3. நீயும் நானும்

0
757
Neeyum Naanum

அத்தியாயம் 3

பெங்களூருவின் பிரசித்தி பெற்ற மந்த்ரி மால், வார நாளாக இருந்தாலும் கூட மாலை நேரம் கவிழ்ந்ததும் அங்கே ஜனத்திரள் கூடிக் கொண்டிருந்தது. வாயிலின் ஓரமாய்க் காத்துக் கொண்டிருந்த கோமுவை தூரத்திலிருந்தே பார்த்து, புன்னகைத்துக் கையசைத்தான் ராம்.

அது நேரம் வரையிலும் தனியாக வந்து காத்திருக்க வேண்டியதாகி விட்டதே என்று சற்று தர்ம சங்கடமாய் உணர்ந்த கோமு, ராம் தன் எதிரில் வரவும் உற்சாகமானாள். இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். கடந்த சில நாட்களாக ஒருவரோடொருவர் போனில் மெசேஜ் செய்து பகிர்ந்துக் கொள்வதால் நட்பாகியிருந்தார்கள்.

ராம் வருவதற்கு முன்பாக அவன் எவ்வாறு நடந்து வருவான்? என்ன உடை அணிந்து இருப்பான்? தாம் அவனை எவ்வாறு சந்தித்து அளவளாவப் போகிறோம் எனக் கதைகளில் வருவது போலக் கற்பனையில் எண்ணுவதற்கு முற்பட்டவள், அவன் பெண் பார்க்க வந்த நாளன்று தான் கனவு கண்டு அசடு வழிய நேரிட்டதை எண்ணி வெகுவாகப் பிரயத்தனப்பட்டுத் தன்னையே கட்டுப் படுத்தி இருந்தாள்.

அன்று ஸ்கர்ட், டாப்பில் இருந்தவளை கவனித்து ரசித்தான் ராம். மாறாத அதே மாதிரியான ஒப்பனை. ஸ்கர்ட் மட்டும் டாப்பில் பெருமளவு இடம் பெற்றிருந்த அடர் சிகப்பு நிறம் உதட்டிலும் கொலுவீற்றிருந்தது. அவளருகில் வர வர அந்நிறம் அவன் கண்ணைக் கூசியது. அருகில் வந்ததும்

ரொம்ப நேரமாகிடுச்சா? விசாரித்தான்.

ம்ம்… நீங்க 10 நிமிஷம் லேட் முறுவலித்தாள் கோமு. இருவரும் பேசிக் கொண்டே நகர்ந்திருக்க, எங்கே போகலாம்? விசாரித்தான் ராம்.

ஐபேக்கோ (ibacco) உற்சாகமாய்க் கோமுவிடமிருந்து பதில் வந்தது. அவளின் உற்சாகம் பார்த்து புன்னகைத்தவன் அங்கேயே அழைத்துச் சென்றான்.

தனக்கு ஸ்ட்ராபெர்ரியை ஆர்டர் செய்தவள் அவனிடம் விருப்பம் கேட்டாள். அவன் வேண்டாமென மறுக்க அவனுக்குப் பிடிவாதமாகப் பட்டர் ஸ்காட்ச் ஒன்றை சொல்லி வைத்தாள்.

மும்முரமாக ஐஸ்கிரீமை சுவைத்து முடித்தவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ராம்

அவன் பார்வையைக் கண்ட பின்னர்தான் தான் இவ்வளவு நேரமும் ஐஸ்க்ரீமில் லயித்தது வெட்கம் வந்தது கோமுவுக்கு.

சொல்லுங்க ராம்?

தன்னிடம் ஏதோ பேச வேண்டுமென்று கூறி இருவர் பெற்றோரையும் பேசி சம்மதிக்க வைத்திருந்தவனையே பார்த்தாள்.

அவன் இவர்கள் சந்திப்பிற்குப் பின்னர் அலுவலகம் செல்ல தோதாய் புறப்பட்டு வந்திருந்தான்.வழக்கம் போலவே படு ஸ்மார்ட்டாய் இருந்தான் ஆனாலும், அவன் கண்களில் இரவு ஷிப்டின் வரப்பிரசாதமான தூக்க கலக்கம் ஒட்டிக் கொண்டிருந்தது.

ம்ம்… ஒரு முறை தன் தொண்டையைச் செருமிக் கொண்டான் ராம்.

உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா கோம்ளி?

ம்ம்… இசைவாய் பதிலளித்தாள் அவள்.

உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?

உங்க பேர் ராம், வயசு 26, abc co. ல் சீனியர் டீம் லீடா வேலை பார்க்கிறீங்க, கெட்டப் பழக்கம் எதுவும் கிடையாது. இதெல்லாம் அப்பா சொன்னாங்க என அவனைப் பற்றி அறிந்தவைகளை அடுக்கலானாள்.

ம்ம்…

நீ தெரிஞ்சு கிட்டதில் ஒரு சில கரெக்ஷன்ஸ் சொல்லிக்கிறேன். எனக்கு வயசு 28, நீ நினைக்கிற மாதிரி நான் கெட்டப் பழக்கம் இல்லாதவன் எல்லாம் கிடையாது. நிறைய ஸ்மோக் பண்ணுவேன், அப்பப்ப ட்ரிங்க் பண்ணுவேன்.

ம்க்கும்…தொண்டையைச் செருமி அவளை விழிப்பிற்குக் கொண்டு வந்தான் ராம். ஏனென்றால் நிறைய ஸ்மோக் பண்ணுவேன் என்றதுமே அவனது உதடுகளில் மேடம் பார்வையிட ஆரம்பித்திருக்க அவனுக்குத்தான் வெட்கமாகப் போயிற்று,

அவனது செருமலில் கவனம் கலைந்தவள் திருதிருவென விழித்தாள். மனதின் ஓரத்தில் எங்கோ அடி வாங்கிய உணர்வு. ஏனென்றால், இத்தனை நாட்களுக்குள்ளாக அவனைத் தன் ஆதர்ஷ நாயகனாக மனதிற்குள்ளாக வரித்திருந்தாள். நிலவில் ஏற்பட்ட களங்கம் போல அவள் கனவிற்கேற்பட்ட கறையாய் அவன் கெட்டப் பழக்கங்களைக் குறித்து அறிந்ததில் அவள் மனம் நின்று துடித்தது.

ஒரே வார்த்தையில்

மனம் கொன்றாயடா

எவ்வாறு சேர்த்து எடுப்பேன்?

என் சிதறுண்ட இதயத் துண்டுகளை

என்னாச்சு கோம்ளி? அவளை நனவுலகுக்குக் கொண்டு வந்தான் ராம். அவன் பேச பேச கோம்ளி மௌனம் சாதிக்க அவள் மனசாட்சி கூவியது மட்டும் இங்கே…

இன்னும் நம் மேரேஜ் பிக்ஸ் ஆகலை…

@@ஆனா நான் பிக்ஸ் ஆகிட்டேனேடா

நீ வேணும்னா என்னைப் பிடிக்கலைன்னு சொல்லி மேரேஜை நிப்பாட்டிக்கலாம்.

@@ பாவி பாவி, தமிழ் நாவல் ஹீரோ மாதிரி இருந்துட்டு வில்லன் மாதிரி பேசறியேடா? டேய்

ஆனா எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு

@@ இதை மட்டும் வக்கணையா பேசு

ஒரே ஒரு விஷயம் தான் இடிக்குது

@@ நீ அங்கின உக்காந்திருக்க, நான் இங்கின உக்காந்திருக்கேன், எங்கின இடிக்கிது டா டேய்

அது என்னன்னா?

@@ என்னன்னு சொல்லித் தொலைடா பாவி…இங்க ஹார்ட்டு பக்கு பக்குன்னு அடிக்குது, திக்கு திக்குன்னு துடிக்குது…

கோம்ளியின் முகமாற்றம் புரிந்து அவனே பேச தொடங்கினான்.

தப்பா நினைச்சுக்காதே…

@@ அட சொல்லித் தொலைடா பற்களைக் கடித்துக் கொண்ட ஸ்மைலிகள் கோமுவின் மண்டைக்குள் சுழன்றன.

ம்ம்ம்… அது என்னன்னா இவ்வளவு டார்க் கலர் லிப்ஸ்டிக் போடறியே அது உனக்கு ஆக்வர்டா (awkward) இல்லியா?

@@ என் மேக் அப்பை இடிக்குதுன்னு சொல்லிட்டியா இனிமே உனக்கு நோ தான்…ம்ம்… இல்லை வேணாம் வேணாம் பயபுள்ள பார்க்கிறதுக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான். அழகா சிரிக்க வேற செய்யிறான். ரெண்டு நாளா கனவில எல்லாம் வந்து டூயட் பாடியிருக்கான். இப்ப நோ எப்படிச் சொல்லுறது? என் கனவுக்கும் கற்புண்டுடா டேய்.

ராம்…. பூவை விட மென்மையான குரலாய் எப்போது மாறியது என் குரல்?..ம்ம்க்கும்… ற்றாஆம் அழுத்தி அழைத்தாள்.

ம்ம்… சொல்லு கோம்ளி

எனக்குக் கொஞ்சம் கன்ப்யூஸனா இருக்கு…

எது என் வயசு 28 ந்னு தெரிஞ்சதாலா?

@@ ங்கொ…ல என் வாயப் பிடுங்காதடா

இல்ல, உங்க ஸ்மோக்கிங்க், ட்ரிங்கிங்க் ஹேபிட்ஸ் பத்தி தெரிஞ்சதால தான்.

ஓஓ… நான் கூட நான் லிப்ஸ்டிக் பத்தி சொன்னதால கோபமோன்னு நினைச்சேன்… அவன் முகத்தைப் பார்த்தால் பால் வடியும் போலிருந்தது.

@@ இங்க பாரு ராம்… நீ டிவில வர்ற கிருஷ்ணர் மாதிரி புன்னகை சிந்தி எல்லாம் என்னைக் கவுக்க முயற்சி செய்ய வேணாம். ஏன்னா, ஏன்னா……

நான் ஏற்கெனவே உன்னைப் பார்த்த அன்னிலருந்து கவுந்து போய்த் தான் கெடக்கேன் (முகத்தை வெட்ஃகத்தால் மூடும் ஸ்மைலி போட்டுக்கோங்கப்பா… மிடில) இந்த ஸ்மைலி எல்லாம் நல்லா பார்த்துக்கோங்க மக்களே….பின்ன ஒரு நாள் இந்தக் காலத்து பொண்ணுங்க வெட்கமே படுறதில்லன்னு யாராவது கமெண்ட் போடுறத பார்த்தேனோ… அப்பாலிக்கா ஒரே சீவு தான் அண்ணாத்தே…யார்கிட்டே (ராம் கிட்ட பேசி பேசி மனசாட்சியே குழம்பி போய்க் கிடக்குச் சென்னை தமிழ், நார்மல் தமிழ்னு பேசி கொல்லுது…ஷப்பா)

ராம் சொன்னதில் குழப்பம் அடைந்திருந்தாலும், காலையில் அன்னை சொன்னவை கோமுவின் மனதில் நிழலாடியது.

பாப்பா இன்னிக்கு தான் முதன் முறை நீயும் அந்தத் தம்பியும் நேரில சந்திச்சு பேச போறீங்க. First impression is the best impression இதெல்லாம் நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணும்னு இல்லை. அதுக்காக ரொம்ப நல்லவளா காண்பிச்சுக்கோ. இல்லாததை இருக்கிறதை போலச் சொல்லுன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். எதையும் பட்டுன்னு எடுத்தெறிஞ்சு பேசிடாம, பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுன்னு தான் சொல்லறேன்.

ஒருவேளை இதே பையன் தான் உனக்கு மாப்பிள்ளைனு இருந்திச்சுன்னா இன்னிக்கு நீ பேசறதுதான் அவங்க மனசில தங்கி போகும். கணவன் மனைவிங்கிறது ஒரு நாள், ரெண்டு நாள் உறவு இல்ல, அதனால எதைப் பேசினாலும் யோசிச்சு பேசு. என அம்மா சொன்னது மனதில் இருக்கக் கோமு அநாவசியமாக எதுவும் பேச விழையவில்லை.

எனக்குக் கலர்ஸ்னா ரொம்பப் பிடிக்கும் ராம், கிட்டத்தட்ட எல்லாக் கலர் லிப்ஸ்டிக்குமே வச்சிருக்கேன். உங்களுக்கு டார்க் கலர் பிடிக்கலைன்னு சொன்னீங்கள்ல, உங்களை மீட் செய்யறப்போ வேணும்னா லைட் கலர் லிப்ஸ்டிக் ஷேட் யூஸ் செஞ்சுக்கறேன். அதுக்கெல்லாம் நான் கன்ப்யூஸ் ஆகலை.

சற்று முன் குழப்பமாய்க் காணப்பட்டவள் தெளிவாய் பேசவும் சுவாரஸ்யமாய்க் கவனித்தான் ராம்.

எல்லோருக்குமே அப்பா தான் ரோல் மாடல். எனக்கும் அப்படித்தான், அதனால என்னோட எதிர்காலக் கணவரையும் அப்படியே எதிர்பார்த்ததால் உங்களோட பழக்கங்கள் தெரிஞ்சதும் கொஞ்சம் குழப்பமா இருக்குன்னு சொன்னேன் புன்னகைத்தாள்.

இந்தக் காலத்திலே இதெல்லாம் சகஜம் தானே…. இழுத்த ராம் அவள் நேர்கொண்ட பார்வையில் திக்கினான்.

இப்ப எல்லாம் இருக்கிற வொர்க் பிரஷர், ஸ்ட்ரெஸ் இதுக்கு இப்படி ரிலாக்சேஷன் தேவைப் படுதே?! …

ஆங்க்…எனப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்…

நீ வேணும்னா எங்க ஆபீஸ்ல வந்து பாரேன்… அங்கே பொண்ணுங்க கூட ஸ்மோக் பண்ணுவாங்க…பார்ட்டில என் மேனேஜர் ஜாஸ் அதான் ஜாஸ்மின் ராவா உள்ளே தள்ளுவா… தண்ணில்லாம் தண்ணி பட்ட பாடு சப்பைக் கட்டு கட்ட ஆரம்பித்தவனிடம் கோமு ஒரே கேள்வி தான் கேட்டாள். அதற்குப் பின் அவர்கள் விடைப் பெற்று, அவள் வீட்டிற்கும், அவன் ஆபீஸ் சென்ற பின்னும் அவன் வாயையே திறக்கவில்லை.

ராம் ஆபீஸிற்குள் வந்து விட்டிருந்தான். கோமுவை சந்திக்கச் சில மணி நேரங்கள் பர்சனல் வேலை என்று சொல்லி முன் அனுமதி பெற்றிருந்தான்.

வந்ததும் வராததுமாக லிப்டில் இருக்கும் போதே ஜாஸின் போன்கால் வந்தது.

யெஸ் ஜாஸ்

வெர் வெர் யூ? (எங்கே போயி தொலைஞ்சே?)

ஐ ஹேட் சம் பர்சனல் வொர்க் ஜாஸ், தேட் இஸ் வொய் காட் 2 ஹவர்ஸ் பர்மிஷன் யெஸ்டர்டே, நவ் ஐ ஹேவ் ரீச்ட் ஆபீஸ் ஜாஸ் (பர்சனல் வேலையா வெளியே போக அனுமதி வாங்கியிருந்தேனே, இப்போ ஆபீஸிக்கு வந்து விட்டேன் ஜாஸ்)

ஜஸ்ட் க்விக்லி கம் டு மை கேபின். (உடனடியா கேபினுக்கு வந்து தொலை)

யெஸ் ஜாஸ் (# என்ன ஆச்சோ தெரியலியே?)

அன்றைக்குப் பார்த்து க்ளையண்ட் எஸ்கலேஷன்ஸ் அதாவது நம்மூர் பாஷையில் சொல்வதானால் அவர்களுக்கு வேலை கொடுத்த வெளி நாட்டு முதலாளியிடமிருந்து கம்ப்ளெயிண்டு வந்திருந்தது மக்களே.

(குறிப்பு: இந்த வெளி நாட்டு வேலைகள் காண்டிராக்ட் முறையில் செய்து தரப்படுபவைகள். அதிகமான தவறுகள், எஸ்கலேஷன்கள் வந்தால் அவர்கள் contracts ரத்துச் செய்யப் படும் அபாயங்களும், வேலை இழப்புக்களும் நிச்சயமாய் உண்டு. இதனால், ஒவ்வொரு client escalations களும் அபாயச் சங்காகவே கருதி மேலதிகாரிகள் தன் கீழே இருப்பவரையும், ஒருவர் மற்றவரையும் கடித்துக் குதறவும், யார் மேல் தவறென்று ஒருவர் மற்றவரை கை காட்டி தான் தப்பித்துக் கொள்ளுதலும் போன்ற வைபவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவதுண்டு)

அன்று முதல் முறையாக 2 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு அதுவும் அனுமதி பெற்று சென்ற பின்னரும் கூட அதற்காக 1 மணி நேரமாக ஜாஸ் ராமின் காதுக்குள்ளாக ஈயத்தைப் பழுக்கக் காய்ச்சி ஊற்றினாள்.

ஜாஸின் ஏச்சுக்களைக் கேட்டுக் கொண்டே இருந்த ராமின் மனதிற்குள் சில கேள்விகள் எழுந்தன.

ஜாஸிக்கு என் மேல் என்ன காண்டு? (ஏன்?/எதற்கு?\எப்படி?)
ஜாஸிக்கும் எனக்கும் ஏன் எப்போதும் மோதல்? எங்களிருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்தால் தான் என்ன? பார்த்துக் காரணத்தைத் தெரிந்துக் கொண்டால்தான் என்ன? என ராமுக்கு மனதில் தோன்றியது.

ச்சீ அவளுக்கு 2 பிள்ளை இருக்கு உனக்கும் அவளுக்கும் ஜாதகப் பொருத்தமா? அவன் மனசாட்சியே அவனைக் காறித்துப்பியது. ச்சே ச்சே நான் அப்படி நினைச்சு சொல்லவில்லையடா? அதற்கு அர்த்தமே வேற, என அவன் மனசாட்சியைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்த போது ஜாஸ் அவனிடம்

ராஆஆஆம்… நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நான் சொல்வது உன் காதில் விழவில்லையா? அலறினாள்.

யெஸ் ஜாஸ்…

போய் க்ளையண்ட் எஸ்கலேஷன் என்னவென்று பார்த்து ரிப்போர்ட் கொடு? இம்மீடியெட்லி… எனக் கத்தினாள்.

யெஸ் ஜாஸ், ஓகே ஜாஸ்…அங்கிருந்து நகர்ந்தான் ராம்…. ஜாதகம் பார்ப்போமா காதுக்குள் மெதுவாய் கேட்டது மனசாட்சி…காதை கசக்கி விட்டுக் கொண்டான், மனசாட்சி கசங்கி விழுந்து மயங்கியது.

காதை தடவி கொண்டே கடந்தவனைக் குவாலிட்டி மேனேஜர் அதாவது அவர்கள் வேலையை சரியா இல்லையா எனப் பார்க்கின்ற டீமின் மேனேஜர் அழைத்தான்.

வந்ததிலிருந்து ஒருவனும் என் டீமிடம் போக, என் வேலையைப் பார்க்க போக விட மாட்டானுங்க போலவே…மனதிற்குள் மட்டும் சலித்துக் கொண்டான்.

அந்தக் குவாலிடி மேனேஜர் ராமிடம்,

நான் அந்த க்ளையண்ட் எஸ்கலெஷன்களைத் தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறேன். வா நாம் அதைப் பார்த்து ரிப்போர்ட் தயாரிக்கலாமா? அவனது குரலில் உன் டீம்க்கு மறுபடி ஒரு எஸ்கலேஷன்ஸ் என்ற நக்கல் இருந்ததோ? தன்னைப் பலவீனப்படுத்தும் எண்ணத்தைத் தவிர்த்தான்.

சரி இதோ வருகிறேன்… அதுவரைக்கும் நீ பார்த்து வை.

தன் சீட்டில் அமர்ந்தவன் சிஸ்டமை லாக் இன் செய்து மெயில் பாக்ஸை திறந்தான். அங்கே அவனுக்காக 128 மெயில்கள் மழையாய் கொட்டி இருந்தன ஒரு நாளைக்குள்ளா? இத்தனை மெயில்களா? என்னடா நடக்குது இங்க?

தினம் நேரத்துக்கு வருவேன் 10 மெயில் கூட வராது. இன்னிக்கு 2 மணி நேரம் லேட்டா வந்தா 128 மெயிலா? ஐய்யோ தலையைப் பிய்த்துக் கொண்டான்.

திவா… அவன் கீழ் பணி புரியும் திவாகரை அழைத்தான்.

யெஸ் ராம்.

லெட்ஸ் கேதர் போர் மீட்

உடனெ தன் கீழ் இருக்கும் லீட்களை மட்டும் அழைத்து மீட்டிங்க் நடத்தி க்ளையண்ட் எஸ்கலேஷன்ஸ் குறித்து விவாதித்தான். அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளை அடுக்கினான். அன்று ஷிப்ட் முடிவதற்குள்ளாக அத்தனை எஸ்கலேஷன்களுக்கும் தீர்வு காண அனைவரையும் பணித்து விட்டு, அமர்ந்து அனைத்து மெயில்களையும் பார்வையிட்டான். குவாலிடி மேனேஜரை சந்திக்கவும் மறக்கவில்லை.

பதிலளிக்க வேண்டிய மெயில்களுக்குப் பதிலளித்து நிமிர்ந்த போது அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

டீ குடிக்கப் போகலாம் வாறியா ராம்? கேட்டது சமீர்.

யெஸ் வாயேன் போகலாம். சமீர் என்பவன் தன் பின்னால் வேவு பார்க்க ஜாஸ் வைத்திருக்கும் ஆளோ? இல்லை இவனாகவே தன் மேல் பொறாமையில் அவ்வாறு நடந்து கொள்கிறானோ தெரியாது. ஆனால் ராம் தன் சுய விருப்பு வெறுப்பை அவனிடம் காட்டிக் கொள்ள முடியாது. சமீர் அடித்த மொக்கை ஜோக்கிற்கும் சப்தமாய்ச் சிரித்தான்.

டீயை கையில் ஏந்திக் கொண்டு லாவகமாய் லிப்டில் ஏறி தரைத்தளத்திற்குச் சென்று டீயை ஒரு சிப் அடித்து விட்டு, இன்னொரு கையில் லாவகமாய்ப் பற்ற வைத்த சிகரெட்டை வாய்க்குள் பொருத்த போன போது ராமின் மனதிற்குள் கோமுவின் குரல் ஒலித்தது.

ராம்… உங்க லேடி பாஸ், மத்த பொண்ணுங்க எல்லாம் ஸ்மோக்கிங்க், ட்ரிங்கிங்க் செய்யிறது சாதாரணமான விஷயம்னு சொல்லுறீங்க இல்ல. அதே உங்க உட்பி அல்லது மனைவி செய்தா உங்களுக்குச் சாதாரணமா இருக்குமா? இல்லைன்னா அப்படிச் செய்யற பொண்ணை உங்களுக்குதான் உங்க வீட்டில பார்ப்பாங்களா?

தலையை உலுக்கி உள்ளுக்குள் நொய் நொய்யென்று கேள்வி கேட்ட கோமுவை உதறித் தள்ளினான் ராம்.

கொஞ்சம் அழகா இருக்கா, அழகா பேசறான்னு பிடிச்சிருக்குன்னு சொன்னா ரொம்பத்தான் சிலுத்துக்கிறா. போயேன் உனக்கு நான் வேணாம்னா வேணாம்னு சொல்லு.பெரிசா எனக்கு அட்வைஸ் கொடுக்க வந்திட்டா போடி.

உனக்கெல்லாம் பொய் சொல்லி கல்யாணம் செய்யிறவன் தான் லாயக்கு. உண்மைய சொன்னேன்ல அதான் நீ இப்படித்தான் கேள்வி கேட்ப. இப்ப என்ன? நான் ஸ்மோக்கிங்க், ட்ரிங்கிங்க் விடணும்னு சொல்வ அதானே. இல்லை மேரேஜிக்கு அப்புறம் விடச் சொல்லுவ. இமோஷனல் ப்ளாக்மெயில் செய்வ? நான் எதுக்கு விடணும்?

இன்னிக்கு தேதில முளைச்சு மூணு இலை விடாத பசங்களும் பொண்ணுங்களும் பப் க்கு போகுதுங்க குடிக்குதுங்க. இவ என்னைத் திருத்த வந்திட்டா. என் வேலையில இருக்கிற ப்ரஷரும், ஸ்ட்ரெஸ்ஸீம் இவளுக்கென்ன தெரியும்?

கையில் எரிந்து கொண்டிருந்த சிகரெட்டை வாயில் பொருத்தி ஆழமாய் இழுத்தான் ராம். ஹா… நுரையீரலுக்கு அனுப்பிய போதை மூளைக்கு இதமாய்த் தோன்றியது.

நல்லவனாய் தன்னிடம் நடித்து நடித்துப் பேசிக் கோண்டிருந்த சமீரிடம் பேசி போலிப் புன்னகையை வீசி, தோளில் கைப் போட்டுக் கொண்டு அவனோடு அட்டகாசமாய்ச் சிரித்தான் ராம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here