11. நீயும் நானும்

0
1198
Neeyum Naanum

அத்தியாயம் 11

கோமு அங்கே யாரை எதிர்பார்த்தாளோ இல்லையோ நிச்சயம் ராமை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒரு கோபத்தில் அவனுக்குச் சொல்லாமல் தாய் வீட்டிற்குச் சென்று விட்டாள் தான் ஆனால், நேற்று முழுவதும் மனதிற்குள்ளாகச் சஞ்சலங்கள் எழாமல் இல்லை. அவன் என்னைக் கண்டு கொள்ளாமல் அலுவலகமே கதியென்று கிடக்கின்றானே?

எனக்கு வேறு கதியில்லை என்று நினைத்து விட்டானா? என் அம்மா அப்பாவிடம் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு வந்தால் தான் இவனுக்கு என் அருமை புரியும் என்று ஒரு பக்கம் மனம் வீம்பு பிடிக்க, இன்னொரு பக்கம் என்ன இருந்தாலும் அவனிடம் சொல்லி விட்டு வந்திருக்க வேண்டும், எனப் பெரிய நியாயவாதியாக அவனுக்கே வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தது.

நாம் வீட்டில் இருப்பதும், இல்லாமல் போவதும் அவனுக்கென்ன பொருட்டா? ஏதோ வீட்டிற்கு வருகிறான் போகிறான்? என்னைக் கண்டு கொள்வதே இல்லை. அவன் வேலை வேலை என்று அதன் பின்னாலேயே அலைந்து கொண்டு இருக்கும் விதத்தைப் பார்க்கையில் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வரவே இல்லை என்பதை அவன் உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லையே?
அவனுடைய அலுவலக விடுமுறை நாளான வரும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைக்குத் தான் தான் வீட்டில் இல்லாமல் இருப்பதையே அறிந்துக் கொள்வான் என உறுதியாய் கணித்திருந்தாள். அந்தக் கணிப்பு பொய்யானது குறித்துக் கோமுவுக்கு ஆச்சர்யமே.

நேற்று ஒரு நாளில் நான் வீட்டுக்குச் செல்லாமல் இருந்ததற்குள்ளாகவே, முதல் நாளிலேயே அவன் அவளைக் கண்டு கொண்டது எப்படி? அத்தைச் சொல்லி இருப்பார்களோ? இல்லை மாட்டார்கள் மனதிற்குள்ளேயே அப்படி இருக்காது எனத் தோன்றியது.
ஒருவேளை அவன் ஏதேச்சையாகத்தான் அவளைப் பார்க்க வந்தானோ? இவள் வீட்டிற்குச் செல்லவில்லை என்பதையே கண்டு கொள்ளவில்லையோ?

அவனைப் பார்க்கையில் அப்படியும் தெரியவில்லையே? கண்களில் கனல் வீச அவளைப் பார்த்திருந்தவன் அருகில் சென்றாள்.
இவளது எண்ணங்கள் இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்க அவளைப் பார்த்த கணத்தினின்று தன்னைத் தானே கூறு போட்டுக் கொண்டு இருந்தான் ராம்.

இவளுக்கென்ன ஆயிற்று? இப்படி ஒரு கண்றாவி தோற்றத்தில் அவளை நான் பார்த்ததே இல்லையே. இரவின் தூக்க கலக்கத்தில் அவசர அவசரமாய் முகத்தைக் கழுவி கையில் கிடைத்த ஒரு ஜீன்ஸீம் டிசர்ட்டும் போட்டு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு கோபத்தில் அவன் அவலைத் தேடி வந்திருந்தான். அந்தக் கோலத்தில் அவன் கூட அவளை விட நன்றாகத் தோற்றமளித்தது போல இருந்தது. அவளது முகத்திலோ அவ்வளவு சோர்வு, களையற்று வாடிக் கறுத்து இருந்தது.

இப்படி ஜீவனே இல்லாமல் இருக்கிறாள்? எதனால் என்னைத் திருமணம் செய்து கொண்டதாலா? அவ்வளவு மோசமான கணவனா நான்? புத்தம் புது மலர் போலத் தானே எப்போதும் இருப்பாள்? மெலிந்திருக்கிறாள், அது கூட என் கண்ணுக்கு இப்போதுதான் படுகின்றது. கடைசியாக இரவு தூங்கு முன் அவளை இரவுடையில் பார்த்தது தவிர எப்போது மனைவியைப் பகலில் கண்டோம்? மனதிற்குள் உருட்டிப் பார்த்தான்.

ம்ம்… அன்று சேலையில் வந்தாளே, ஏதோ விளையாட்டுத்தனமாய், நான் கூட அலுவலக வேலையில் அவசரமாய் ஏதோ சொல்லி விட்டு நகர்ந்தேனே. மனைவியை வெளிச்சத்தில் பார்த்ததெப்போது? அமர்ந்து பேசியதெப்போது? என மனசாட்சி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலில்லாமல் திணறினான்.

ராம் உள்ளே வாங்க… அருகே வந்து அமைதியாக அழைத்தாள். அவள் அணிந்திருந்த தொள தொளப்பாக இருந்த அந்த நொந்து போன பழுப்பு நிற டாப்போடும். டிரௌசரோடும் அவளை அருகில் பார்த்து இன்னும் கடுப்பாகியது.

நீ முதல்ல வீட்டுக்கு வா… அவன் குரலில் ஏகத்திற்குக் காட்டம்
அவன் இந்தக் கோப முகம் அவளுக்கு முற்றும் புதியது. முதலில் கொஞ்சம் மிரண்டுதான் நின்றாள்.

ப்ளீஸ் ராம், நான் உங்களுக்கு முக்கியம்னா, என் மரியாதை முக்கியம்னா உள்ளே வாங்க… யாரும் பார்த்தா எதுவும் தப்பா நினைச்சுப்பாங்க…

அப்ப நான், என் மரியாதை எல்லாம் உனக்கு முக்கியமில்லையாடி…

சிறுத்தையின் சீற்றம் அவன் குரலில்.

ஹே கோமு வாட் ஆர் யூ டூயிங்க் ஹியர்? ( இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் கோமு?) அவளின் மேனேஜர் ஏதேச்சையாய் வெளியே வந்தவர் இவளைப் பார்த்து பேசிவிட்டு, ராமையும் அடையாளம் கண்டு கைக்குலுக்கிக் கொண்டு விசாரித்தார்.
மிக அவசரமான வேலை, நான் கோமுவை அழைத்துப் போக வந்திருக்கிறேன், என அவரிடமே ராம் கேட்டு வைக்கவும்,
இதென்னடா இது ஸ்கூல் பிள்ளையை வீட்டுக்கு அழைச்சுட்டு போகிற மாதிரி… எனக் கோமுவுக்குக் கூச்சமாகிற்று. அனுமதி கிடைத்ததும் அரை நாளில் செல்வதாய்த் தன் சக ஊழியையிடம் வேலையை ஒப்படைத்து விட்டு புறப்பட்டாள்.

இருவரும் அந்தக் கூட்டமே இல்லாத பாதையில் நடந்து கொண்டிருந்தனர். இருவர் நடுவிலும் பேச்சு இல்லை. அவன் நடையிலேயே அவனுடைய சோர்வு புரிந்தது. தூங்காமல் எதற்கு வந்தான்? மனம் சலித்துக் கொண்டது. இன்னொரு பக்கம் அவன் அவளைத் தேடி வந்ததில் மனதிற்குள் வெறுமையான சில பக்கங்கள் பூத்திருந்தன.

தன் பைக் அருகே வந்ததும் அதையும் கோபத்திலேயே ஸ்டார்ட் செய்து அவள் ஏறுவதற்காக நிறுத்தினான். வழி நெடுக பைக் வதைப் பட்டது. ஆத்திரம் வெளிப்பட வேகமாய் ஓட்டிக் கொண்டு இருந்தான். அவன் இடுப்பில் கை கோர்த்திருந்தவள் முடி காற்றின் வேகத்தில் அவனைத் தழுவி தழுவி பறந்து தாழ்ந்து கொண்டிருந்தது.
தங்கள் பில்டிங் பார்க்கிங்க் செல்லும் முன் அவளை இறங்க விட்டான்.
நான் வர்ற வரைக்கும் இங்கயே நிக்கிற, என்ன புரியுதா? வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

அங்கே அதே நேரம் காற்றாடப் பார்க்கில் அமர்ந்திருந்த சுதர்சன் தன் மகன் அவசரமாய்ப் பைக் எடுத்துப் போனதையும், வேலைக்குச் சென்றிருந்த தன் மருமகளோடு திரும்ப வந்ததும். மருமகள் பைக்கிலிருந்து இறங்கிய நேரம் முதல் மூன்றாவது மாடியிலிருக்கும் தங்கள் அபார்ட்மெண்டுக்கு வராமல் சற்றுத் தள்ளி நிற்பதும் பார்த்து ஒன்றும் புரியவில்லை.

தான் மருமகள் விஷயத்தை மகனுக்குச் சொல்ல மாட்டேனென்று டீல் போட்டபடி ஒன்றுமே உளறி வைக்கவில்லையே? எப்படி மகனுக்கு உண்மை தெரிந்தது? முதலில் வீட்டரசியை விசாரிக்க வேண்டும். அவள் உளறி, கிளறி வைத்து விட்டாளோ? இல்லையே வீட்டிலேயே சொதப்புகிற ஒரே நபர் தான்தானே?

மகனுக்கு விபரம் எப்படித் தெரிந்தது? என்கிற ரகசியம் தெரிந்து கொள்ளாமல் முடியவே முடியாது எனத் தோன்ற அவசரமாய் லிப்டை நோக்கி எட்டுகள் போட்டார்.

தங்கள் அபார்ட்மெண்டின் கதவை திறந்த கல்யாணியிடம்,
கல்யாணி, நம்ம…. குரலை உயர்த்தி விசாரிக்கும் முன் மனைவியைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் தகப்பன் போலக் கையைப் பிடித்துக் கொண்டே அவரைத் தாண்டி வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தான் ராம். தாய் தகப்பனை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
அவனைக் காட்டி அவன் பின்னே சைகை காட்ட முயன்று, மனைவியிடம் விசாரித்துக் கொண்டிருந்த சுதர்சனைப் பார்த்து நொந்துக் கொண்டாள் கல்யாணி,

‘இந்த மனுசனை வச்சுகிட்டு ஒரு கொலையும் கூடச் செய்ய முடியாது’

அலுப்பாய் தலையசைத்துக் கொண்டு தங்கள் அறையை நோக்கி நகர்ந்தார். மகனுக்கு எப்படித் தாங்கள் சொல்லாத ரகசியம் தெரிந்தது? என்கிற கேள்விக்கான பதிலை நாடி, மனைவியைப் பின் சென்றார் சுதர்சன். கல்யாணி அம்மையார் தன் ஸ்டைலில் கணவருக்குப் புரிய வைத்திருப்பார் என நம்புவோம்.

அறைக்குச் சென்றவன் அவளை அந்த அறையின் ஓரத்தில் கொண்டு போய்த் தான் நிறுத்தினான்.

‘நான் தான் உனக்கு அப்பவே சொன்னேன்ல, கொஞ்ச நாள் இப்படித்தான் பிஸியா போகும்னு. உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னா என் கிட்ட சொல்லணும்னு கூடத் தோணலியா? அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா ஆகிட்டேனா?

கோபத்தைச் சீறும் குரலில் சொன்னவன் குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொண்டான். கோமு குமுறும் எரிமலையாய் இருந்தாள். நான் எதுக்குக் கோபமா இருக்கிறேன்? எதுக்காக இப்படிச் செய்தேன்னு கேட்கிறானா பார்? எப்ப பாரு தனக்கு எது தோணுதோ அதை மட்டும் சொல்லி வைக்கிறது. என்னிக்கு இவன் திருந்துவான்?
அவன் கோபம் அவளை வெகுவாகச் சுட்டது. ஆனாலும், ஆத்திரத்தோடு அவளை அலுவலகத்திலிருந்து அழைத்து வந்தது, உரிமையான அவன் செயல்கள், பேச்சுகள் ஏன் இந்தக் கோபமும் கூடப் பிடிக்கத்தான் செய்கிறது. ஆனால், அவன் அவளுக்கு இந்தக் குறுகிய திருமணத்திற்கு அடுத்தக் காலத்திலேயே அளித்து வந்திருக்கும் தனிமை அதுதான் பிடிக்கவில்லை. அதை அவள் மனமார வெறுக்கிறாள். இவன் என்றைக்கு என் மனதை புரிந்துக் கொள்வான்?

[center]ஒரு சில நேரம்[/center]

[center]உந்தன் கடுமை[/center]

[center]எனை வாட்டுகிறது.[/center]

[center]அதனைக் கூட[/center]

[center]சில தேம்பல்களும்,[/center]

[center]சில அரவணைப்புகளுமாய்[/center]

[center]உன் துணையால்[/center]

[center]கடந்து கொள்வேன்…[/center]

[center]ஆனால்,[/center]

[center]கொடுமையான தனிமை மட்டும்- எனக்கு[/center]

[center]பரிசளிக்காதே என் கோபக்காரா![/center]

சிந்தனையில் நின்றுக் கொண்டிருந்தவளை அவன் அதன் பின் கண்டு கொள்ளவில்லை. அவசரமாய் டிசர்ட், ஷார்ட்ஸ்க்கு மாறினான்.

தன் சிந்தனை களைந்து அவன் கொண்டு விட்ட அதே சுவரோரம் நின்று அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் வெகு களைப்பாக இருந்தது தெரிந்தது.
இரவு வேலை, தூக்கமின்மை, தன்னைத் தேடி வந்தது எல்லாம் அவனை இன்னும் களைப்படைய வைத்திருக்கும் என உணர்ந்தாள்.

மனதே கேட்காமல் ‘சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரட்டுமா ராம்?’ கேட்டே விட்டாள்.

அவனுக்குத் தன் தவறுகளே புரியவில்லை, உன்னைத் திட்டியும் இருக்கிறான். அப்படியும் அவனிடம் பேசுகிறாயே உனக்கு வெட்கமே இல்லையா? மனசாட்சி கடிந்துக் கொண்டதை கண்டு கொள்ளவில்லை.

தன் இயல்புக்கு ஒத்து வராத இரண்டு நபர்கள் அவர்கள் சேர்ந்து வாழும் அதிசயம் தான் இந்தத் திருமணப் பந்தம் அதில் தான் எத்தனை முரண்பாடுகள், குழப்பங்கள். தனக்கு ராமிடம் இருக்கும் மன வருத்தங்கள் பல, ஆனால் அவனை வெறுக்க முடியாது. தான் எண்ணுபவற்றை எல்லாம் ஒருபோதும் அவனிடமே பகிர்ந்து கொள்ள முடியாதோ? அமர்ந்து பேச கூட வாய்ப்பில்லாத ஒரு வாழ்க்கை. இதில் எங்கே மனம் விட்டு பேசுவது பெருமூச்செழுந்தது.

தான் சாப்பிட வேண்டுமா? எனக் கேட்டதற்கு ஏதாவது பதில் சொல்வான் என எண்ணியிருக்க, அவன் தன் படுக்கையிலிருந்தே ஒரு புறம் சரிந்து ஒரு மாதிரியான பார்வையை அவள் மீது பதித்து இருந்தான். அவளால அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கே வா எனச் சைகை காட்டினான். அவனருகே சென்று அமர்ந்தாள்.

உன் கிட்ட இன்னும் என்னென்னவோ பேசணும், ஆனா இப்ப எனக்கு முடியலை. தூங்கி எழும்பணும், நீயும் ராத்திரி தூங்கி இருக்க மாட்டில்ல?

பதிலென்ன சொல்ல என அவள் திகைத்து நிற்க,

‘வா தூங்கலாம்’

அவன் கண்கள் சொக்கிக் கொண்டிருக்கக் கைகளோ விரிந்திருந்தன. தாமதமின்றி அவற்றுள் அவள் புகுந்துக் கொண்டாள்.

நிம்மதியை இங்கல்லவா வைத்திருக்கிறான் ஆண்டவன், அப்பாதுகாப்பு அரணில் தன்னைப் பொதிந்துக் கொண்டாள்.
அந்த முரண்பாட்டுக் காரனை அவளால் விலக்கி வைக்க முடியவில்லை.

[center]விலகிப் போனால்[/center]
[center]அருகில் வருகிறாய்[/center]

[center]ஆணவம் கொண்ட[/center]
[center]அடுத்த நொடியே[/center]


[center]அடிமையாய்ப் பணிகிறாய்.[/center]

[center]கோபம் கொண்டு[/center]
[center]முறைக்க முயல்கிறேன் முடியவில்லை.[/center]

[center]உந்தன் பலவித பாவம்[/center]
[center]பார்த்து உனை கணிக்க முயன்றும்…[/center]

[center]கணக்கு தீரவில்லை…[/center]

[center]போடா இனி உன்னை நாடி வந்தால் சொல்லு[/center]

[center]என முகம் திருப்பவும் விடாமல்[/center]


[center]எனை உன்னில் அடக்கிக் கொள்கிறாய் -என்[/center]

[center]ஆணவக்காரா…[/center]


அவள் அவனது கரத்தில் வந்ததும் தூக்கத்தில் அமிழ்ந்தவன். அடிப்பட்ட குழந்தையைப் போல, கனவில் அரைத் தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தான்.

கோமு…நீ வீட்டில இல்லைனா எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? காலையில வீட்டுக்கு வந்தா வீடே எனக்கு வெறுமையா இருக்கு. உன் வாசம் தேடுனா இல்லை. படுக்கையில, தலைகாணியில எல்லா இடத்திலேயும் தேடினேன் எங்கேயும் உன் வாசனை இல்ல. எப்பவும் நீ கழற்றிப் போடுற உன் துணியைப் பாத்ரூம்ல போய்த் தேடுனேனா, அங்கே உன் சோப்பு வாசனை இல்ல. உன் துணிகளையும் காணல. குழந்தையாய் தேம்பியது அவன் குரல். எதுக்கு என்னைய விட்டுட்டு போனேடி? அவன் கரங்கள் அவளை இன்னுமாய் அணைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தன.

அத்தோடு நில்லாமல் ‘ஐயம் எ லூசர், ஐயாம் நாட் குட் பர்சன்…ஐயாம்…’ ஏதேதோ பிதற்றியவனின் ஒற்றைக் கண்ணீர் துளி அவன் இறுக மூடியிருந்த கண்ணிலிருந்து பொட்டென வடிய கோமு கலங்கிப் போனாள். தனக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு அவனைத் தேற்ற முயன்றாள். அவனை மறுக விட அவளால் இயலவில்லை.

அந்த ஒரு சொட்டுக் கண்ணீர் அவள் இதயத்தை அமிலமாய் எரித்தது. புலம்பிக் கொண்டு இருந்தவனின் உதடுகளைத் தன் உதடுகளால் அமைதிப் படுத்த முயன்றாள். அவனை அணைத்துக் கொண்டு பிடரியை வருடிக் கொடுத்தாள். மற்றொரு கை அவன் முதுகை நீவி கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவன் புலம்பல் அடங்கி அவள் பிடியில் அவன் தூங்கிப் போனான்.

என்னவாயிற்று இவனுக்கு? யோசனையில் அவனின் இறுக்கமான பிடியில் இருந்தவளையும் தூக்கம் தழுவி கொண்டது.

மதியம் எழுந்தவன் மனைவியைக் கைவளைவிலிருந்து விடுவித்தான்.அவளின் முத்தமும், அரவணைப்பும், ஆறுதலும் வெகு நாளாய் தராத நிம்மதி தந்துச் சென்றதை உணர்ந்தான், சற்று ஆசுவாசப் பட்டிருந்தான்.

சாப்பிடச் செல்ல வேண்டும், அவளையும் எழுப்பலாம் என்று அருகே சென்றவனுக்கு அவளது அதீத வாட்டத்தின் காரணம் புரியவில்லை.

கோமளீ… அவன் உலுக்கலுக்கு ம்ம்…ம்ம் என அலுப்பாய் எழும்பியவள் அவன் முகம் பார்த்தாள்.

வா சாப்பிட போகலாம் அவள் வருவதற்கு நேரம் கொடுத்துச் சமையலறை நோக்கி நகர்ந்தான். இருவருக்கும் பேசிக் கொள்ள, சண்டையிட ஏராளம் இருந்தது. ஆனால், எப்படி அத்தனையையும் தீர்வுக் காண எனப் புரியவில்லை. வீட்டில் அவர்கள் அறையில் இருவர் வாக்குவாதம் முற்றினாலும் கூட அம்மா, அப்பாவுக்குத் தெரிய வந்து விடுமே எனும் தயக்கம் அவனைக் கட்டிப் போட்டிருந்தது.

தங்கள் இருவருக்கும் இடையேயான பிணக்குகளை யாருக்கும் தெரிவிக்க, அனுதாபம் தேட அவர்கள் முனையவில்லை, அதனாலேயே அவர்கள் உறவு நிலைக்கும் சாத்திய கூறுகள் ஒவ்வொரு முறையும் வலுப்பெற்றுக் கொண்டு வந்தது.

சண்டைப் பொடுவதற்காக லொகேஷன் தேடி வெளியூர் போயா சண்டைப் போட முடியும்? சலித்துக் கொண்டிருக்கையிலேயே கோமு முகம் கழுவி வெளியே வந்தாள். உணவு மேஜையில் அமர்ந்திருந்த மகன் முன்னால் சாப்பாட்டுப் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் கல்யாணி.

உதவிசெய்யப் போன கோமுவை தடுத்து, சாப்பிட அமரச் சொன்னவர் எங்கோ புறப்பட்டு இருந்தார், வெள்ளை வேட்டி சட்டையில் சுதர்சனும் அறையிலிருந்து வெளிப்பட்டார்.

சித்தி வீட்டுக்கு போயிட்டு அப்படியே கோயிலுக்கும் போயிட்டு வரோம்டா, நாங்க வர்றதுக்குச் சாயங்காலம் இல்ல ராத்திரி ஆகிடும் தன் பெற்றொர்கள் தங்களுக்குத் தேவையான தனிமையைக் கொடுத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

‘இனி உன் சமர்த்து மகனே’ எனும் அவர்களின் செயலின் அர்த்தம் புரியாமல் இல்லை.

சாப்பாடு பறிமாறும் சப்தமும், தண்ணீர் டம்ளர் எடுக்கும் சப்தமும், பாத்திரங்கள் நகர்த்தும் சப்தமும் நின்று விட அமைதியாய் இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அந்த அமைதி வெகு கனமானதாக, அடர்ந்த தோல் போர்த்தியதாக இருந்தது. யார் அதனைக் கிழித்தெறிவது எனும் கேள்விக்குப் பதில் இல்லை.

சாப்பிட்டுப் பாத்திரங்களை மனைவியோடு எடுத்து வைக்க உதவி கொண்டிருந்தான் ராம். அழுக்குப் பாத்திரங்களைச் சிங்கில் போட்டு விட்டுத் திரும்புகையில் அந்த டைல்ஸ் தரையில் கொஞ்சம் தண்ணீர் சிந்தியிருக்க, தனக்கு வழுகி விடக் கூடாதென்பதற்காகத் தரை துடைக்க மோப் எடுக்கச் செல்ல எண்ணியவன் அவன் எதிரே வந்து கொண்டிருந்தவள் தண்ணீரை மிதிக்கும் முன் தடுத்து தள்ளி நிறுத்தினான்.

திடீரெனக் கணவன் இருந்த பக்கம் சென்றவளை அவன் தள்ளி நிறுத்தவும், அவளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடிக்க,

அன்றைக்கும் இப்படித்தான் செஞ்சீங்க… வெடித்துச் சிதறினாள் கோமு, கண்ணீர் கரை தாண்டி கழுத்தில் இறங்கியது.

பதறிப் போனான் ராம். சமையலறையில் ஓரத்தில் நின்று கொண்டு ஆதரவற்றவள் போல நின்று அழுபவளை பார்த்து தான் என்ன செய்தோம் என்றே உணராதவன் போல் சில நொடிகள் அதிர்ந்து நின்று விட்டான்.

என்னம்மா? என்னாச்சும்மா? கோமு… அருகே சென்றவனின் கைகளுக்குள் அவள் அகப்படவே தயாரில்லை. விலகினாள், திட்டினாள், ஏதேதோ பிதற்றினாள். எத்தனை நாட்கள் சேகரமோ கண்ணீர் மடையை உடைத்துத் தாண்டியது.

அவளின் அத்தனை கோபத்தையும் தாண்டி அவளை அவன் அணைத்துக் கொண்டான். தொடர்ந்து அவனைக் கோபத்தில் அடித்தாள். அவன் கண்டு கொள்ளவில்லை, இன்னுமாய் இறுக்கி அவளை அணைத்துக் கொண்டான். தான் அவளை எப்போதோ காயப் படுத்தி விட்டோம் எனப் புரிந்தது. எப்போது என்று தான் தெரியவில்லை.

கைக்குள் இருந்தவள் முரண்டினாள், விடவில்லை என்றதும் அவன் தோளில் கடித்து வைத்தாள். அந்த வலியை தாங்கிக் கொண்டான். விடாமல் இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

[center]பிரிவிற்குப் பின்னதான[/center]

[center]அந்த இறுக்கமான ஒற்றை அணைப்பு[/center]

[center]நீள வேண்டும்…[/center]

[center]இனி ஒரு பிரிவு நமக்குள் வராது -என்று[/center]

[center]ஆசுவாசம் அளிக்கும் வரையிலாவது[/center]

[center]நீள வேண்டும்.[/center]

தேம்பி தேம்பி அவன் தோளிலேயே கோமு சரணடைந்தாள். அவள் கண்களின் கண்ணீர் சுரப்பிகள் மெல்ல, மெல்ல தங்கள் சேவையை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தன.

அழுத பின்னர்க் கொஞ்சம் தெளிவுக்கு வந்திருந்தாள். அவனது இறுகிய அணைப்புக்குள் நின்று கொண்டு அவனது வலுவான புஜத்தை வருடின அவள் கரங்கள். அவன் டிசர்ட்டை விலக்கினாள். தான் கோபத்தில் கடித்து வைத்திருந்த அந்த இடத்தை வருடினாள். ராம் அசைவற்றவனாய் நின்று கொண்டிருந்தான்.

அவன் பிடியினின்று விலக முயன்றாள்.

ஆர் யூ ஓகே பேபீ?

ராமின் கண்கள் அவளிடம் விடுத்த கேள்வியைக் காணதது போல விலகினாள். முகம் கழுவி வந்தாள். தன்னை மீறி உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்தியதால் கொஞ்சம் சங்கோஜமாக உணர்ந்தாள். அவனிடமே சரணடைந்தது அவளுக்கு மிகவும் அவமானமாகத் தோன்றிற்று. காயமடைந்த இடத்திலேயே தான் மருத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் குடும்பத்தின் பாடம் என்பதை அவள் இன்னும் அறிந்து இருக்கவில்லை.

முகம் கழுவி இலகுவாய் ஒரு டிசர்டும், ஸ்கர்டும் மாற்றி வந்தாள், ராமும் உடை மாற்றி இருந்தான் அவள் கண்ணீர் கரையாய் இருந்த டிசர்ட்டை விளங்காத பாவத்தோடு கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னைத் தான் அழுததைத் தான் கிண்டலடிக்கிறானோ? எனும் சந்தேகத்தில், ‘தாங்க நான் துவைச்சிடுறேன்’

முனகலாய் சொல்லி தன்னிடம் தன் டிசர்ட்டை வாங்க வந்தவளிடமிருந்து அந்த டீ சர்ட்டை கொடுக்காமல் விலக்கினான். மறுபடி அவள் முகம் கூம்பியது.

அவசரமாய் அந்த டீசர்ட்டை பத்திரப் படுத்தியவன் அவள் முன் போய் நின்றான்.

என்னாச்சு கோமு?

உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.
அதற்குள்ளாக அவள் கண்ணீர் சுரப்பிகள் அடுத்த ரவுண்டுக்கு தயாராக இருந்தன.

இவளை இப்படியே விட முடியாது என அவனுக்குத் தோன்றிற்று.

இரு கைகளிலும் அவளை அள்ளிக் கொண்டான், தங்கள் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அவள் அழுத போது, அவன் அவளைத் தேற்றிய விதத்தில் அவள் மனதிற்குள் பூத்திருந்த நம்பிக்கை விதைகள் அதற்குள்ளாக அவள் முகத்தில் மொட்டு விட்டு சில பூக்களைப் பூத்திருந்தன.

‘என் கணவன் என்னைத் தூக்கிக் கொண்டான் பார்’
எனும் மமதை அவள் கண்களின் தெரித்தது.

தன்னோடு அணைத்தவாறே அவளைக் கட்டிலில் அமர வைத்தவன்,

இப்பவும் நாம பேசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு கோமு, ஆனா, நீ அதுக்குத் தயாரா இல்ல, மனசைப் பொறுத்தவரை ரொம்ப வீக்கா இருக்க, அதனாலதான் சட்டு சட்டுன்னு அழுகை வருது. மறுத்துப் பேச முனைந்தவளை வாயில் விரல் வைத்து அமைதிப் படுத்தினான்.

இன்னும் கொஞ்சம் தூங்கி எழும்பு, பேசலாம்.

அப்போதே காலம் மதியம் தாண்டிக் கொண்டிருக்க, அவன் அலுவல் செல்லும் நேரம் வந்துவிடுமே, தூங்கினால் அடுத்து அடுத்த நாள் அல்லவா அவன் கண்களுக்குப் புலப்படுவான் இவன்.

மனைவியின் பார்வையின் தவிப்பின் அர்த்தம் புரிந்துக் கொண்டவன்,

‘நான் இன்னிக்கு ஆபீஸ் போகலை லீவ் சொல்லிட்டேண்டா…. இன்னிக்கு. வீட்டுல தான் இருப்பேன்’
கொஞ்சமாய் அவள் உள்ளத்தில் ஆசுவாசம் எழுந்தது. அவன் கரங்களைத் தன் கரங்களுக்குள்ளாகப் பொதிந்து கொண்டு அவன் பேச்சு தந்த இதத்தில் கண்ணயர்ந்துப் போனாள் கோமு.

[center]உந்தன் அருகில்[/center]

[center]இருப்பதும்,[/center]

[center]உந்தன் கரங்கள்[/center]

[center]பற்றுவதும்,[/center]

[center]பற்றிய வண்ணம்[/center]

[center]தூங்குவதும்,[/center]

[center]எனது ஒரு ஜென்மத்தின்[/center]

[center]தேடலென்பதை[/center]

[center]ஒருவேளை[/center]

[center]நீ அறியாமல் இருக்கக் கூடும்.[/center]

ம்ஹா…. மூக்கை வருடிய காஃபி வாசனையில்தான் கண்விழித்தாள் கோமு.

பரவால்லியே இனிதான் எழுப்பணும்னு நினைச்சிருந்தேன். முழிச்சிட்டியா?

கையில் இரண்டு கோப்பைகளோடு வந்து கொண்டிருந்தான் ராம்.

தூக்கம் ஒரு அருமருந்து, இருவருக்குமான தனிமையும், அருகாமையும் இன்னொரு அருமருந்து அத்தனை மருந்துகளும் மிகச் சரியாய் வேலை செய்திருக்க இருவர் முகத்திலும் சற்றுத் தெளிவிருந்தது.

தூக்கம் சொக்கும் விழிகளோடு அவன் தந்த காபியை வாங்கிக் கொண்டாள் கோமு.

சியர்ஸ் சொல்லி கோப்பைகளை விளையாட்டாய் கிணிங்க் சத்தம் எழுப்பச் செய்தவனைப் பார்த்து உதடுகள் விரிய, சோபையாய் பெரிய புன்னகை ஒன்றைப் பரவ விட்டாள்.

ஜன்னலிலிருந்து அந்தி மாலை நேரத்து சூரியன் இவர்களது தனிமையை இனிமையாக்க ஆரஞ்சு வண்ண கிரணங்களைப் பொழிவித்தான். ராம் இருந்த இடம் வாகாக அமைய அவன் மேல் அதிகமாய்ச் சூரிய ஒளிப் பட்டு அவன் மிணுங்கினான். உடனே, கோமு மீதமிருந்த காபியை தொண்டைக்குள்ளாகச் சரித்துவிட்டு விளையாட்டாய் அவனை மறைத்தவாறு போய் நின்றுக் கொண்டாள்.

தன் கோப்பையை ஏற்கெனவே அப்புறமாக வைத்திருந்தவன், தன் முன் நின்றவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

சூரியன் அவர்களுள் மலர்வைப் பொழிந்து மறைந்து சென்றான்.
தன் முகத்தில் அவன் தாடியின் சொரசொரப்பை உணர்ந்தவள் விளையாட்டாய் இன்னும் தேய்த்துக் கொண்டாள்.

இப்ப பேசுவோமாடா? கேட்டான் ராம்.

ம்ம்… தலையசைத்தாள், அவள் தலையில் தன் தலையை முட்டிக் கொண்டவன் தன் அணைப்பிற்குள்ளேயே அவளை வைத்திருந்தான்.

ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ குட்டிமா… நீ அழறதைப் பார்த்தா நான் ஏதாச்சும் தப்பு செஞ்சிருக்கேன்னு புரியுது. ஆனா உண்மையா சொல்றேன் அது என்னன்னு புரியலை. எது செஞ்சிருந்தாலும் வேணும்னு செஞ்சிருக்க மாட்டேன். புரியுதா?

ம்ம் கோமு தலையை அசைத்துக் கொண்டாள்.

மற்றதை அப்புறம் பேசுவோம், முதல்ல நீ எதுக்கு அழுத? அதைச் சொல்லு. நான் உன்னை அப்படி என்ன சொன்னேன்? நீ அங்க வந்தப்ப டைல்ஸ்ல தண்ணீர் சிந்தி இருந்துச்சு அத்னாலத்தான் உன்னை நிறுத்தினேன்டா…

அப்படியா? எனும் பார்வையோடு அவனை நோக்கினாள் கோமு.

பிராமிஸா… சத்தியம் செய்யத் தன் கையைக் கழுத்தில் வைக்கச் சென்றவனைத் தடுத்தாள். வேண்டாமெனச் சொல்லி அவனிடமே ஒன்றினாள்.

நான் அன்னிக்கு நம்ம செகெண்ட் மந்த்வர்சரிக்கு month anniversary க்கு உங்க கிட்ட வந்தப்போ அப்படித்தானே தள்ளி விட்டீங்க, அசிங்கமா வேற பேசினீங்க… குரலில் அதே அழுகை பாவம், விட்டால் மறுபடி அழுதுவிடுவாள் போலத் தோன்றியது.

அப்படின்னா நமக்குக் கல்யாணம் ஆகி 2 மாசம் முடிஞ்சிருச்சா?

தன்னையறியாமல் கேட்டவனை ஆங்க்…எனத் திகைத்துப் பார்த்து இருந்தாள் கோமு.

வாயைக் கொடுத்து வம்பு வாங்கிக் கொண்டேனே. இன்னொரு முறை இவளை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுமே? எண்ணிக் கொண்டிருக்கையிலேயே மடியிலிருந்து எழுந்தவளை அழுத்திப் பிடித்து வைத்துக் கொண்டான்.

இங்க பாரு கோமு, நாம முதல்ல ஒரு அக்ரீமெண்ட் போட்டுப்போம். உனக்கு என் மேல எக்கசக்கமா கோபம் இருக்கு, அதான் நாம இப்ப பேச உக்காந்து இருக்கோம். எதுனாலும் இன்னிக்கே பேசி தீர்வு கண்டுக்கணும். நாம பேசிட்டு இருக்கிறப்போ நான் சொல்லறது எது பிடிக்கா விட்டாலும் கூட நீ இந்த இடத்தில இருந்து நகரக் கூடாது. வேணும்னா உனக்குக் கோபம் வரும் போதெல்லாம் எனக்குப் பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்.

அவன் சொன்னதைக் கெட்டு, ‘ம்ம்…என்ன பனிஷ்மென்ட்?’

இந்த முத்தம் கொடுக்கிறது, கட்டிப் பிடிக்கிறது எனத் தொடர்ந்தவனை முறைத்தாள்.

வேனும்னா நீ கடிச்சிக்கோ கோமு, ஒன்னும் சொல்ல மாட்டேன். அவன் சொன்னதும்தான் தான் அவனைக் கடித்து வைத்தது ஞாபகத்திற்கு வர கட்டாயமாய்த் தன்னை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு எழுந்துச் சென்று மருந்து கொண்டு வந்து பூசினாள்.

சரி இங்கே உக்கார்ந்துக்கிறேன் அருகில் அமர்ந்தவளை ‘இல்ல இங்க தன் மடியை காண்பித்தான்.

ஒன்னு வள்ளுசா நம்மளை கண்டுக்கறது கிடையாது, இல்லன்னா இப்படி வந்து பாசத்தப் பொழியுறது… முணுமுணுவென மொழிந்தாள்.

அவள் சொன்னது அவனுக்குக் கேட்காததால் என்ன? எனக் கேட்டவனை மறுபடி முறைத்தாள்.

சரி சரி அங்கேயே உக்காந்துக்கோ, நம்ம திருமண நாளை மறந்துட்டேன். அது தப்புத்தான். அதுக்காகச் சண்டைப் போடாதே… அன்னிக்கு நீ கூடச் சாரி கட்டி இருந்தல்ல. அவசரமா நான் ஆபீஸ்க்கு போக வேண்டி இருந்தது. நீ ஏதோ என்கிட்ட விளையாடுன, அவசரமா நான் போயிட்டேன் அதுதான் ஞாபகம் இருக்கு.

பிடிச்சு தள்ளிவிட்டுட்டு போனீங்க…. ராமின் மெமரி கார்டில் எல்லாம் அழிந்து போயிருக்க அவன் அதற்கு மேல் ஞாபகம் வராமல் திகைத்தான்.

அவசரமா போனப்போ தெரியாம செஞ்சிருப்பேன்டா, அதுக்கா இவ்வளவு அழுகை?

அசிங்கமா வேற பேசினீங்க…

என்ன பேசினேன்?

தயங்கியவள், ‘எனக்கு மூட் இல்லை’ ன்னு சொன்னீங்க நான் என்ன அதுக்கா உங்க கிட்ட வந்தேன்…

ஓ, விளையாட மூட் இல்லைன்னு சொல்லியிருப்பேன் அதுக்கா அழுத? என்றவன் சட்டென்று நின்றான்.

‘ஏய் நீ அந்த மூடை எந்த மூட்னு நினைச்ச?’

மனைவியிடமே பந்தை திருப்ப அவள் திணறினாள்.

சரி விடுங்க,

அதைப் பேச விரும்பாதவள் போல எழும்பினாள். கிடைத்தது வாய்ப்பென்று அவளை இழுத்து மடியில் மறுபடி அமர்த்திக் கொண்டு அணைத்துக் கொண்டான். அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

எனக்கு புரிஞ்சுப் போச்சு. நான் அன்னிக்கு உன் கிட்டே சொன்னதை,‘நீ எதுக்கு என் கிட்ட நெருங்கி வர, எனக்கு அந்த மாதிரி மூட் இல்லைன்னு நான் சொன்னதா உன்னைத் தள்ளி விட்டதா நீ நினைச்சிருக்க இல்ல, அப்படித்தானே?’.

அவள் மௌனமே அவளின் புரிதலைச் சொல்ல,

அப்படியே நான் தப்பா பேசி இருந்தாலும், எனக்கு மூட் வந்தா உன் கிட்டே தானே வருவேன் மடையான்னு? நீ சொல்லி இருக்கணும்ல. அதில என்ன உனக்கு அவமானம்? ம்ம் இதுக்கா உன் மனசை கஷ்டப்படுத்திக் கிட்டு இருந்த?

வினோதமாய் அவனை அவள் பார்த்துக் கொண்டிருக்க, என்ன? எனக் கேட்டான்.

சொல்லுங்கறேன்ல?

இல்ல, உங்க சொல்லுக்கும் செயலுக்கும் எத்தனை வித்தியாசம் இருக்குன்னு யோசிச்சேன்…

எப்படி?

சராசரி கணவனாகத்தான் நடந்துக்கிறீங்க, ஆனால் பேசறதைப் பார்த்தா சம உரிமை மாதிரி பேசறீங்க… அதைத்தான் யோசித்தேன்.

பாலுறவு குறித்த ஒரு வெளிப்படையான பேச்சுவார்த்தை அவர்களுக்குள்ளாக ஆரம்பித்து இருந்தது. ஒவ்வொரு கணவன் மனைவிக்குள்ளும் நிகழ வேண்டிய வெளிப்படையான உரையாடல்.

ஏன் நான் உனக்குச் சம உரிமை தரலியாடா கோமு? என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

தன்னிடம் வெளிப்படையாகப் பேசுகின்றவனை அவளுக்கு இன்னும் மிகவாய் பிடித்துக் கொண்டிருந்தது.

முதலிரவுல என் கிட்ட அனுமதி கேட்டீங்களா? இல்லையே. அதுக்கப்புறமும் கூட எப்போவும் அப்படித்தானே. ஏன் அன்னிக்கு கூட மாதவிலக்காகி இருக்கேன்னு சொல்லியும் நீங்க நான் சொன்னதை முதலில் கேட்கவே இல்லில்ல?

ஏய் கோமும்மா,

சற்று அதிர்ந்துத்தான் போயிருந்தான் ராம்.

ஓ நாம் அவளிடம் கேட்டிருக்க வேண்டுமோ? எனக்கு உரிமையானவள் தானே என்று அவளை ஆட்கொண்டது தவறோ? மனதில் வண்டு குடைந்தது.

அவன் மௌனத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தாள்.

எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ராம், இப்பவும் ரொம்பப் பிடிக்கும், நீங்க மோசம்னு சொல்ல வரலை, மனைவியின் விளக்கத்தில், அதாவது கணவன் வருந்த கூடாதெனும் கரிசனையில் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது. அவள் சொல்லி முடிக்கக் காத்திருந்தான்.

வேற ஒன்னுமில்ல ராம்… தயங்கியவள் தொடர்ந்தாள். என்னைப் பொறுத்த வரைக்கும் ரொம்பக் கட்டுப்பாடா தான் வளர்ந்தேன். சட்டுன்னு தெரியாம கூடத் துணி விலக அம்மா விடமாட்டாங்க. குறிப்பிட்ட வயசுக்கு அப்புறமா வெளியாள் யாரும் வீட்டுக்கு வந்தா துப்பட்டா இல்லாம அம்மா என்னை ஹாலில இருக்கக் கூட விட மாட்டாங்க. உள்ளே விரட்டிருவாங்க.

ம்ம்

அப்படித்தான் எல்லாமே…. திருமணம் ஆகிடுச்சுத்தான், தப்பா நினைக்காதீங்க… ஆனாலும் நீங்க எனக்கு ஒரு வகையில் அந்நியர்தானே? உங்க முன்னால நான் அப்படி உடையில்லாம் இருக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்காதா? என்னோட சவுகரியங்கள், எண்ணங்கள் எல்லாம் பற்றி நீங்களும் யோசிக்கணும்ல? அது என்னவோ எப்பவும் உங்களோட விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி நீங்க என்னை வளைக்கிறதாகவே எனக்குத் தோணுது. நான் உங்களோட பேச, பழக, ஒரே அறையில இருக்கிறது சாதாரணமா எனக்கு உணருற வரைக்கும் கூட நீங்க எனக்கு நேரம் தரலியே?

….

திருமணமாகிடுச்சுன்னா ஒருத்தவங்க மற்றவங்களை, அவங்க விருப்பத்தை, அவங்க சுக துக்கத்தை முன்னிலைப் படுத்தி ‘நீயும், நானும்’ என்று வாழணும்னு என்பதுதான் என் ஆசையா இருந்தது.

நம்ம கல்யாணத்தில நீயும் நானும் இல்ல, நானும் நீயும்னு உங்களை முன்னிலைப் படுத்துற மாதிரிதான் இன்னிக்கு வரை உணர்ந்திருக்கேன்.

உங்களுக்கு ஆபீஸ் வேலையா? வீட்டில இருக்கிறவளை வாரக்கணக்கில மறந்திடுவீங்க. உங்களுக்கு ஏதாவது கவலையா? அப்ப என் கிட்ட வருவீங்க ரிலாக்ஸ் பண்ணிக்க.

ஏய் அதிர்ந்தவனைச் சட்டை செய்யாமல் தொடர்ந்தாள்.

நீங்க நல்லவங்க தான், நான் உங்களோட இருக்கிற தனிப்பட்ட தருணங்கள் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குத்தான். நான் அதை வேணவே வேணாம்னோ தப்புன்னோ சொல்ல வரலை. மணவாழ்வின் ஆதாரமே தாம்பத்யம் தானே. இந்த ஒரு தேவையை மட்டும் தன்னோட இணை கிட்டே இருந்து பெற்றுக் கொள்ளணும்னு நம்ம சமூகம் ஒழுங்குமுறை ஏற்படுத்தி இருக்குது.

நான் என்ன சொல்ல வரேன்னா, அந்த இணைப்பு, கணவன் மனைவிக்கான தேடலான நிகழ்வு, நமக்குள்ள சாதாரணமாக ஒருவர் மேல் ஒருவர் வச்சிருக்கிற அன்பால நடக்கணுமே தவிர, நீங்க டென்ஷன்ல இருக்கிறப்போ ரிலாக்ஸ் செய்கிறதுக்காகக் குடிக்கிற சிகரெட்டுக்கும், ஆல்கஹாலுக்கும் இணையா என்னை நடத்தறது எனக்குப் பிடிக்கலைன்னு நான் சொல்றேன். நீங்க என் கிட்ட அப்படி நடந்துக்கிறப்ப எனக்குக் கஷ்டமா இருக்கும், கொஞ்சம் அவமானமாகவும் கூட…

வாயடைத்துப் போயிருந்தான் ராம்.

நீங்க கொஞ்ச நாளா டென்ஷனாகவே தான் இருந்தீங்க, ஆனா என் கிட்டே எதுவுமே பகிர்ந்துக்கலை. சரி இவ தத்தி, இவளுக்கெங்கே புரியும்னு நினைச்சிருப்பீங்க உதட்டை குழந்தை போலப் பிதுக்கினாள்.

தான் செய்தது தவறுதான் அவன் மனம் அவள் கூறியதை ஆமோதித்தது. அவள் அழாமல் இருப்பதே போதுமாக இருக்கப் பேசவிட்டுக் கொண்டு இருந்தான்.

மேரேஜ் லைப் அது இதுன்னு சொல்றாங்க அது என்ன கட்டில் வரை மட்டும் தானா? உங்களுக்கு ஒரு கஷ்டம்னா என் கிட்ட பகிர்ந்துக்கணும். எனக்குக் கஷ்டம்னா உங்க கிட்ட பகிர்ந்துக்கணும். எங்க இங்கே ஒருத்தர் ஒருத்தரோட முகத்தைப் பார்க்க கூட நேரமில்லைனா…என்னச் சொல்லறது?

அங்கலாய்த்தவளை தலையை வருடி தன் கன்னத்தைச் சாய்த்துக் கொண்டான்…

ம் ம்… அவன் சொன்ன ம்ம் ல் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிடு என்ற தூண்டல் இருந்தது.

அவள் தொடர்ந்தாள்… இன்னிக்கு கூட நான் அழும் போது, கோவப் படும்போது என்னைச் சமாதானப் படுத்தினீங்களே?,… நான் கோபத்தில கடிச்சுக் கூட வச்சிட்டேன் குற்ற உணர்வில் குரல் தேய்ந்தாலும் தொடர்ந்தாள். நான் கடிச்சதையும் பொறுத்துக்கிட்டீங்க, அதுக்கப்புறம் என்னைச் சமாதானப் படுத்த என்னை உங்க கையில தூக்கிட்டு வர்றப்போ, தூங்கி ரிலாக்ஸ் பண்ணு அப்புறம் பேசலாம்னு என் மனசை புரிஞ்சு நடந்துக்கிட்டப்ப நான் எப்படி உணர்ந்தேன் தெரியுமா? இதுவும் கூடக் கணவன் மனைவிக்கு இடையில இருக்க வேண்டிய தாம்பத்யம் தானே?

தான் ஒரு வேகத்தில் நிறையப் பேசி விட்டோமோ என்று தன்னிலை உணர்ந்து கணவன் முகம் பார்த்து நிறுத்தினாள் கோமு.

நிச்சயமாடா? நீ சொன்னது எல்லாமே சரிதான். நான் தான் யோசிக்காம நடந்துக்கிட்டேன். ஸாரிடி

அச்சோ…. இல்ல ராம்… அவன் வாயை மூடினான். நான் பேசிக்கிறேன்.

ம்ம்…

நீ சொன்ன கோணத்தில நான் எப்போவுமே சிந்திக்கலடா, இனி என்னைத் திருத்திக்கிறேன். சரியா? நிச்சயமா நீயும், போதையும் ஒன்னு இல்ல. நீ என் சகதர்மினி, அதே மாதிரி நீ தத்தி அப்படி எல்லாம் நான் ஒருக்காலும் நினைக்கலை… உன் ஞாபகம் இல்லாமலே என்னோட வேலையில மூழ்கிட்டேன் அதுதான் உண்மை. உன் கிட்ட எதுவும் பகிர்ந்துக்க வேண்டாம்னு எல்லாம் எப்பவுமே நான் நினைச்சதில்லை.

நம்ம மனைவி தானே எங்கே போயிட போகிறாள்? என்கிற ஒரு அலட்சிய மனோபாவம் வேணும்னா காரணமாக இருக்கலாம். அதையும் தான் நீ ஒரு நாள் முழுக்க வீட்டுக்கே வராம சில மணி நேரங்களிலேயே புரிய வச்சு, என்னை உள்ளுக்குள்ளே உன்னை இழந்திடுவேனோன்னு நடுங்க வச்சு, இன்னிக்கு தூள்தூளா உடைச்சிட்டியே?

அன்னிக்கு ராத்திரி நான் உன் கிட்ட கோபப் பட்டது தப்புதான். ஆபீஸ்ல ஒரு பொண்ணு அதே மாதிரி விஷயத்தில அதிக ரத்தப் போக்கில மயங்கி விழுந்தப்ப தான் உனக்கு இந்த மாதாந்திர விஷயங்கள் எவ்வளவு வேதனை கொடுக்கும்னு புரிஞ்சது. அன்னிக்கு கூட வந்து உனக்குக் கால்லாம் அமுக்கி விட்டேனே?

நேரம் பார்த்து மனைவியிடம் அம்பு எய்தான்.

எப்ப? ஆச்சரியப்பட்டாள் அவள்.

அடுத்த நாள் ராத்திரி, அப்ப நீ தூங்கிட்டா இருந்த? கிளுக்குன்னு சிரிச்சு வச்சியா? அப்படின்னா முழிச்சிட்டு இருக்கன்னுல்ல நான் நினைச்சேன் அசடு வழிந்தான்.

நீங்க என் மேல கோபமா இருந்தீங்கன்னு தான் நான் மனசுக்குள்ளே வருத்தத்தில இருந்தேன். இது எனக்குத் தெரியவே தெரியாது. சோ ஹாப்பி… அவன் முகம் பற்றி முத்தமிட்டுக் கொண்டாள்.

சண்டைப் போடணும்னா ஒழுங்கா சண்டைப் போடணும், இடையில இடையில இப்படி முத்த கொடுத்து டைவர்ட் ஆக்கக் கூடாது சொன்னவனைக் கண்டு கொள்ளவில்லை.

அப்படின்னா உங்க ஆபீஸ்ல அந்தப் பொண்ணு மயங்கி விழுந்திருக்காவிட்டால் உங்களுக்கு அது தப்புன்னு புரிஞ்சிருக்காதா என்ன? நான் சொல்லிட்டே இருக்கிறேன். நீங்க என்னன்னா புரிஞ்சிக்கவே மாட்டீங்கிறீங்க?

நான் பார்த்த வீடியோக்களில் எல்லாம் ரொம்பப் பீரியட்ஸ் அப்பவும் கூட ரொம்பக் கூலா அதெல்லாம் நடக்கும்டா… அதான் நீ வேணாம்னு மறுக்கவும், நீ ரொம்பச் சீன் போடுறதா எனக்குத் தோணுச்சு.
ஆவென வாய்ப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் கோமு,
வீடியோவா… ச்சீ…

ஏ அதுதான் எங்களோட செக்ஸ் எஜுகேஷன் டி…

ஐயோ என்னால ஏத்துக்கவே முடியாது, உங்களுக்குச் செக்ஸ் எஜீகேஷன் வேணும்னா நல்ல வெப்ச்பைட்ஸ் போய் வாசிச்சிருக்கணும், இல்ல இதுக்குன்னே இருக்கிற டாக்டர்ஸ் கிட்ட கன்சல்ட் செஞ்சிருக்கணும், அதை விட்டுட்டு வீடியோ பார்த்தேன்னு சொல்லறீங்க?…

நான் என்ன செய்யட்டும்னு சொல்லு, ஈசியா கிடைக்கிறதால எல்லாரையும் போலத்தான்டா கோமு…

இன்னிக்கு மெடிக்கல்ல போய்க் கேட்டோம்னா எலிமருந்து கூடத்தான் ஈஸியா கிடைக்குது, அதுக்காக அதை வாங்கிக் குடிப்போமா என்ன?

ராம் தன் காதைப் பிடித்துக் கொண்டான். ‘தப்புத்தான் கோமு, திட்டாம அடிக்காம குணமா வாய்ல சொல்லுடி, இனி இதெல்லாம் செய்ய மாட்டேன்’.

சிச்சுவேசன் டயலாக்…ம்ம்… குணமா சொல்லுறதுக்கு ரொம்பக் குட்டிப் பாப்பா தான் நீங்க…

சரி ஆம்பளைங்க செக்ஸ் எஜீகேஷன் இப்படி இருக்கே, பொண்ணுங்க செக்ஸ் எஜீகேஷன் எப்படி? கேட்டவனிடம்

கதை புக்கு வாசிக்கிறதிலக் கொஞ்சம் கொஞ்சம் புரியும்…

அப்ப அது மட்டும் நல்லதோ?

அவ்வளவு மோசமா எல்லாம் இருக்காது, நல்ல கருத்துகளும் இருக்கும்.

அப்படிங்கிற, பொறு நீ வாசிக்கிற கதையெல்லாம் வாசிச்சுட்டு அந்த நல்ல கருத்தைப் பத்தில்லாம் நாம் இன்னொரு நாள் பேசுவோம்.

கொஞ்சம் திக்கென அதிர்ந்தாலும், கெத்தாக இருந்து கொண்டாள் கோமு. மனதிற்குள், ‘இவரு கதை வாசிச்சிட்டாலும்?’ நக்கல் ஓடியது.

சரி வாசிங்க, எனக்கென்ன?

புக் மட்டும் இல்ல ராம் நாங்க ஊருக்கு போகிறப்போ எல்லாம் அம்மா பக்கத்திலயே நான் இருப்பேனா எங்க பாட்டிலாம் மத்தவங்க கிட்ட பேசும் போது நிறைய விஷயம் பகிர்ந்துப்பாங்க. அதில பாதிக் குடும்ப விவகாரங்களா தான் இருக்கும். அதுவும் கூடப் பெண்களுக்கான செக்ஸ் எஜீகேஷன் தான். அப்பதான் ஒருதடவை யார் கிட்டயோ சொல்லிட்டு இருந்தாங்க பீரியட்ஸ் அப்ப உறவு வச்சுக்கிட்டா ஆண்களுக்கு நோய்கள் வரும்னு. அது என் மனசுல பிக்ஸ் ஆகிடுச்சு. என்னோட உடம்பு வலிகள் இருந்தாலும் கூட அதனால தான் உங்களை அன்னிக்குத் தடுத்தேன்.

ஓ… வெறுமெனே கேட்டுக் கொண்டிருந்தான்.

அதெல்லாம் விடுங்க, உங்களுக்கு இனி புரிஞ்சிருக்கும் இனி நமக்குள்ள இந்தப் பிரச்சனை வராதுன்னு நான் நினைக்கிறேன். ஆனா எனக்கு உங்க மேல ரொம்ப ரொம்பக் கோபம் வந்தது எப்போன்னா குடிச்சிட்டு என் கிட்ட வந்தீங்கள்ல அப்ப தான். குடிகாரன் குடிகாரன் திட்டினாள்.

இங்கே பாரு நீ தந்த கிஸ்ஸீக்காக இதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன். குடிகாரன்னு இன்னொரு முறை சொன்னியோ? பார்த்துக்க மிரட்டினான்.

பின்ன நீங்க நடந்துக்கிட்டதுக்கு உங்களை வேற என்ன சொல்லுவாங்க? எதையோ சொல்ல துவங்கியவள் அவன் கோப முகம் பார்த்து அடங்கினாள்.

அன்னிக்கு நான் எவ்வளவு மனக் கஷ்டத்தில இருந்தேன் தெரியுமா?

அதுக்கு? கஷ்டம் என்னன்னு எல்லாம் என் கிட்ட சொல்லாம, குடிச்சிட்டு வருவீங்களா?

தப்புத்தான்டி விட்டுரு…எனக்கு நேரமே சரியில்ல…ஐயாம் அ லூஸர்…
என்னாச்சு?

இப்பவாவது சொல்லுவீங்களா இல்லை எதையாவது எடுத்து மண்டையை உடைக்கட்டுமா?

எனக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்கலடா?

ஐயோ ஏன்? பதறினாள் கோமு.

செலக்ட் ஆனேன் தான். ஆனால், இப்ப ராமை என் டீமிலிருந்து விடுவிக்க முடியாது. அவனை நம்பி தான் எல்லா வேலையுமே இருக்கு, அப்படி இப்படி நிறைய மோசடி செஞ்சு ஜாஸ் கிரணுக்கு அந்தப் பதவி கொடுக்க வச்சுட்டாங்க.

அச்சோ தலையில் கை வைத்துக் கொண்டாள். அவனுக்கு ஆறுதலாக அணைத்து ஏதோ இப்போதுதான் காயப்பட்டவன் போல அவனை அணைத்து முதுகை நீவி விட்டாள்.

ம்ம்ம் ராமிடம் பெருமூச்செழுந்தது.

விட்ரா… மனைவியைத் தேற்றினான் அவன்.

அதெல்லாம் விட முடியாது… கோபத்தில் இருந்தாள் அவள். நான் இனிமே கோயிலுக்கே வர மாட்டேனே. கடவுளும் என்னை ஏமாத்திட்டார்ல.

ஏ லூசு என்னாச்சு?

தான் தினம் தோறும் செய்யும் பிரார்த்தனைகள், வாரத்திற்கு 2 முறை இருக்கும் உபவாசம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கத் தலையில் அடித்துக் கொண்டான் ராம்.

நீ என்ன கிறுக்கச்சியா டி? கோபத்தில் இரைந்தான்.

என்ன ராம் இப்படிச் சொல்றீங்க?

பின்ன உன்னை என்ன சொல்லுறது? யாரு உன்னை உபவாசம் எல்லாம் இருக்கச் சொல்லுறது? இரு அம்மாவை நீ தினம் டிபன் கொண்டு போகிறியா இல்லையான்னு எல்லாம் இனி செக் செய்யச் சொல்றேன். அதுதானே பார்த்தேன், இவ என்னடா இப்படி மெலிஞ்சு போயிருக்கிறான்னு. உனக்கு ஓவர் லவ்ஸாகிட்டு இல்ல? அதான் கிறுக்கச்சி மாதிரி அலையிற கடுப்படித்தான்

சும்மா சும்மா கிறுக்குன்னு சொன்னா கோபம் வரும் சொல்லிட்டேன்.

நீ செய்ற வேலைக்குப் பின்ன உன்னைப் புகழவா செய்வாங்க?

கல்யாணத்துக்கு முன்ன எப்படி இருந்த? சும்மா ப்ரிட்ஜ்லருந்து எடுத்த ஆப்பிள் போல ப்ரெஷ்ஷா இருப்ப, இப்ப பாரு எண்ணையில பொறிச்செடுத்த மாதிரி வாடிப் போயிருக்க. தன்னையும் கவனிக்கிறதில்ல ஒன்னுமில்ல, உடம்பை கெடுத்து வச்சிருக்க.
தாயே உன்னோட ரெட், பர்ப்பீள் எல்லாக் கலர் லிப்ஸ்டிக்கும் எனக்கு ரொம்பப் பிடிக்கும், நீ எப்பவும் போல இரு, அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதை விட்டுட்டு இன்னிக்கு மாதிரி இருந்தியோ?

எனக்கு மேக் அப் செய்யவே சலிப்பா இருக்கு? எப்ப பாரு நாள் முழுக்கத் தனியா இருந்துகிட்டு…

அது சரி நான் உனக்கு நேரம் ஒதுக்கலை, அது என் தப்பு தான். ஆனா, நான் உன் வாழ்க்கையில வர்றதுக்கு முன்னாடி நீ எதுக்காக நல்லா உடுத்துவ? இந்த ராம்காகவா? உனக்காகத்தானே?

ம்ம்…

இப்பவும் அப்படித்தான் இருக்கணும், எப்பவும் மலர்ச்சியா, தன்னம்பிக்கையா சிரிச்சுட்டே இருக்கணும். இமய மலையையே தலையில நீதான் தூக்கிட்டு வச்சிருக்கிற மாதிரி சோகமா எல்லாம் அலையக் கூடாது.

சரி சரி போதும் ரொம்பப் பேசாதீங்க, இதுக்கு இவர் ஆபீஸ்ஸ்லயே இருந்துருக்கலாம்னு நான் நினைக்க வைக்காதீங்க சொல்லிட்டேன்.

அடிங்க… இவ்வளவு நேரம் நீ பேசறப்போ நான் கேட்கலையா என்ன?.. ஹா ஹாவெனச் சிரித்தான்.

சரி இப்ப உனக்கு என் மேல கோபம் இல்லில்ல?..

இல்லை எனத் தலை அசைத்தாள்.

‘இப்ப உங்க மேல இல்ல எனக்குக் கடவுள் மேலத்தான் கோபம்’

மடியிலிருந்து எழுந்தவள் நான் ராத்திரிக்கு சமைச்சு வைக்கிறேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க.

வேலை செய்து கொண்டே பெருமூச்செறிந்தாள்.

அருகே வந்து அவள் எடுத்து வைத்திருந்த காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தவன்.

இப்ப எதுக்கு இந்தப் பெருமூச்சு?

இன்னிக்கு நாம எவ்வளவு நாள் கழிச்சு உக்கார்ந்து பேசினோம்…

ம்ம்…விளையாட்டாய் அவன் அவள் மூக்கை நிமிண்ட வந்தான்.

மிளகா வெட்டிட்டு கிட்ட வந்தீங்க? மிரட்டினாள் கோமு

ஆமாம், அதுக்கென்ன?

இனி நாளைக்கு நான் ஆபீஸ்க்கு ஓடிருவேன், நீங்க நான் வர்றதுக்கு முன்னாடி ஆபீஸ்க்கு போயிடுவீங்க, ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பார்த்துக்கவே ஒருவாரம் ஆகும், இதில சனி ஞாயிறு களைப்பில தூங்கிட்டு வேற இருப்பீங்க, அந்தத் தூக்கம் தேவைதான். ஆனால், உங்க கூட எங்கே போகணும்னாலும் முடிய மாட்டேங்குது.

நான் அன்னிக்கு ஆபீஸ்லருந்து வீட்டுக்குப் போனதும் அப்பா எவ்வளவு சந்தேகமா கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க தெரியுமா? திருமணம் ஆன பிறகு எப்பவுமே உறவினர்கள் வீட்டுக்கு, நம்ம சொந்தக்கரங்க வீட்டுக்கெல்லாம் கணவனோட போனா தான் மதிப்பு. இல்லன்னா ஏதாச்சும் பிரச்சனையான்னு கதை கட்டிருவாங்க.

கோமு, இனி வேலை குறைஞ்சுடும்டா. எனக்குக் கொடுத்திருந்த புது ப்ராஜெக்டை ஹேண்டோவர்( hand over-ஒப்படைத்தல்) கொடுத்துட்டேன். இனி என் வேலை மட்டும் தான் நான் பார்க்கணும், தினம் ஷிப்ட் முடிஞ்சதும் டான்னு வந்திடுவேன்.

உங்க ஜாஸ் உங்களை வர விடுவாங்களா என்ன?

அதென்ன என் ஜாஸ், போயும் போயும்…தலையை அசைத்துக் கொண்டவன்

அவ என்னை அடுத்தப் பதவி உயர்வு உனக்குத்தான்னு முயலுக்குக் கேரட்டைக் காட்டறது போல ஆசைக் காட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தா என்னிக்கு அவ கிரணை அந்தப் பதவிக்கு வரவைச்சாளோ நான் இனி என் டீம் மட்டும் பார்த்துக்கறேன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன்.

என்னடி நக்கலா?

இல்ல விக்கல், பிக்கல்… தாளிசத்தின் மிளகாய் நெடி மூக்கை தாக்க திணறி செருமினாள்.

ஏண்டி என்ன நினைச்ச அதைச் சொல்லு…இல்ல மண்டைக்குள்ள குடைஞ்சிட்டே இருக்கும். நீ நான் நினைச்ச மாதிரி பூனைக் குட்டி இல்லடி புலிக் குட்டி… என்னமா பேசற?..

இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டவள். நான் என்ன சொல்ல வரேன்னா… இந்த அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்கிறதுக்காகவே பொண்டாட்டி, பெத்தவங்க எல்லாத்தையும் ஏறத்தாழ மறந்து வேலைப் பார்த்துட்டு இருந்தீங்க. உங்களுக்குப் போஸ்ட் கிடைச்சிருந்தா வீட்டுக்கே வந்திருக்க மாட்டீங்க. பேசாம நீங்க உங்க கம்பெனிக்கு தாலி கட்டியிருக்கலாம்.

அதற்குள்ளாகக் காய்கறிகளைக் கூட்டி, உப்பு, மஞ்சள் காரம் சேர்த்து அடுப்பின் வேகத்தைச் சமன் செய்து கைகளைக் கழுவி டவலில் துடைத்துக் கொண்டு திரும்பியவள் காதை திருகினான் ராம்.
ஓய் என்ன பொண்டாட்டியை அடிச்சுக் கொடுமைப் படுத்தறியா?

அடங்க மாட்டேங்கிறாளே… முணுமுணுத்தவன்.

நான் கிஸ்ஸீக்கெல்லாம் பர்மிஷன் கேட்க முடியாதுடி , அது என் இஷ்டம் தான். அவள் உதடுகள் அவன் வசமாகின.

அடுப்படியின் வெப்பம் அவர்களைச் சுற்றியும், அவர்களுக்குள்ளும் உணர்வலையாய் அடித்துக் கொண்டிருந்தன.

முகம் முழுக்க முத்தங்கள் இட்டான். நான் தெரிஞ்சு, தெரியாம எப்பவெல்லாம் உன்னைக் கஷ்டப் படுத்தினேனோ அதுக்காகவெல்லாம் ஸாரி. இனி உன் மனசைப் புரிஞ்சு நடக்க முயற்சி செய்றேன். அப்படியும் நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா எனக்குச் சொல்லிக் கொடு. திருத்திக்குவேன் புரியுதா?

முத்த மழையில் எழுந்த உணர்வலையில் அவளால் மெதுவாய் தலையை ஆட்டி சம்மதம் சொல்ல மட்டுமே முடிந்தது.

ஏய் நீ சொல்லுறதைப் பார்த்தா இந்தத் தோல்வி கூட எனக்கொரு eye opener ( கண் திறப்பு) தான் என்ன சொல்லுற? மனுசனா இருந்தா எல்லாமே பேலன்ஸ் செய்யத் தெரியணும். ஒன்னு பின்னால ஓடி இன்னொன்னை தவற விட்டு என்ன புண்ணியம்? பரவால்லடா நான் அடுத்த IJP ல முயற்சி செய்யறேன். எந்தப் போஸ்ட்ல இருந்தாலும் வீட்டுக்கு தேவையான நேரம் ஒதுக்குறேன்.இப்படி ஒரு பிளவு, பிரிவு நம்ம ரெண்டு பேருக்கு இடையே இனி வரவிட மாட்டேன்.

… அவனோடு இன்னும் இறுகிக் கொண்டாள்.

நான் ஒன்னு சொல்லட்டுமா? உன்னை வீட்டுல அடைச்சு வைக்கிற நோக்கம் எதுவும் இல்லடா ஆனா எனக்குச் சட்டுன்னு டே ஷிப்ட் அமையாது. வாரம் முழுக்க நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம இருக்கிற கான்செப்ட் எனக்கும் ஒத்து வரலை.அதனால தான் சொல்றேன். நீ வேணும்னா உன் வேலையை விட்டுறியா?

நான் வீட்டில இருந்தாலும் என்ன செய்வேன் ராம்? அப்படியும் கூட நீங்க தூங்கிட்டு தானே இருப்பீங்க உங்க கிட்ட பேச பழக எங்கே நேரமிருக்கும்? வேணும்னா நான் நைட் ஷிப்ட் மாறிடலாமான்னு நினைக்கிறேன்.

ஐயோ வேணாண்டா. உடல் நலத்துக்கு அது சரிப்பட்டு வராது. நான் பார்க்கிறேன், சீக்கிரமே டே ஷிப்ட்ல மாறுற மாதிரி வாய்ப்பிருந்தா மாறிடுவேன். எனக்கு வேலை எவ்வளவு முக்கியமோ நீயும் அவ்வளவு முக்கியம். உனக்குப் பிடிக்காத இந்த ஸ்மோக்கிங்க், ட்ரிங்கிங்க்லாம் நான் எனக்கு வரவழைச்சுக்கிற மன அழுத்தத்தினால வர்றது தான். ஸ்ட்ரெஸ் ரிலீப் க்கு ஏதாச்சும் மாற்று கண்டுபிடிக்கணும். உடனே எல்லாம் நடக்காதுடா ஆனா நிச்சயமா என்னை நான் மாத்திக்க முயற்சி செய்யறேன் சொன்னவனை அணைத்துக் கொண்டாள்.
கோமு…

லவ் யூ ராம்

லவ் யூ டூ டா

ராம்…

ம்ம்…

நான் பேசறது , பழகறது எல்லாம் உனக்குப் பிடிக்காத மாதிரி இருக்கா? அதாவது ரொம்ப ஓல்டி மாதிரி… உன் ஆபீஸ் பொண்னுங்க மாதிரி மாடர்னா யோசிக்காம அப்படி எதுவும்…

ஹா ஹாஹா இல்லடா

உண்மைய சொல்லேன்…

நிச்சயமா இல்ல… ஒரே விஷயம் நினைச்சுப்பேன்…

என்ன?

என் பிள்ளைங்க எல்லாம் இப்படி அம்மா கிடைக்கறதுக்கு ரொம்ப லக்கினு’

அவள் முகத்தின் ஒளிர்வு நெடு நேரம் நீடித்து இருந்தது.

இரவு எட்டு மணி போலக் கல்யாணியும், சுதர்சனும் வந்தனர். மருமகளின் முக மலர்வும், மகனின் கலகலப்பும் இரவு சாப்பாட்டு நேரத்தை மகிழ்ச்சிகரமாக ஆக்கியது.

இரவு மறக்க முடியாத இரவாக அத்தம்பதியர்க்கு அமைந்தது.

பகலில் எழுந்தவளை தன் கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டான் ராம்.
ராம் எனக்கு ஒரு ப்ளான் இருக்கு

என்ன ப்ளான்? அவள் முகத்தை மறைத்த முடிக்காட்டை விலக்கி காதிற்குப் பின்னால் தள்ளினான்.

நாம முதல் முறையா சண்டை போட்டுச் சமாதானம் ஆகிருக்கோம்ல, அதுக்கொரு பார்ட்டி…

காலையிலேயே ஜோக்கடிக்கிறடி ஹா ஹா வெனச் சிரித்தவனைக் கிள்ளி வைத்தாள் கோமு.

இதுகூடக் கிச்சு கிச்சு மூட்டுற மாதிரிதான் இருக்கு… இன்னும் சிரிக்க அவன் சிரிப்பை நிறுத்த தன் இதழகளால் அவன் இதழ்களை மூடினாள்.

மீதி செயலை அவன் தனதாக்கிக் கொள்ளச் சில நிமிடங்கள் கழித்து அவள் மீதிருந்து எழுந்து கண்ணடித்தான். இது கூட நல்லாருக்குல்ல?

அடிங்க… நான் என்ன சொன்னாலும் சிரிப்பா உங்களுக்குக் கன்னத்தைத் திருகினாள். நம்ம இரெண்டாவது month anniversary க்கு இன்னும் ஒன்னும் வாங்கித்தரலை. அதுக்கும் நம்ம சண்டை பிளஸ் சமாதானத்துக்கும் சேர்த்து நீங்க ஒரு பார்ட்டி கொடுக்கிறீங்க.
அதில நம்ம ரெண்டு குடும்பம் & நாம ரெண்டு பேரும் மட்டும் தான் புரியுதா?…

ம்ம்…

என்னடி பெருமூச்சு?

நான் வாசிக்கிற கதையில எல்லாம் சண்டை வந்தா சமாதானம் ஆக ரொம்ப நாள் ஆகும். அதே மாதிரி நம்ம சண்டையும் ஆகும், நானும் அட்லீஸ்ட் ஒரு வாரமாவது அம்மா வீட்டில இருக்கலாம்னு ப்ளான் போட்டா இப்படியா தடால்னு காலில விழுந்து சரண்டராவீங்க? கண்ணடித்தாள்.

ஓ உனக்கு இப்படி ஒரு மனக்குறை இருக்கா? ஓய் கோமு நீ உன் கதையில படிக்கிற ஹீரோ மாதிரி நான் இல்லைல்ல. உனக்கு அது வருத்தம் தானே?

ச்சே ச்சே… நீங்க தான் என் ரியல் ஹீரோ… அதெல்லா?ம் கற்பனை. இன்பமும் துன்பமும் மாறி மாறி வர்ற நம்ம வாழ்க்கை தான் நிரந்தரம், இந்தக் கற்பனைகள் எல்லாம் சில மணி நேர கற்பனையான இளைப்பாறுதல் மட்டும் தான்னு நான் உணர்ந்து ரொம்ப நாளாச்சு கண்ணடித்தாள்.

என் போண்டா டீ கல்யாணம் ஆனதும் தத்துவமா பேசறாளே? வாயில் கை வைத்து வியந்தான் ராம்.

உன்னோட ‘நீயும் நானும்’ கவிதை தொகுப்பு ஒரு மார்க்கமா இருந்துச்சே…ம்ம் ஒரே லவ்வாங்கி ம்ம்

அசடு வழிந்தாள், அவனிடம் சரணடைந்தாள், கணவன் கண்டு கொண்ட கவிதைகளை ஒவ்வொன்றாய் சொல்லி அவனுள் கரைந்தாள்.

அன்று கோமு சொன்னபடியே ராம் ஏற்பாடு செய்திருந்தான். இருவரும் தன் பெற்றோருடன் அந்த ரெஸ்டாரெண்டுக்கு சென்றிருந்தனர். அன்று வெள்ளிக்கிழமை கோமு வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து புறப்பட்டு இருந்தாள், ராமோ தனக்கு முக்கியமான வேலை இருக்கின்றதென்று சொல்லி அலுவலகத்தில் லீவு எடுத்திருந்தான். பின்னே, குடும்பத்திற்குச் செலவிடாமல் லீவு என்ற ஒன்று இருப்பதுவும் எதற்காம்?

மன அழுத்தத்திலின்று விடுதலைப் பெற்ற, கவலையற்றவனாய் தன் குடும்பத்தோடு செலவழித்துக் கொண்டிருந்த அந்த நேரம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தன்னுடைய முழுக் கவுனில் தான் நிரம்ப அழகாய் இருப்பதை உணராமல் அடிக்கடி கணவனின் கம்பீரத்தில் கோமுவின் கண்கள் அலைபாய்ந்து கோண்டிருந்தது. அந்தப் புல் பார்மல் உடையில் அவன் வெகு கம்பீரமாக இருந்தான்.

மந்திரா, சுந்தரம் இருவருக்கும் மகளின் பொலிவு நிறைவே.அதிலும் தங்களின் மகிழ்ச்சியில் குடும்பத்தை இணைத்துக் கொண்ட மருமகன் வீட்டார் அன்பு எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. கல்யாணி மந்திராவிடம் கதை விட்டுக் கொண்டு இருக்கச் சுந்தரமும் சுதர்சனும் உலக அரசியலை விவாதிக்க ஆரம்பித்து இருந்தனர்.

அம்மா, அப்பா, அத்தை, மாமா இங்க இருங்க. அங்க உக்காருங்க என அவர்களைத் தொல்லை செய்து கோமு செல்ஃபீக்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தாள். பல படங்களை எல்லோரையும் விட உயரமாக இருந்த ராமை எடுக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

போட்டொ எடுக்க முயலுகையில் ராமின் அலைபேசி ஒலித்தது. அனைவரும் வீட்டுக்கு புறப்பட ஆயத்தமாக இருந்ததால் அவன் பேசி வரும் வரையில் தாமதித்தனர்.

போன் பேசி வந்தவன் முகம் உணர்வுக் குவியலாய் இருந்தது.

‘என்னாச்சு ராம்?’ அருகில் சென்றாள் கோமு.

தேங்க்ஸ்டா கோமூ பெரியவர்கள் முன்பே அவளை அணைத்து அவள் தலையில் முத்தமிட்டான் ராம்.

வெட்கமாய் விலகியவளை இணைத்து நடந்து கொண்டு,

பெரியவர்களிடம் சென்றவன் எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ்
பெரியவர்கள் ஆர்வமாய்ப் பார்க்க,

இப்பதான் ஹெச் ஆர்லருந்து போன் வந்தது.வரும் வாரத்தில இருந்து நான் அசிஸ்டெண்ட் மேனேஜரா பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறேன்.

கோமு வியப்பில் சந்தோஷத்தில் தலையில் கால் பாவாமல் நின்றாள். அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.
சூப்பர் சூப்பர் ராம் கங்கிராட்ஸ்

பெரியவர்களும் மனமார வாழ்த்தினர்.

தன் அறைக்கு இருவரும் எப்படி வந்தார்கள் என்றே சொல்ல முடியவில்லை. அப்படி ஒரு மகிழ்ச்சியைச் சமீபத்தில் அனுபவித்ததாய் அவர்களுக்கு ஞாபகம் இல்லை.

ஐயாம் சோ ஹாப்பி ராம்… குதித்தாள், சிரித்தாள், கைத்தட்டினாள். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள்.

இந்த ராம்காக அந்த ஸ்ரீராம் பேரை நோட்டு புக்கு நிறைய எழுதி வேண்டின இல்ல? உபவாசம் வச்ச இல்ல? அதான் உனக்காகப் பாவம் பார்த்து எனக்குப் போஸ்ட் கிடைச்சிட்டு. ஒருவேளை உன் கோபத்தைப் பார்த்து உன் கடவுள் மிரண்டுட்டார் போலிருக்கு ஹா ஹா.

அச்சோ ராம், அது உன் திறமைக்குக் கிடைச்ச அங்கீகாரம் அதை ஏன் என்னால கிடைச்சதுன்னு சொல்லுற? சரி இப்ப சொல்லு? அதுதான் அந்தக் கிரணுக்குப் பதவி கொடுத்திட்டாங்கள்ல அப்புறம் உனக்கு எப்படி?

அந்த லெட்டர் அவனுக்குக் கொடுக்கிறதா இருந்தாங்களாம் கோமு, ஆனா அவன் 2 நாளா ஆபீஸ்க்கே போகலியாம்.

ஓ… ஏனாம்?

அவனுக்கு வேற வேலை ஏற்கெனவே கிடைச்சிருக்கு, அதில சம்பளம் அதிகம். அதே நேரம் இங்கேயும் பதவி உயர்வுன்னு வந்ததும் குழம்பி போயிருப்பான் போலிருக்கு.

ம்ம்…

கடைசில இனி நான் ஆபீஸ் வரமாட்டேன்னு சொல்லி ஆப்ஸ்காண்ட் ஆகிட்டான். பொதுவா நோட்டீஸ் கொடுத்து ஒரு மாதம் கழிச்சு வேலையை விட்டு நிக்கிறதுதான் ரூல், ஆனா அவன் தன்னோட சுய நலத்துக்காக அந்த ரூலையும் பின்பற்றலை. அவனுக்காக என்னன்னவொ செஞ்ச ஜாஸீக்கு இது பெரிய அடியா இருக்கும். எல்லோரும் அவ கிட்ட தானே விபரம் கேட்பாங்க.

ம்ம்… என் ராமை தொந்தரவு பண்ணினா இல்ல, அவளுக்கு இது நல்லா வேணும்.

விடுறா… இப்ப ஆபீஸ்ல உடனெ அசிஸ்டெண்ட் மேனேஜர் பொறுப்பை ஏத்துக்க ஆள் வேணும் என்றதும் கிரணுக்கு முன்பாகவே ஏற்கெனவே தேர்வாகி இருந்த என் பேரில அந்த ஆர்டரை தயார் பண்ணிட்டாங்க. நான் இன்னிக்கு லீவுன்னதும் எனக்குப் போன் பண்ணி விபரம் சொல்லிட்டான் சுரேஷ்.

வாவ்… அந்தப் பதவி உங்களுக்காகவே இருந்திருக்கு ராம், அதான் லெட்டர் உங்க பேர்லயே வந்துருக்கு … லவ்லி

எல்லாவற்றையும் விட ஒரு இன்னொரு குட் நியூஸ் இருக்கு தெரியுமா?

ம்ம்

நான் அசிஸ்டெண்ட் மேனேஜரா இனி வேலை செய்யும் போது டைரெக்டா எங்க சாரா மேடம்கு ரிப்போர்டிங்க்…இனி ஜாஸ் என்னை ஒன்னுமே செய்ய முடியாது. அடைச்சிருந்த அத்தனை பாதையும் திறந்த மாதிரி ஒரு உணர்வுடா…சீக்கிரமே அடுத்தடுத்த பதவி உயர்வுகளை நான் அடைய முயற்சி செய்வேன். நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். தன் மகிழ்ச்சியை மனைவியிடம் முத்தங்களாய்க் கொட்டினான்.

நீ இன்னிக்கு இந்த ட்ரெஸ்ல எவ்வளவு அழகா இருக்கத் தெரியுமா என் அழகி… ரசித்து ரசித்துப் பாராட்டினான்.

கோமு அந்தத் தருணத்தை மௌனமாய் ரசித்தாள்

ஒரு விஷய்ம் சொல்லட்டுமா?

ம்ம்…

நான் இன்னிக்கு முழுவதும் ஒரு நேரம் கூட ஸ்மோக் செய்யல, குடிக்கவும் இல்ல…

ம்ம்

என்ன ம்ம்…

இல்ல உங்களோட இந்தச் சாதனைக்கு உங்க சிலையை எங்க நிறுவலாம்?னு யோசிச்சுட்டு இருக்கேன்…

முறைத்தான்.

Freedom park ப்ரீடம் பார்க்ல உங்களுக்கு ஒரு சிலை வைப்போமா?

ஏட்டி கிண்டலா பண்ணுற… கோபமும் வேகமுமாய் அவளிடம் பாய்ந்தான். ஏனென்றால் ப்ரீடம் பார்க் என்பது முன்பு ஜெயிலாக இருந்த ஒரு இடம்.

ஹா ஹா அதான் பர்மிஷன் கேட்கிறேன்ல? அது கூடப் புரியாம?…

அதான் கொடுத்துட்டேன்ல…

கலகலவென்று சிரித்தாள் கோமு

என்னை அலைய விடுறியா உன்னை என்ன செய்யறேன்னு பாரு…
சரசமும் சிணுங்கலுமாய், சங்கீத சிரிப்புமாய், நீயும் நானும் என ஒருவர் மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கையாய் வாழ்வதற்கு அவர்கள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். இப்புரிதல் அவர்கள் வாழ்வை வாழ் நாள் முழுக்க உயிர்ப்பாய் வைத்திருக்கும்.


அணைப்பிற்கு நீ வேண்டும்

ஆறுதலுக்கு நீ வேண்டும்.

அகிலத்தின் முன் நான் ஏற்கும்

உயர்வுக்கும், தாழ்வுக்கும் கூட

நீயே துணை வேண்டும்.

என் குறை நீ பொறுக்க வேண்டும்

ஆசானாய் நீ எனை திருத்த வேண்டும்.

ஒருவருக்கொருவர் நாடும்

அனைத்திலும்

காலம்காலமாய் இணைபிரியாது

நாம் இருக்க வேண்டும்.

நீயும் நானுமாய்.

நிறைவுற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here