9. நீயும் நானும்

0
756
Neeyum Naanum

அத்தியாயம் 9

கோமுவால் அன்று அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. ஒருவேளை தான் முயன்று தூங்கவிருந்த அதிகாலை தூக்கம் தொடர்ந்திருந்தால் அவள் அன்று அலுவலகத்திற்குச் சென்றிருப்பாள்.

இப்போது தூக்கமும் நிறைவுறாமல் எப்படி? முடியவே முடியாது எனத் தோன்ற, அலுவலகத்திற்குத் தகவலை அலைபேசி மூலமாகத் தட்டி விட்டு சற்று தூங்கி எழுந்தாள். காலையில் எழுந்து குளித்துச் சுத்தமாகி, வழக்கமாகத் தான் செய்யும் சில வேலைகளைச் செய்து முடித்து விட்டு, காபியை கலக்கி குடித்துக் கொண்டிருந்தாள்.

சில ப்ரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் இன்னும் அலுவலுக்குப் புறப்படாமல் நைட்டியில் இருப்பவளை கல்யாணி என்னவென்று விசாரித்தார்.

அத்தே உடம்புக்கு சரியில்ல நான் இன்னிக்கு ஆஃபீஸீக்கு போகலை.

ம்ம் …ப்ரெட் எதுக்கு, ரெண்டு தோசை ஊத்தியிருக்கலாம்ல… இல்லேன்னா இந்தப் பிரெட்டுக்கு முட்டை ஊத்தி இருக்கலாம்.

இல்ல அத்த அது ஹெவியாகிடும்.

என்ன ஹெவியோ? முன்னைக்கு இப்ப மெலிஞ்சிருக்க… உடம்பப் பார்த்துக்க…

வாயில் ப்ரெட் இருக்க மாமியாருக்கு சரியென்று தலை ஆட்டினாள்.

அத்த… கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்து நான் இன்னிக்கு சமையல் செய்றேன்.

சரி… அவர் தன் வேலையைப் பார்க்க போய்விட்டார்.

சிறிது நேரத்தில் ராம் அருகில் போய்ப் படுத்தவள் வலி அசதியில் கண் அயர்ந்து விட்டாள்.

ராம் இடையில் ஒரு முறை எழுந்து பாத்ரூம் சென்று வந்தவன் புது மலராய் தன் அருகே படுத்திருப்பவளைக் கண்டு முதலில் தன்னிச்சை செயலாய் அணைக்க எண்ணினான். பின்னர் இரவில் அவள் செய்தது அவனுக்கு ஞாபகம் வந்து கோபத்தை ஏற்படுத்தியது.

பெரிய இவ… அவள் மீது கோபத்தில் மறுபடி படுத்துக் கொண்டான் கண்கள் சொக்கவே, தூக்கத்தில் ஆழ்ந்தான்.

மதியம் எழுந்தும் அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. சாப்பிடும் போதே அவனுக்காக அவள் சமைத்திருக்கிறாள் என்று புரிந்தும் ஒரு வார்த்தை கூட அவளுடன் பேசவில்லை. மதியம் அவன் ஆபீஸ் செல்ல அவள் டிபன் செய்து வைத்திருந்தாள். ராம் அதைக் கண்டு கொள்ளாமல் வேண்டுமென்றே டிபன் எடுக்காமல் அலுவலகத்திற்கு வந்து விட்டான்.

பொதுவாக மாதாந்திர உதிரப் பெருக்கு நாட்களில் பெண்கள் உணர்ச்சிக் குவியலாக இருப்பார்கள். சில நாட்களுக்கு முன்பாகவே கூட மூட் ஸ்விங்கில் இருப்பார்கள். சின்ன விஷயமும் கூட மிகப் பெரியதாய் தோன்றும். இப்போது கோமுவும் அதே நிலையில் இருந்தாள். அவன் பாரா முகத்தால் இவள் மனம் வாடியது. இரவின் தனிமையைக் கண்ணீர் துணைக் கொண்டு கடந்தாள் இடுப்பும், வயிறும் கடுக்க அவ்வலியின் அசதியால் ஆழ்ந்து தூங்கினாள்.

ராம் அப்போதுதான் இரவு உணவுக்கு அடுத்து வழக்கமான ஸ்மோக்கிங்க் ஜோனுக்குச் சென்று வந்திருந்தான். எல்லா வேலையும் சரிவர நடந்து கொண்டிருந்தது. அடிக்கடி வரும் க்ளையண்ட் எஸ்கலேஷன்ஸ்களால் எல்லோரின் கவனமும் அவனது டீமின் மீதே இருக்க, அவனுடைய டீமுக்கு உதவி செய்வதற்காக டிரெயினிங்க் டீமிலிருந்து டிரெயினர் பிரதீப் வந்து இருந்தான்.

அவனோடு சேர்ந்து அனைத்து க்ளையண்ட் எஸ்கலேஷன்ஸ்களையும் ஆராய்ந்தான். குறிப்பாக எந்த மாதிரி வேலைகள் செய்யும் போது, எப்போது தவறு நிகழுகின்றது என ஆராய்ந்து அதற்கான டிரெயினிங்குகளை அவனது டீம் மெம்பர்களுக்கு அளிக்கும் வண்ணமாக ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. கூடுதலாக ஒருவர் கவனம் செலுத்த கிடைத்ததில் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருக்கின்றது.ஆனாலும் அவன் மனம் ஏனோ மசமசத்துக் கிடந்தது. கோமுவின் ‘சாப்பிட்டாயா ராம்?’ மெசேஜை மனம் வெகுவாகத் தேடியது.

ஹே இது என்ன? எப்போதும் நீ தானே என்னிடம் வந்து சமாதானம் செய்வாய்?’ இன்றைக்கென்னவாம்? மனைவியிடம் மனதில் பேசிக் கோண்டிருந்த போது… தடாலென ஒரு சத்தம் அவனது சிந்தனை கலைந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பச் செய்தது.

சட்டென அங்கே ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது. கீர்த்தி, கீர்த்தி எனும் குரல்கள் எழும்ப, ஓ அது அவன் டீமின் கீர்த்தி ராவ், அவளுக்கு என்னாயிற்றோ? எப்படி விழுந்தாள்? அவளைச் சுற்றி ஏராளமான பேர் இருக்க இவன் அடுத்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

அரை மயக்கத்தில் இருந்தவளை எழுப்பி உட்காரச் செய்து, தொய்ந்து கிடந்தவளை தண்ணீர் தெளித்து, மறுபடி சேரில் அமரச் செய்து அவளை மெடிக்கல் ரூம் வரைக்கும் அந்த வீல் சேரையே வாகனமாக்கி கொண்டு சென்றனர்.

விழுந்த வேகத்தில் அவள் நெற்றியில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புக்கு முதலுதவி அளிக்கையிலேயே ராமின் ஏற்பாடு படி அலுவலக வண்டி வர, அவளைப் பக்கத்திலிருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.

அவளுக்கு உதவி செய்யப் பெண்கள் இருந்ததால் ராம் கூடவே செல்ல தேவை ஏற்படவில்லை.அமளி துமளியாய் இருந்த இடம் அடங்க சற்று நேரமானது. கீர்த்தி மற்றும் அவளோடு கூடச் சென்றிருக்கும் மஞ்சுவின் வேலையைப் பிறருக்கு பகிர்ந்தளித்தவன். அவர்களை வேலையைச் செய்யச் சொல்லிவிட்டு மஞ்சுவுக்குக் கால் செய்தவாறே வெளியே வந்தான்.

இரவின் குளிர் காற்றுக் கொஞ்சம் இனிமையாய் இருந்தது.ஆங்கில உரையாடல் தமிழில்…

மஞ்சு, கீர்த்தி இப்போது நலமா? டாக்டர் என்ன சொன்னார்?

அவள் மிகவும் வீக்காக இருக்கிறதாக டாக்டர் சொல்லி இருக்கிறார் ராம், ஒரு நாள் அப்சர்வேஷனில் இருக்க வேண்டுமாம்.அட்மிட் செய்து இருக்கிறோம், அவள் வீட்டில் தகவல் சொல்லி விட்டேன்.

ஓ…அந்த அளவிற்கு அவளுக்கு என்னவாகிற்று?..

கொஞ்சம் தயங்கியவள் …தொடர்ந்தாள்…, அவளுக்கு அதீத ரத்தப் போக்கு தான் பிரச்சனை ராம். எப்போதும் போலத்தானே என நினைத்து இன்றும் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள். இன்று அளவுக்கு மீறிப் போயிற்று அதனால் மயங்கி விழுந்து விட்டாள். ரத்தப் போக்கை கட்டுப் படுத்த இஞ்ச்செக்ஷன்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

ஓ…. எதைக் குறித்துப் பேசுகிறாள் எனப் புரிய வந்தது, அதற்கு என்ன பதில் சொல்ல எனத் தெரியாததால் பேச்சை நிறுத்தினான்.

மிக்க நன்றி மஞ்சு, உனக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் எனக்குச் சொல்லு, சரிதானே…

சரி ராம்…

இன்னும் சில பேசிவிட்டு, அவளைப் பத்திரமாக வீட்டுக்கு செல்ல சொல்லி வைக்க உரையாடல் நிறைவுற்றது.

பெண்கள் விஷயம் இவ்வளவு இருக்கிறதா என்ன? முதன் முறை சிகரெட்டை தேடாமல் மொபைலில் அடுத்தச் சில நிமிடங்கள் பெண்ணின் உடல் கூறு, மாதாந்திர உதிரப் போக்கு, அதன் பிரச்சனைகள்… எனக் கூகிள் பெரியவரிடம் தேடித் தெரிந்து கொண்டான்.

இப்போது தன் மனைவியை எண்ணி குற்ற உணர்ச்சி மனதை அழுத்தியது.

அதிகாலை வேலை முடிந்து வழக்கம் போலத் தன் அறைக்கு வந்தவன் அவள் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தான். எப்போதும் கட்டிலை முழுவதும் சொந்தம் கொண்டாடுபவள் இப்படிப் படுத்திருப்பதே மனதுக்கு நெருடியது. நேற்றும் இப்படித்தானே படுத்திருந்தாள் இல்லையா? இல்லையோ? இல்லை அப்படித்தானோ? மனதை குழப்பிக் கொண்டவன் அதனைப் புறம் தள்ளி அவளருகே அமர்ந்தான்.

இருளில் அவள் கண்ணீர் தடம் அவனுக்குத் தெரியவில்லை.அவள் முகம் வாடி இருந்தது மட்டும் புரிந்தது. உடல் வலியோடு கூட அவளுக்கு மன வலியையும் கொடுத்து விட்டோம் மனம் சுருக்கெனக் குத்தியது.

மெதுவாக அவள் கால்களைப் பற்றித் தன் மடியில் வைத்தான். தூக்கத்தில் கிளுக்கெனச் சிரித்தாள் அவள்.

அவன் முகத்திலும் மென்முறுவல் அந்த வெண்பஞ்சு பாதத்தை வருடினான். உள்ளங்காலில் முத்தம் இட்டான், வாய்க்குள்ளாக ஸாரிச் சொன்னான். அவள் கால்களை இதமாய்ப் பிடித்து விட்டான், அருகில் சென்றவன் இடுப்பை வருடிக் கொடுக்க, தூக்கத்திலும் அந்த வருடல் பிடித்து அவனுக்கு வாகாகத் திரும்பிப் படுத்து முதுகைக் காட்ட குட்டி குட்டியாய் அவளுக்குத் தசைகளை அழுத்தி விட்டான்.

ஒருமுறை சற்று வேகமாய் அவன் கரம் பதியவே ஸ்ஷ் ஆ…என அவள் தூக்கத்திலேயே குரல் எழுப்ப அங்கேயே மயிலிறகு தீண்டலாய் வருடி விட்டான்.

அவளருகாமை அவனை என்னென்னவோ செய்தாலும் தன்னை அடக்கிக் கொண்டான். அவள் வலியை உணர்ந்த பிறகு அவனுக்கு முன்தினத்தின் தன் தாபம், அது நிறைவேறாததால் வந்த கோபம் அர்த்தமற்றது என்றே புரிந்திருந்தது.

அவனளவில் தான் மனைவிக்குச் செய்த தவறுக்கு மாற்று செய்த உணர்வில் தன் சண்டை தீர்ந்த உணர்வில் அவன் நிம்மதியாய்த் தூங்கினான். மனைவியானவளிடம் சண்டை போடுவதில் எவ்வளவு தெளிவு இருக்க வேண்டுமோ? அவ்வளவு தெளிவு சமாதானம் செய்வதிலும் இருக்க வேண்டும் என்னும் சிந்தனை அவனுக்கு வாய்க்கவில்லை. இவன் செய்த சமாதான முயற்சி தூங்கிக் கொண்டிருந்த கோமு அறிந்திருப்பாளா? இல்லையா?

காலை எழுந்து அருகில் கணவனைப் பார்த்தாள் கோமு, அவன் முடி வருட அவள் கை உயர்ந்தது, ஆனால் தன்னைத் தானே தடுத்துக் கொண்டாள். நேற்றிரவு அவனைச் சமாதானம் செய்யும் விதமாய் வருடச் சென்ற போது, அவள் கையைப் பிடித்துத் தள்ளி விட்டவன் தானே இவன்? ‘இவன் வெகுவாய் மாறிவிட்டான்’ பெருமூச்செழுந்தது.

அலுவலகம் புறப்பட்டுச் சென்றவள் அவனுக்குத் தேவையானவைகளைச் செய்யவும் மறக்கவில்லை.

அலுவலகத்தில் தான் வேலை மந்தமாய்ச் செய்து கொண்டிருந்ததாக உணர்ந்தாள் கோம்ளி. முன்னெப்போதும் வரும் இன்ஸ்டன்ட் புன்னகை இப்போது வரவில்லை. என்னதான் எத்தனை நிறத்தில் மேக் அப் செய்தாலும் முகத்தின் சோபை குறைந்தாற் போலிருந்தது.

ஏதோ ஒரு கதையில் வாசித்த “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்னும் சொல்லாடல் நினைவில் வந்து மனதில் தைத்தது. இதோ தனக்கும் ராமுக்கும் திருமணமாகி இரண்டு மாதம் நாளைய தினம் நிறைவுறப் போகின்றது. அதற்குள்ளாக இப்படி நடந்து கொள்கிறானே? இவ்வளவுதானா இவன் அன்பு? இல்லை அவன் அன்பு படுக்கையறை வரை மட்டிலும் தானா? மனம் கசந்தது.

ஆண்கள் எல்லோருமே பொல்லாதவர்கள், சுயநலமிகள், தன் தேவை முடிந்ததும் பெண்களைச் சக்கையாய் தூக்கி எறிபவர்கள் மனதிற்குள் எழுந்த குரலுக்கும் ராமுக்கும் சம்பந்தம் இல்லை என நிரூபிக்கத் தனக்குள்ளே போராடினாள்.

நாளைய திருமண நாளை அவன் ஞாபகம் வைத்திருப்பானா? இல்லை அன்றும் இது போலவே தான் நடந்து கொள்வானா? ம்ப்ச்ச்… சலித்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள், வீட்டின் பிரச்சனை அவள் உள்ளத்தைப் பாதித்து, அலுவலை பாதித்து, புத்தியை மழுங்கடித்துக் கொண்டிருந்தது. மனதெங்கிலும் எல்லாமே முடிந்து விட்டதைப் போன்ற ஒரு விரக்தி.

தன் கணவன் தான் எதிர்பார்த்தது போன்ற விதமாய் அமையவில்லையே? எனும் ஏமாற்றம் அவள் மனதை சூழ்ந்தது, அது அவளைச் சுற்றி சிலந்தியாய் வலைப் பின்னிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அவள் மீள்வாளா?

மற்றொரு இரவு கடந்ததும் கோமு மிகவும் மகிழ்ச்சியாய் எழுந்தாள். அன்று சனிக்கிழமை, அவள் அவளவனான ராமோடு அதிகமாய் நேரம் செலவழிக்கும் காதல் வளர்க்கும் தினம். தன் பெற்றோரைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னமோ தூங்கி எழுந்ததும் தன் முந்தைய கோபத்தை விட்டு விட்டு சட்டென்று தன் கோபத்தை விட்டு விட்டு ராமுடன் பழையபடி ‘வாங்க பழகலாம்’ மோடுக்கு வந்திருந்தாள்.

ராம் இரவில் இன்னும் கூட அவளருகே அணைப்பிற்காக நெருங்கவில்லை. அவளுக்கு வலித்து விடுமோ என அவன் விலகி இருந்ததைக் கோமு கோபம் என்றே எடுத்துக் கொண்டாள்.

அவள் வருத்தத்தில் மெசேஜீகள் அனுப்பாததில் அவனும் அவளைக் கண்டு கொள்ளவில்லை. பொதுவாக, சாப்பிட்டாயா? துங்கினாயா? போன்ற வெகு பார்மலான விசாரிப்புகளில் அவனுக்கும் விருப்பமில்லை. இதுவெல்லாம் ஒரு கேள்வியா? அதுதான் தினமும் சாப்பிடுகிறோம், தூங்குகிறோமே? என்ற எண்ணம் தான் காரணம். அது போகத் திருமணம் ஆனதும் மனைவி மட்டில் கணவன்மார்களுக்கு வரும் அலட்சியப் போக்கும் கூட ஒரு காரணம்.

யாருக்கும் தன் கையில் இருக்கும் வரையிலும் எந்தப் பொருளின் அருமையும் புரிவதும் இல்லையே. இல்லையென்றால் தங்களுக்குள் ஏற்பட்ட அந்தச் சின்னப் பிணக்கு எங்கு வரை கொண்டு செல்லக் கூடும் எனப் புரியாமல் அவன் இருந்திருப்பானா?

சனிக்கிழமை லீவு என்பதால் அவள் நிதானமாகவே குளித்துப் புறப்பட்டு வெளியே வந்தாள். புதுச் சேலை ஒன்றைக் கட்டிக் கொண்டு ஒயிலாய், எழிலாய் இருந்தாள்.

ஷப்பா இந்த வில்லன் (மாதவிலக்கு) போனதும் தான் நல்ல உடையாவது உடுக்க முடிகின்றது. இல்லையென்றால் எங்கே? என எண்ணியவளாய் சமையலறைக்குச் சென்று செய்ய வேண்டியதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கல்யாணி மருமகளைப் பார்த்து மலர்ச்சியாய் புன்னகைத்தார்.

அந்தப் புன்னகை தன் தோற்றம் குறித்தே என அறிந்து,

‘அத்தே எங்க மேரேஜ் மந்த்வெர்சரி (monthversary), 2 மாசம் முன்னாடி இன்னிக்குத்தான் எங்களுக்குக் கல்யாணம் ஆச்சு.

அப்படியா? அட ஆமால்ல?

கல்யாணி மருமகளிடம் கைக்குலுக்கினார்,

ரொம்ப அழகா இருக்க நெட்டி முறித்தார். இன்னிக்கு ரெண்டு பேரும் எங்கேயாச்சும் போய் வாங்க, இவனுக்கு நல்ல நாள் பெரிய நாள் கிடையாது. என்னிக்குப் பார்த்தாலும் தூங்கிட்டே இருப்பான். இந்த நைட் ஷிப்டை ஒழிச்சுக் கட்டினா தேவலாம்.

தன்னிடம் புலம்பிய மாமியாருக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள் கோமு.

ராம் தூங்கிக் கொண்டிருப்பதைத் தொல்லை செய்யக் கூடாதென்று வழக்கமாய் வரும் விதமாக அமைதியாக அறைக்குள் தனக்குக் காபியை எடுத்துக் கொண்டு வந்தவளுக்கு ட்யூப் லைட் பளிச்சென வெளிச்சமாக்கி இருக்க, யார் வேலையாக இருக்கும் என்று எண்ணியவளாகத் தேட, அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு தன் சட்டையில் எதையோ தேடி எடுத்தான் ராம்.

தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறானோ? காபியை டேபிளில் வைத்து விட்டு, அவனருகில் வந்தவள் அவனை ‘பே” எனப் பயம் காட்ட முயன்றாள். அதே நேரம் அவனும் திரும்ப, அவன் மேல் எக்குத்தப்பாய் விழுந்து வைத்தாள்.

இப்ப மூடில்லை…

அமிலத்தை அவள் முகத்தில் வீசிச் சென்றாற் போல ராம் அவளைத் தள்ளி நிறுத்திச் சென்று விட்டான்.

கோமுவிடம் காலையிலிருந்த அத்தனை உற்சாகமும் வடிந்து விட்டிருந்தது.

என்னை எவ்வளவு மதிப்புக் குறைவாகப் பேசி விட்டான்.

என்னமோ நான் அவனிடம் வேறெதுவோ எதிர்பார்த்த மாதிரி… ச்சீய்… தன்னையே அருவருத்தாள்.

அவசரமாய்ப் புறப்பட்டுச் சென்றவன் மதியமே வீடு திரும்பினான். விட்டால் தான் அவன் வேலையை அலுவலகத்தைச் சபித்து விடும் அபாயம் இருப்பதாகக் கோமுவுக்குத் தோன்றியது. அதென்ன வேலை வேலை ஊர் உலகத்தில் யாரும் பார்க்காத வேலையா? ம்ஹீம்.

ஆபீஸ், வீடு, தூக்கம், இதற்கு இவன் என்னை எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்.ஆபீஸ்க்கே ஒரு தாலியை கட்டி இருக்க வேண்டியது தானே? மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

தன்னருகெ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவனைப் பார்த்து, தங்கள் முதல் மாதாந்திர திருமண நாள் கொண்டாடிய விதம் எண்ணி எண்ணி தன்னையே வருத்திக் கொண்டு கோமு அந்நாளைக் கடந்தாள்.

ராம் தன்னிடம் அப்படிக் கூறியப் பின்னர் அவளுக்கு அவனிடம் பேசுவதில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பெண்ணுக்கே உரிய மெல்லிய உணர்வுகள் வெகுவாக அடிவாங்கி இருந்தன. மூடில்லையாம் மூடு… புருஷன் பொண்டாட்டி கிட்ட பேசற பேச்சா இது? அவமானமாக இருந்தது.

பேச்சற்ற மௌனம் இருவருக்கிடையேயும் வளர்ந்தது. கோமு அதை உடைக்க முயலவில்லை. ராம் அதைக் குறித்துச் சிந்திக்கும் நிலையிலும் இல்லை. வழக்கம் போல வேலையில் மூழ்கி இயந்திரமாகவே மாறிப் போயிருந்தான்.

ஞாயிற்றுக் கிழமையும் சோம்பலாகவே விடிந்தது. இவள் எதற்காக இப்படி இருக்கிறாள்? இன்னும் உடல் நிலை சரியாகவில்லை போல? என எண்ணியவன் தான் தனது நண்பனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு போய் வருவதாகச் சொல்லிச் சென்றான்.

இரவு வர ஒரு மணியாகிற்று, வழக்கம் போலத் தன்னிடம் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து தன் அறைக்கு வந்தான். கை கால்களைப் பரப்பிக் கொண்டு படுத்திருந்தாள் அவன் கோமு. ராம் மனதிற்குள்ளாக ஷெர்லக் ஹோம்ஸ் வந்து அமர,

ஹோய் அவளுக்கு நன்றாக ஆகி விட்டது போலிருக்கிறது?அதனால் தான் இவ்வாறு படுத்திருக்கிறாள்.

மனம் குத்தாட்டம் போட்டது. அவன் உள்ளே சென்று நாளம் நாளமாய்ப் பரவி இருந்த மதுபானம் கடந்த நாட்களில் மனைவியை நாட முடியாதிருந்த அத்தனை நாளின் தாபத்தையும் நினைவிற்குக் கொண்டு வந்து அவன் மூச்சை உஷ்ணப் படுத்தியது. மூளை மதுவில் மழுங்கியிருக்க, உடனே, உடனே… என அவன் செல்கள் அவனை அவசரப் படுத்தின.

தான் அவளை இதுவரை குடி அல்லது புகை வாடையோடு அணுகியது இல்லை என்பதை அவன் அப்போது மறந்தான்.

ராம் அவளை ஆசையாய் அள்ளிக் கொண்டு ஆர்வமாய்த் தொடர்ந்த அந்தச் சங்கமம் தங்கள் இருவருக்கும் சந்தோஷம் அளித்ததா? என்று அறியும் நிலையில் இல்லை, கோமு தூக்கத்தில் இருந்து எழுந்தவள் கணவனின் செயலில் நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு இணக்கம் காட்டவும் இல்லை, அதே நேரம் விலக்கவும் இல்லை. மனது கதறிக் கொண்டு இருந்தது. எனக்கு இதற்குமேல் முடியாது, இங்கே இருக்கவே முடியாது.

மாறி, மாறி மனதிற்குள் உருப் போட்டவள். இன்னும் சில வாரங்கள் அவன் காலையில் வீட்டுக்கு வர தாமதாகும் எனச் சனிக்கிழமை அறிந்து கொண்ட தகவலை மனதிற்குள் எண்ணி ஒரு திட்டத்தோடு உறங்கிப் போனாள்.

காலை தன்னைச் சுத்த படுத்தியவளுக்குக் கணவன் வாடை தன் மீதும் பரவியிருக்கக் குமட்டியது. அவனைத் திட்டிக் கொண்டே தேய்த்து தேய்த்துக் குளித்துக் கொண்டாள்.

குடிகாரன், குடிகாரன்…அவன் தான் சொன்னானே? நான் தான் புத்திக் கெட்டு சரின்னு சொன்னேன். இனி என்ன செய்யறது? கொஞ்ச நாள் தனியா இருந்து யோசிச்சு தான் இதெல்லாம் முடிவு செய்யணும்.

அப்ப அவனை நீ பிரியப் போறியா?

கேட்ட மனதிற்குச் சொல்ல அவளிடம் பதிலில்லை.

வழக்கம் போலத் திங்கள் கிழமை காலை அலுவலுக்குப் புறப்படுகையில் எதிரில் வந்த மாமியாரை முன்னறைக்கு வரச் சொல்லி இழுத்துச் சென்றாள்.

அத்தே, ஒரு ஹெல்ப் வேணும்.

என்னம்மா?

காதில் எதையோ சொல்லி, ஹைபைவ் கொடுத்து மலர்ச்சியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு அங்கிருந்து விடைப் பெற்றாள் கோம்ளி.

அலுவலகத்திலிருந்து திரும்புகையில் அவள் தன் அம்மா வீட்டுக்குச் செல்லும் ட்ராப்பில் இருந்தாள். கை ஒன்று நாடியை தாங்கி இருக்க, கண்கள் கலங்கி, மனம் வெறுத்து அசோகவனத்தில் இருக்கும் சீதையின் பாவனையில் அமர்ந்திருந்தாள் இந்த ராமனின் சீதை.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here