10. நீயும் நானும்

0
786
Neeyum Naanum

அத்தியாயம் 10

ராம் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றதும் கல்யாணியும், சுதர்சனும் டீ குடிக்க அமர்ந்திருந்தனர். மனைவியின் முகத்தில் தெளிவில்லாமல் இருந்ததைப் பார்த்து சுதர்சன் என்னவென்று கேட்டார்.

இந்தப் பையன் எப்படிக் குடும்பம் நடத்துறான்னு ஒரே கவலையா இருக்குங்க?

ஏன் என்னாச்சு?

எப்ப பாரு ஆபீஸ் ஆபீஸ்னு…

அவன் எப்பவுமே அப்படித்தானே?

கல்யாணம் ஆனதும் கொஞ்சம் பொண்டாட்டிக்கும் நேரம் ஒதுக்க வேணாமா? அவளும் தான் எவ்வளவு பொறுப்பா?

இப்ப என்ன? எதுவும் பிரச்சனையா?

கோமு இன்னிக்கு வீட்டுக்கு வர மாட்டாளாம், சொல்லிட்டுப் போனா…

திடுக்கிட்டவராய் கேட்டுக் கொண்டிருந்தார் சுதர்சன்.

இந்த வாரம் முழுசுமே ராம் லேட்டாதான் வருவாங்க அத்தே, நான் அம்மா வீட்டில கொஞ்ச நாள் போய் இருந்துட்டு வரேனே ன்னு கேட்டா…

ம்ம்…

பிள்ள மூஞ்சில அருளே இல்ல, ஒருமாதிரி இருந்தா…

ம்ம் நல்ல பொண்ணு இல்ல மருமகளைச் சிலாகித்தார் சுதர்சன்.

ஆமாங்க, அன்னிக்குக் கல்யாணம் ஆகி 2 மாசம் ஆச்சுதுன்னு சொல்லி காலையிலேயே ரொம்பச் சந்தோசமா புறப்பட்டு இருந்தா, லீவு நாளு பிள்ளைங்க எங்கேயாவது போயிட்டு வருவாங்கன்னா சனிக்கிழமையும் அதுவுமா வேலைன்னு வெளியே போய்ட்டான், அவ முகமே வாடிப் போச்சு.

ஆமா, ஞாயிற்றுக் கிழமை கூடப் பொண்டாட்டியை விட்டுட்டு வெளியே போயிட்டான். தூங்கறதுக்குத்தான் வீட்டுக்கு வாரான், அந்தப் பிள்ளையும் என்னதான் நினைக்கும்?

அதுதாங்க நானும் சொல்றேன். சனி ஞாயிறாவது பொண்டாட்டி கூடச் செலவழிக்க வேணாமா?

இப்ப என்ன சொன்னா உன் மருமக?

ஏதோ விளையாட்டாம், புருஷன் கூட விளையாடிப் பார்க்கிறாளாமாம். ரெண்டு நாள் அவன் ஆபீஸ்லருந்து வராம இருந்தப்போ நான் அவளுக்குச் சொல்லலைல்ல, அது மாதிரி அவ ரெண்டு நாள் இவ தன்னோட அம்மா வீட்டுக்கு போய் அங்கே இருக்கப் போறாளாம். ராம் அதைக் கண்டு பிடிக்கிறானா? இல்லையான்னு? பார்க்கணுமாம். தலையில் அடித்துக் கொண்டார்.

அவ என்னவோ விளையாட்டுப் போலத்தான் சொன்னா, ஆனா மூஞ்சில களையே இல்லையே. எதையோ பறிகொடுத்தவ மாதிரி போனா. சொல்லா விட்டாலும் எனக்குப் புரியாதா என்ன?

ம்ம்…

சரி சின்னப் பிள்ளைங்க, பிரச்சனை இல்லாதவரைக்கும் பெரியவங்க நாம தலையிடாம இருப்போம். அவங்களே சரி பண்ணிக்கிட்டா சரி, இல்லைன்னா கூப்பிட்டு பேசுவோம்.

ஏண்டி கல்யாணி, ராம் நடந்துக்கிறதுக்குக் கோமு அம்மா அப்பா நம்ம கிட்ட சண்டை போடுவாங்களோ? சுதர்சன் கேட்டார். அவர் கவலை அவருக்கு.

நீங்களும் உங்க புத்தியும், பிள்ளைங்க பிரச்சனையைப் பத்தி பேசுனா நீங்க எதைப் பத்தி பேசறீங்க? கணவனை நொந்து கொண்டார்.

உங்க மருமக உங்க மகனைப் பத்தி உங்க கிட்டேயோ, என் கிட்டேயோ என்னிக்காவது குறை சொன்னாளா?

இல்லடி

அப்படின்னா அவ அவங்க அம்மா அப்பாக்கிட்ட போய் மட்டும் புருசனைப் பத்தி எப்படிச் சொல்லுவா?

அட ஆமால்ல,

நமக்கே புரியுது இவன் குடும்பம் நடத்துற லட்சணம், அந்தப் புள்ள இவன் இந்த லட்சணத்தில குடும்பம் நடத்தியும், அவனை விட்டுக் கொடுக்காம விளையாட்டு போலச் சொல்லிட்டு போகுது.

அப்படின்னா நாம என்ன செய்யணும்?

வழக்கம் போல உங்க மகன் காலையில 9 இல்ல 10 மணிக்கு வந்து தூங்கிட்டு மதியம் வேலைக்குப் போயிடுவான். அவன் பொண்டாட்டி வீட்டில இல்லை, அம்மா வீட்டுக்கு போயிருக்கான்னு நீங்களும் சொல்லக் கூடாது. நானும் சொல்ல மாட்டேன். என்ன டீலா நோ டீலா?

டிவி பார்த்து ரொம்பக் கெட்டுப் போய்ட்டடி… சிரித்தவர் டீல் டீல் மனைவியோடு கை கோர்த்தார்.

சாயங்காலம் அலுவலகம் திரும்பி வீட்டிற்கு வந்த மகள் கோமுவைப் பார்த்த மந்திராவுக்குச் சந்தோஷம் தாளவில்லை. மகளுக்கு ஓடி ஓடி உபச்சாரம் தான். அம்மா உக்காருங்கம்மா சொல்லி மடி சாய்ந்துக் கொண்டாள் கோமு.

கொஞ்சம் மெலிஞ்ச்சிருக்கப் பாப்பா. உண்டாகியிருக்கியா?

அம்மா கேட்டதும் கோமுவுக்கு வெட்கம் வந்தது. இல்லம்மா சொன்னவள் பேச பேச எல்லாப் பேச்சிலும் ராமும், அவள் மாமியார் வீடும் தான். சிறுபிள்ளைப் பொல அம்மா மடி சாய்ந்து, இப்போது தான் வாய்ப்பு கிடைத்ததென்று தன் இரண்டு மாத கதையையும் சொல்ல சொல்ல, அவள் வெளிப்படையாக ஏதாவது சொல்லாவிட்டாலும் கூட மருமகனின் வேலை குறித்து அவளுக்கு மனத்தாங்கல் இருப்பது மந்திராவுக்குப் புரிந்தது. எல்லாம் பகிர்ந்துக் கொண்டாலும் மறந்தும் கூடக் கணவனின் புகைப் பழக்கம், மதுப் பழக்கம் எனக் கணவனை விட்டுக் கொடுக்க அவளுக்கு மனது வரவில்லை.

எல்லாம் சரியாகிடும்டா கோமு, உங்க அப்பாவுக்கும் வேலை அப்படித்தானே. அடிக்கடி ட்ரான்ஸ்பர் ஆகும், கஷ்டமா தான் இருக்கும். ஆனாலும், நான் பழகிக்கலியா?

…ம்ம்

நீ வேலைக்குப் போகிறதுனாலத்தானே அவர் கூட நேரம் செலவழிக்க முடியலை.வேணும்னா வேலையை விட்டுடறியா கோமு.

அதையும் யோசிச்சுப் பார்த்தேம்மா…

ம்ம்…

அதுவும் சரிப்பட்டு வராது, அவங்க வீட்டில இருக்கிற நேரம் முழுவதும் தூங்கி கிட்டு இருப்பாங்க, அப்படி இருக்கிறப்போ இராத்திரி தூங்கி முழிச்சு இருக்கிற நான் நாள் முழுசும் வெட்டு,வெட்டுன்னு எப்படி உட்கார்ந்து இருக்கிறது? அதுக்கு வேலைக்கே போயிடலாம்.

ம்ம்…

தினமும் அவங்க நேரத்துக்கு வீட்டுக்கு வந்திட்டா கூடப் போதும்.ஆனா, பல நாள் அவங்களைப் பார்க்கவே கிடைக்காது, சனி ஞாயிறு கொஞ்சம் நேரம் எடுக்கிற மாதிரி இருந்தாலும் கூடப் போதும். என்னமோ ஒருமாதிரி தனிமையா பீல் ஆகுதும்மா…

ம்ம்… குழந்தை பிறக்கிற வரைக்கும் அப்படித்தான் இருக்கும், அதுக்கப்புறம் உனக்கு நிக்கக் கூட நேரமிருக்காது பாரு… தாயாய் தனக்குத் தோன்றியதைச் சொனவர் அவளுக்காகச் சமைக்கச் சென்று விட்டார்.

நீ இப்ப நல்லா ரெஸ்ட் எடு, நான் சமைச்சுட்டு வருகிறேன்…

நானும் வரேனே அம்மா…

இல்ல கொஞ்சம் அசதியா தெரியற, கொஞ்சம் தூங்கி எழும்பு… அப்புறம் பார்த்துக்கலாம்.

ம்ம்… தன் அறைக்குச் சென்றவளுக்கு ஏதோ ஒரு நூதன உணர்வும், அசதியும், மனச் சோர்வும் ஆட்கொள்ள உறங்கி எழுகையில் இரவு மணி ஒன்பத்தைத் தாண்டி இருந்தது.

எழும்பி தன் முகம் கழுவி வந்தவள் அப்பா வேலையிலிருந்து ஏற்கெனவே வந்திருக்க அவரிடம் போய்க் கொஞ்சிக் கொண்டாள்.

மாப்பிள்ளை வரலையா? வழக்கமான பெண் பிள்ளையின் அப்பாவாய் சுந்தரம் கேள்வி கேட்க,

அவருக்கு இந்த வாரம் முழுக்க ரொம்ப வேலையாம், வர்றதுக்கே காலை ஆகிடுமாம். அதான் நீ வேணும்னா கொஞ்ச நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வான்னு சொல்லிருக்காராம் மந்திரா அவள் சொல்ல வேண்டியதை ஒப்புவித்துக் கொண்டிருந்தார்.

ஓ அப்பா கேட்டுக் கொண்டிருக்க, அம்மாவிடம் தான் பொய் சொல்ல முடியாமல் அரைகுரையாய் உளறியதை வைத்து அம்மா அப்பாவிடம் கோர்வையாய் சொன்ன விதத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அவருக்குப் போன் போட்டியா கோமு? நான் வேணும்னா நீ இங்கே பத்திரமா வந்துட்டன்னு சொல்லிடவா? பெண்ணின் தகப்பன் என்கிற பொறுப்புணர்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார்.

ஐயோ காரியம் கெட்டுப் போயிடும் போலிருக்கே. போன் போட்டுட்டாலும் உங்க மருமகன் பேசிட்டு தான் வேற வேலை பார்ப்பார் மனதில் நொடித்துக் கொண்டாள். ஒரு பொய் சொல்ல முடியலை, உனக்குத் திறமை பத்தாது கோமு, என்றெண்ணியவள்,

அப்பா, அவங்களுக்கு அப்பவே மெசேஜ் செஞ்சிட்டேன். (மனசாட்சி: ஆமாமா, நான் போடுற மெசேஜீக்கு அப்படியே பாய்ஞ்சு பாய்ஞ்சு பதில் போட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பார் உங்க மாப்பிள்ளை ஹீக்கும்)

அப்பா அவர் ரொம்பப் பிஸி, போன்லாம் போட்டா எடுக்க முடியாதுன்னு சொல்லுவார். (ஆமா அவருதான் ட்ரம்புக்கு அடுத்த யூ எஸ் ஜனாதிபதின்னு சொல்லிக்கிறாங்க)

‘நீ சொல்லிட்டீல்ல, அப்ப சரி’ மகள் சொல்லாமல் கொள்ளாமல் தனியாய வந்திருப்பதைக் குறித்துக் கவலையுற்று இருந்த அப்பா ஆசுவாசமானார்.

கோபத்தில் கணவனிடம் சொல்லாமல் தான் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனாலும், அப்பாவுக்கு எதுவோ தவறு என்று புரிந்து இருக்கிறதே. நான் தனியாக வருவதில் இவ்வளவு பிரச்சனையா? ம்ம்… என் அப்பா என் நலனுக்காகத் தான் யோசித்திருப்பார், தவறாக எண்ணக் கூடாது எனத் தன்னைத் தெளிவித்துக் கொண்டாள் கோமு.

கலகலவென அன்றைய இரவு உணவை அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர். வெகு நாளைக்குப் பிறகு மகளோடு உணவுண்ட அம்மா அப்பாவிற்கு நிறைவாக இருக்க, இவளுக்கோ எதையோ பறிகொடுத்த உணர்வு.

சாப்பிட்டதும் மாமியாருக்கு போன் செய்தவள் அவர்கள் சாப்பிட்டார்களா? என விசாரித்துக் கொண்டாள். சுதர்சனும் போனில் இரண்டொரு வார்த்தை அவளிடம் பேச குட் நைட் சொல்லி போனை வைத்தாள். மறந்தும் உன் பிரச்சனை எங்களுக்குத் தெரியும் என்று பெரியவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. அவளும் தெரியும் விதமாக எதையும் பேசவில்லை.

மாமனார் மாமியாருடன் கலகலப்பாய் பேசும் மகளைப் பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர் மந்திராவும் சிதம்பரமும்.

முன்னிரவு தூங்கி விட்டுத் தூக்கம் வராமல் அம்மாவிடம் தொணதொணத்துக் கொண்டிருந்தவள் அம்மா அசதியில் தூங்கி விடத் தூக்கம் வராமல் கொஞ்சம் உருண்டுக் கொண்டிருந்தாள்.

வழக்கமான கணவனுக்கான பிரார்த்தனைகளைச் செய்து விட்டு, ஸ்ரீராம ஜெயத்தை ஒருபக்கம் எழுதி முடித்தாள். என்ன செய்தாலும் அவள் மனதை சோர்வு ஆட்கொண்டு இருந்தது. கணவன் என்ன தவறு செய்தாலும் அவனைப் பற்றியே எண்ணும் தன் மனதை அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை.

குடிகாரன், குடிகாரன் என்று மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டிருந்தாள். அப்படியே உறங்கிப் போனாள்.

காலையில் அதே தன் கண்ணாடி டேபிள்.

ஏகப்பட்ட முகப்பூச்சுக்கள் அந்தப் பெரிய கண்ணாடியின் முன் இருந்த டேபிளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அத்தனையும் பார்க்க அழகாயும் இருந்தது. வித விதமான ப்ரெஷ்கள் அவள் முன்பாக இருந்தன. முதலில் பவுண்டேஷனை அதற்கான பிரஷ்ஷால் எடுத்து முகத்தில் பொட்டு பொட்டாகத் தீற்றியவள் அதனைச் சீராகத் தடவி விடத் தொடங்கினாள். முகத்தில் பொலிவே வரவில்லை. ஏதோ எண்ணை பூசிய எபெக்ட், முகம் கருத்துக் கிடந்தாற் போல இருந்தது.

அதன் மேல் பவுண்டேஷன் பவுடரை இன்னொரு பிரஷ்ஷால் தீற்றி திருப்திப் பட முயன்றாள்.

கண் இமைகளைத் தாழ்த்தி வெளிர் நிற ஐ ஷேடோவை இரு புருவங்களுக்கும் கீழ் பகுதியில் அழகாய் தீற்ற எண்ணியவள். ம்ப்ச்ச்… சலிப்பு எழவே பூசாமல் விட்டு விட்டாள்

குனிந்து தன் உடையைக் கவனித்தாள், அம்மா வீட்டில் இருந்த ஏதோ சற்று கசங்கிய ஆடையை எடுத்து அணிந்திருந்தாள். அயர்ன் செய்யவும் ஆர்வமில்லை. கைகளால் நீவி விட்டாள்.

ம்ம் கொஞ்ச்ச நேரம் உடுத்திருந்தாலே கசங்கல் சரியாகி விடும் திருப்திப் பட்டுக் கொண்டாள். அன்று அவள் அணிந்திருந்த பழுப்பு நிற மேலாடைக்கு ஒவ்வாத மிக லைட்டான ஷேடை ஏனோ தானோவென எடுத்து உதடுகளில் தீட்டினாள்.

மற்ற எதுவும் செய்யவே தோன்றவில்லை.பிக் அப்பில் எறும் போது அவள் முகத்தைப் பார்த்த மற்றவர்கள்

கோமளி உனக்கு உடம்புக்கு சரியில்லையா?

எனக் கேட்டுக் கொண்டனர். மகளைப் பார்த்த மந்திராவுக்கு வித்தியாசம் புரிந்தது ஆனால், தாமதாகத் தூங்கி எழுந்தவளுக்கு நேரம் இருந்திருக்காது எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

அன்று கோமளிக்கு சலிப்பான மற்றொரு நாளாக அமைந்திருந்தது. அலுவலகம் போய் மறுபடி முகம் கழுவி கொஞ்சம் பளிச்சென்றானாள். அவளது தோற்றம் அவளது வேலையின் ஒரு முக்கியமான அம்சம், அதை அவள் புறக்கணிக்க முடியாது அல்லவா?

காலை உணவை உண்டுவிட்டு வந்திருந்தாள். ஆனாலும் ஏதோ போல் இருந்தது, காபி வரவழைத்து சாப்பிட்டாள். அன்றைக்குப் பார்த்து தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டிருந்தன.

அவர்களது ஆபீஸில் அவளைச் சேர்த்து இரண்டு ப்ரெண்ட் டெஸ்க் எக்ஸிக்யூடிவ்ஸ் எளிமையாய் சொல்லப் போனால் ரிசப்ஷனிஸ்ட்ஸ் இவளுக்கான இடம் முன் வரவேற்பில் என்றால் இன்னொருவள் இடம் நான்காம் மாடியில். ஒருவர் ஏதாகிலும் வேலையாய் அல்லது, இயற்கை உபாதைக்குச் செல்ல நேர்ந்தால் சென்றால் மற்றவரிடம் வேலையை ஒப்படைத்து செல்வது வழமை.

காபியை குடித்து முடித்ததும் கொஞ்சம் தலைவலி விட்டாற் போலத் தோன்றிற்று. ஓரிரு நிமிடங்கள் போன் அழைப்புகள் நின்று நிசப்தம் நிலவ கணவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். நான் வீட்டில் இருக்கிறேனா இல்லையா? என அவனுக்கென்ன தெரியப் போகிறது? பெருமூச்செழுந்தது. அவனுக்கு நானெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

போன் மணி கிணுகிணுத்தது, வாயில் செக்யூரிட்டியிடமிருந்து அழைப்பு.

மேம் உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்.

உள்ளே வரச் சொல்வது தானே…

இல்லை அவர் உள்ளே வர மாட்டாராம், உங்களை வெளியே வரச் சொன்னார் மேடம்.

யாரடா அது? அவசரமாய் 4ம் மாடியிலிருந்த பிரதீபாவுக்குக் கால்களை ட்ரான்ஸ்பர் செய்து விட்டு அலுவலக வாயிலுக்குச் செல்ல,

செக்யூரிட்டி கேபினின் வெளிப்பக்கம் கண்கள் இரண்டும் சிவந்திருக்க அவளையே பார்த்த படி நின்று கொண்டிருந்தான் ராம்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here