7. நீயும் நானும்

0
760
Neeyum Naanum

அத்தியாயம் 7

[center]பிரிவென்னும் ஒரு துயர்[/center]
[center]முடி முதல் அடி வரை – எனை[/center]
[center]வாட்டுகின்றது.[/center]

[center]உன்னைச் சந்தித்துச் சில நாளே[/center]
[center]ஆகின்றது எனும் நிஜம்[/center]
[center]உணர நான் மறுப்பதேன்?[/center]

[center]நீ முன்னொரு நாளில்[/center]
[center]என்னோடு இருந்திருக்கக் கூடும் -என்[/center]
[center]கூடவே விளையாடி வளர்ந்திருக்கவும் கூடும்.[/center]

[center]ஒரு வேளை நம் முன் ஜென்ம ஞாபகத்தை[/center]
[center]நீயும் நானும்[/center]
[center]என்றோ மறந்திருக்கவும் கூடும்.[/center]

கோமுவுக்குத் தான் ராமை பாராமல் ஒரு நாளாகி விட்டது என்பதை நம்பவே முடியவில்லை.ஏதோ, பல வருட பிரிவு போல உணர்ந்தாள். அவனைப் பாராததனால் தன் சக்தி முழுவதும் வற்றி விட்டார் போல அவளுக்குத் தோன்றிற்று. அன்றைய தினம் சுவாரஸ்யமில்லாததாக, உலகமே வர்ணங்களற்றதாக மாறி விட்டதாகச் சலிப்பாக இருந்தது.
வழக்கமாக அவள் வாசிக்கும் அந்தப் பிரபல கதையாசிரியரின் தொடர் கதையைக் கூட அன்று வாசிக்கத் தோன்றாமல், வெறுமனே தன் கையில் வைத்திருந்த மொபைலை உயர்த்தி நேரம் பார்த்தாள். தற்போது 7:40 மணி ஆகியிருந்தது. அவளுடையது காலை 8 மணி ஷிப்ட்.

இதோ இன்னும் சில நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்து விடுவேன். அதன் பின்னர் என்ன? வழக்கம் போல அதே வேலைதான் அவள் மனம் சலித்துக் கொண்டது.

பஸ் தன் நிறுத்ததில் நின்றது. அடுத்து 10 நிமிட நடையில் அலுவலகம். மரங்கள் சூழ் அந்த வழியில் ஒவ்வொருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவள் கையிலிருந்த அலைபேசி அப்போது குரலெழுப்பியது, உடனே அவளது நாடி நரம்புக்குள்ளாக ஒரு வித பரவசம் பரவி தித்தித்தது. அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ராம் தான் அழைத்திருந்தான்.

கோமு தன்னை மற்றவர்களிடமிருந்து தனிமை படுத்திக் கொண்டு வழியில் இருந்து விலகி, அந்தக் கார்டனுக்குள்ளாக நடந்தாள். போனை எடுத்ததுமே அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அங்கே போனைக் கண்டுபிடித்தவன் சொல்லிக் கொடுத்த ஹலோவை மறந்து ராம் இச்ச் இச்சென்ற சப்தத்தில் மனைவிக்கு ஹலோ சொல்லிக் கொண்டு இருந்தான்.

அவளுக்கு இணையான அவளுக்கான அவனின் மிஸ் யூ எனும் செய்தியும், தவிப்பும் அந்த முத்தங்களின் வாயிலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

ராஆஆம்… சிணுங்கலாக, வெட்கமாகக் கோமுவின் குரல் வெளிப்பட்டது.

ம்ம்… அவனின் குரலில் வெளிப்படையாகவே ஏக்கம் தெரிந்தது.

எப்ப வந்தீங்க? அவள் குரலில் கோபமும் வருத்தமும்.

கொஞ்சம் முந்திதான் டா… ஸாரி வண்டில தூங்கிட்டேனா… அதான் உனக்குக் காலும் பண்ணல, உன் மெசேஜீம் பார்க்கல…ஸாரிடா… ஸாரிடா… தொடர்ந்தவன்…மிஸ் யூ பேட்லி கோம்ளி… அத்தோடு விடாமல் மறுபடி இச்சு இச்சுக்களை வாரி வழங்க, கோமு தான் சற்று நேரம் முன்பு இருந்த சோர்ந்த மன நிலை மாறி புதிதாய் உயிர்த்தாள்.
அவளது முகம் LED பல் போட்ட மாதிரி சட்டென்று பிரகாசிக்க ஆரம்பித்தது.

தொடர்ந்த தன் சில நிமிட உரையாடல்கள், அன்பான வெளிப்படையான பேச்சுக்கள் மட்டுமே தன் மனைவியை இவ்வளவாய் மலரச் செய்ததை அவன் அறியாமல் இருந்தான்.

அவளை டல்லாகப் பஸ்ஸில் பார்த்திருந்தவர்கள்.கணவனுடன் பேசி முடித்துப் போனை கையில் வைத்துக் கொண்டு அதைப் பார்த்து மந்தகாசப் புன்னகை பூத்தவாறு வருகின்றவளை கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

போங்கடா உங்களுக்கெல்லாம் வேற வேலையில்ல, மனுஷி பீலிங்க்ஸ் உங்களுக்கு எங்கே புரியப் போகுது? என்ன இன்னொருத்தர் கிடைக்கும் மட்டும் ,இன்னும் கொஞ்ச நாள் என்னைக் கிண்டல் அடிப்பீங்க, அடிச்சிட்டு போங்கடா டேய். அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள்.

அந்த வாரம் முழுவதும் ராம் கோமு அலுவலகத்திற்குப் புறப்பட்ட பின்னரே வீட்டிற்குத் தாமதமாகவே வந்து கொண்டிருக்க, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பாராமல் நாட்களைக் கடத்தினர். போனில் மட்டும் இச்சு இச்சுக்கள் பறந்தன.

வருகின்ற சனிக்கிழமை ராமுடன் சேர்ந்து போய் அம்மா அப்பாவை சந்தித்து வர வேண்டும் என்கிற எண்ணத்தோடு கோமு வார இறுதியை எதிர் நோக்கி இருந்தாள்.

அன்று வெள்ளிக் கிழமை இரவு.

‘ஷப்பா… கடைசியில் இந்த வார இறுதியும் வந்து விட்டதா? நான் என்ன திருமணம் செய்திருக்கின்ற பெண் போலவா இருக்கிறேன்? என் கணவனைப் பார்க்க கூடத் திங்கள் கிழமை முதல் இந்த வார இறுதி விடுமுறைக்காகக் காத்திருக்கிறேன்.

ஒரே ஊரில் வேலை செய்யும் கணவனைக் காண திங்கள் முதல் சனி வரை காத்திருப்பு, ஆக மொத்தம் புருஷன் பொண்டாட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சந்திக்க ஒரு வாரமா? ஹய்யோ’
கோமு வெகுவாக மனதிற்குள்ளாகச் சலித்துக் கொண்டவாறு தான் வெள்ளி இரவு தூங்கியிருந்தாள்.

வழக்கம் போல ராம் நாளையும் அதாவ்து சனிக்கிழமை காலையில் தாமதமாகத் தான் வரப் போகிறான். கிட்டத் தட்ட ஒரு வாரமாக அந்த முகரையைப் பார்க்கவில்லை என்ற எண்ணம் கோமுவின் கனவிலும் தொடர்ந்தது.

கடந்த நாட்களில் போனில் தான் இச்சுகளும், மிஸ் யூக்களும் இருவரும் வளர்த்தார்கள். அதிலும் கோமு தான் கொடுத்த இச்சுக்களுக்குப் பதில் இச்சுக் கொடுக்கவில்லை என்று ராமுக்கு மிகவும் கோபம்.

நல்லா வாங்கிக்கிறேல்ல, தந்தா என்ன? எனக் கேட்டு இம்சிப்பான்.
அவன் தன் பூட்டிய அறைக்குள் இருந்தல்லவா இச்சுக்களை வாரி வழங்குகின்றான். அவளும் அவ்வாறு அவனுக்குத் தர முடியுமா என்ன? அவள் இருப்பது அவளது அலுவலகம் அல்லவா? இந்தத் தத்திக்கு ஒன்றும் புரிவதில்லை … மனதிற்குள்ளாகக் கணவனைக் கோபம் போலக் கொஞ்சிக் கொள்வாள்.

வெள்ளிக் கிழமை நள்ளிரவு 2 மணி ஆகி விட்டிருந்தது. அந்தச் சின்னஞ்ச்சிறிய பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்த அறையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அள்ளி தன் மாரில் சரித்துக் கொண்டது ஒரு உருவம்.

திடீரென்ற எதிர்பாராத அணைப்பில் திடுக்கிட்டு விழித்தாள் கோமு. அவசரமாய் எழுந்தவளை தன் இரு கரங்களாலும் இறுக்கி அணைத்து அசையாமல் பிடித்துக் கொண்டான் ராம்.

என்னைத் தவிர உன்னை யாருடி கட்டிக்க முடியும்? எதுக்கு இந்தப் பயம்…ம்ம்… கேட்டவனின் இறுகிய அணைப்பில் அடங்கியவள், எப்போது ஆரம்பித்தாளென்றே தெரியாமல் ராமை முத்தமிட்டு முத்தமிட்டு அயர வைத்துக் கொண்டிருந்தாள்.

வந்ததும் வராததுமாக இப்படி ஒரு ஜாக்பாட்டா? தன்னை மனைவியின் விருப்பத்திற்கு அனுமதித்து விட்டு அவள் முத்தங்களை ரசித்துக் கொண்டிருந்தான் ராம்.

ஒரு சுற்று முடித்து விட்டு மறுபடி கணவனின் நெற்றிக்கு வந்திருந்தாள் கோமு. அவன் போனில் கேட்ட முத்தங்களை நேரில் கொடுக்கும் முழு முயற்சியில் தன் எடை முழுவதையும் கணவன் மீது அழுந்திக் கொண்டு அவனைத் தூண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவள் தொடர்ந்தாள். அவள் இதழ்கள் அவனின் கண்கள், கன்னம் என முத்தங்கள் பதித்துக் கொண்டு நாடி வரையிலும் சென்று திரும்பியதே அன்றித் தன் இணைகளை அதுவரைக்கும் நாடவில்லை. அதைக் கவனித்துக் கொண்டிருந்தவன்,

இது சீட்டிங்க்…

எனக் குரல் எழுப்பினான். அவன் குரலில் அவள் திகைத்த போதே அவளது இதழ்களெனும் கோட்டையை, தன் இதழ்களால் கைப்பற்றி வெற்றிக் கொண்டான். ஆளுமை நொடி நேரத்தில் கோமுவிடமிருந்து ராமிடம் சென்று விட்டிருந்தது.

அன்றைய கூடலில் வாரம் முழுவதும் இருவரும் ஒருவரை ஒருவர் தேடியிருந்த தேடல் இருந்தது.

சனிக்கிழமை மாலை

கணவனை எழுப்பி எழுப்பிச் சோர்ந்து போய்விட்டாள் கோமு.

‘அவன் அப்படித்தான் தூங்குவான் கோமு, சனி ஞாயிறு ரெண்டு நாளும் அவனுக்குத் தூங்குறதுக்கே சரியாயிருக்கும்.’

மாமியார் சொன்னதைக் கேட்டு விழி பிதுங்கினாள்.

நான் அவரைக் கூட்டிட்டு அம்மாவை பார்த்திட்டு வரலான்னு இருந்தேன் அத்த…

இன்னொரு தடவை எழுப்பிப் பார்க்கிறேன், முகம் வாடியவளாகச் சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் கல்யாணி.

மாமியாரை ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள் கோமு. எதையோ மறைக்கிறாங்க போலிருக்கு…என்னவா இருக்கும்? சரி அப்புறம் கேட்டுக்கலாம். அறைக்குள்ளே வந்தவள்,

ஏ ராம் உலுக்கினாள்.

தூக்கத்திலேயே தன் வலக் கையை உயர்த்தி,

என்ன வரம் வேண்டும் குழந்தாய்?

தன்னைப் பகவானாகப் பாவித்துக் கேட்டான்.

கண்கள் மூடி தூங்கிக் கொண்டிருப்பவனுக்கு எங்கே தெரியப் போகிறது? என அலவம் (தன் நாக்கை துருத்திக் காட்டுதல்) காட்டியவள்.

‘இங்கிருந்து 25 கிமி தூரம் உள்ள என் அம்மா வீட்டிற்கு என்னுடன் வர, அருள் புரிய வேண்டும் சுவாமி’ என அவனுக்குப் பதிலாக இழுத்து மூக்கால் பேசினாள்.

‘உன் கோரிக்கை பரிசீலிக்கப் படும் மகளே. தற்போது சுவாமி அவர்கள் ஆழ்ந்த நித்திரையில் தியானம் செய்யப் போகிறார், அதுவரை சென்று வா மகளே’

என்னது நான் உனக்கு மகளா? எங்கே அந்தத் தலகாணியக் காணோம். இரு தேடி கொண்டு வந்து உன்னைப் போட்டு மொத்துறேன். தலையணை தேடும் முன் ராம் மறுபடி தூக்கத்தில் ஆழ்ந்திருக்க,

ராம் ஏ ராம் ப்ளீஸ் டா. நீ என் கூட அம்மா வீட்டுக்கு வந்து அங்க என் ரூம்ல தூங்கிக்கோயேன். கூட வாயேன் ப்ளீஸ்.

அவனிடம் இப்போது அசைவே இல்லை, சின்னதாய் குறட்டைச் சத்தம்.

கோமு …கல்யாணியின் குரல் கேட்டு வெளியே வந்தவள் அங்கே தன் பெற்றோரைப் பார்த்து ஓடி கட்டிக் கொண்டாள். அம்மா அப்பாவிற்குத் தாராளமாக உபசரிப்பு நடந்தது.

அம்மா நான் இப்ப அங்க தான் புறப்பட்டுட்டு இருந்தேன் தெரியுமா? மகளின் உற்சாகமான குரல் கேட்டு பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி.

வாக்கிங்க் சென்றிருந்த சுதர்சனும் வந்து அரட்டையில் பங்கு கொண்டார். தான் சமைத்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து உபசரித்துக் கொண்டிருந்தாள்.

மந்திராவுக்கு மகள் தன்னிடம் இருந்தது போலவே, மாமியார் வீட்டிலும் ஒட்டுதலாக, பொறுப்பாக நடந்து கொள்வது பெருமிதமாக இருந்தது.

‘அம்மா, இன்னிக்கு சனிக்கிழமைன்னு தான் நான் சமைச்சேன். இல்லன்னா அத்தைதான் எல்லா வேளையும் சமைச்சுப்பாங்க. என் டிபன் மட்டும் தான் நான் செஞ்சுக்குவேன். எனக்குக் காலையிலேயே எல்லா வேலையும் செய்ய இன்னும் ஸ்பீட் வரல’ குழந்தை போலச் சிரித்தாள்.

அப்படியெல்லாம் இல்ல சம்பந்தி, சமையல் தவிர மத்த எல்லா வேலையும் முடிச்சிருவா. அவ்வளவு காலையில சமைச்சு வச்சுட்டுப் போனா சாப்பாடும் சூடா இருக்காது. அதனால நானே சமைச்சிடுவேன். அது போகச் சமைக்கிறது எல்லாம் என்ன பெரிய வேலையா? மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியாராகப் பரிமளித்தார் கல்யாணி.

அம்மா போல மாமியார் கிடைச்சிருக்காங்க நல்லா கவனிச்சுக்கோ என்ன? அப்பா நெகிழ்ந்தவராக மகளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கத் தலையாட்டிக் கொண்டிருந்தாள் கோமு.
மாப்பிள்ளை எங்க? இருவரும் கேட்க,

தூங்கிக்கிட்டு இருக்காங்கப்பா… அவள் சொல்லும் முன்பாக விளக்கமாய்

அவன் ரெண்டு நாளா வீட்டுக்கே வரலை, தொடர்ந்து வேலை செஞ்சுட்டு நேத்து ராத்திரி தான் வந்திருக்கான். அதான் இன்னும் தூங்கிட்டு இருக்கான் போலிருக்கு.

சுதர்சன் தான் 2 நாட்களாய் வீட்டிற்கு வராததை மகன் அம்மாவிடம் மறைக்கச் சொன்ன விபரம் தெரியாமல் வாயை விட, அதைக் கேட்ட கோமுவுக்குத் தான் அதிர்ச்சியாகி போனது. தன் மாமியார் மறைத்த விஷயமும் என்னவென்று புலப்பட்டது.

மகன் தன்னிடம் கோமுவுக்குத் தான் வீட்டிற்கு வராத விஷயம் சொல்லக் கூடாது என்று சொல்லி இருக்க அதைத் தெரியாமல் கணவர் உளறிக் கொட்டி விட்டாரே? எனக் கல்யாணி திகைத்தார்.

முதலில் மாமியார் மேல் கோபம் வந்தாலும், காரணம் யாரென்று புரிந்து விட்டதால் புதிய தலைகாணி வாங்கும் நேரம் வந்து விட்டது ( ராமை தான் அடிக்கப் போகிற அடியில் பழைய தலைகாணி எல்லாம் பஞ்சு பஞ்சாய் பரந்து விடும் அல்லவா? அப்போது புதுத் தலைகாணி வாங்காமல் முடியுமா என்ன?) என எண்ணிக் கொண்டாள்.

அந்த நேரம் அவள் தலைகாணி நாயகனே அடச் சே இல்ல இல்ல எண்ணத்தின் நாயகனே அங்கு வருகை தந்திருந்தான். முகம் கழுவி அவசரத்தில் கிடைத்த டி சர்ட் அணிந்து, ட்ராக் சூட் ஒன்றை அணிந்து கொண்டு அவளருகில் வேண்டுமென்றே இடம் காணாதது போல இடித்துத் தள்ளிக் கொண்டு அமர்ந்தான்.

விட்டால் மடியில் உட்கார்ந்து விடுவான் போலும்?, சுறுசுறுவென வந்த கோபத்தில் கணவனுக்குப் பிரத்யேகமாகக் கண்களால் மிரட்டல் விடுத்தாள் கோமு. எங்கே அவன் அதைக் கண்டு கொண்டால் தானே?

அவள் பெற்றோர் செல்லும் வரை நல்ல பையனாக அவர்களோடு அளவளாவி கொண்டு அமர்ந்து இருந்தவன், தனி டிபார்ட்மெண்டாக அவளைச் சீண்டிக் கொண்டு, முறைப்பை வாங்கிக் கொண்டு இருந்தான்.

அவள் செய்திருந்த ஒவ்வொரு பலகாரத்தையும் அவன் வருணித்த விதத்தில், பெரியவர்கள் சிரித்து வைக்க, அவள் முகம் மிளகாய்ப் பழமாகக் கோபத்தில் சிவந்து கிடந்தது.

திருமணத்திற்கு அப்புறமான நாட்களில் விருந்தாளி போல ஓரிரு நாட்கள் உறவாடிச் சென்ற, அலைப் பேசியில் மட்டும் குரலைக் கேட்க முடிகின்ற தன் மகளைக் காண ஏங்கிக் கொண்டிருந்த அவள் பெற்றோர் அவள் தன் கணவன் வீட்டில் ஒன்றித்து இருப்பதைப் பார்த்த நிறைவில் விடைப் பெற்றார்கள்.

இரவு அவர்கள் அறையை ஒட்டி பால்கணி அமைப்புக் கொண்ட அந்தக் குட்டிப் பகுதியில் இருந்து நிலவைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவன் அருகில் அவள் வந்து அமர்ந்தாள்.

உங்களுக்கு என்னைப் பார்த்தா என்ன மாதிரி இருக்கு ஆங்க்… இனி கிண்டல் செய்வீங்களா?, செய்வீங்களா? என நகங்களற்ற தன் விரல்களால் கிள்ள முயல, அவள் தனக்குக் கிச்சு கிச்சுக் காட்டுவதாக எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

உங்களுக்கு ரொம்பத் திமிர் கூடிப் போச்சு… கோபத்தில் எழுந்தவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டான்.

என்னாச்சு புஜ்ஜிக் குட்டிக்கு…என்ன கோபமாம்?
புஜ்ஜியாவது பஜ்ஜியாவது? நீங்க ரெண்டு நாளா வீட்டுக்கு வரலை, ஆனா அதை என் கிட்ட சொல்லலில்ல?

சொன்னா நீ கவலைப் படுவல்லடா அதான் சொல்லல.

இன்னமுமாய் முறைத்துக் கொண்டிருந்தவளிடம்…

என் வேலையில் இதெல்லாம் புதுசில்ல, அடிக்கடி நடக்கும்டா. நான் வீட்டுக்கு வந்து போகிற நேரத்தில அங்கே மெடிக்கல் ரூம்ல பெட் இருக்கும் அதில ஒரு தூக்கம் போட்டு எழுந்திடுவேன். எதுக்கு நேரத்தை வீணாக்கி கிட்டு?

ம்ம்… முறைப்பு மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏற்கெனவே ஒரு செட் ட்ரெஸ் கொண்டு போய் வச்சிருந்தேன், அது யூஸாகிடுச்சு. நான் வந்து போய் இருந்தேன்னா வேலை முடிந்திருக்காதுடா. சனி ஞாயிறும் கூட நான் அங்கேயே தான் இருந்திருக்கணும்.

திங்கள் கிழமை புது க்ளையண்ட் வேலை நாங்க ஆரம்பிக்கிறோம். அதாவது வெள்ளோட்டம் விடுறோம்னு வச்சுக்கோயேன். அதுக்கான தயாரிப்புல்லாம் சரியா இருக்கணும். இல்லன்னா அவ்வளவுதான் கஷ்டப் பட்டு செஞ்ச வேலைக்குப் பலனே இருக்காது பார்த்துக்க… நான் மட்டுமா என் டீமே இப்படித்தான் இந்த வாரம் முழுக்க வேலைப் பார்த்திருக்காங்கடா.

கெஞ்சிக் கொஞ்சி சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தான்.

உங்களைப் பத்தி தான் எனக்குக் கவலை, உங்க டீம் பத்தி எனக்கென்ன? வெடுவெடுத்தவள்

உங்க பாஸ் கிட்ட சொல்லிக்கிட்டு நீங்க வர முடியாதா? கோபம் குறைந்ததால் அவள் குரலில் சுருதி குறைந்து வருத்தம் மட்டுமே நிறைந்திருந்தது.

என் கீழே இருக்கிறவன் என்னைக் கேட்டுட்டு போகலாம்டா. ஆனால், இதில எல்லாம் நான் தான் ரன் பண்ணனும். சூப்பர்வைசரா இருந்தா அப்படிலாம் பாதி வேலையில விட்டுட்டு வர முடியாது.

ம்ம்… பெரீய்யச் சூப்பர்வைசர்…ம்க்கும்… உதட்டை வெட்டியவளின் வசீகரத்தில் அவளருகே வந்தான்.

என்ன? அப்பட்டமான மிரட்டல்

உன் உதடு என்னை இழுக்குதடி…

அதெல்லாம் ஒன்னும் இழுக்காது இழுக்காது…ஒழுங்கா மரியாதையா உள்ள வந்து படுங்க.

நாய்க் குட்டி போல அவள் இழுப்பிற்கு உட்பட்டவன். அவள் அவனைத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்க முயற்சி செய்வதையும், முகத்தை வருடி விடுவதையும் கண்டு பெரிதாய்ப் புன்னகைத்திருந்தான்.

தன் மார் அளவில் கணவனின் முகத்தை வைத்து, அவனைக் குழந்தைப் போலத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவள் அவன் தூங்கி விட்டானா எனப் பார்க்க குனிந்தாள். அந்தப் பெரிதான் புன்னகை பூத்த கண்களின் ஒளிர்வை தூங்கச் சொல்லி அதட்டினாள்.

அவளை தன் மார்பில் இழுத்து சாய்த்து அவன் தட்டிக் கொடுக்க அன்றைய நாள் தந்த இதத்தில், பெற்றோரின் வருகை, அளவளாவலில், கணவன் குறும்பு, அருகாமையில் கண்மூடி ஆழ்ந்து உறங்கிப் போனாள் கோமு.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here