6. நீயும் நானும்

0
754
Neeyum Naanum

அத்தியாயம் 6

புது மாப்பிள்ளை மினுமினுப்போடு அலுவலகத்திற்கு வந்து இருந்தான் ராம். கொஞ்சமாய்க் கன்னங்கள் கூட மின்னினவோ. ஜாஸீம் கூட வழக்கத்துக்கு மாறாகச் சிரித்துப் பேசிச் சென்றாள்.
வேலை வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. சமீர் திருமணத்திற்கு நீ பார்ட்டி கொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்திச் சென்றான்.

அவனது டீமிலிருந்து திருமணம் அன்றே அனைவரும் சேர்ந்து விலையுயர்ந்த பரிசொன்றை அளித்திருந்தனர். தான் லீவில் இருந்த இரண்டு வாரத்தில் வந்து குவிந்திருந்த மெயில்களை ஒவ்வொன்றாய் பார்த்து, உரிய பதில் அனுப்பி, பதில் அளிக்கப் படாதவை குறித்துத் தன் அசிஸ்டெண்டிடம் கேட்டு நிமிரும் போது மணி இரவு 10.30 ஐ தாண்டி விட்டிருந்தது. அவனது அக்கம் பக்கம் யாரும் இல்லை. எல்லோரும் இரவு உணவு இடைவேளைக்குச் சென்று விட்டிருந்தனர்.
கோம்ளியைப் பற்றி எண்ணிக் கொண்டான். இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்? அவளை நினைக்கும் போதே ஒரு இன்ப மயக்கம்.

தங்களது முதல் சந்திப்பும், அவளுக்குத் தெரிந்த தன் பழக்கங்களும் குறித்து இந்த இரண்டு வாரங்களும் ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. அவன் சிகரெட் குடிக்காமலெல்லாம் இல்லை. தண்ணியைத் தான் தொடவே இல்லை, அதன் தேவை ஏற்படவும் இல்லை. கோம்ளி அருகில் இருக்க வேறெதுவும் ஞாபகம் வந்தால் தானே?

காலை எழுந்து யாருக்கும் தெரியாமல் ஒன்றிரண்டு புகைத்து விட்டு வந்து குளித்து விடுவான். அப்படியும் அவளைக் கடந்து குளிக்கச் செல்லும் போது அதன் வாடையைக் கண்டு கொள்பவள் அவனை முறைத்துப் பார்ப்பாள்.

புகையை ஊதிக்கிட்டு என் பக்கம் வந்தியோ மகனே, கொலைதான் விழும் என்கிற கடும் எச்சரிக்கை அவளின் கண்களில் தெரியும். எதற்கு வம்பென அவளிடம் நல்ல பிள்ளையாய் நடந்து கொள்வான்.
குளித்து வந்ததும் முறைத்தவளிடமே போய் வம்பிற்காகவேனும், ‘இதோ இப்ப என் வாயிலிருந்து வாடைப் போயிடுச்சான்னு பாரு, எனச் சோதித்துப் பார்க்க பல முத்த டெஸ்டுகளை நடத்தி அவளைச் சிவக்கச் செய்வான்.

முதலில் கணவனின் சாமார்த்தியத்தில் முத்தங்கள் கொடுத்து விடுபவள் பின்னர்த் தலையணையை வைத்தாவது ஒன்றிரண்டு மொத்தி விட்டுதான் விடுவாள்.

முத்த சண்டை முடிந்ததும் அவன் கைகளுக்குள் உருகி கிடப்பவள் எப்போதும் சொல்வது,

‘கெட்ட வாடைன்னு மட்டும் இல்ல ராம், இது உடம்புக்கு ரொம்பக் கேடு, எனக்கு உங்க கூட ரொம்ப நாள் வாழணும். ப்ளீஸ் இதெல்லாம் வேணாம். விட்டுருங்க’

அதே மயக்கத்தில் ‘அவ சொல்லுறது சரிதான் இதையெல்லாம் விட்டுத் தொலைக்கணும்’ என்றும் அவனுக்குத் தோன்றாமலில்லை.
ஹெச் ஆரிலிருந்து ரமேஷ் அலைபேசியில் அழைத்திருந்தான். மனைவியின் சிந்தனையிலிருந்து கலைந்தவன் அனத முக்கியமான அழைப்பை ஏற்றான்.

IJP அதாவது அவனது பதவி உயர்வுக்கான விண்ணப்பத்திற்கான நாட்கள் ஏற்கெனவே கடந்து விட்டிருந்ததால், தான் திருமண விடுப்பில் இருந்ததைச் சொல்லி தான் விண்ணப்பம் அனுப்ப அனுமதி கேட்டிருந்தான். அதற்காகப் பதில் கூறத்தான் தனக்கு அழைப்பு வருகிறதென்று அறிந்திருந்தான்.

ஹாய் ரமேஷ்

ஹாய் ராம், ஐ ஹேவ் செக்ட் வித் மை மேனேஜர் அபவுட் யுவர் ரிக்வெஸ்ட், ஹி அண்டர்ஸ்டுட் யுவர் சிச்சுவேசன். யூ கேன் அப்ளை போர் தேட் IJP. ( நான் உனக்காக என் உயரதிகாரியிடம் பேசினேன். அவர் உன் சூழலை உணர்ந்து கொண்டார். நீ மேற்பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.)

மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த பாறாங்கல் ஒன்று தகர்ந்து இலகுவான உணர்வு எழுந்தது. இன்றைக்கே முதல் கட்ட தேர்வும் எழுத வேண்டுமாமே? சரி எழுதிக் கொள்ளலாம் என உணவருந்தச் சென்றான்.

காபேடேரியா உணவருந்த வந்தவர்களின் நெருக்கடியால் கசகசத்துக் கிடந்தது. சாப்பாடு வாங்க கேண்டீன் பக்கம் கூட்டம் அலைமோதியது. சிலர் வெளியே இருந்து உணவு வரவழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

பொதுவாக இரவு பணி புரிபவர்களின் தூக்கம் மட்டுமல்லாது, உணவு முறையும் வெகுவாகப் பாதிப்பிற்குள்ளாகின்ற ஒன்று. அதிலும் முக்கியமாகப் பெரும்பாலானோர் காலை உணவுகள் எடுத்துக் கொள்வதே இல்லை.

இரவு முழுக்கத் தூக்கமில்லாமல் வீடு வருகின்றவனிடம் உணவா? தூக்கமா? என்று கேட்டால் தூக்கமே முதலிடம் பிடிக்கும். அதனால் இந்த இரவு பட்சிகள் சாப்பிட கிடைக்கும் நேரங்களில் நன்கு வெளுத்து வாங்குவார்கள். பணம் என்பதெல்லாம் பொருட்படுத்தாத, உடலையும் பொருட்படுத்த இயலாத, உறவுகள், விழாக்கள் அதிகமாய்ச் செல்லவியலாத பணம் மட்டுமெ நோக்கமாய்க் கொண்ட மனிதர்களின் விசித்திர உலகம் அது.

அன்று அவன் முதன் முறையாக அலுவலகத்திற்கு டிபன் கொண்டு வந்திருந்தான். அவனுக்குக் கோமு டிபன் செய்து தந்திருந்தாள். சாப்பாட்டை அழகான புதிய டப்பர் வேர் டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்தான்.அதனை ஒவ்வொன்றாய் எடுத்து டேபிளில் பரப்பினான். (டப்பர் வேர் என்பது உள்ளிருக்கும் உணவு, வெளியே துளியும் சிந்தாத அமைப்போடு கூடிய இறுக்கமான மூடிகள் கொண்ட ப்ளாஸ்டிக் டிபன்கள்)

ஹாய் ராம்

வளவளத்த படி எதிரில் அமர்ந்தான் அலுவலக நண்பன் ஒருவன்.

திருமணம் முடிந்ததன் அடையாளமா இவையெல்லாம்? முன்பெல்லாம் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வர மாட்டாயே? என டப்பர் வேர்களைக் காட்டி அவனைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தான். வழக்கமான பேச்சுக்களோடு சாப்பாடு நேரம் கழிந்தது.

அன்று அதற்குப் பின்னான பதவி உயர்வுக்கான தேர்வையும் சிறப்பாகவே எழுதி இருந்தான். இன்னும் சில தேர்வுகள் உண்டு. ஒவ்வொன்றாய் வென்று, அதன் பின்னர்த் தான் இறுதிப் படிக்கு செல்ல வேண்டும். சென்று விடலாம் என்னும் நம்பிக்கை வந்து விட்டிருந்தது.

தன்னுடைய கோரிக்கை சொல்லி திருப்பதி ஏழுமலையானுக்கு உடனடி வேண்டுதல் வைத்தான். அதே நேரம் அவனுக்காகக் கோம்ளியும் பிரார்தனை செய்து கொண்டிருந்தாள்.

அவன் தன் பணியிலிருந்து வீடு திரும்புகையில் மணி அதிகாலை நான்கை காட்டியது.

தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறந்தவன், வீட்டை உள் புறமாகப் பூட்டிவிட்டு தன் அறைக்குச் சென்றான். அவன் மனைவி அந்தப் பெரிய கட்டில் முழுவதும் கை கால்களைப் பரப்பிக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் தானாகவே புன்முறுவல் தோன்றியது.

இரவு நேர மங்கலான ஒளியிலேயே உடைமாற்றிச் சுத்தம் செய்து வந்தவன். படுக்கையில் அமர்ந்து குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்தான். அவளருகே இருந்தது அந்த நோட்டுப் புத்தகம் அது காற்றில் திறந்து கிடந்தது.

ஸ்ரீராம ஜெயம் சில பக்கங்களில் எழுதியிருந்தது விட்டு அப்படியே தூங்கி விட்டிருந்தாள் போலும். அட பாட்டியம்மா மாதிரி இப்படிப் பழக்கம் எல்லாம் வச்சிருக்கிறாளே? தனக்காகத் தான் அவள் எழுதி இருக்கிறாள் என அறியாமல் புன் முறுவலோடு அந்த நோட்டையும் பேனாவையும் பத்திரப் படுத்தியவன் தனக்கு ஓரத்தில் இடம் பார்த்து படுத்துக் கொண்டு, அவளை அள்ளி தன் மேல் போட்டுக் கொண்டு நடுக் கட்டிலுக்குள்ளாக நகர்ந்து இடத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.

வசதியாய் தூங்கிக் கொண்டிருந்தவள் இடம் மாறி இருக்க, தூக்கத்திலேயே அசௌகர்யமாக உணர்ந்தவள் அவன் மார்பில் இங்குமங்குமாய் இடம் வாகாக அமையாமல், முகத்தைத் தேய்த்தவள் அவன் தோளில் நெருக்கிக் கொண்டு தலை வைத்து இலகுவாகத் தூங்க முயன்றாள். தூக்கத்தில் என்ன தோன்றியதோ? சட்டென்று தலையைத் தூக்கி, கண்ணைக் கசக்கிப் பார்த்தவள் அருகில் தெரிந்த கணவனின் முகத்தை விரல்களால் வருடிப் பார்த்து உறுதிச் செய்தாள்.

ஏற்கெனவே சில நேரம் அவனைத் தேடி ஏமாந்துப் போயிருந்தாள் அல்லவா?

ராம் கிசுகிசுப்பாய் வந்தது அவள் குரல்.

ம்ம்…

வந்துட்டீங்களா…

ம்ம்…

உங்களுக்கு ஏதாச்சும் சாப்பிடக் கொண்டு வரட்டுமா?
வெடுக்கென்று எழப் போனவளை இடுப்பை அழுத்திப் பிடித்துத் தன் மேல் சாய்த்து வேண்டாமென மறுத்தான்.

சாப்பிட்டு வந்திட்டேன் கோமு… ரிலாக்ஸ்…

ம்ம்…

அதான் முழிச்சிட்டேல்ல…

ஆ…

அதற்கு மேல் அவன் பேசவில்லை. அந்தப் புதுத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் தங்களிருவருக்கான தேடலில் அமிழ்ந்தனர்.

அலாரம் ஒலிக்கும் சப்தத்தில் விழித்தாள் கோமு. அவளை இறுக்கியபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ராம். அவனிடமிருந்து விடுபட்டு, தான் புறப்பட்டு, தனக்குத் தேவையான மதிய சாப்பாட்டைத் தயாரித்துக் கொண்டு தான் ஏற்கெனவே அலுவலக நிர்வாகத்திற்குத் தெரிவித்தவாறே அவளது இந்தப் புதிய விலாசத்திற்குப் பிக் அப் வந்திருக்கத் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு, மாமியாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள் கோமு.

கல்யாணி காலை உணவை தயாரித்திருந்தார். மதிய உணவையும் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார். அதனால் அலுவலகத்திற்குப் புறப்படுவது கோமுவுக்கு அதிகம் பிரச்சனைகளில்லை.

முன் தினம் தான் கணவனுக்கு டிபன் செய்து கொடுத்ததோடு சரி. இனி எப்படி முடியும்? எனத் தோன்றிற்று. அவள் வீட்டிற்கு வந்து சேரவே 6 மணியாவது ஆகும். அவனோ அதற்கு முன்னாகவே அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

அம்மா சொல்லியும் டிபன் கொண்டு போகாதவன் அவளுக்காகக் கொண்டு போவதாகச் சொல்லி இருந்தான். அவர்களிருவரின் அலுவலக நேரம் முதல் குழப்பமான விஷயமாக இருந்தது. சரி அதற்கும் ஏதாவது தீர்வு காணலாம் என யோசித்துக் கொண்டாள்.
கதைகள் வாசிக்க நேரமில்லாதிருக்கக் கதைப் புத்தகத்தை எடுத்து வாசிக்கலானாள். இப்போது கணவனின் சில்மிஷங்களும் ஞாபகத்திற்கு வர தன்னையறியாமலே அவள் முகம் புன்னகையால் விகசித்தது.

காதலும், காமமும்,

கற்றேன் உன்னிடத்தில்.

காதலில் வன்மையும்,

காமத்தில் மென்மையும்

காட்டியே வசீகரித்தவன் நீ.

அணு அணுவாய் என்

உதிரத்தில் வாழ்கிறாய்.

உன்னில்

குறையென்று எதுவும் இல்லை.

ஒன்றைத் தவிர,

இத்தனை நாளாய்,

என்னைத் தேடாமல்,

பாராமல்,

எங்கேயடா இருந்தாய்?

தான் மட்டும் வாசிக்கும் படி முகநூலில் ‘நீயும் நானும்’ எனும் பெயரிட்டு தனக்கே தனக்கு மட்டும் தெரியும் படியான ஆல்பம் ஒன்றை உருவாக்கி, தன் கவிதையைப் பதிப்பிட்டாள்.

ஏற்கெனவே பஸ்ஸில் பலரும் வாழ்த்தி இருக்க, அலுவலகத்தில் வேலையைப் பொறுப்பேற்றுக் கொண்டதும் வருகின்ற, போகின்ற அனைவருமாக ஏராளமான வாழ்த்துகள். அந்த மந்தமான கொண்டாட்ட நிலை சற்று நேரத்தில் மாறி, வேலை வழக்கமான வேகம் பிடிக்கச் சில நேரம் ஆனது. கோமு திருமணப் பொலிவில் இன்னும் அதிகமாய் அழகுற்றிருந்தாள். அதற்காகவும் மிகவும் பாராட்டுகள் கிடைத்தது. மொத்தத்தில் மிக உற்சாகமான நாளாக அன்று இருந்தது.

மதியம் ராம் அவளுக்குப் போன் செய்திருந்தான். வழக்கமாக அந்த நேரத்தில் ப்ரெண்ட் டெஸ்கில் அதிகமாகப் போன் கால் வராத சமயம். அக்கம் பக்கமும் யாரும் இல்லை. எனவே, கணவனுடன் பேச அவளுக்கு ஏற்ற நேரமாக அமைந்து விட்டது.

கோமு… ராம் குரலில் இன்னும் தூக்க கலக்கம் மிச்சமிருந்தது.

ம்ம்… சொல்லுங்க ராம்… தன்னையும் அறியாமல் அவள் குரல் குழைந்தே வந்தது. அத்தனை நேரமாய் அவனை மட்டுமே மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டிருந்ததன் பிரதிபலிப்பாக அந்த அழைப்பு இருந்தது. மனைவியின் குரலின் குழைவை ரசித்தவன்,

சாப்பிட்டியா?

ஆச்சுங்க… நீங்க?

நான் இனிதான்டா… சாப்பிட்டுட்டு இன்னொரு தூக்கம் போட போறேன்… தொடர்ந்து நீண்ட கொட்டாவி…

ம்ம்…

இன்னிலருந்து புது ப்ரோஜெக்ட் ஆரம்பிக்குது கோமு, நான் வீட்டுக்கு வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும்டா… அவனது பெருமூச்சு அலைபேசி தாண்டியும் அவளைச் சுட்டது.

சுரத்தே இல்லாமல் பதிலுக்கு ம்ம் என்றாள்.

அதன் பின்னர்க் கொஞ்சம் நேரம் விளையாட்டாய் அவளைச் சீண்டிப் பேசிக் கொண்டிருந்தவனை,

‘நேரமாகுது சீக்கிரம் சாப்பிடுங்க’

எனச் சொல்லி அவள்தான் போனை முதலில் துண்டித்தாள்.

அத்தனை நேரம் கணவன் மனைவிக்கு இடையே கரடியாய்க் கத்தாமல் சமர்த்துப் பிள்ளையாய் அவள் முன் இருந்த தொலைபேசி அப்போது கிணுகிணுக்கத் தொடங்கியது.

பிள்ளையை அமர்த்தும் தாயின் பாவத்தில் ரிசீவரை கையிலெடுத்து உற்சாகமாய், இனிமையாய் பேசி உரிய எண்ணுக்கு போன்காலை ட்ரான்ஸ்பர் செய்துவிட்டு கோமு அமர்ந்தாள். சுற்றிலுமிருந்த அவள் செல்லப் பிள்ளைகளான போன்களிலிருந்து மாற்றி, மாற்றி அழைப்பு வர, வீட்டை ராமை தற்காலிகமாய் நினைவடுக்கின் பின்னே தள்ளிவிட்டு தன் முன் இருந்த சிஸ்டத்திலும், போன் கால்களிலும் கவனம் பதித்து வேலை செய்யலானாள்.

வீட்டிற்குத் திரும்பும் போது தன்னை அறியாமல் அம்மா வீட்டிற்குச் செல்லும் ட்ராப்பில் ஏறி அசடு வழிந்தாள். அவளது தோழமைகளோ,
இப்போ உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, அதை மறந்திடுச்சா, ஓடு ஓடு அந்தப் பஸ்ல ஏறு’

என அவளைக் கிண்டல் செய்து மற்ற வண்டியில் அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்தவளுக்கு வழக்கம் போலக் கணவனில்லாத வெறுமை தாக்கியது. அம்மா, அப்பாவுடன் அலைபேசியில் பேச்சு, மாமனார், மாமியாருடன் அளவளாவல் என நேரம் கழிந்தது. இந்த வார இறுதியில் ராமுடன் தன் வீட்டிற்குச் சென்று வர வேண்டும் எனத் திட்டமிட்டாள். புதிதாகச் செய்ய நினைத்திருக்கும் விரதம் குறித்து அம்மாவிடம் கேட்டுக் கொள்ளத் தோன்றியது.

கணவனுக்கான பிரார்த்தனைகளை முடித்து, தூக்கமே வராமல் தவித்துக் கொண்டிருக்க அவர்களது அந்தப் பெரிய திருமண ஆல்பத்தை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் சொக்கி தூக்கத்திற்குச் சென்றாள்.

பொழுது புலர்ந்தது, அத்தனை வேலைகளையும் செய்து முடித்து விட்டு வீட்டை விட்டுப் புறப்படும் வரையிலும் ராமை எதிர்பார்த்தாள். காலை 7 மணி ஆகிற்று அதுவரையிலும் ராம் வந்திருக்கவில்லை.

பெருமூச்செழுந்தது, அவளுக்குத் தன் கணவனைப் பார்க்க மிக ஆசையாயிருந்தது. ஒருவேளை இப்போது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருப்பானோ? இல்லை ஆபீஸிலேயே இருப்பானோ? முக்கிய வேலை என்றானே? தான் போன் செய்தால் அவன் வேலைக் கெடும் என்பதாலேயே மெசேஜ் செய்தாள்.

குட்மார்னிங்க் ராம்
மிஸ் யூ டா… மிஸ் யூ சோ மச் ராம்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here