5. நீயும் நானும்

0
784
Neeyum Naanum

அத்தியாயம் 5

புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே

தங்கச்சிக் கண்ணே

சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே 

காலங்காலமாகப் பெண்ணுக்கு மட்டுமே அறிவுரை சொல்லும் அந்தப் பிரபலப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. புது மணத் தம்பதியர் மணமகனின் இல்லத்தில் வந்து விட்டிருந்தனர். கல்யாணி மகனையும் மருமகளையும் ஆசை ஆசையாய் முகத்தில் மலர்ச்சி துலங்க ஆரத்தி எடுத்தார். சில பல சடங்குகள் தொடர்ந்தன. மணமக்கள் தொடர்ந்த நிகழ்ச்சிகளில் களைப்புற்று இருந்தனர்.

ராம் உள்ளறைக்குச் சென்று தன்னைச் சரிப்படுத்திக் கொண்டான். அந்தச் சபாரி சூட் அவனுக்கு மிகவும் அழகாக இருந்தது. பட்டுச் சேலை மினு மினுக்கத் தன் வீட்டில் முன்னறையில் அமர்ந்திருப்பவளை பார்த்தான் காலையிலிருந்தே அவள் மீது ஒட்ட வைத்திருந்த பார்வை இப்போதும் அகலுவேனா என்றது. அவன் உறவினன் ஒருவன் அதைக் கண்டு கேலிப் பேசிச் சென்றதை அவன் கண்டு கொள்ளவில்லை.

அவள் என் மனைவி எனக்கே உரிமையானவள் நான் பார்த்தால் தான் என்ன? என வெட்கம் கெட்டத்தனமாய்ப் புன்னகை முகத்தோடு பார்வையைப் பதித்திருந்தவன் அவளருகே வந்து அமர்ந்தான்.

ராம்… கிசுகிசுப்பாய் அவள் கூப்பிட்டு வைக்க அது அவன் காதில் கிளுகிளுப்பாய் கேட்டுத் தொலைத்தது.

என்னடா கோமு… வெளிப்படையாகவே வழிந்தான்.

உன்னோட முடியலடா… மனதிற்குள் சலித்துக் கொண்டாள் கோமு, இன்பச் சலிப்பு.

ரெஸ்ட் ரூம் போகணுமா? என் கூட உள்ளே வர்றியா? அவன் கேட்டதென்னவோ தன் அறை வரையிலும் அழைத்துச் செல்லவா? என்று தான். ஆனால், அவளுக்கு வேறு விதமாய் முதலில் புரிந்து பின்னர்த் தெளிய அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்து தொலைத்தது. அடக்கிக் கொண்டாள்.

அவன் அவளது காதருகே வந்து கிசுகிசுத்ததை மற்றவர்கள் கேலியாய் பார்க்க,அவளுக்கு வெட்க வெட்கமாய் வந்து தொலைத்தது.

அடங்கொப்புரானே இவன் அடங்கவே மாட்டானா? என அயர்ந்த பார்வை ஒன்றை அவன் பக்கம் வீசினாள் கோமு.அதையும் காதல் பார்வையாக எண்ணி கேட்ச் பிடித்து அவளை அவுட்டாக்கினான்.

இருதரப்பு குடும்பத்தினர், மற்றும் உறவினர்களுக்காக இரவு உணவுக்கு ராம் அபார்ட்மெண்ட் மாடியில் அவன் நண்பர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அவர்களோடு அவனும் இணைந்து கொண்டான்

ராம் சென்றதும் கோமு அப்புதிய வீட்டில் தன்னந்தனியளாய் உணர்ந்தாள். அவ்வப்போது சிறுபிள்ளைகளும் உறவினர்களும் அவளிடம் வந்து பேசி கலகலக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

உறவில் ஒருவர் அவளின் தேவை உணர்ந்து உள்ளறைக்குள் அழைத்துச் சென்று உடையைச் சரிப்படுத்த உதவினார். கொஞ்சம் அலங்காரம் குறைக்கவும், இயற்கை உபாதைகள் தீர்ந்ததும் அதன் பின்னர்க் கோமு கொஞ்சம் இலகுவாய் உணர்ந்தாள்.

இரவு உணவு முடிந்து பெற்றோர்கள் விடைப் பெற்றுச் சென்றதும் சோகம் அவளைத் தாக்கியது. அரவணைத்துக் கொண்ட மணமகன் வீட்டினர் அவளை அலங்கரித்து அவன் அறைக்குச் செல்ல வழி காட்டி நாகரீகமாய்ச் சென்றனர்.

தெரியாத வீடு, கொஞ்சமே கொஞ்சம் பேசி பழகிய ஆண்மகன். காலை முதல் அவளைப் பின் தொடர்ந்த அவனது வேட்கைப் பார்வை, மனம் திக் திக்கென்று அதிர்ந்து கொண்டிருந்தது.

வா கோமு…

வெகு சாதாரணமாய் அழைத்தான், அவன் முகத்தில் திருமணம் தந்த தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. சின்னதாய் அவளிடம் விசமமாய்க் கண்ணடித்து அவள் அதனைக் கண்டு அதிரவும், தன் முகப் பாவனையை மாற்றிக் கொண்டான்.

அவன் புன்னகை எப்போதும் போலவே அவளை வெகுவாய் வசீகரித்தது. கண்கள் அவன் முகத்தில் பதிந்த பின்னர், திரும்ப அவளிடம் மீளவில்லை. கோமுவின் முகமும் மகிழ்ச்சியின் மிகுதியால் வெகுவாகத் தகத் தகத்துக் கொண்டிருந்தது. வழக்கமான அதீத ஒப்பனை இல்லாமலே தன் எதிரில் நின்றவனை அவள் தடுமாறச் செய்து கொண்டிருந்தாள்.

எளிய ஒரு புடவை இலேசான இதமான சிகப்பு நிறத்தில் அணிந்திருந்தாள். அந்தப் புடவை அவளது உடலின் வளைவு, நெளிவுகளை வஞ்சகமில்லாமல் காட்டிக் கொண்டு இருந்தது. எதிரில் இருந்தவன் மூச்சு ஏறி இறங்கியது.

அவள் படபடப்பாக இருப்பதை மேலுதட்டில் வீற்றிருந்த வியர்வை துளிகள் சொல்லிக் கொண்டிருந்தன. வியர்வை துளியை ஆடையாகச் சூடியிருந்த அவள் மெல்லிதழ்கள் இலவம் பஞ்சாக அவனுக்குக் காட்சியளித்தது. எப்போது சுவையறிவோம் என அவனது இதழ்கள் அடங்காமல் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தன. உதட்டிற்கு மேலே மூக்கின் அருகில் வீற்றிருந்த அந்தக் குட்டி மச்சம் எனக்கும் முத்தம் ஒன்று வேண்டும் என அவனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தது.

உனக்கு இல்லாததா? என அதனோடு ஒப்பந்தம் பேசி நிமிர்ந்தவன் கண்களில் அவளது நீண்ட மூக்கும், தடுமாறி தடுமாறி அவன் முகம் பார்த்தும் பாராமல் தவித்துக் கொண்டிருந்த நயனங்களும், அவற்றிற்கு மேலெ இருந்த இரு புருவங்களும் சிறிதாய் படபடப்பில் நெரிந்திருக்க நட்ட நடுப் பகுதியில் வீற்றிருந்த அந்தப் பொட்டும், நெற்றியில் அவனுக்காகச் சூடியிருந்த அந்தக் குங்குமமும் அவனுக்கு உரிமை உணர்வை ஏகத்திற்குமாய் எழுப்பி விட்டது.

இருவரும் தட்டுத் தடுமாறி ஏதேதோ அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கையில் எப்போது அவளை அணைத்தான்? ஆட்கொண்டான் என்பதை இருவரும் நினைவில் கொள்ளவில்லை.

இவள் எனக்கு உரிமையான மனைவி எனத் தனது உரிமை அனைத்தையும் அவளிடத்தில் காட்டிக் கொண்டிருந்தான். அவளும் அவன் கற்றுக் கொடுத்த காமனின் பாடம் கற்க முரண்டாமல் அவன் உடல்மொழி விடுத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப அவனோடு இசைந்தாள். நடு இரவில் கண் விழித்தவளுக்கு முதன் முதலில் தன் கணவனே ஆனாலும் அவனோடு கூடத் தானிருந்த நிலை, தன் ஆடையற்ற உடல் கூச்சத்தைக் கொடுத்தது.

முதல் கூடலின் விளைவில் ஏற்பட்ட உடல் வலியோடு கூட மனதில் கணவன் மீதான சிறிதான ஏமாற்றமும் எழுந்தது. என்னதான் திருமணப் பந்தத்தில் இணைந்து நான் அவன் மனைவியாக ஆகியிருந்தாலும் கூட ராம் என்னிடம் ஒரு முறை கூட அனுமதி கேட்கவில்லையே? மனம் முணுமுணுத்தது.

எழுந்து உடை அணிந்து, தன்னைச் சுத்தம் செய்து வந்து கணவனருகே வந்து படுத்து அயர்ந்தாள். திருமணத்திற்கு முன் தினமே கனவில் குடும்பம் நடத்தியவள் இழந்த தூக்கத்தை ஈடு செய்ய முயன்றபடி தூக்கத்தில் கண் சொக்குகையில், அவள் கணவனின் கைகள் அவளைச் சிறை செய்தன. அவனது முத்தங்களும், மோக பிதற்றல்களும், காதல் மொழிகளும் அவளை மற்றோர் உலகிற்கு அழைத்துச் சென்றது மறுபடியும், மறுபடியும், மறுபடியும்.

காலையில் எழுந்தவளுக்கு ராம் முகத்தைப் பார்க்கவும் கூச்சமாய் இருக்க, அவன் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்.

மனம் அவளது அனுமதி கேளாமலேயே கவிதை பாடியது.

என்னவனே!

என்னை மலர் போலக் கொய்தாயடா.

தினமும் மலர்ந்து, உன் கரத்தில் திகழ

மணமும் பரப்பி, உன் மார்பில் துயில

ஆசைக் கொண்டேனடா –வெகுவாய்

ஆசைக் கொண்டேனடா.

வெட்கம் கெட்டத்தனமாய்க் கவிதை இயற்றிய மனதை கடிந்துக் கொண்டவள், அதனை ரசிக்கவும் செய்தாள்.

இதை முகநூலிலும் பகிர முடியாது எண்ணுகையிலேயே இந்தக் கவிதையைப் பகிர்ந்து கொண்டால் என்னென்ன பின்னூட்டங்கள் வரும் என் கின்ற கற்பனை வெகுவாய் கூச்சம் ஏற்படுத்தியது. அதனையே சிந்தித்து வெட்கமுற தன் உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தவளிடம் ராம் வந்தான்.

கோமுவின் கீழுதட்டை அவளது முத்துப் பற்களிடமிருந்து விடுவித்து,

என்ன? என அவளிடம் விசமமாய்க் கேட்க, காலையிலிருந்து அவன் கண்களில் படாமல் தப்பித்துக் கொண்டிருந்தவள், இப்போது அவனிடம் வசமாய் மாட்டிக் கொண்டதை எண்ணி வெட்கமாய்ச் சிரித்து வைத்தாள்.

என்னாச்சு? எனக்கு டீ உண்டா இல்லையா? அதட்டிய பாவனைச் செய்தான்.

டீ தானே அத்தைகிட்ட கேளுங்க… அவளும் முறுக்கிக் கொண்டாள்.

உன் அத்தை எனக்கு டீ தர மாட்டாங்களாம், என் பொண்டாட்டி கையில தான் நான் வாங்கிக்கணுமாம்’

வசீகர முறுவலால் அவளை அடியோடு சாய்த்தான்.

என்ன நடக்குது இங்க… காலையில நான் ரூமில் இருந்தப்போ நீ சமையலறையில இருந்த. சரி உன்னைப் பார்க்கலாம்னு கிச்சன் பக்கம் வந்தா நீ இப்ப நம்ம ரூமில் வந்து உக்காந்திருக்க. என்ன ம்ம்? அவனது கேலியில் முகம் சிவந்தவள். தப்பிக்கும் வழி அறியாதவளாக,

இருங்க உங்களுக்கு டீ கொண்டு வரேன்

எனச் சிட்டாகப் பறந்து விட்டாள். அவளின் வெட்கம் கண்டு அவளைக் கிண்டலடித்து அவன் சிரிக்கும் சத்தம் அவளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

‘அய்யோ… கண்டு கொண்டானே’

சமையலறைக்குள் வந்தவள் இரு உள்ளங்கைகளாலும் வெட்கத்தால் தன் முகத்தை மறைத்து நின்ற இடத்திலேயே ஒரு காலை ஊன்றி சிறுபிள்ளைப் போலச் சுற்றி நின்றாள்.

அப்படி நிற்கவும் எதிரில் நின்று கொண்டிருக்கும் மாமியாரின் முகத்தில் அவளது சிறு பிள்ளைத்தனமான, கேலியான சிரிப்பைக் காணவும் இன்னமும் வெட்கினாள்.

டீ கேட்டாங்க, இதோ கொண்டு போறேன்.

என உளறியவளாக அவசரமாய்த் தனக்கும் அவனுக்கு டீ எடுத்துக் கொண்டு அவனறைக்குச் சென்று விட்டாள். சுதர்சன் ஹாலிலிருந்து கவனித்துக் கொண்டு மனைவியைப் பார்த்து சிரித்து வைத்தார். மாமனார் முன்பும் தன் மானம் கப்பலேறியதை உணர்ந்திருந்தால் கோமு என்ன செய்திருப்பாளோ? அறியாமல் போனாள்.

திருமணத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் உறவுகள் சொந்தங்கள் வீட்டிற்குச் சென்று வருவதுமான அத்தனை முறைகளையும் செய்து முடித்த பின்னர்ப் புதுமணத் தம்பதியர் தேனிலவிற்காகச் சில நாட்கள் ஊட்டி, கொடைக்கானல் சென்று வந்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் சுகித்து மகிழ, அவனது ஒரிரு வார லீவும் நிறைவுக்கு வந்தது.

நாளையிலருந்து நானும் ஆபீஸ் ஜாயின் பண்ணிக்கிறேங்க…

ம்ம்… அலுவலகம் செல்வதற்கான ஆயத்ததில் இருந்தான் ராம்.

என்னாச்சு ஒரு மாதிரி சைலண்டா இருக்கிறீங்க?

அவனெதிரே நின்று கொண்டு கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தவளின் அருகே வந்து அவள் கன்னங்களை நிமிண்டியவன் ஒன்றும் இல்லையெனத் தலையை அசைத்தான்.

என்னங்க என்னாச்சு? ப்ளீஸ் சொல்லுங்க

ஒன்னுமில்லடா…

முறைத்துக் கொண்டு நின்றவளை தானும் அமர்ந்து தன் அருகே சோபாவில் அமர்த்தியவன். அவள் மென்மையான விரலகளைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டான். கடந்த சில நாட்களில் அவளது அருகாமைக்கும், அணைப்புக்கும் வெகுவாய் பழக்கப் பட்டிருந்தான். இதமான உணர்வுகளும், அரவணைப்பும் கொண்டவள் என் மனைவி என்று மனதிற்குள் உணர்வுகள் எழுந்தன.

அது ஒன்னுமில்லடா….

அவன் குரலிலேயே ஏதோ பெரிதாய் இருக்கிறது என யூகித்து விட்டாள். அவனாய் சொல்லும் மட்டும் தன் விரல்களை அவனை வருட விட்டு விட்டு அமைதி காத்தாள்.

நம்ம மேரேஜீக்கு நான் எடுத்த இந்த ரெண்டு வார லீவ் நேரத்தில தான் எங்க ஆபீஸ்ல AM (Asst Manager) IJP roll out செஞ்சிருக்காங்க.

அப்படின்னா? புரியாமல் விழித்தாள். ஏனென்றால் அவளது அலுவலகத்தில் அந்த முறை கிடையாது, அது குறித்து அவள் அறிந்திருக்கவில்லை.

அப்படின்னா Internal Job Posting தகுதியானவர்களை அடுத்த நிலைக்கு, பதவி உயர்வுக்குத் தெரிந்தெடுக்கும் முறை.

ம்ம்… தன் மனைவிக்கு இன்னும் புரியவில்லை எனக் கண்டு கொண்டவன் அவள் கைகளை விடுத்து சாக்ஸை அணிந்து ஷீ அணிய ஆரம்பித்தான்.

கைகடிகாரத்தைப் பார்த்தான் நேரம் 3.30. எப்போது வேண்டுமானாலும் ஆபீஸீக்கு அவனைப் பிக் அப் செய்யக் கார் வரலாம். ஆயத்தமாக இருப்பது நல்லது என அவன் கைகள் அவன் பாட்டிற்கு வேலை செய்ய அவளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள்ளாக அவனுக்கான டீயையும், பிஸ்கட்டுகளையும் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள் கோமு.

இந்த AM பதவி எனக்குக் கொடுக்காம கடந்த ரெண்டு வருஷமா இழுத்தடிச்சுகிட்டு இருக்கிறாங்க.

ஓ,

யாரோ வேண்டும் என்றே தான் நான் லீவில் இருக்கும் போது இதைச் செய்திருக்கணும்.

அச்சோ …ஏன் ராம்? இப்படில்லாம் செய்வாங்களா?

எல்லாம் செய்வாங்கடா…

இப்ப என்ன செய்வீங்க அவள் முகத்தில் கவலை படர்ந்திருப்பதைப் பார்த்துக் கன்னத்தைத் தட்டினான்.

அதெல்லாம் நான் பார்த்துப்பேன் செல்லக் குட்டி…

ராம்… நான் குட்டியா? கால்களை உதைத்துச் செல்லம் கொஞ்சினாள். எல்லாம் சில நாட்களாகத்தான் மஞ்சள் கயிறு பந்தம் சில நாட்களிலேயே இருவரை ஓருடலாக இணைத்து வைத்து விட்டது. நாட்கள் கூடக் கூட இப்பந்தம் இறுகிப் பிணைந்து விட விடும் அது தானே நியதி.

அப்படின்னா இப்ப நீங்க அந்த IJP க்கு போக முடியாதா? உங்களுக்கு நீங்க எதிர்பார்த்த வாய்ப்பு…

அவள் சொல்லும் முன்னால் வாயை பொத்தி இருந்தான் ராம்.

எதுவானாலும் பாசிட்டிவா பேசுடா, இப்படிப் பேசாதே…

அச்சோ ஸாரி ராம் முகம் சுருங்கினாள்.

நான் அந்த அர்த்தத்தில சொல்லல, ஏதோ விளக்கம் கொடுக்கப் போனவளை நிறுத்தினான்.

விடுடா …நீ அப்படி நினைச்சு எதுவும் பேசலைன்னு எனக்குத் தெரியும்,… சரி இப்ப சிரி, சிரிங்க மேடம்… கிச்சு கிச்சு காட்டிக் கொண்டிருக்கையில்

ராமின் போன் இசைத்தது, பிக் அப் செய்ய வந்திருந்தவன் செய்திருந்தான். இதோ வருகிறேன் என அவனிடம் பதில் சொல்லி,

கோமு பாய்டா… அவள் முன்னுச்சியில் முத்தம் கொடுத்து விடைப் பெற்றான். அப்படியென்றால் இன்றிரவு கணவன் தன்னோடு இருக்க மாட்டான். தான் மட்டும் இந்த அறையில் தனியாக… எண்ணும் போதே மனம் சலித்தது. ஜன்னல் வழியாகக் கணவனுக்குக் கை காட்டியவள் மாமியாரோடு மற்ற வேலைகள் செய்ய இணைந்துக் கொண்டாள்.

பேஸ்புக், வாட்சப் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு இருவரும் அரட்டையடிக்க ஆரம்பித்தனர். நம்ம மாமியார் மாடர்ன் மாமியாராக இருப்பது நல்லதாகப் போச்சு கோமு மகிழ்ந்துக் கொண்டாள். இரவு உணவு உண்டு படுக்கைக்கு வர அம்மா போன் வந்தது. அவரோடு பேசிக் கொண்டே கண்ணயர்ந்தாள்.

நடு இரவில் கண் விழித்தபோது வழக்கம் போல இருளில் மெத்தையை வருடி அருகில் ராமை தேடினாள். அவனைக் காணவில்லை என்றதும் சிறிது நேரத்தில் அவள் மூளை விழித்துக் கொள்ளக் கணவன் அலுவலகத்தில் இருக்கிறான் எனப் புரிந்து எழுந்து அமர்ந்தாள்.

அவனுக்கு அலுவலகத்தில் ஏதோ ஒரு பிரச்சனை என்று மட்டும் உணர்ந்ததால் அவனுக்காக என்ன செய்யலாம்? என யோசித்தவள். இறை வழிப்பாட்டையும், விரதத்தையும் செய்ய முடிவெடுத்த பிறகே அவள் மனம் சமாதானம் அடைந்தது.

தன் டைரியை எடுத்து பல முறைகள் ஸ்ரீரீராம ஜெயம் எழுதி, தன் இஷ்ட தெய்வத்திடம் ராமுக்காக வேண்டுதல் வைத்து கண்ணயர்ந்தாள்.

ஈருடல் ஓருயிர் என்பது திருமணத்தில் சொல்லப் படுவதன் அர்த்தம் கணவன் மனைவிக்கிடையேயான கலவியைக் குறிக்கும் சொல் அல்ல. ஆண், பெண் என அவர்கள் இரு வேறு உடல்களாக, இரு நபர்களாக இருந்தாலும் கூட, ஒருவருக்கு ஒரு துன்பம் நேர்கையில், மற்றவர் அந்தத் துன்பம் தனக்குத் தன் உடலில் நேர்வதாகவே எண்ணி, அவரது வலியை தனதாகவே பாவிக்கும் அன்பு பிணைப்பு தான் அந்த வாக்கியத்தின் உண்மையான பொருள்.

கோமு மற்றும் ராம் மணவாழ்க்கை, அவர்களைச் சுற்றியுள்ள சமூக, பொருளாதார அழுத்தங்களால் பாதிப்புறுமா? இல்லையா? எனத் தொடர்ந்து பார்ப்போம்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here