8. நீயும் நானும்

0
798
Neeyum Naanum

அத்தியாயம் 8

ராம் & கோமு திருமண வாழ்வில் முன்பு போலவே மாற்றம் இல்லாமல் ஓரிரு வாரங்கள் கடந்திருந்தன. வாரத்தில் பாதி நாட்கள் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் பார்க்க இயலாதபடி ராம் தன் அலுவலக வேலைப் பளுவில் அமிழ்ந்திருந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல ராமிடம் ஒப்படைக்கப் பட்ட புதிய ப்ரொஜக்ட் ஏராளமான பேரின் உழைப்பை விழுங்கிக் கொண்டு ஓரளவிற்கு நிலைக் கொண்டிருந்தது. ராம் தனக்குக் கொடுத்திருந்த இந்த அதிகப் பட்ச வேலையோடு கூடத் தான் ஏற்கெனவே நிர்வகித்துக் கொண்டிருக்கும் டீமையும் தன் கீழ் பணிப் புரிபவர்களின் துணையில் ஓரளவு கவனித்துக் கொண்டான்.
ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புக்களை ராமிடம் கொடுத்து விட்டுக் கைக் கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜாஸ்மின்.
அவன் செயல்பட்ட விதத்திற்கு அவனைப் பாராட்டுவாள் என்றெல்லாம் அவளைக் குறித்து அவனுக்குக் கற்பனையிலும் கூட எதிர்பார்ப்புக் கிடையாது. ஆனால், அவள் இதுவரைக்கும் புதுப் பிரச்சனை எதுவும் கொண்டு வந்து அவனை வள்ளு வள்ளென்று கடிக்காததே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

ஜாஸோடு அவன் பணி புரியும் இத்துணை வருடங்களில் அவளைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டிருந்தான். அவள் தன் பேச்சு சாதுர்யத்தால் தனக்கு இணையானவர்களை மட்டும் அல்லாது தனக்கு மேலதிகாரியையும் கூடத் தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கும் சர்வாதிகாரியாக இருந்தாள்.

ஈரை பேனாக்க, பேனை பெருமாளாக்குபவள் எனும் சொலவடைக்கு ஏற்ற காட்டேரி. ஒரு விஷயத்தை நல்லதாகவோ, கெட்டதாகவோ உருவகப் படுத்தி அடுத்தவரை வாயடைக்கச் செய்வதில் வல்லவள். ராமுக்கு அவளிடம் தான் நடந்து கொள்ள வேண்டிய முறை என்னவென்று இன்னமும் கூடப் புரியவில்லை.

ராம் தன் வேலைகளைத் திறம்படச் செய்வதில் சமர்த்தனாய் இருந்தான் ராமின் பொறுப்பில் வேலையை விட்டால் எல்லாவற்றையும் வெற்றிகரமாய் நிறைவேற்றி விடுகின்றவன் என்கின்ற நல்ல பெயரை சம்பாதித்து இருந்தான். ஆனால், முன்னேற வேண்டுமானால் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமென்பதில்லை இன்னும் என்னென்னவோ இருக்கிறது என அவனுக்குப் புரிகிறதில்லை. அந்த ஜால்ரா அடிக்கும் வேலையைச் செய்யத் தெரியாததால் தான் சிறிதளவு காரணம் கிடைத்தாலும் கூட ஜாஸ் அவனைக் கிடைத்த வாய்ப்பில் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறாள்…

ராம் திருமண லீவில் இருக்கும் போது வேண்டுமென்றே, அதாவது அந்த வாய்ப்பு ராமுக்குக் கிடைக்கக் கூடாதென்றே பதவி உயர்வுக்கான அந்த ஏற்பாடுகளை முடுக்கி விட்டது ஜாஸ்மின் தான் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அவனுக்குத் தெரிய வந்திருந்தது.

ஜாஸீக்கு இவன் அந்தப் பதவிக்கு வருவதைக் காட்டிலும் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஜால்ராவாகிய கிரண் வருவதே விருப்பம் என்று அவன் நண்பர்கள் சொல்லியே அறிந்து கொண்டான்.

அந்த பதவி உயர்வுக்கான IJP-Internal Job Posting விண்ணப்பங்களில் பல பேர் கலந்திருந்தாலும் கூட முதல் இரண்டு இண்டர்வ்யூ ரவுண்ட்களிலேயே பெரும்பாலானோர் வெளியேறி இருக்க அவனோடு மூன்றாவது ரவுண்ட் வரை கிரண் வந்திருக்கிறான். அதாவது இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே போட்டி கிரண். அந்தக் கிரண் ஜாஸ்மினுக்கு மிகவும் பிடித்த நபர். இந்தச் சூழ்நிலையில் ராமின் இரத்த அழுத்தம் எகிறாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
கிரண் பற்றிச் சொல்வதானால், அவனுக்கொரு தேவை இருந்தால் யார் காலிலும் விழுவான், காரியம் முடிந்ததும் அவ்வண்ணமே கழற்றியும் விட்டு விடுவான். ஜாஸீக்கு தற்போதைய அல்லக்கை கிரண் தான்.எனவே, சமீபத்தில் டீம் லீடாக மாறி இருந்த அவனையும் ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்து அசிஸ்டெண்ட் மேனேஜர் அலுவலுக்காக அவள் விண்ணப்பிக்கச் செய்திருந்ததையும் அவன் ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி பெற, தனிப்பட்ட கவனம் கொடுத்து பல வகைகளில் ஜாஸ் உதவி வருகின்றதையும் சிலர் மூலமாக அறிந்து வைத்திருந்தான்.

ராமின் சிந்தனை கலைந்தது. அலுவலக மின்னஞ்சல் ரிமைண்டர் அன்றைய மூன்றாம் நிலை நேர்காணலுக்கு இன்னும் 15 நிமிடங்கள் மட்டுமே இருப்பதை நினைவூட்டியது. அவன் தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு முகம் கழுவி, தலை சீவி வந்தான்.
ஏற்கெனவே பணி புரியும் அலுவலகமே ஆனால் என்ன? நேர்காணல் நேர்காணல் தான், அங்கு எல்லாமே கவனிக்கப் படும்.
மிக முக்கியமான கடைசித் தேர்வு அது, அவர்களுடைய க்ளையண்டின் மொத்த பிஸினஸை கவனித்துக் கொள்ளும் டைரக்டருடனான இண்டர்வ்யூ. நிச்சயம் கடினமாக இருக்கும். மனதிற்குள்ளாக எவ்வாறு பேச வேண்டுமென ஒவ்வொன்றாய் ஓட்டிப் பார்த்துக் கொண்டான்.

இந்த நேர்காணல்களில் நிச்சயமாக இந்தியாவின் தலை நகரம் எங்கே? தாஜ்மஹால் எங்குள்ளது? என்று எல்லாம் கேட்க மாட்டார்கள். ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவகித்து, அதை அவன் எவ்வாறு அணுகுவான் என்பதற்கான அணுகுமுறை ஆராயும் வண்ணமாக நேர்காணல்கள் இருக்கும்.
தற்போது ஒவ்வொன்றிலும் 20 சொச்ச நபர்கள் கொண்ட சிறு சிறு டீம்களை நிர்வகிக்கின்றவன், மேல் பதவிக்குத் தெரிந்து எடுக்கப் பட்டால் அது போன்ற இன்னும் பல டீம்களை வழி நடத்த வேண்டி இருக்கும். அவ்வாறு இருக்கையில் அவன் நிர்வகிக்கப் போகும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவி. அதற்குத் தேவையான ஆளுமை, குழுவாகப் பணியாற்றும் திறன், எதிர்பாராத சிக்கலான சூழ்நிலையில் எடுக்க வேண்டிய சரியான, தீர்க்கமான முடிவுகள். இவை அனைத்தையும் அறிந்து கொள்ளும் விதமாகவே நேர்காணல் இருக்கும்.

ஹாய் மேம் குட் ஈவினிங்க்

குட் ஈவினிங்க் ராம்… சாரா அவனை அமரச் சொன்னார்.

வழக்கமாக அலுவலகத்தில் எதிர்ப்படும் பொழுதெல்லாம் எல்லாம் தோழமையாகப் புன்னகை சிந்தும் பெண் தான் அவர். அவரது பதவிக்கு எவ்வளவோ கர்வமாய் நடந்து கொள்ளலாம்.ஆனால் ஒரு போதும் அவரைப் பற்றி ஆணவமானவர் என்றெல்லாம் கேள்விப் பட்டதில்லை. சம்பந்தமே இல்லாமல் ஜாஸீடன் சாரா மேமை ஒப்பிட்டுக் கொண்டான். அவரவர்க்கு அவரவர் குணம் சாரா மேம் மாதிரி ஜாஸை எதிர்பார்த்து என்ன ஆகப் போகின்றது? ஒன்றும் சொல்வதற்கில்லை மனம் முனகிக் கொண்டது.

வழக்கமாக நேர்காணலின் ஆரம்பத்தில் எதிரில் இருப்பவரை இலகுவாக்க கேட்கப்படும் சில பொதுவான விபரங்களை அவனிடம் கேட்டு விட்டு தன் கேள்வியை அவர் ஆரம்பித்தார்,

ஓகே உனக்கு நான் இப்பொழுது ஒரு சூழ்நிலையை முன் வைக்கிறேன்.

ராம் உனது டீமில் ABCDE எனும் நபர்கள் பணி புரிகின்றனர். அவற்றுள் A மிக நன்றாகப் பணி புரிகின்றவன். முக்கியமான அத்தனை ரிப்போர்ட்களையும் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் அளவு திறமைசாலிதான் இந்த A.

ம்ம்…

B யோ மிகச் சுமாராகப் பணி புரிபவன் அவனை நம்பி எந்தப் பொறுப்பையும் கொடுக்கவியலாது, சுயமாக யோசிக்கும் திறனும் அற்றவன்.

ம்ம்…

C நன்றாகப் பணி புரிகின்றவன், ஆனால் ஒழுங்கீனமானவன். அடிக்கடி லீவுகள் எடுக்கின்றவன், நேர தாமதமாக அலுவலுக்கு வருகின்றவன்.

ம்ம்…

D, E, F இவர்கள் ஓரளவுக்கு நன்கு பணி புரிபவர்கள், ஆனால், எந்த விதத்திலும் அதிகப் படியான பொறுப்புக்களை ஏற்று இதுவரை நடத்தி தந்ததில்லை.

ம்ம்… கவனம் குறையாமல் கேட்டுக் கொண்டான்.

உன்னுடைய தற்போதைய சூழ்நிலையின் படி உன்னுடைய மேலதிகாரியிடமிருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அது என்னவென்றால், உன்னுடைய டீமிலிருந்து ஒருவனை மற்றொரு டீம் க்கு மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும், யாரை அனுப்புவிக்க வேண்டும் என்கின்ற முடிவை நீயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ம்ம்…

அப்படியானால், நீ உன் மேலதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப அந்த இன்னொரு டீமுக்கு அனுப்பவிருக்கும் உன் டீம் மெம்பர் யாராக இருக்கும்? A, B, C, D or E.

மிகச் சிக்கலான கேள்வி கேட்டுவிட்டார்களே? என ராம் சிறிது நேரம் விடை சொல்ல அறியாமல் தவித்தான். ஏனென்றால், இந்தக் கேள்விக்கு முதலாவதாகச் சொன்னபடி சிறந்த நபரை அதாவது A ஐ அனுப்புவேன் என்றால், அது வரையிலும் A செய்து கொண்டிருந்த ரிப்போர்ட் சம்பந்தமான வேலைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? எனும் கேள்வி நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டி வரும்.உரிய பதிலகளைக் கொடுக்காதவரை கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதே நேரம் B அல்லது C என்றும் சொல்ல முடியாது? உனக்கே சவாலாக இருக்கும் சரிவரப் பணிபுரியாத, ஒழுங்கீனமான நபரை எவ்வாறு மற்ற டீமுக்கு அனுப்புவாய்? என்கின்ற கேள்வி வரும்.
சரியான கிடுக்கிப் பிடி கேள்வி என வியந்தவன் சில விபரங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டான். ஒரு சில பதில்கள் சொல்ல அவை தவறாக இருந்தன. சாராவின் கேள்விகள் ஈட்டிகளாகவும் பாய்ந்துக் கொண்டிருந்தன. தான் சும்மாவேனும் டைரக்டர் பதவியை அலங்கரிக்கவில்லையடா? என அவரது புத்தி கூர்மை வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது.

தட்டுத் தடுமாறி தான் சொன்ன பதில்களின் தவறுகளைக் கண்டு கொண்டவன், விடைக் கண்டு பிடித்தவனாகப் பதில் சொல்வதற்காக அழைத்தான்,

மேம்…

ஓ ராம், வொய் டு யூ காலிங்க் மீ மேம். கால் மீ சாரா. வீ ஆர் இன் கார்ப்போரேட், நாட் இன் கவர்மெண்ட் செக்டார். ( நாம் கார்ப்போரேட்டில் பணி புரிபவர்கள், அரசாங்க அலுவலகத்தில் அல்லவே. எதற்கு இந்த மேம், சார் எல்லாம். பெயரைச் சொல்லி சாரா என்றே என்னை அழைக்கலாமே)

யா சாரா…

ம்ம் புன்னகைத்தார் சாரா.

இந்தச் சூழ் நிலை கேள்விக்கான தீர்வு என்னவென்றால் நான் என்னுடைய டீமிலிருந்து B அல்லது C ஐ நிச்சயமாய் மற்ற டீமிற்கு அனுப்பி வைக்க மாட்டேன்.

ஏன்?

ஏனென்றால், இவர்களுள் யாரையேனும் நான் ட்ரான்ஸ்பர் செய்யும் பட்சத்தில் அவர்களால் அந்த மற்ற டீமிற்கு எந்த உடனடி பயனும் இராது. சொல்லப் போனால் பிரச்சனைகள் தான் ஏற்படும்.

ம்ம்… உன் பதிலை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறேன்.

அப்படியென்றால் யாரை relieve ரிலீவ் செய்வாய்?

நான் என் குழுவிலிருக்கும் சிறந்த டீம் மெம்பரை அதாவது A ஐ மற்ற டீமுக்கு அனுப்பி வைப்பேன்.

ஏன் அப்படி? அவன் தானே உன்னுடைய டீம் சம்பந்தப் பட்ட எல்லா வேலைகளிலும் உனக்கு உதவி புரிந்துக் கொண்டிருக்கிறான்.அவன் சென்று விட்டால், ரிப்போர்ட் வேலைகளை யார் செய்வது?

சிறந்தவனை அனுப்பி வைத்து மற்ற டீமுக்கு நீ நன்மை செய்கிறாய். ஆனால், உன்னுடைய டீமின் பெர்பாமெண்ஸ் பாதிக்குமே?

கேள்விகளாக அடுக்கினார்.

ஆம் சாரா நான் இவையெல்லாம் சிந்தித்துத் தான் திட்டம் தீட்டி இருக்கிறேன்.

அது என்ன திட்டம்?

என் டீமின் சூழ்நிலையை மேலதிகாரிக்கு விளக்குவேன்.
ம்ம் எதற்காக?

அவரிடம் ஒரு மாதம் அளவிற்கு அவகாசம் பெற்றுக் கொண்டு…

ம்ம்…

அந்த நன்கு பணி புரிகின்ற நபர் அதாவது A டம் D அல்லது E யார் தகுதியானவரோ அவருக்குத் தான் செய்யும் வேலைகளைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வேன்.

ம்ம் அதாவது அந்த ரிப்போர்டுகளில் எவ்வாறு வேலை செய்வது என A மற்றவருக்குக் கற்றுக் கொடுப்பான்… அடுத்து?

அதன் பின்னர் எனக்கு A மற்ற டீமிற்குச் சென்றாலும் கூட ரிப்போர்டுகளில் வேலை செய்யத் தகுதியான நபர் இருப்பதால் என் வேலை தடை படாது.

அப்படியா? எனச் சாரா இன்னும் பல கேள்விகள் கேட்டு அவன் கூறிய தீர்வு ஏற்புடையது தானா? எனச் சோதித்து அறிந்து கொண்டார்.

கொஞ்சம் மெச்சுதலான ம்ம்… அவரிடமிருந்து வெளிப்பட்டது.

உன் பதில் சரி தவறு என்று சாராவின் முகத்தினின்று எதையும் கண்டு கொள்ள இயலவில்லை. அந்த நேர்காணலில் தேர்ச்சி பெற்றானா இல்லையா? எனும் விபரம் பின்னர் ஹெச் ஆர் மூலமாகவே அவனுக்குத் தெரிவிக்கப்படும்.

சாராவிடம் கைக்குலுக்கி சில பல உரையாடல்களோடு விடைப் பெற்று வந்திருந்தான். அன்றைய நேர்காணலின் படபடப்பு உள்ளுக்குள்ளாக இன்னும் மிச்சமிருந்தது. மொபைல் எடுத்துப் பார்க்க கோமுவின் ‘ஆல் தி பெஸ்டும்’ சில முத்த ஸ்மைலிகளும் மின்னின.

இருந்த பதட்டத்தில் இரவு உணவுக்குக் காபேடேரியா போகாமல் பில்டிங்கின் பின் புறம் ஸ்மோக்கிங்க் ஜோனுக்குச் சென்று புகையை இழுத்து விட்டான்.

இப்போதெல்லாம் அவனது சிகரெட்டுக்களின் எண்ணிக்கைகள் முன்பை விட அதிகமாய்க் கூடியிருந்தன. கடந்த வாரம் ஏதோ ஒரு வேலையாகக் கோமு தன் அம்மா வீட்டிற்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கி வர, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ‘ஆஸ்ரம்’ சென்று தீர்த்தம் அருந்தி இலகுவாய் உணர்ந்தான்.பெற்றோர் தூங்கும் நேரம் வந்து தூங்கி விடுகின்றவன் கள்ளத்தனத்தை அவர்களாலும் கண்டு கொள்ள இயலாதே?

வேலைப் பளு அவனை மறுபடியும் ரோபோவாய் மாற்றிக் கொண்டு இருந்தது. இன்றைய நேர்காணலில் தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கின்ற நம்பிக்கை எழுந்தது.

செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வர அவசரமாய்ச் சில புகைகளை நுரையீரலுக்கு உள்ளிளுத்து மூக்கிலும் வாயிலுமாய்ப் புகையை வெளியிட்டு அங்கிருந்து கடந்து செல்ல முயன்றான். அவனது அலுவலகத் தோழர்கள், தோழிகள் அப்போது டின்னரை முடித்து விட்டு அங்கே புகைப் பிடிக்க வந்திருந்தனர்.

எதிரில் ஏற்கெனவே நின்று கொண்டிருந்த பூஜா, ‘ஹாய் ராம்’ சொல்லி லைட்டரை பற்ற வைத்தாள். அவள் பக்கத்து அலுவலகத்தில் மேனேஜராகப் பணி புரிகின்றவள். முன்பு இவனது அலுவலகத்தில் பணி புரிந்தவர்கள் என்ற வகையில் பரிச்சயம்.

சில அளவளாவல்கள் சிரிப்போடு அவன் அங்கிருந்து நகர்ந்த போது பூஜாவோடு அவள் அலுவலக நண்பர்கள் வந்து சேர அவர்களும் புகைக்க ஆரம்பித்தனர். தரையில் மேக மூட்டத்தைக் கொண்டு வரும் மாபெரும் நோக்கத்தோடு குழுவாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

ராஆஆம்… வெகு நாளைக்குப் பிறகு தன் ப்ளோருக்குச் செல்லும் வழியிலேயே ஜாஸ் அவனுக்குக் காணக் கிடைத்தாள் அதுவும் அதே கர்ண கடூர குரலோடும், முகத்தோடும்.

மற்றொரு எஸ்கலேஷன்… மனதிற்குள்ளாக அபாய மணி அடிக்க, ஓ மை கடவுளே… அதிர்ந்தான். அடுத்தடுத்து வரும் இப்படிப்பட்ட எஸ்கலேஷன்ஸ் அவனுக்கு மிக ஆபத்தானதல்லவா? அவன் பதவி உயர்வை எதிர்பார்க்கும் இவ்வேளையில் அவனின் வேலைக்கு வேட்டு வைக்கும் அளவிற்கான நிகழ்வாக இது ஆகி விடுமே. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு கசப்பு பரவியது. எனக்கு எதற்கு இப்படி எல்லாம் நடக்கின்றது?

அவனுடைய மேனேஜர் இவனுக்குக் கொஞ்சமேனும் கருணை காட்டுபவளாக இருந்தால் இவன் தவறுகளை மறைத்து நல்லபடி காட்ட வாய்ப்பு கூட இருக்கிறது.

ஆனால், இவள் ஜாஸ் ஆகிற்றே? ராமை தொலைத்துக் கட்ட காரணம் தேடுபவளிடமே, லட்டுக்கு மேலாய் லட்டாக ராமிற்கு ஆப்புகள் தேடி வருகையில் என்ன செய்வது?

நான் ஏன் மறுபடி மறுபடி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறேன் ஷிட் ### @@ சென்ஸார் செய்யப் படத் தக்க பல கெட்ட வார்த்தைகளை மனதிற்குள் உதிர்த்தான்.

கேபினுக்குள் நுழைந்த மணித் துளி முதலாக ஜாஸ் மணிக் கணக்காக விசாரணைக் கைதியைப் பொல அவனை விசாரித்தாள்.

இதே அலுவலகத்திற்காக, புது ப்ரொஜெக்டுக்காக, அவன் உண்ணாமல், தூங்காமல், உழைத்த பல மணி நேரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஒரே ஒரு சின்னத் தவறு பூதாகாரமாகக் காட்டப் பட்டது.

நான் புது ப்ரோஜெக்டில் இருந்ததால் இந்த வேலையை எனக்குப் பதிலாக என் டீம் கோச் திவாகரிடம் ஒப்படைத்திருந்தேன் ஜாஸ். ஆனாலும் எப்படியோ?

நீ இதற்காகப் புதுப் புரோஜெக்டை காரணமாகச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது? இரண்டு வேலைகளையும் நீ திறம்பட முடித்திருக்க வேண்டும். அதற்காகத் தானே உனக்கு இந்தப் பொறுப்புகளைத் தந்தேன். உன்னுடைய எக்ஸ்க்யூஸ் (சாக்குப் போக்கு) களை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. புரிகிறதா? முகத்தில் கடுகைப் போட்டால் அப்படியே பொரிந்து விடும் அளவிற்கு ஜாஸ் ரௌத்திரமாக இருந்தாள்.

வாணலியில் வதக்க பட்டவன் போல நைந்து பொய் ராம் ஜாஸின் கேபினிலிருந்து வெளியே வந்தான். டீமிற்குச் சென்று செய்ய வேண்டியவைகளைக் கவனித்தான். அப்படியே புதுப் புரொஜெக்டையும்.

அவனது டீம் மெம்பர் ஒருவனின் அலட்சியம் தான் இந்த எஸ்கலேஷனுக்குக் காரணம். டீம் மெம்பர் காரணமாகத் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவர்கள் காரணமாக அவன் ஜாஸிடம் திட்டுகள் வாங்கியிருந்தாலும், அவனால் தன் டீமிடம் கோபத்தைக் காண்பிக்க முடியாது.

அப்படி அவன் கோபத்தைக் காட்டி, திட்டி வேலை செய்ய வைத்தால் உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே எனக் காட்டிவிட்டு அவர்கள் வேலையை விட்டு சென்று விடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி இல்லையென்றாலும் தலைவலி, வயிற்று வலி, லூஸ் மோஷன் எனச் சில நாட்களாவது லீவு எடுத்துத் தங்கள் பலம் என்ன என்று ஆட்டம் காண்பிப்பார்கள், பின்னர் வேலை பார்ப்பது யாராம் ராமும் ஜாஸீமா?

இதனால் அறியப் படுவது யாதெனில் நடுவில் இருக்கும் ராம் போன்றவர்களுக்கு மத்தளம் போல் எல்லாப் பக்கமும் இடியோ இடி.
தவறு செய்தவனை அழைத்துத் தனியே அவனுக்கு ஃபீட் பேக் (feedback) கொடுத்து, அதாவது அன்போடு பேசி புரிய வைத்து, அனுப்பி வைத்தான். அந்தப் பிரச்சனைகள் முடிந்த போது மெசேஜ் டோன் ஒலித்தது.

வேறு யார் கோமு தான் ‘சாப்பிட்டாயா ராம்?’ எனக் கேட்டிருந்தாள். யார் மேலுள்ள கோபமெல்லாம் இப்போது அவள் மேல் பாய்ந்தது.
‘இவளுக்கென்ன தெரியும் என் வேலைப் பளு சாப்பிட்டாயா? என்று ஹாயாகக் கேட்பதைப் பார்’

கோபத்தில் இண்டெர் நெட்டை ஆஃப் செய்தான். இன்னும் கொஞ்ச நேரத்திற்கு இவள் தொல்லை வேண்டாம். நேரம் பார்த்தான் மணி இரவு 11.45 காண்பித்தது, கூடவே வயிறும் பசிப்பதாகச் சமிக்ஞை கொடுத்தது. எழுந்து கேபேடேரியா சென்றான்.

டிபன் பாக்ஸெல்லாம் ஒரு நாளைக்குத் தான். அதன் பின் எங்கே அவள் சமைத்துக் கொடுத்தாள்? மறுபடி மனைவியை எண்ணி மனம் பொறுமியது.

அவள் காலையில் சமைத்ததைக் கொண்டு வந்து, இவன் இரவு ஆபீஸில் சாப்பிட்டால் அது தாங்குமா? என அவனது அறிவு உணர்த்தினாலும் கூட, அவனைச் சுற்றி எல்லாம் முன்னுக்குப் பின் முரணாக நடப்பதால் அவனுக்கு மனதில் எழுந்த பதட்டம், இன்செக்யூரிட்டி எனும் பாதுகாப்பின்மை உணர்வு, எஸ்கலேஷன்ஸ் காரணமாக ஜாஸ் தன்னுடன் நடந்து கொள்ளும் முறை, மற்றும் எல்லோரும் ஆரூடம் கூறுவதைப் போல அவன் வெகு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மேல் பதவியைக் கிரண் தட்டிச் சென்று விடுவானோ? எனும் குழப்பம் இவையெல்லாம் சேர்ந்து ‘ஊருக்கு எளியவன் பிள்ளையார் கோவிலாண்டி’ என்பது போலக் கோமு மீதே கோபம் கொள்ளச் செய்தது.

சாப்பிட்டதும் கொஞ்சமாய் அவன் உணர்வுகள் கட்டுக்குள் வந்தன. கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் குடித்துக் கூலானான். ஒரு சிலர் அப்போதுதான் இரவு உணவையும் செரித்து விட்டு டீ குடிக்க வந்திருந்தனர், அந்நேரம் அவன் சாப்பிடுவதைக் குறித்து ஆச்சரியமாய்க் கேட்டு பேசி சென்றனர்.

சற்றே கூலான ராம் மனைவி மேல் சற்று மனம் இறங்கி நெட் ஆன் செய்தான். வழக்கமாக மொக்கை ஜோக் ஒன்றை அனுப்பி வைத்திருந்தாள் கோமு.இப்போதுதான் திருமணம் ஆகிவிட்டதே, வாசிக்காதது போலக் காட்டிக் கொள்ளலாம், மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் கட்டாயமாக ‘ஹா ஹா’ போட வேண்டிய நிலை தாலி கட்டியதும் மாறி விட்டது.

இந்த மொக்கை ஜோக்குகளைத் தவிர்க்க வாட்சப்பை அன் இன்ஸ்டால் செய்யலாமா? என அதி தீவிரமாக யோசித்து, பின்னர் இல்லை வேண்டாம் அலுவலக மெசேஜீகளுக்காக வாட்ஸப் தேவை இருக்கிறது. அதனால் அன்இன்ஸ்டால் செய்ய வேண்டாம் எனும் முடிவுக்கு வந்தான். மனைவியின் எண்ணை ப்ளாக் (Block) செய்யலாமா என ஒரு நிமிடம் விபரீதமாகவும் தோன்றி வைத்தது. அதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

ஒருவாறாக அவன் வேலைகள் ஓரளவு நிறைவுற்றன. அன்றைய மன அழுத்தம் காரணமாய் இன்னும் சில மணி நேரங்கள் வேலையை நீட்டிக்க அவனால் முடியவில்லை.

இன்றைய நேர்காணலின் ரிசல்டைப் பொறுத்தே அவன் AM பொறுப்பிற்குத் தெரிவாவது முடிவுக்கு வரும். உள்ளுக்குள்ளாகப் பயம் பிரவகித்துக் கொண்டு இருந்தது.

வழக்கமான காலை மணி 4ற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கட்டிலின் ஓரம் குழந்தை தாயின் வயிற்றில் இருப்பது போன்ற ஒடுங்கிய நிலையில் கோமு படுத்திருந்தாள். இவ்வாறு படுப்பது மனதின் பாதுகாப்பின்மை வெளிப்படுத்துவது என்பது உளவியல் கருத்து. அதையெல்லாம் ராம் எப்படி அறிந்திருக்க முடியும்?

தன்னைப் பற்றியே அறிந்து கொள்ளாமல் ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் ஜன சமுத்திரத்திடம் தங்கள் ஸ்டேடஸை உயர்த்திக் கொள்ளும் வேகம் இருக்கும் அளவிற்குத் தங்கள் இணையை, குடும்பத்தைக் கவனிக்கவோ, அவர்களின் உள்ளக் குமுறல்களை, மனக் குறைகளைக் கேட்கவோ எங்கே நேரம் இருக்கின்றது? உண்மைதானே?

இன்றைக்கு வழக்கத்தை விடவும் அதிகமாக நுரையீரலுக்குப் புகை சப்ளை செய்திருந்தான்.அதனால் தன் வாயை பல முறை கொப்பளித்துக் கொண்டான். இல்லையென்றால் ராட்சசி தன்னை அவள் அருகில் அனுமதிக்க மாட்டாள்.

எதற்காக இவ்வாறு படுத்திருக்கிறாள்? என்று அறியும் எண்ணம் எல்லாம் தோன்றவில்லை. அன்றைக்கு அவளது மாத விலக்கின் ஆரம்ப நாள் துன்பத்தில் அவள் இருந்தாள். இடுப்பும், முதுகும் வெகுவாக வலியில் கதறிக் கொண்டு இருந்தது.

வலியில் உருண்டு புரண்டு படுத்தவள் அப்போது தான் அதிகாலையில் அந்தத் தூங்கும் நிலை வாகாக அமைய, வலியும் சற்று கட்டுப் படக் கண்ணயர்ந்திருந்தாள்.

அவளை வழக்கம் போல் தன் மேல் போட்டு அணைத்துக் கொண்டான் ராம். அவளைத் தன் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக்க அவன் முயன்றான். அவள் தன் உடல்நிலையைச் சொல்ல, அதை ஏனோ ஏற்க மறுத்தவன் தன்னை அவள் வேண்டுமென்றே தவிர்ப்பதாக எண்ணி யார் யாரோ மேல் இருந்த கோபத்தை உடல் மொழியால் காட்டி, அவளிடமிருந்து தள்ளிப் படுத்துக் கொண்டான்.

கணவனின் அந்தப் புறக்கணிப்பு கோமுவின் உடல் வலியையும் மிஞ்சியது.தூக்கம் எப்போதோ அவளிடமிருந்து விடைப் பெற்றுச் சென்றிருக்க, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த அவனையே கரகரவெனக் கண்ணீர் வழிய கவனித்துப் படுத்திருந்தாள் கோமு.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here