர்ந்து சாப்பிடலாம்” என்றார்.

கணவரின் வழக்கமான கிண்டல் அழைப்பில் உக்கிரமாய்ப் பார்த்தவர் கையில் இருந்த சட்டாப்பையை (தோசைக்கரண்டி) காட்டி மிரட்டி விட்டு உள்ளே சென்றார்.

சுடச்சுட கணவருக்குக் காஃபியை டேபிளில் வைத்தவர் மறுபடி சமையலறை நோக்கி திரும்பவும்,

“ஏய் விளையாட்டுக்குத்தானே சொன்னேன், அதுக்குள்ள கோச்சுகிட்டியா?”

“விடுங்க கையை, இவர் கிட்ட கோச்சுகிட்டாலும்… தலையில நாலு முடிதான் கருப்பா இருக்கு. இப்பதான் ரோமாஞ்சனம் கேட்குதாம் இவருக்கு ஹ்க்கும்”

‘உன் தலைமுடி இன்னும் வெளுக்கலைல்ல, அந்த நினைப்பில் நீ என்னைச் சொல்லத்தான் செய்வ, எனக்கு உன்னைக் கல்யாணம் கட்டிக்கிறப்போவே பித்த நரை உண்டு, தெரியும்ல. ஐயா எப்போவும் யூத்து தான்”

கணவரின் பதிலை கவனியாதவர் போலத் தன் கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டு தனக்கும் காஃபி கலந்து கொண்டு டேபிளில் அமர்ந்தவர் தனக்குத் தானே பரிமாற முயலவும், முந்திக் கொண்டு மனைவிக்குத் தானே பரிமாறினார் சிதம்பரம்.

அதன் பின் அவரும் உண்ண ஆரம்பித்தார்

“இன்னிக்கு சமையல் சூப்பரா இருக்கு” என்று சொல்லி மனைவியின் முகம் மலர வைத்தார்.

தன் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு புறப்படவும் வாயில் வரை இருவரும் நடக்க ஆரம்பித்தனர். தினமும் கணவரின் கார் வரையிலும் சென்று வழியனுப்புவது வழமையான ஒன்று.

மந்திராவுக்கு 18 வயதில் திருமணமாகி தற்போது 22 வயதில் மகள் இருந்தாலும் பொலிவிழக்காத முகம். காதலனாய் தாங்கும் கணவனின் அன்பில் மன நிம்மதியும், மலர்வும் அவர் தேகத்தை வாட விடாமல் வைத்திருந்தது.

பார்க்கிங்கிற்குச் செல்லும் நேரம் தம்பதியர் அளவளாவ ஆரம்பித்தனர்.

“என்னது? என்ன சொன்னீங்க? கல்யாணத்தப்போ உங்களுக்கு இருந்தது பித்த நரையா? பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவில்ல? என்ன செய்றது? என்னை விடவும் 10 வயசு பெரியவரை எனக்குக் கட்டி வச்சிட்டாங்க?

என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட “மே க்யா கரூ ராம் முஜே புட்டா மில் கயா” (ராமா நான் என்ன செய்ய எனக்குக் கிழவன் கிடைத்து விட்டானே?) பாட்டு எனக்கு டெடிகேட் பண்ணினாங்க. நான் அப்பவே சுதாரிச்சிருக்கணும்.” போலியாய் பெருமூச்சு விட,

‘எனக்கும் தான் என் அத்த மக சாகரிகாவை பார்க்கறேன்னு சொன்னாங்க, நான் கேட்டேனா என் விதி” தலையில் கை வைத்துக் காண்பித்தவரிடம் கோபப் பட முயன்று பக்கென்று சிரித்து வைத்தார் மந்திரா.

அது அவர்களுடைய வழக்கமான சீண்டல் பேச்சுக்களேயன்றி ஒருவரை ஒருவர் காயப் படுத்தவோ, காயப் படவோ மாட்டார்கள் அந்த அளவிற்கு அவர்களுக்குள் புரிதல் இருந்தது.

பாப்பாகிட்டே சொல்லிட்டியா மந்திரா…

இந்த வீக்கெண்ட் தானே?

ம்ம்ம்…

இப்ப சொல்லிடறேன்.

பை டா… விடைப்பெற்றுச் சென்றார் சிதம்பரம்.

அந்நேரம் கண்ணாடிக்கு முன்பாக அமர்ந்திருந்தாள் கோமளவல்லி எனும் கோமளா அலையஸ் கோமு. ஐந்தேகாலடி அழகுப் பதுமை. இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் டி ஷர்டில் இருந்தாள், அதன் மேல் அணியப் போகும் ஜாக்கெட் நாற்காலியில் வீற்றிருந்தது.

அவளது முகத்தில் அடிக்கடி அழகு நிலையம் சென்று வரும் அத்தனை அறிகுறிகளும் தெரிந்தன. கைகள் வழவழவென்றிருக்க அதில் லோஷன் பூசி மினுமினுக்க வைத்தாள். கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தவளின் கண்கள் கனவுகளைச் சுமந்திருந்தது.

ஏகப்பட்ட முகப்பூச்சுக்கள் அந்தப் பெரிய கண்ணாடியின் முன் இருந்த டேபிளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அத்தனையும் பார்க்க அழகாயும் இருந்தது. வித விதமான ப்ரெஷ்கள் அவள் முன்பாக இருந்தன. முதலில் பவுண்டேஷனை அதற்கான பிரஷ்ஷால் எடுத்து முகத்தில் பொட்டு பொட்டாகத் தீற்றியவள் அதனைச் சீராகத் தடவி விடத் தொடங்கினாள்.

திருப்தியானதும் அதன் மேல் பவுண்டேஷன் பவுடரை இன்னொரு பிரஷ்ஷால் தீற்றி முகத்தைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டாள். இனிதான் நிறங்களுக்கான வேலை.

கண் இமைகளைத் தாழ்த்தி வெளிர் நிற ஐ ஷேடோவை இரு புருவங்களுக்கும் கீழ் பகுதியில் அழகாய் தீற்றியவள். குனிந்து தன் உடையைக் கவனித்தாள், அன்று அவள் அணிந்திருந்த பிங்க் நிற மேலாடையின் ஷேடை கவனமாகத் தெரிந்தெடுத்துக் கண் இமைகளில் லயத்தோடு தீட்டினாள். வெளிர் நிற ஐ ஷேடோவுக்குக் கீழே அந்தப் பிங்க் நிறம் எடுப்பாய்த் தெரிந்தது. அதன் கீழே நீல நிற ஐ லைனரை எடுத்து இமைகளில் படாமல் தீட்டிக் கொண்டாள். கண்களுக்கான மேக் அப் ஏறத்தாழ ஓவர். மஸ்காராவை எடுத்து கண்களின் இமை முடிகளைச் சீர்ப் படுத்தினாள்.

சின்னஞ்ச்சிறு சீப்பை எடுத்துப் புருவங்களைச் சீர்ப்படுத்தினாள். கண்ணுக்கு மையிட்டு ஸ்மட்ஜ் செய்து கொண்டாள். இப்போது கன்னத்திற்குக் கவனம் திரும்பியது.

ரூஜ் பிரஷ்ஷை எடுத்து கீழிருந்து மேலாகச் சீராய் இரு கன்னங்களிலும் பரவ விட்டவள் அதைத் தன் சரும நிறத்தில் கலக்குமளவும் தொடர்ந்து கொண்டிருந்தாள். முகம் இன்னுமாய்ப் பளபளத்துக் கொண்டிருந்தது.

அடுத்ததாகத் தன் உதடுகளுக்குத் தாவின அவள் விரல்கள். லிப் லைனரால் வரி வடிவமாய்த் தன் இதழ்களுக்கு எல்லை இட்டவள் அவளுக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற லிப்ஸ்டிக் ப்ளேமிங்க் ப்யூஷா (Flaming Fuchsia) வை அந்த உதட்டு வடிவத்திற்குள்ளாக நிரப்பினாள்.

கண்ணாடியில் தன்னை இங்குமங்குமாகப் பார்த்து திருப்தியானாள். கண்களைக் கண்ணாடியில் குனிந்துப் பார்த்து தன் அலங்காரத்தில் எதுவும் பிசகவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு, இடுப்பைத் தொட முயற்சித்துக் கொண்டிருந்த குதிரை வால் முடியை அங்கும் இங்குமாகச் சிலுப்பிக் கொண்டு, ஹை ஹீல்ஸ் அணிந்து டக் டக்கெனத் தன் அறையினின்றும் வெளியே வந்தாள்.

அவள் இயற்கையாகவே வடிவான இதழ்களும், மூக்குமாய்ச் சற்று வெளிர் நிறச் சருமமுமாய் வெகு அழகாயிருந்தாள்

எதிரில் கதவை திறந்து வந்து கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து முகம் விரிய புன்னகைத்தாள்.

காலை வணக்கம் அம்மா

காலை வணக்கம்டா குட்டி, புறப்பட்டாச்சா?

ம்ம்ம்…, சொல்லி கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்த ஜாக்கெட்டை அணிந்தவாறே கைப்பையை எடுத்து அதில் எல்லாம் சரியாக இருக்கின்றதா? எனப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டியா?

ஆமாம்மா, சாப்பிட்டுட்டேன், நீங்க கீழே போகவும் தான் குளிச்சு வெளியே வந்தேனா சுடச் சுட சாப்பிட்டு ஹப்பா… இல்லாத தன் வயிறை தடவி காண்பித்தாள். அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

சூப்பர்மா, இன்னிக்கு ப்ரேக்பஸ்ட் செம்ம டேஸ்ட். இந்த வீக்கென்ட் நான் இந்த ரெஸிப்பி ட்ரை செய்யப் போறேன் சிரித்தாள்.

ஏதாச்சும் பண்ணு, எனக்கென்னப்பா நான் நல்லா ரெஸ்ட் எடுப்பேன் என்றவர்.

இந்த வீக்கெண்ட் ஒரு கெஸ்ட் நம்ம வீட்டுக்கு வர்றாங்க பாப்பா.

ம்ம்ம்…

நேர்ல பார்த்துட்டு அப்புறமா பேசிக்கலாம்னு அப்பா சொல்லியிருக்காங்க. விபரம்லாம் அப்பா பார்த்துட்டாங்களாம்.

ம்ம்ம்…

உனக்கெதுவும் தெரிஞ்ச்சுக்கணுமாடா குட்டி…

அதுதான் அப்பா பார்த்துட்டாங்கள்ல, நான் நேர்லயே பார்த்துக்கறேன்…சொல்லவும் அவள் அலைபேசி மணி கிணுகிணுக்க,

பை மா… பிக் அப் வந்திடுச்சு சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டாள்.

பிக் அப்பிற்கான அந்தப் பஸ் அவளுக்காக அங்கே நின்றிருக்க, அவசரமாய் ஏறினாள்.

பல அலுவலக நட்புகளின் ஹாய் ஹாய்களோடு தன் சீட்டில் சங்கமமானாள்.

கோமு இந்திய நாட்டின் பல பெண்களைப் போலவே மேற்கிந்திய உடை அமைப்பும், இந்திய உள்ளமும் கொண்டவள். இதுவரை ஏராளமான நட்புக்கள் அவளுக்கு உண்டு. ஆண் பெண் பேதமெல்லாம் அவள் அகராதியில் இல்லை. நட்பைத் தாண்டி சிலர் காதல் என்று அவளை அணுகிய போது அவளால் அதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அவளைப் பொறுத்தவரையில் வாழ்க்கை துணைக்கான ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன. கெட்டப் பழக்கங்கள் இல்லாத, தன்னை மட்டுமே உலகமாய் எண்ணி தாங்குகிற நல்லவனாக இருக்க வேண்டும். மிக முக்கியமான தகுதி என்னவென்றால் தன்னை விரும்பினாலும் தன் பெற்றோரை சந்தித்துத் திருமணத்திற்குக் கேட்கும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.

தான் பார்த்த எல்லோரும் கொஞ்ச நாள் பழகுவோம், அதற்கப்புறம் பார்க்கலாம் எனும் கொள்கை கொண்டவர்களாகவே இருக்க அதனைப் புறங்கையால் தட்டி விட்டாள் நம் நாயகி.

இத்தகைய கனவுகளுக்கு, மதிப்பீடுகளுக்கு யார் காரணமாக இருப்பார் என்று நம்புகிறீர்கள்? வேறு யாருமல்ல, அவள் வாசிக்கும் அனைத்துத் தமிழ் கதைகளின் எழுத்தாளர்கள் தான்.

அவன் அவளை நெருங்கினான், ஆண்மை ததும்பும் அவன் முகத்தையும் அதில் பொங்கிப் பெருகிய காதலையும் கண்டு அவளுக்கு மூச்சடைத்தது. அவனை நெருக்கத்தில் கண்டு அவளின் நீண்ட நயனங்கள் பட்டாம்பூச்சியாய்ப் படபடத்தன. அவள் கன்னங்கள் வெட்கத்தில் செவ்வான நிறம் கொண்டன. ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தேகம் நடுங்க நின்றுக் கொண்டிருந்தவளை இழுத்தணைத்தான் அவன். வன்மையாய் அவளின் இதழ்களைக் கவர்ந்து கொண்டன அவனின் இதழ்கள். இருவரின் இதழ்களும் சங்கமித்துக் கொள்ள நெடு நேரம் நீடித்த அந்தக் காதல் களத்தின் போராட்டத்தில் துவண்டவளை தன் மீதே சாய்த்துக் கொண்டான்.காதல் போதையில் நிலையில்லாதவளாய் தள்ளாடிய அவளும் அவனது நெஞ்சத்தில் வாகாய் சாய்ந்துக் கொண்டாள்

எத்தனையோ முறை வாசித்த பகுதி அது ஆனாலும் அந்தப் பக்கத்தை ஞாபகம் வைத்துக் கொண்ட அவள் மூளை அவளை மறுபடியும் , மறுபடியும் அதனையே வாசிக்கத் தூண்டியது. தமிழ் கற்றுக் கொடுத்து வாசிப்பிற்குப் பழக்கி விட்டிருந்தார் மந்திரா. வீட்டில் ஒற்றைப் பிள்ளையான அவளின் தனிமைக்குத் துணையாகப் புத்தகங்கள் மாறிப் போயின. மற்ற மொழிப் புத்தகங்களும் வாசிப்பாள் தான் ஆனால், அவளுக்குத் தமிழ் வாசிப்பு மிகவும் பிடித்தம் அதிலும் குடும்ப, காதல் கதைகள் வாசித்ததிலிருந்து அவளுக்கு அது ஒரு வகைப் போதையாகவே மாறி விட்டிருந்தது.

கதையில் வரும் இந்தக் காதலர்கள்/கணவர்கள் தங்கள் காதலியை/ மனைவியை என்னமாய்த் தாங்குகிறார்கள். கதையின் தாக்கத்தாலோ என்னமோ எப்போதும் காதலெனும் போதையும், மயக்கமும் சூழ வலம் வருவாள். தன்னுடைய வருங்காலக் கணவன் குறித்த ஏராளமான கனவுகள் அவளிடத்தில் இருந்தன. தன் பெற்றோர் தனக்காகப் பார்த்திருக்கும் வரனை இந்த வார இறுதியில் சந்திக்கும் ஏற்பாடுகள் இருக்க, தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டாவிட்டாலும் அவளுக்கும் உள்ளுக்குள்ளாகப் பதட்டமாகவே இருந்தது.

தான் வாசித்துக் கொண்டிருந்த ஈ புக்கை விட்டு விட்டு முக நூலிற்குத் தாவினாள்.

என் சுவாசமும் நீயே கண்ணாளா

என் உயிர் உன்னோடு பிணைந்திருப்பதால்

சில முத்த ஸ்மைலிகளைத் தான் எழுதிய ‘கவிதை போலிருந்த’ வரிகளோடு சேர்த்து, தன் ஃபீலிங்க் லவ்ட் ஐ தெரிவு செய்து போஸ்ட் செய்தாள்.

ஏராளமான ஹார்ட்டுகளையும், லைக்குகளையும், ஸ்டிக்கர்களையும், ஆஹான் போன்ற கிண்டல்களையும் பெற்றுக் கொண்டிருந்த அந்தப் போஸ்டிற்கு, காதலெனும் போதையில் மதி மயங்கியவளாகப் பதிலளித்துக் கொண்டிருந்தாள் கோமு.


இந்த வீக்கெண்ட் ‘ஆஸ்ரம்” போகலாமாடா ராம்? என நம் கதையின் நாயகனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் சமீர்.

ம்ப்ச்ச்…வேணாண்டா ஒரே டயர்டா இருக்கு நல்லா தூங்கணும்.

அங்கே போயிட்டு வந்தாலே நல்லா சுகமா தூக்கம் வரும்டா… என்றவனிடம் பிடிவாதமாய் மறுத்தான் ராம்.

என்னடா நம் நாயகன் இப்படி ஒருவனா? தர்ம சிந்தனை இல்லாதவனா? எனப் பொங்காதீர்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆஸ்ரம், அனாதை ஆசிரமமோ அல்லது முதியோர் இல்லமோ கிடையாது. வெகு பிரபலமான பார்.

ராம் எனப்பட்டவன் ஐந்தே முக்காலடியில் அளவான உடற்கட்டுடன் வசீகரமாக இருந்தான். அவனது அந்த அழகான மீசையால் எனக்கு 20 உனக்கு 18 நாயகன் தருண் குமாரை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தான்.

சீனியர் டீம் லீடாக இருக்கும் அவனுக்கு அடுத்த அசிஸ்டெண்ட் மேனேஜராக வரும் அத்தனை தகுதியும் இருந்தது, அதே நேரம் தன்னை நிரூபிக்கும் வேகமும், பதட்டமும் கூட இருந்தது.

அவன் ஆஸ்ரம் செல்லாததால் அவன் ஒரு டீடோட்டலர் என்னும் முடிவுக்கும் அவசரப் பட்டு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். அவர்கள் அலுவலகக் கட்டிடத்தின் பின்னே இருக்கும் ஸ்மோக்கிங்க் சோனுக்கு (Smoking zone) அடிக்கடி பயணப் படுகின்றவன்தான்.

அந்த புகைப் பழக்கம் வேலை அழுத்தத்திற்காக என ஆரம்பித்து, இப்போது சாப்பாடு, தூக்கம் போல வழக்கமாகி விட்டிருந்தது. இந்திய நாட்டில் உலகமயமாக்கல் முன்பாகப் பார்த்தோமென்றால் உடல் உழைப்பை, உடலை களைக்கச் செய்யும் வேலைகளே வெகுவாக இருந்தன.

இப்போதோ மூளையைக் களைக்கச் செய்யும் வேலைகள் தான் அதிகம். அவன் பணிபுரியும் அலுவலகமும் அத்தகையதே. அது ஐ டி வேலை அல்ல, RCM (Revenue cycle Management) எனும் யூ எஸ் ஹெல்த்கேர் அதாவது யூ எஸ் ஏ மருத்துவர்களுக்காக, அவர்கள் சிகிச்சை அளித்த பேஷண்ட்களின் இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பணம் பெற்றுத்தரும் வேலை.

பார்க்க வெள்ளையும், சொள்ளையுமாகத் தெரிந்தாலும் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாக்கும் டார்கெட்டுகள் கொண்ட பணி அது. அதிலும் இரவு ஷிப்டுகளில் பணி புரிவோரின் உடல் நலன்கள், சூரிய ஒளியே கண்டிருக்காத அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் மாறு பட்ட வாழ்க்கை முறையால் பாதிக்கப் பட்டு இருப்பதும் நிச்சயமான உறுதி. அங்கே மேல் பதவிக்காக நடக்கும் அரசியல்களெல்லாம் வேறு லெவல்.

அப்போதுதான் சற்று நேரம் முன்பு காபேடேரியாவில் அவனோடு பேசி சிரித்துக் கொண்டிருக்கும் நண்பன் அடுத்த நிமிடமே அவனுக்குப் பின்னால் சவக்குழி வெட்டியிருப்பான். சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் அத்தனை கார்ப்பரேட் லெவல் சூழ்ச்சிகளும் அங்கே உண்டு. மேலதிகாரிகளுக்குத் தண்ணீர் (அந்தத் தண்ணீர் தானுங்கோ) பார்ட்டி கொடுத்து மேல் பதவிகளை அடைந்து கொள்ளும் ஆண்களும், பெண்களும் கூட அதிகமாய் உண்டு.

இந்த கார்ப்பரேட்டுகளில் யாரும் நண்பனில்லை, யாரும் பகைவனில்லை என்பதான சூத்திரம் எல்லோருக்கும் கை வருவதில்லை. சத்தியம், நேர்மை, வாய்மை என்போருக்கு அந்தச் சூழ்நிலை மிகுந்த மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும். நாம் இவனிடம்/ளிடம் நம்பி பகிர்ந்து கொண்ட விஷயங்களை இப்படி நேரம் பார்த்து போட்டுக் கொடுத்து விட்டார்களே?! என்று அங்குள்ளோர் அதிர்ச்சியை உணரும் தருணங்கள் மிக அதிகம்.

மனிதனாய் பிறந்தவர்க்கு எப்போதும் நடித்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அந்த அலுவலகச் சூழலில் நடித்தே தான் ஆக வேண்டும். சூப்பர்வைசர் மொக்கை ஜோக் அடித்தாலும் சும்மாவேனும் சிரித்து வைக்க வேண்டும்.

பிறர் கையாலிட்ட வேலையைத் தலையால் செய்யும் அடிமைத்தனம் வேண்டும். ஆமாம் சாமி சொல்ல தெரிந்திருக்க வேண்டும். பிறர் பகிர்பவற்றைக் கொஞ்சம் மசாலாப் பொடி தூவி மிகைப்படுத்திச் சொல்ல வேண்டும் இவையெல்லாம் பெரும்பாலான வெற்றியாளரின் தாரக மந்திரங்கள்.

ராமை அந்த விதத்தில் நல்லவன் வகையில் சேர்க்கலாம். இதுவரையிலும் யார் முதுகிலும் குத்தாமல் இருந்ததாலேயே கடந்த ஒரு வருடமாக அவனது மேல் பதவி கண்ணுக்குப் புலப்படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

என்னடா இப்படி ஸ்ட்ரெஸ்ஸா இருக்க? கேட்டான் சமீர்.

இந்த வீக்கெண்ட் பொண்ணு பார்க்க போகணும்டா அதான்.

சன்னமாய் விசிலடித்தான் சமீர், ‘சூப்பர்டா, இதுக்கா இந்தச் சோக லுக்கு, அப்படின்னா அதுக்காகத்தான் ஆஸ்ரம் வரலைன்னு சொன்னியா? பின்னே எதுக்குப் பெரிய நல்லவனாட்டம் தூங்கப் போகணும்னு கதை விட்ட? பொண்ணு எங்கேயாம்?

பொண்ணு வீடும் பெங்களுர் தான்டா. கதையெல்லாம் சொல்லலை. இந்த வாரம் வந்த க்ளையண்ட் எஸ்கலேஷன்ல தினமும் எக்ஸ்ட்ராவா 4 மணி நேரம் வேலை செஞ்சு டயர்டா இருக்கிறேன்.

இப்ப கல்யாணம் வேண்டான்னா கேட்கிறாங்களா?

ஏண்டா அதான் 28 வயசாச்சு, சரியான வயசு தானே…

அதில்லடா… இந்த முறை AM (Assistant Manager) ஆனதுக்கு அப்புறமா மேரேஜ் எல்லாம் பார்த்துக்கலாம்னு இருந்தேன். 2 வருஷமா இதையே தான் சொல்லிட்டு இருக்க, அதெல்லாம் இன்னும் உன்னை அப்படியே விட முடியாதுன்னு வீட்டில பிடிவாதம் பிடிக்கிறாங்க. இப்ப இருக்கிற சம்பளத்தில எங்கேடா குடும்பம் நடத்துறது? போஸ்ட் கூடினா சம்பளமும் கூடும்ல. வரப் போகிறவ எப்படி இருப்பாளோ? அவளுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ?

என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தான் சமீர்.

அவர்களை எதிர்பார்த்து அந்த வார இறுதியும் காத்திருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here