2. நீயும் நானும்

0
843
Neeyum Naanum

அத்தியாயம் 2

உனைக் கண்ட நாள் முதலாய்

மயக்கம் கொண்டேனடா…

பார்க்கும் இடமெல்லாம்

நீ… நீ… நீ மட்டுமே –எனக்குள்ளே

என்ன மாயம் செய்து சென்றாயடா?

வழக்கமாய்ச் சோம்பலாய் விடியும் திங்கள் கிழமை அன்று கோமுவுக்கு அதீத உற்சாகத்தில் துவங்கி இருந்தது. பார்க்குமிடமெல்லாம் அவளுக்கு ராம் மட்டுமெ தெரிந்தான். வழக்கமாய் ரிசப்ஷனில் இருக்கும் போது வெகு கவனமாய்ப் போன் கால்களைக் கையாளுபவள் இன்று திண்டாடினாள். இரண்டு முறை அவளையறியாமல் ‘ராம்’ என எதிரில் இருந்த யாரோவை அழைத்து விட்டுச் சமாளித்துக் கொண்டாள்.

அவளது கற்பனைகளின், கனவுகளின் நாயகனையே நேரில் கண்ட பின்னர் வேறு சிந்தனைகள்தான் அவளுக்கு ஏது?.

சிதம்பரம் ஞாயிறு காலையே மகளோடு அமர்ந்து, தான் அவளுக்குப் பார்த்திருக்கின்ற மணமகன் குறித்துச் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவள் அவனது பெயரைக் கேட்டதுமே அவன் பால் முற்றிலுமாய்ச் சாய்ந்து விட்டாள்.

எந்த ஒரு பெண்ணுக்குமே தன்னுடையவன் பிற பெண்களை நாடாதவனாகத் தன்னை மட்டுமே நேசிப்பவனாக இருக்க வேண்டுமென்ற நியாயமான ஆசைகள் உண்டல்லவா?. தன்னைப் பெண் பார்க்க வருகின்றவன் ஏக பத்தினி விரதரான ஸ்ரீராமனின் பெயரைக் கொண்டுள்ளது போலவே, நிஜத்திலும் இருப்பானா? எனும் கேள்வி அவள் மனதில் எழுந்து அடங்கியது. ஆனால், அதுவே அவனை நிஜத்தில் பார்த்த போதோ அவனது நேர் கொண்ட பார்வையில் ஆஹா நான் எதிர்பார்த்த மணாளன் இவன் தான் என மனம் ஏகமாய்க் குதூகலித்தது. பெண்களுக்கே உரித்தான சூட்சும புத்திக்கு அவளுக்கு அவன் இயல்பு புலப்பட்டது, அது மட்டுமல்லாமல் உள்ளுணர்வும் கூட இவன் தான் உன் மணாளன் என்று ஏதேதோ உணர்த்திச் சென்றது.

அன்று ஞாயிறு மாலை நேரம் சொன்னபடியே சரியான நேரத்திற்கு ராம் மற்றும் அவன் பெற்றோர் கோமுவை பெண் பார்க்க வந்து விட்டனர். இரவு பணி காரணமாக லீவு நாட்களில் முழு நாளும் தூங்கியே பழகியவனை அவன் பெற்றோர் கல்யாணி மற்றும் சுதர்சன் வலுக்கட்டாயமாய் எழுப்பிக் கொண்டு வந்திருந்தனர்.

இரு குடும்பங்களும் பல வருடங்களாகப் பெங்களூருவில் வசித்திருந்தும் கூட ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் தான். சில நண்பர்கள் மூலமாக வரனை குறித்து அறிந்து அலைபேசியில் பேசி இன்று முதன் முறை சந்திக்கின்றார்கள் என்பதால் முதலில் பூர்வீகம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஏதோ ஒரு தூரத்து உறவினர் மூலம் உறவு தான் என்று தெரிய வரவும் சகஜமாய்ச் சிரித்து அளவளாவினர்.

அப்போதுதான் கோமுவை அழைத்து வரச் சொல்லவும் அவளும் எளிமையாய் சுடிதாரில் வந்தாள். முகத்தை அத்தனை நிறமிகளாலும் அலங்கரித்திருந்தாள், அழகாய் இருந்தாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்தவனுக்குச் சட்டென்று அவளிடம் விசேஷமாய் எதுவும் தோன்றவில்லை. அவனோடு பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் இவ்வாறு தான் இருப்பார்கள் அல்லவா?. எப்போது கேமெரா மேன் ரெடி, ஸ்டார்ட், கேமெரா என்று சொன்னதும் நடிக்கத் தயாராக இருப்பது போன்ற முழு மேக் அப்புடனும், போலியான புன்னகையுடனும் வலம் வருபவர்களை அவன் அலுவலகத்தில் அதிகமாய்ச் சந்தித்தே இருக்கிறான்.

பெரும்பாலானவர்கள் மிகப் போலியான பெண்களாகவே இருப்பர். ஓரிரண்டு நல்ல நட்புக்களும் அவனுக்கு உண்டு தான் ஆனாலும், அவனால் ஏனோ நெருங்கி பழக முடிவதில்லை. தனக்கான பெண் பார்த்தலிலும் இப்படி ஒரு பெண்ணை அவன் தேடி இருக்கவில்லை. இது சரிப்பட்டு வராது என்றுதான் அவனுக்கு முதன் முதல் தோன்றியது.

இரண்டு பேரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளட்டுமே என இருவர் பெற்றோரும் அபிப்ராயப்பட மொட்டை மாடியில் வெயிலின் மறைப்பிற்காய் கூரை வேய்ந்திருந்த ஓரத்தில் இருவரும் சென்று நின்றனர். அது சற்றே வெயில் தணிந்திருந்த நேரம். சூரியன் இளமஞ்சள் கிரணங்களால் உலகு முழுவதையும் வசியம் செய்து கொண்டிருந்தான். அவ்வசியத்திற்குப் புதிதாய் சந்தித்துக் கொண்டிருந்த இருவரும் ஆட்பட்டனர் போலும்.

‘வாங்க’ இனிமையான அந்தக் குரலால் முதன் முறை வசீகரிக்கப் பட்டான் ராம். இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் பார்க்கா பொழுதில் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர நேரில் கண்ணோடு கண் கலந்து இதுவரை பார்த்திருக்கவில்லை.

வாங்க என்றவளின் குரலில் மதிமயங்கிப் போனவன் பார்வையில் கனிவும் அன்பும் மிக்க அவள் கண்கள் மாட்டிக் கொண்டன. அது மட்டுமா அந்த இனிய புன்னகையில் குவிந்து நின்ற கன்னங்களும், சற்றே விரிந்த அழகு இதழ்களும் என மொத்தமாய் அவன் விழிக்கு விருந்தாகி நின்றாள்.

நிச்சயமாய் இவள் போலியானவள் அல்ல. நிஜமாய்ச் சிரிக்கின்றாள். மனதில் தொடங்கும் புன்னகை கண்களில் வந்தல்லவா முடிவடைகின்றது. போலியான மக்களோடு நாள் முழுவதும் பழகி சலித்துப் போய் வீடு திரும்புகையில் இவளது ஒற்றைப் பார்வை நிச்சயமாய் அவனது மனதிற்கு அமைதி அளிக்க வல்லது என உணர்ந்தான்.

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஏற்ற விதமான எதிர் வினை உண்டாமே? இங்கு அது போலவே கோமுவின் இனிமையான வரவேற்பிற்கும், புன்னகைக்கும் பதிலாக ராமின் அதரங்கள் விரிய வசீகரப் புன்னகை ஒன்று வெளிப்பட்டது.

சிறிது சிறிதாய் பேச ஆரம்பித்தவர்கள் சகஜமானார்கள். அவர்களுக்குள்ளே அந்தச் சில நிமிடங்களின் சந்திப்பின் காரணமாகவே இயல்பானதொரு நட்புணர்வும், இலகு தன்மையும் தோன்றி விட்டிருந்தது.

அப்புறம் நாம கீழே போவோமா? அதே இனிய குரல் அவனை அவர்கள் தனிமை உலகினின்று நிஜமான உலகிற்கு இழுக்க, முறுவலித்தான் அவன்.

என்னாச்சு? அவன் முறுவலின் காரணம் அறியாமல் கேட்டவளுக்கு ஒன்றுமில்லையென்பதாகத் தலையசைத்தவன்,

நீ என் கிட்டே கேட்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சா?

தன் சிறு நெற்றி சுருங்க தலை சாய்த்து அவனையே பார்த்தாள் அவள்.

அவளது கையிலிருந்த மொபைலை வாங்கித் தன் எண்ணை அழுத்தி தனக்கே அழைப்பு விடுத்து, அவளுக்குத் தெரியாத வண்ணம் அவள் பெயரை ரகசியமாய்ச் சேமித்துப் பளீரெனப் புன்னகை துலங்க அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

ஏதோ கேட்கும் அவசரத்தில் அவன் கரத்தை பற்றிக் கொண்டாள் கோமு. சட்டெனத் தன் கை மீது படிந்த அந்த மென் கையைப் பார்த்தவன் கண்கள் மையலுற்றன. அந்த உரிமைப் பிடி அவனுக்கு உள்ளூர ஏகத்திற்குமாய் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனை அவள் விடுவிக்கவே கூடாதென மனம் விரும்பியது. மனதில் எழுந்த உவகையை மறைத்தவன் போல,

என்னவோ அவனிடம் பேசுவதற்காகவே அவள் அவன் கைகளைப் பிடித்தாற் போல அலட்டிக் கொள்ளாமல்

‘அதான் என் நம்பர் தந்திருக்கேன்ல, ப்ரீ டைமில் பேசலாம்’ என்றான்.

‘இல்ல’ அவசரத்தில் கையைப் பற்றிக் கொண்டவள் தன் செயலால் நாவை கடித்துக் கொண்டு பரிதாபமாய் விழித்தாள். தன் கையை விலக்க அவள் முயலவும் அவள் உள்ளங்கையோடு தன் உள்ளங்கையைக் கோர்த்துக் கொண்டான் அவன்.

என்ன? என்ன கேட்க வந்த? விஷமமாய்ச் சிரித்தான்.

நீங்க என் பேரை எப்படிச் சேவ் பண்ணியிருக்கீங்கன்னு பார்க்கணும்.அவன் உள்ளங்கையின் வெம்மையில் வெந்துக் கொண்டிருந்தாள் அவள் அதனால் வார்த்தைகள் தந்தியடித்தன.

அதான் கீழே போகணும்னு சொன்னேல்ல போகும் போது காட்டுறேன். அவள் முகம் பார்த்து அவன் சிரிக்க, தன்னைக் கிண்டல் செய்வதாகவே பட்டது அவளுக்கு, படிகளில் இறங்குகையில் வலிந்து கரத்தை பிரித்தெடுத்தாள் கோமு.

இப்ப என் நம்பருக்கு டயல் செஞ்சுப் பாரேன்.

ஆமாம்ல, சட்டென மூளை வேலை செய்யவும் தான் தன் மொபைல் ஹிஸ்டரிக்குப் போய்க் கடைசியாக அழைப்பு விடுத்திருந்த எண்ணை மறுபடி அழுத்தினாள். இப்போது அவர்கள் கடைசிப் படிகளில் வந்திருந்தனர். அவர்களுக்கிடையேயான இடைவெளி மிகவும் நாகரீகமாக மாறி இருந்தது.

அந்த இடைவெளியினின்று அவன் மொபைலை தூக்கி காட்டினான். My ‘Make up queen’ என்ற அவளுக்கான அந்தப் பெயர் சூட்டலில் எதிரில் அவர்கள் பெற்றோர்கள் தெரிய, பல்லைக் கடித்தாள் அவள். அவனது My எனும் உரிமையில் வெட்கமும், make up queen எனும் சீண்டலில் கோபமுமாக அவளது முகச் சிவப்பு அவனுக்குச் சிரிப்பையே ஏற்படுத்தியது.

‘கொஞ்சம் பெயிண்டை குறைச்சுக்கோம்மா தாயே, பயம்ம்ம்மா இருக்கு’ என மற்றவருக்குக் கேட்காதவண்ணமாய்ச் சீண்டி விட்டு அவன் நகர்ந்து விட அவள் திண்டாடிப் போனாள். சில நிமிடங்களுக்கு முன்னர் ஒருவரை ஒருவர் அறியாதவராக இருந்தவர்கள் தாம். ஆனால், இப்போதோ இருவருக்குள்ளும் எதிர்பாராமல் மிக நெருக்கமான புதுச் சொந்தமொன்று உருவாகி இருந்தது.

சட்டென்று தன் கனவு கலைந்து நின்றாள் கோமு. சுற்றிலும் இருந்த காலி காபி கோப்பைகள், பஜ்ஜி, சொஜ்ஜி மிச்ச மீதிகள் கண்ணில் பட அம்மாவோடு சேர்ந்து ஹாலை சுத்த படுத்தினாள் அவள்.

தான் கண்ட பகற் கனவை எண்ணி மனதிற்குள்ளாக நகைத்துக் கொண்டாள். அபார்ட்மெண்ட் வாசியான அவளுக்குத் தான் கூரை வேய்ந்த மாடி வீட்டில் தான் ராமை சந்திப்பதான அந்தத் தன் மனதின் கற்பனையை எண்ணி தனிமையில் மிகவும் சிரிப்பு வந்தது.

தாங்கள் இருவரும் தனிமையில் சந்திக்க ஏன் வாய்ப்பு கிட்டவில்லை? என்று மனதிற்கு மிகவும் ஏக்கமாகவும் கூட இருந்தது. இவையெல்லாம் கதைகளில் மட்டும்தானா? பெருமூச்செழுந்தது. எங்கள் இருவரையும் தனிமையில் பேச விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உதட்டை பிதுக்கிக் கொண்டாள்.

கதையில் வருவது போல நிஜத்தில் இருவரையும் தனிமையில் பேச விடமாட்டார்களா என்ன? பேச விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?… ம்ம் என்று சிந்தித்தவளுக்குக் கனவில் வந்த மொட்டை மாடி எக்ஸெட்ரா எக்ஸெட்ரா எல்லாம் தான் வாசித்த ஒரு நாவலின் விளைவே என அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

என் ராம் மனதிற்குள்ளாகச் சொல்லிக் கொண்டாள் அவள், அவனது கண்ணியமான பார்வை அவளைக் கவர்ந்து விட்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பேசிய விதத்தில் அவர்களுக்கும் இந்த வரன் மிகப் பிடித்து விட்டிருந்தாற் போலத் தோன்றியது. என் வருங்கால மணாளன் இவன் தான் என அவனைக் குறித்தே எண்ணிக் கொண்டிருந்த போதுதான், இது ராம் போன் நம்பர் இருவரும் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அப்பா ராமின் மொபைல் நம்பரை அவளிடம் தந்தது ஞாபகத்திற்கு வந்தது. தனக்கு அவனது எண் கிடைத்தது போல அவனுக்கும் என்னுடைய அலைபேசி எண் கொடுத்திருப்பார்கள் இல்லையா? அவன் என்னிடம் பேசினால் என்னவாம்? மனம் சுணங்கியது. வராத தூக்கத்தை வலிந்து வரவழைக்க, கண்ணை இறுக்க மூடி தூங்கினாள்.

அடுத்த நாள் திங்கள் கிழமைக்கே உரிய பரபரப்போடு ஆரம்பித்து விட்டிருந்தது.கோமுவோ அவளது வண்ணமயமான கனவுகளில் ஆழ்ந்திருந்தாள்.

ராம் அவளுடன் பேசாவிட்டால் என்ன? நாம் பேசுவோமே என்று எண்ணியவள் காலையில் அவனுக்கு வாட்சப்பில் குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்பி வைத்திருந்தாள். நாள் முழுவதும் அவனிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்த்தவளாய் இருந்தாள். அந்தத் தவிப்பில்தான் ரிசெப்ஷனில் இரு முறை போன் அட்டெண்ட் செய்கையில் ராம் என்று தன்னையறியாமல் யாரையோ அழைக்கப் போகக் கடைசி நிமிடத்தில் சுதாரித்தாள் அவள்.

வேலையிலிருந்து புறப்படும் சாயும்கால நேரம் ராம் அவளுக்குப் பதிலுக்குக் குட்மார்னிங்க் எனும் மெசேஜ் அனுப்பி வைத்திருந்தான்.

இப்போது குட்மார்னிங்கா? பக்கெனச் சிரிப்பு வந்தாலும், அவனைப் பொருத்தவரையில் இது அவனுக்குப் பகல்தானே. இனிதான் அலுவலுக்குச் சென்று வேலையை ஆரம்பிக்கப் போகிறான் என்று ‘வெரி குட் மார்னிங்க், ஹேவ் அ நைஸ் டே’ என வாழ்த்து அனுப்பினாள்.

ராம் அவசரமாக அலுவலகத்தின் உட்புகுந்தான். ஹாய், ஹாய் என்ற வண்ணம் எதிர் கொண்ட அலுவலக நட்புகளுக்கு இன்முகமாகப் பேசி கடந்து சென்றவன் அவசரமாய்க் கணிணியை இயக்கினான். அவன் அன்றைக்கு அவன் அனுப்பி வைக்க வேண்டிய ரிப்போர்ட்டுகள் மளமளவெனத் தயாராகின.

புத்துணர்ச்சியாக உணர்ந்தான். முன் தினம் சந்தித்தவள் கண் முன் நிழலாடினாள். முதலில் அவளைப் பார்க்கையில் விசேஷமாய்த் தோன்றாவிட்டாலும் அவளது பாவனைகளினின்று அவளது எளிய குணம் புலப்பட்டது, மிகப் பிடித்தும் போனது. நெல்லிக்காய் சுவை போல முன்னர்ப் பழகாத ருசி இப்போது ஒவ்வொரு முறையும் நெஞ்சில் தித்தித்தது. அவன் அம்மா அவளை அருகே அமர்த்தி அவளுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவன் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் பேச்சு, அவள் அழகு, இயல்பான சிரிப்பு என அவள் தன்னுடைய அலுவலகத்தில் பார்த்த பெண்களைப் போல அல்லாமல் கனிவானவளாகத் தெரிந்தாள். மனதிற்குள்ளாக நல்லதொரு எண்ணம் ஏற்பட்டது அப்போது தான். ஒரு நாளுக்குள்ளாக அவனது மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள். அவன் இதுவரையில் இந்த அளவிற்குத் தன் உள்ளத்துக்கு நெருக்கமாக யாரையும் உணர்ந்ததில்லை. ‘கோம்ளி” மனதிற்குள்ளாக உச்சரித்துக் கொண்டான் வெகுவாய் இனித்தது.

அவளுக்குத் தெரியாமல் அவளது வாட்ஸ ப்ரொபைல் பிக்சர் எடுத்து தன் கேலரியில் வைத்திருந்தான். அது அவனது மனம் கொள்ளை கொள்ளும் சிரிப்பைக் கொண்ட புகைப் படம். மற்றவருக்குத் தெரியாத வண்ணம் அவள் புகைப்படத்தைப் பார்த்தவன் ‘ராம்’ எனும் அந்தக் கம்பீரக் குரலுக்குத் திரும்பினான்.

அங்கே கன்னங்கரிய நிறத்தில், பெரிய உருவத்தோடு, மாடர்ன் என்ற எண்ணத்தில் பொருந்தியும், பொருந்தாமலும் உடுத்தி இருந்த லேட்டஸ்ட் ப்ராண்டட் உடையோடு கையில் லேப்டாப்பை சுமந்தவளாய் நின்றுக் கொண்டிருந்தாள் ஜாஸ்மின். அவள் ராமின் உயரதிகாரி. அவளது முகம் மட்டும் கருப்பாக இருந்திருந்தால் பரவாயில்லை, மனமும் அப்படியே இருந்து தொலைத்து விட்டது இங்கே அது தான் பிரச்சனை.

ஜாஸ்மின் கடந்த 10 வருடங்களாக அந்த அலுவலகத்தில் குப்பை கொட்டுபவள். அதனாலேயே நிறையப் பேரை அவளுக்குத் தெரியும். ஏதேதோ முயற்சி செய்து சீனியர் மேனேஜர் அளவிற்குத் தன்னை உயர்த்திக் கொண்டிருந்தாள். ஆன்சைட்டிற்குச் சில முறை சென்று வந்த பின்னர் அவளது தாண்டவங்கள் கூடிப் போயிருந்தன.

இன்றைய தேதியில் ராமின் முன்னேற்றத்தை நிர்மாணிப்பதும் அவள் தான். இது நாள் வரையிலும் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பவளும் அவள்தான். வேலையில் தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் அவளைத் திருப்தி படுத்த முடியாது. கடலளவு வேலை செய்தாலும் கடுகளவாவது குறையைத் தேடி கண்டு பிடித்து அதைப் பற்றி மட்டும் பேசும் வினோத ஜந்து அவள். தன் பேச்சுத் திறமையால் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் திறமை படைத்தவள்.

ஹேவ் யூ செண்ட் மீ தோஸ் ரிப்போர்ட்ஸ்…. (அந்த ரிப்போர்ட்களை நீ எனக்கு அனுப்பி விட்டாயா?)

யெஸ் ஜாஸ் ஜஸ்ட் சென்ட் (ஆம், அனுப்பி விட்டேனே) புன்னகைத்தான் ராம்.

‘ப்ளீஸ் கம், வீ ஹேவ் அ க்விக் மீட் (வா, ஒரு சின்ன மீட்டிங்க் இருக்

கிறது)’

சிஸ்டமை லாக் செய்தவன் அவளைப் பின் தொடர்ந்தான், அவனுக்கு ஏதோ ஒன்று நெருடியது, மனதிற்குள் சரியாகப் படவில்லை. ஒரு சிலரைப் பார்த்ததும் பேச பழகத் தோன்றும், உற்சாகமாக இருக்கும். ஆனால், ஒரு சிலரை பார்க்கவே கூடாதென்று தோன்றும், அவர்களோடு பேச பழகவே உள்ளுக்குள்ளாக எரிச்சல் சிடுசிடுப்பு மூளும். ஜாஸ் எனப்படும் ஜாஸ்மின் இரண்டாம் வகையைச் சேர்ந்த ஜந்து.

கான்பெரன்ஸ் ரூமில் சென்றதும் தன் லேப்டாப்பை வைத்து நிமிர்ந்தவள் போலிப் புன்னகை ஒன்றை மிதப்பாய் தெரிக்க விட்டாள். ராமும் புன்னகைத்தான், பொதுவாக அவனது டீமின் செயல்பாடுகளை விசாரித்தவள். அவனது டீமில் மிகச் சிறப்பாய்ச் செயல்படும் 20 பேரை விட்டுவிட்டு, நல்ல விதமாய்ப் பணிபுரியாத 3 பேரை குறித்து மட்டும் தொண தொணவென்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். என்னென்னவோ பதில்கள் கொடுத்தும் சமாதானம் ஆகவில்லை. இறுதியாகத் தன் சொல்லம்பை எய்தாள்.

நீ அடுத்தப் பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இப்படி நடந்து கொள்வாய் என எதிர்பார்க்கவில்லை ராம்?

இவள் இப்போது என்ன சொல்லப் போகிறாளோ? நான் என்ன தவறு செய்தேன்? எனக் குழம்பினான் ராம்.

ஏன்? என்ன செய்தேன்?

தினமும் 4 மணி நேரம் அதிகமாய் வேலை செய்வதாகக் கண்டமேனிக்கு புலம்பி இருக்கிறாய். வருவோர் போவோரிடமெல்லாம் புலம்புவதாகத் தகவல் வந்தது. அதனால் பலரும் என்னிடம் வந்து,

நீ ராமிற்கு ஏன் இவ்வளவு வேலை கொடுக்கிறாய் அவன் கஷ்டப் படுகிறானே என்று என்னிடம் சொல்லிச் செல்லும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மேல் பதவிக்கு முயலும் போது அதிகமாக வேலை செய்ய நேர்வது இயல்பான ஒன்றுதானே. வேண்டுமானால் 9 மணி நேரம் மட்டும் வேலை செய்து விட்டு சென்று விடு. எனக்கு யாரிடமும் இப்படிப் பேச்சு கேட்க தேவையில்லை’ வெடுவெடுத்தாள்.

சொல்வதறியாமல் திகைத்தான் ராம். தான் இப்படியெல்லாம் யாரிடமும் சொல்லவே இல்லையே? எதற்காக இப்படிப் பேசுகிறாள்? என நினைத்தவன் உடனடியாகப் பதிலளிக்கத் துவங்கினான்.

ஜாஸ் நான் யாரிடமும் அப்படிச் சொல்லி இருக்கவில்லை. நான் என் வேலையாக அல்லவா அதிக நேரம் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தேன். அதில் நான் யாரிடம் பொய் குறை சொல்லப் போகிறேன்? இது ஒரு தவறான தகவல்.

அவனது பேச்சை நம்பாதவள் போலக் காது கேட்காதவள் போல இருந்தவள், இனி இப்படி யாரிடமும் சொல்ல மாட்டாய் என நம்புகிறேன். என்றதாக, ’எனக்கு அடுத்ததாக மீட் இருக்கிறது. பிறகு சந்திப்போம் என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

அங்கிருந்து போகும் முன்னர்

‘டீம் லீட் நீயே மொபைலில் ஆழ்ந்திருந்தால், உன் டீம் என்ன செய்யும்?’ எனக் கடுமையான பேச்சை உதிர்த்துச் செல்லவும் மறக்கவில்லை.

தான் சில நொடிகள் கோம்ளியின் புகைப் படத்தைப் பார்த்ததற்குத் தான் இந்தக் குத்தல் என அவனுக்குப் புரியாமலில்லை.

அலுவலுக்கு வந்த நேரம் முதலாக உற்சாகமாய் இருந்தவன், முற்றிலுமாய்க் குழம்பியவனாய், சோர்வோடு தன் இருக்கையில் அமர்ந்தான்.

‘ராம்’ என அவனது டீமிலிருந்து ஒருவன் உதவி கேட்டு அழைக்க அவனது இருக்கைக்கு அருகில் சென்று அவனது கேள்வி மற்றும் சந்தேகத்திற்கு விடையளித்துத் தட்டிக் கொடுத்து திரும்பவும்,

ஹே ராம் பொண்ணு பார்க்க போய் வந்தியா? இல்லையா? என அவனின் தோளில் கைப் போட்டான் சமீர்.

தான் வாரம் முழுக்க 4 மணி நேரம் அதிகமாய் வேலை செய்ததை யாரிடம் பகிர்ந்துக் கொண்டோம் என்று இப்போது சட்டென்று நியாபகம் வந்து தொலைத்தது ராமுக்கு.

ஆனால், ஒன்றும் செய்ய இயலாது? முகத்தை மாறாமல் காட்டிக் கொண்டவன். போலியான புன்னகை எனும் முகமூடி அணிந்து கொண்டு பட்டும் படாமல் அவனோடு அளவளாவினான்.

ஏனென்றால், சமீர் என்னவாய் அவனிடம் பேசுகிறான் என்றே அவனுக்குப் புரியவில்லையே? ஒருவேளை சமீருக்கு இவன் அடுத்ததாய் மேல் பதவிக்குச் செல்வது பிடிக்காமல் இருக்கலாம் அதனால் அவன் பேசியதை திரித்துப் பேசியிருக்கலாம். அல்லது, அவன் ஜாஸின் கையாளாகக் கூட இருக்கலாம். இவன் என்னவெல்லாம் பேசுகிறான் என்று அறிந்து அவளிடம் போட்டுக் கொடுப்பதில் இவனுக்கு ஏதேனும் லாபம் இருக்கலாம்.

சுருக்கமாகச் சமீரிடம் பட்டும் படாமல் பேசி, அவனிடமிருந்து விடைப் பெற்றுக் காபேடேரியாவில் அமர்ந்திருந்தவன் சிந்தனை பலவாறாக அலை பாய்ந்தது. தான் பேசுவதை, நொடிக்கு நொடி செயல்படுவதை எல்லாம் ராடார் வைத்து பிறர் கண்காணிப்பது போன்ற சங்கட உணர்விற்கு ஆளாகினான்.

அவனது அலுவலகக் குழப்பத்தில் கோம்ளியின் வெரி குட்மார்னிங்க்…… மெஸேஜ், முன் தினம் பெண் பார்த்து வந்தது என்ற அனைத்து இனிமையான உணர்வுகளும் மங்கலாய் தெரிய ஆரம்பித்தது. இனி வரும் நான்கு நாட்களும் அவன் மனித உருவில் இருக்கும் ரோபோட் மட்டுமே, வார இறுதியில் அவனுக்குள் இருக்கும் மனிதன் ஓய்வெடுக்க மட்டுமே வெளி வருவான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here