4. நீயும் நானும்

0
1009
Neeyum Naanum

அத்தியாயம் 4

கோம்ளி தன்னை மணக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்த செய்தியை அம்மாவோ அப்பாவோ தன்னிடம் சொல்லப் போகிறார்கள் என்று தினம் தோறும் திக் திக் எனும் மன நிலையோடு ராம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்படி ஒரு விஷயம் வரும் போது அம்மா அப்பா என்ன சொல்லப் போகிறார்கள்? என்கின்ற சிந்தனையும் அவனுக்குள்ளே சுழன்றது. எனக்கு இருக்கும் வேலை அழுத்தத்தில் இதுவும் தேவையா? என மனதிற்குள் சலித்துக் கொண்டான். கோமுவின் மறுப்போடு கூட, தான் அவளோடு தான் பேசியவற்றையும் கோமுவின் பெற்றோர்கள் காரணமாகத் தெரிவித்தால் ராமின் அம்மா கல்யாணி அவனை விட்டு வைக்கப் போவதில்லை.

அவனது பல மொள்ளமாரித்தனங்கள் வீட்டுக்குத் தெரியாது என்பதே உண்மை. அவனுடைய பெற்றோர் பிள்ளை எதுவேணா செய்து கொள்ளட்டும் என்கிற மனப்பாங்கு கொண்டவர்கள் அல்ல. இரவு ஷிப்டிற்கு வேலை செய்வதற்கு முதலில் மறுப்பு சொல்லியிருந்தவர்கள் தான். மகன் புகைப்பிடிப்பது தெரிய வந்தபோது கோபம் கொண்டு அதட்டி இருக்கிறார்கள் அத்தோடு தங்கள் மகன் திருந்தி விட்டான் என நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைமுறை பிடிபடாமல் பல தவறுகள் செய்யக் கற்றுக் கொண்டுள்ளது, அதில் தன் மகனும் ஒருவன் என்று அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நீ என்ன பெரிய அரிச்சந்திரனா? அவ கிட்ட போய் எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டு வந்திருக்கத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன்.

அப்படி அவர்கள் சொல்லி நம்ம மகன் அப்படிக் கிடையாதே என்று ராம் குறித்து நல்ல எண்ணம் தோன்றினாலும் கூட அதுவும் அவனது சதியாகவே பார்க்கப் படும்.

நீ இப்படித்தான் போய்க் கல்யாணத்தை நிப்பாட்டுறதுக்கு ஏதாச்சும் செஞ்சு வைப்பன்னு கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியிருக்கப்பவே நான் நினைச்சிருக்கணும். உன்னை யாருடா அவ கிட்ட போயி இதெல்லாம் சொல்லச் சொன்னது? எனத் தினம் புலம்பி சாகடிப்பார். இத்தனை சிந்தனைகளோடு திகில் மன நிலையில் ஒருவழியாக ராம் வார நாட்களைக் கடந்தான்.
அன்று வார இறுதி, ஞாயிற்றுக் கிழமை கோம்ளியை பெண் பார்க்கச் சென்று ஒரு வாரமாகிறது படுக்கையில் உருண்டவனுக்கு அவள் ஞாபகம் வந்து தொலைத்தது.

[center][left]பெண்ணே![/left][/center]

[center][left]நானே அறியாமல்[/left][/center]

[center][left]நீ எவ்வாறு எந்தன் சகலமும் ஆகினாய்?![/left][/center]

[center][left]கனவிலும் நீதான்[/left][/center]

[center][left]துயில் கலைந்து எழுகையில்[/left][/center]

[center][left]முதல் சிந்தையிலும் நீ தான்[/left][/center]

[center][left]நீ என் வாழ்வில்[/left][/center]

[center][left]வருவாயா மாட்டாயா?[/left][/center]

[center][left]என்பதற்கான பதிலும் தேங்கி நிற்பது[/left][/center]

[center][left]உன்னிடமே.[/left][/center]

நாம் ஏன் அன்றைக்கு அப்படி அவளிடம் சொன்னோம்? நாம் பேச எண்ணியது வேறல்லவா? ராம் மறுபடி சிந்திக்க ஆரம்பித்தான்.
அவனுக்குப் பெண்பார்க்க செல்ல வேண்டுமென்று அம்மா சொன்னபோது சற்று விருப்பம் இல்லாமலேயே தான் பெண் வீட்டிற்கு வந்திருந்தான்.முதல் பார்வையில் மற்ற பெண்களைப் போலத் தெரிந்தாலும், சிறிது நேரத்தில் கவனித்ததில் அலட்டல் இல்லாமல் இயல்பாக இருந்த கோம்ளியை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டிருந்தது.

அதன் அடுத்த நாள்தான் ஜாஸ் அவனைக் காய்ச்சி எடுத்தது.அடுத்தடுத்து அவள் செய்தவைகள் எல்லாமே ராமுக்கு வெறுப்பேற்றும் விதமாகவே அமைந்திருந்தன.

இவனுக்கென ஏற்கெனவே மூச்சு முட்டும் அளவு வேலைகள் இருக்க, அடுத்து வரும் புது ப்ரொஜக்டுக்குள் ராமை ஜாஸ் வேண்டுமென்றெ போட்டிருந்தாள். அவனுக்கு இணையான மற்றவர்கள், ஏன் இதுவரை டீம் எதுவும் நிர்வகிக்காமல் காபேடேரியாவிலும், ஸ்மோக்கிங்க் ஜோனிலும் பாதி நாட்களைக் கழிக்கும் சமீர் கூடச் செய்யக் கூடிய அளவிலான வேலை அது.

அவள் அவன் தலையில் அதிக வேலைப் பளு கொண்டது அனைத்தையும் வேண்டுமென்றே கட்டுவதை அறிந்தே இருந்தான். இருக்கும் வேலைகளையும் கவனித்துக் கொண்டு மேலும் புது வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொள்வதென்றால் அது இன்றைய சூழலில் மிகவும் கடினமானது.

‘என்னால் முடியாது’ என்றும் கூட அவனால் இப்போது சொல்ல முடியாது. சொன்னால்,

‘நீ பதவி உயர்வை மட்டும் கேட்கிறாயே அதற்காக உழைக்க வேண்டாமா?’

என ஜாஸிடம் ரெடிமேடாக அவனுக்கான பதில் காத்திருக்கும். கேரட்டைக் காட்டி முயலைப் பிடிக்கும் கார்ப்பொரேட்டின் வித்தை தெரிந்தவள் ஜாஸ், அவளின் வித்தைக்கேற்ற முயலாக அவன் மாறி வெகு நாட்களாக ஆகியிருந்தன.

எல்லோருக்கும் நல்ல பாஸ் கிடைத்திருக்க நமக்கு மட்டும் ஏன்? ஆயிரத்தோரு தடவையாக அவன் மூளை கேட்ட கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியவில்லை.

இப்போது தனக்குப் பார்த்த பெண்ணும் பிடித்து இருக்க, வேலையும் கழுத்தை நெறிப்பதாக இருக்கத் திருமணத்தைத் தள்ளி வைப்பதை குறித்து அவனால் சிந்திக்க முடியவில்லை.அதே நேரம் வேலை மற்றும் குடும்பம் இரண்டுக்கும் உரிய நேரம் கொடுக்க முடியுமா என்கின்ற கவலையும் தோன்றி இருந்தது.

சில நாட்களாக வாட்சப்பில் கொஞ்சம், கொஞ்சமாய் அவளிடம் பேசி இலகுவாக உணர்ந்ததால் தான் தன்னைப் பற்றி உண்மைகள் ஒவ்வொன்றாகச் சொல்லி, திருமணத்திற்குப் பின் சில மாதங்கள் தான் மிகுந்த வேலைப் பழுவில் இருக்கப் போவதையும் முன்னோட்டமாகத் தெரிவிக்க எண்ணினான். ஆனால், நடந்தது என்ன? ராட்சசி முழுவதும் பேசாமல் வெட்டிக் கொண்டு போய் விட்டாள். அவளுக்குக் குழப்பமாக இருக்கின்றதாமே? இருக்கும் இருக்கும் இதற்குத்தான் பெண்களோடு எதையும் பகிர்ந்து கொள்ளக் கூடாதென்பது… மனதில் பொருமிக் கொண்டிருக்க,
உன்னோட expectation setting failiure ஆ அவன் மனசாட்சி அவன் கோபத்திற்கு அடங்காமல் கெக்கே பிக்கே எனச் சிரித்துக் கொண்டிருந்தது.

தன்னுடைய எதிர்பார்ப்புகளைத் தன் டீமுக்கு தெரிவித்து இது இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்வதுவும் கூடச் சூப்பர்வைசரின் வேலை தான். அதைத் தான் அலுவலக நடைமுறையாக expectation setting with team எனச் சொல்வார்கள். அதனையே வருங்கால மனைவியிடமும் செய்ய முயற்சி செய்து தோற்றுப் போனாயடா என இப்போது அவன் மனசாட்சி அவனைக் கெக்கலித்துக் கொண்டிருந்தது.

உன்னை… மனசாட்சியை முறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தவன். கடந்த வாரத்தின் முதல் சில நாட்கள் கழிந்த விதத்தை நினைவு கூர்ந்தான்.

தினமும் தனக்குக் குட்மார்னிங்க், குட் ஈவினிங்க் மெசேஜ்களோடு, எத்தனையோ கைகள் மாறி உலகம் உருண்டை எனச் சுற்றிக் கொண்டிருக்கும் அரதப் பழசான ஜோக்ஸ் எல்லாம் கோமு ராமுக்கு அனுப்பிய போது, அவள் அனுப்பிய அந்த எக்ஸ்பையரி டேட் கடந்த பின்னும் வாழ்ந்து வரும் ஜோக்குகள் சகிக்கும் படி இல்லாத போதும் எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுக்குச் சிரிக்கிற ஸ்மைலிகள் அனுப்பியிருப்பான்?

இந்தப் பொண்ணுங்களுக்கு நன்றியே கிடையாது. நான் போட்ட ஸ்மைலி எல்லாம் எனக்கு இப்பத்துக்கு இப்பவே திருப்பித் தா… ராமின் மனது கோமுவிடம் சிறு பிள்ளையாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

கோமுவைப் பற்றிய சிந்தனையில் இந்த வாரம் தண்ணிப் பார்ட்டிக்கு கூடப் போகாமல் தவிர்த்து விட்டான். கார்ப்போரேட் உலகில் பிடிக்கின்றதோ இல்லையோ பெரியவர்களிடம் தாஜா செய்ய வேண்டுமானால் நிச்சயம் ஆபீஸ் தவிர்த்த நிறைய விஷயங்களில் தலைக் காட்ட வேண்டி இருக்கும்.அதனாலேயே வெள்ளிக் கிழமை ஷிப்ட் முடிந்ததும் அவர்களோடு சேர்ந்து தண்ணி பார்ட்டிக்கு சென்று அருந்தி விட்டு பெற்றோருக்கு தெரியாத வண்ணம் வந்து தூங்கி விடுவதுண்டு.

மறுபடி கோமுவைக் குறித்த எண்ணங்களுக்கே மனக்குரங்கு தாவியது இந்தக் கோம்ளி சில வருடங்களாக இந்தப் பெங்களூரில் தான் இருந்து வருகின்றாள். அலுவலகம் செல்கின்றவள் தான். ஆனால் அவள் ஏன் இவ்வளவு கட்டுப் பெட்டியாக இருக்கிறாள்?
குடிப்பதும், புகைப்பதும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கான அடையாளம் அல்லவா? இல்லையென்றால் என்னை அம்மாஞ்சி என அழைக்க மாட்டார்களா? அவன் சிந்தனையிலேயே உழன்று கொண்டு இருந்த போது,

ராம்… என அழைத்தவாறு அப்பா அவன் அறைக்கு வந்தார். கையில்லா பனியனும், பெர்முடாஸீமாக இருந்தவன் எழுந்தான்.
சொல்லுங்கப்பா…

கல்யாணி வா… என்றவருக்கு ‘இதோ வரேங்க…” என்றவாறு ராம் அம்மாவும் அறைக்குள் வந்தார். தன் மடியில் தலைகானியை போட்டுக் கொண்டு வசதியாகச் சாய்ந்து அமர்ந்தான்.
தன் பெற்றோர் எப்போதும் செய்யாத முஸ்தீபுகளை இப்போது செய்யவும் மனதிற்குள்ளாக,

‘ஐயோ போச்சு போச்சு பொண்ணு வீட்டுல பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு. அம்மா அர்ச்சனையை ஆரம்பிக்கப் போறாங்க’ எனச் சுதாரித்தவன் காதில் தேன்மாரிப் பொழிந்தது.

‘நிச்சயத்தை எப்போ வச்சுக்கலாம்டா?’ அப்பா கேட்டார்.
அடுத்த நாள் திங்கள் கிழமை: மற்ற நாட்களை விடத் திங்கள் கிழமைகளில் தான் அதிகம் அளவு ஹார்ட் அட்டாக்கினால் உயிரிழப்பு நேரிடுகின்றது என்பது மருத்துவ ஆய்வுகளின் முடிவு. அதன் காரணங்கள் ஏராளம் ஏராளம் இருப்பினும் வேலையால் ஏற்படும் மன அழுத்தமே முதன்மையானது.

அந்த கொடூர கொலைக்கார திங்கள் கிழமையில் முகம் பளீரிட அலுவலகத்திற்கு வந்தான் ராம்.

வந்ததும் முதல் வேலையாக ஒரு மாதம் கழித்து முடிவான தன் திருமணத் தேதி அதனைத் தொடர்ந்த நாட்களுக்கான லீவுக்காக அப்ளை செய்தான்.

கோம்ளி தன்னை நிராகரித்திருந்தால் தனக்கு வெகுவாக வலித்திருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. நம் நாட்டு அமைப்பில் பரவலாக எல்லாவிடமும், எல்லோரிடமும் எதிர்மறையான ஒரு எண்ணப் போக்கு இருக்கின்றது.

படிக்கும் காலத்தில் பெயிலாகி விடுவோமோ எனும் அச்சம்தான் ட்யூசன், இரவு படிப்பு, அதிகாலைப் படிப்பு என்று ஓடி ஓடி படிக்கத் துரத்துகிறது. இண்டர்வ்யூ செல்லும் போது தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம் தான் இண்டர்வ்யூவர் முன்பு பதட்டம் கொள்ளச் செய்கின்றது. காதலில் தோல்வியையும், மறுப்பையும் எண்ணித்தான் பல காதல்கள் சொல்லப் படாமலும், காதல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அந்த எதிர்மறையான எண்ணமே சில காதல்களை வன்முறைக்குள் காலடி எடுத்து வைக்கவும் தூண்டுகின்றது.

வாழ்க்கையை இயல்பாக வாழ நம் கல்வி முறையும் வாழ்வியல் முறையும் அனுமதிப்பதில்லை. ஐயோ அவளுக்குத் தெரிஞ்சா என்ன சொல்லுவா? இவர் என்ன சொல்வார்? எனப் பிறருக்கு முக்கியத்துவம் கொடுத்தே பலரும் தன் வாழ்வை வாழ்வது இல்லை.
ராம் இக்கால இளைஞனாயினும் அவனிலும் அந்த மனப்போக்கின் மிச்ச சொச்சங்களும் இருந்தன. அலுவலகத்தில் ஏராளமான அழுத்தங்களுக்கிடையில் அவளது மறுப்பும் சேர்ந்திருந்தால் தன்னை ஒன்றுக்கும் உதவாதவனாக அவனே உருவகப் படுத்திக் கொண்டிருப்பான்,

‘நம் தகுதியை நிர்ணயிக்க வேண்டியது நாம் மட்டுமே’ என்பதை உணராத பலருள் அவனும் ஒருவனே.

திருமணத்திற்குச் சம்மதம் சொல்லி இருந்தாலும் இன்னும் கோமுவின் மெசேஜ் ஒன்றும் அவனுக்கு வந்திருக்கவில்லை.
‘ஹாய் கோம்ளி’

தான் முதலாக எட்டு எடுத்து வைத்தான் ராம். சில நிமிடங்களில் அவளது பதில் வந்தது.

இருவரும் தாங்கள் நேரில் சந்தித்துப் பேசியது குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

கோமு ராமின் ஹாயை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அப்போதுதான் பதில் ஹாய் அனுப்பி இருந்தாள். கை அவள் பாட்டுக்கு அவன் கேட்ட பார்மாலிட்டியான கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தது.

கடந்த சில நாட்கள் அவளுக்கு மிகவும் சோதனையாகவே அமைந்தன. இப்போது என்ன திருமணமா நடந்து விட்டது? இந்த மாப்பிள்ளை வேண்டாம், பிடிக்கவில்லை எனச் சொல்லிவிடு என நியாயவாதியான மூளை அவளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவளால் அப்படிச் சொல்ல முடியவில்லை. ராமின் பேச்சு அவளுள் ஏராளமான கேள்விகளை எழுப்பி இருந்தது. தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

எப்போதும் கதைகளில் மூழ்கி இருப்பவள் அதிலிருந்து வெளிவந்து சுற்றிலுமுள்ள ஆண்களின் செய்கைகளை உற்று நோக்கினாள். சிலர் பெண்களை அங்கம் அங்கமாக மேய்வதையும், சிலர் பேசுவதில் பொய் இருப்பதையும், சிலர் உள்ளொன்று வைத்து வெளியே இனிப்பாகப் பேசுவதையும் அவளால் உணர முடிந்தது.
கணக்கில் கொள்ளாத பலவற்றையும் தனக்கு ஒன்று என்றதும் கணக்கு வைக்க ஆரம்பித்தாள். தனக்குச் சில நாட்களாகத் தெரிந்த ராமையும் பிறரையும் ஒப்பிட்டு பார்த்தாள். அவனைக் குறைச் சொல்ல, அவன் சொன்னவற்றைத் தன் பெற்றோரிடம் சொல்லவும் அவள் மனதிற்கு ஒப்பவில்லை. அதற்கும் அம்மா சொன்னதையே மனதில் காரணமாக வைத்துக் கொண்டாள்.

‘ஒருவேளை இதே பையன் தான் உனக்கு மாப்பிள்ளைனு இருந்திச்சுன்னா இன்னிக்கு நீ பேசறதுதான் அவங்க மனசில தங்கி போகும்’

உண்மைதானே எனக்கு இவன் தான் கணவன் என்றால் நான் அவனை விட்டுக் கொடுத்து அம்மா, அப்பாவிடம் தவறாகச் சித்தரித்தால் அவர்கள் மனதில் அவனைக் குறித்த தவறான பிம்பம் பதிந்து போய் விடும் அல்லவா? திருமணம் ஆகாத போதும் அவள் அவன் நன்மை குறித்துச் சிந்தித்தாள்

வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் சிந்தித்தவள் சனிக்கிழமையன்று ராமை மணக்க தனக்கு விருப்பம் என்று பெற்றோரிடம் சொல்லி விட்டாள்.

அம்மா அப்பாவின் மகிழ்ச்சி பார்த்து, அவளும் மிகவும் உவகைக் கொண்டாள். ஆனால், அவனிடம் வலிய போய்ப் பேச அவளுக்கு மனம் இல்லை. தான் மெசேஜ் செய்யவில்லை என்றதும் அவனும் செய்யவில்லைதானே? என அவள் மனம் முறுக்கிக் கொண்டது.

அவள் தயக்கங்களுக்கான இரண்டாவது காரணம் என்னவென்றால் தானே முதலில் பேசினால் அவனது கெட்டப் பழக்கங்களுக்குத் தான் சரி என்று சொல்லி விட்டதாக ஆகிவிடுமல்லவா? ஆனால், தான் திருமணத்திற்குச் சம்மதித்ததே அவனுக்கு அவனது பழக்க வழக்கங்களோடு அவனை ஏற்றுக் கொள்ளுவதான உணர்வை கொடுத்திருக்கும் என்பதை உணர மறந்தாள்.

அதிகமாய்ப் பேசிக் கொள்ள, சந்திக்க ராமின் வேலை அவனை அனுமதிக்க வில்லை. அடிக்கடி மெசேஜ் செய்து கொண்டார்கள். கிண்டல் கேலி செய்ய மறக்கவில்லை. அவன் மறவாமல் அவள் அனுப்பும் மொக்கை ஜோக்குகளுக்கு ஹா ஹா ஸ்மைலி போட்டு வைத்தான். மோதிக் கொள்ளும் படி ஆகி விடக் கூடாது என்பதற்காக இருவரும் தங்களுக்குள் முதன் முதலில் பிரச்சனையைக் கொண்டு வந்த விஷயத்தைக் குறித்துக் கலந்துரையாடவில்லை.

ஒட்டியும் ஒட்டாமலும் தொடர்ந்த அவர்களின் உறவு திருமணத்திற்கு முந்தைய சாயுங்காலத்தில் வந்து நின்றது. அவர்கள் இருவரின் நிச்சயதார்த்தமும் அன்றே நடத்தி அதனோடு கூட ரிசப்ஷனையும் வைத்திருந்தனர்.

தங்க நிற டிசைனர் சேலையில் கண்ணைக் கவரும் விதமாய் ஜொலித்துக் கொண்டிந்த கோமுவையே வைத்த கண் எடுக்காமல் அவ்வப்போது பார்த்து வைத்து வெட்கத்தில் நெளியச் செய்து கொண்டிருந்தான் ராம். அவனும் அந்த ப்ளூ சூட்டில் வெகு வசீகரனாய் இருந்ததைக் கோமுவின் கண்கள் அளவிட மறக்கவில்லை. அவளது தோழிகள் வந்து சீண்டிச் சென்றதில், அதுவரை அவளுக்கு வராத வெட்கம் எல்லாம் வந்து கன்னத்தைச் சூடாக்கிச் சென்றது. வெட்கத்தால் இன்னுமாய் அவள் அழகு கூடித் தெரிய, அதனை அள்ளிப் பருகின அவளவனின் கண்கள்.
மோதிரம் மாற்றுகையில் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் திணறினாள்.

அதன் பின்னர்ப் பெரியவர்கள் சம்பிரதாயங்களைச் செய்து முடித்தனர். வாழ்த்துக்களும். பூங்கொத்துக்களும், மெல்லிசையும் அந்த இடத்தையே மகிழ்ச்சியில் ஆரவாரிக்கச் செய்து கொண்டிருந்தது. இந்த இருவரையும் வினோதமான உணர்வு ஆட்கொண்டது. தொலைவில் மெசேஜ் செய்வது தகவல் பறிமாறிக் கொள்வது என்பது வேறு, எதிரெதிரே அமர்ந்து பேசுவது என்பது வேறு, கைக் கோர்த்து அருகருகே ஏறத்தாழ மணக் கோலத்தில் நிற்பது என்பது வேறல்லவா?

போட்டோ ஷீட்டுக்காக அவன் ஒவ்வொரு முறை அவள் தோளை அணைக்கையிலும் உள்ளுக்குள்ளே ஏகத்திற்கு ரசாயன மாற்றங்கள். இருவரும் அந்த வெம்மையை உணர்ந்து உள்வாங்கி உருகிக் கொண்டிருந்தனர்.

இரவு வந்தது….

பால்சொம்பை ஏந்திக் கொண்டு அந்த அறைக்குள் பாதங்களை எடுத்து வைக்கின்றாள் கோமு. அவளைத் தின்னும் அவனின் விழிகளைக் கண்டு நாணி தலைக் குனிகின்றாள்.

வா கோமு அவன் குரலில் ஏகத்திற்கும் கிறக்கம். உணர்ச்சி மேலீட்டால் கரகரத்துக் கிடக்கும் அவனது குரலில் இவள் தடுமாறியவளாய் அலங்கரிக்கப் பட்ட , நறுமணம் மிகுந்த அந்தக் கட்டிலை அடைந்தாள்.

அவளது கையினின்று பாலை வாங்கி அருகாமையிலிருந்த பழ டேபிளில் வைத்து விட்டு அவளது இரு கரங்களையும் ராம் பற்றிக் கொண்டான்.

என்னாச்சுடா?

ம்ம் … ஒன்னுமில்ல…

ம்ம்… சொல்லேன்

இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருக்க நேரம் நள்ளிரவை தாண்டுகின்றது.

வா நாம் தூங்கலாமா? அதற்குள்ளாக அவளது நகைகளைக் கழற்ற உதவி செய்து அவள் அவனை ஒட்டி அமரவும் தாபமாய் அவன் கரங்கள் அவளை அணைக்கின்றன.

கூச்சத்தில் கோமு மூச்சு திணறினாள்.

இல்ல…

ம்ம்… தனக்கு வாகாக இருந்த கழுத்தில் குனிந்து அவன் முத்தமிட்டான்.

ம்ம்…

அவன் எதையோ யாசிப்பவன் போல அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

இப்ப வேணாமே, கொஞ்ச நாள் கழிச்சு…

ஓ…ராமின் குரலில் ஏமாற்றம் தொனித்ததோ?

பரவாயில்ல கோமு கொஞ்ச நாள் போகட்டும்

பெருமூச்செழுந்தவனாக அவளை அணைத்து படுத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் அவள் சுகமாக இளைப்பாறினாள். தூக்கம் கண்ணைச் சுழட்டியது. ஆவ்வ்… தூக்கத்திற்கு ஆயத்தமாகி கொட்டாவி விடுகையில் யாரோ அவளை உலுக்கினார்கள்.

கோமு, கோமு…

அம்மாவா? பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ளா அம்மாடியோவ்… அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் கோமு.

அது அவள் அறை, அங்கே முதலிரவு அலங்காரத்தைக் காணோம். ராமையும் காணோம். ஐயோ அந்தப் பால் குடிக்கவே இல்லையே? பழத்தட்டையும் காணோம். கண்கள் சொக்கிப் போய் அரைத் தூக்கத்தில் சுற்றும் முற்றும் பால் சொம்பையும், பழத்தட்டையும், ராமையும் தேடிக் கொண்டு இருந்தவளை மந்திரா மறுபடியும் உலுக்கினார்.

என்ன அம்மா? கண்கள் சொக்கி பார்த்தவளை இழுத்து மந்திரா நெற்றியில் முத்தமிட்டாள். இன்றையோடு இந்த எழுப்புகிற ட்யூட்டி முடிந்தது. நாளையிலிருந்து என் மகவு தனக்குத் தானே எல்லாம் பார்த்துக் கொண்டாக வேண்டும்.

குழந்தையாக இருப்பவளை பொறுப்புகள் கொடுத்து ஓடு இது உன் வாழ்க்கை உன் ஓட்டம் என்று இன்று அனுப்பி வைக்க வேண்டி இருக்கின்றது.

தன் மனதை சூழ்ந்த துக்க மேகத்தை அகற்றி, அந்த நன்னாளுக்கான தயாரிப்பில் மகளை ஈடுபடுத்த அழைத்துச் சென்றார்.

மணமகளாக அவள் எழிலுற புறப்பட்டுக் கொண்டிருந்தாள். கண்களில் கனவுகளும், அவள் கன்னத்தில் இரவு கனவின் எச்சங்களாய் வெட்கச் சிவப்பும் அலங்கரித்திருந்தது. அவள் கனவுகள் நனவாகட்டும். ஒவ்வொரு பெண்ணின் திருமணக் கனவுகளும் நனவாகட்டும். புகுந்த வீட்டில் அன்பும் அனுசரணைகளும் கிடைக்கட்டும்.

வாரணம் ஆயிரம்சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் கட்ட கனாக் கண்டேன் தோழீ நான்

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளைக் கழுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளைப் புகுத கனாக் கண்டேன் தோழி நான்

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here