1. வெளிச்சப் பூவே

0
557
Velicha Poovae
  1. வெளிச்சப் பூவே

அந்த மாளிகை முன்பு சர் சர்ரெனச் சில வெளிநாட்டுக் கார்கள் வந்து நின்றன.செக்யூரிடிகள் வெகு பவ்யத்தோடு அக்கார்களுக்குக் கேட்டை திறந்து விடவும், வெகு நீளமான பாதை கடந்து மாளிகையின் வாயிலில் இறங்கியவர்கள் அனைவரும் பெரும் ஆரவாரத்தோடு கலகலத்து உள்ளே சென்று நின்றனர்.

பார்ட்டியில் அடித்த கொட்டத்தை மறுபடி உரைத்து கிண்டல் கேலியாக மீண்டும் அரை மணி நேரம் பேசி வயிறு வலிக்கச் சிரித்த பின்னரே அவர்கள் உண்ட பஃபே உண்வு செரித்தது போலும்.

மனைவிகள் பேச அதைக் கேட்டுக் கொண்டு இடை இடையில் கை கொடுத்தவர்கள் அந்தப் பெரிய மாளிகையின் இருக்கையில் இலகுவாய் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் அம்மாளிகையின் வாரிசுகள்.

நரிகள் தோற்றுப் போகுமளவிலான கபட உருவே உருவானவர்கள்.

விரைவில் 45 வயதை தொடவிருக்கும் அமரன் எனும் அமரேந்திரன் ஆறரை அடி முரட்டுத் தோற்றம் கொண்டவன். எவரும் சாதாரணமாக அவனிடம் நெருங்குவதும், பேசுவதும் மிகச் சாமான்யமான விஷயம் அல்ல ஆனால் அவன் காதல் மனைவி சாகரிகா அவனைத் தன் ஓரக்கண்ணாலேயே ஆட்டுவிக்கும் வல்லமை படைத்தவள் என்று கூறிக் கொள்கின்றார்கள்.

சாகரி அக்கா அத்தான் உங்களையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாங்க கிண்டலடித்த பாகமதி அவ்வீட்டின் இரண்டாம் வாரிசான வீர் எனப்படும் வீரேந்திரனின் மனைவி.

வீரேந்திரன் தமையனை விடவும் சற்றே குள்ளமெனினும் அவனது ஊடுருவும் பார்வையும், கீழ் நோக்கிப் பார்த்து மனிதரை அளவிடும் குணமும் எவரையும் சாதாரணமாக நெருங்க விடாது.

பாகமதியின் பேச்சைக் கேட்டவள் தன் ஒய்யாரமான ஒன் பீஸ் ஐ அலட்சியமாக ( தோள் முதல் கால் வரை மறைத்த உடை) சரிப்படுத்தி விட்டு

…ம்ம் அவருக்கென்ன அதான் பல வருசமா பார்க்கிறாரே… மஸ்காரா கண்களைச் சிமிட்டினாள்.

ஹாஸ்டலில் வளரும் பதின் வயது பிள்ளைகளின் தாயவள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அத்தனையாகத் தன்னைப் பேணி இருந்தாள் சாகரிகா.

பாகமதி மட்டும் என்னவாம்? நளினமான அவளது உடை பல இடங்களில் இளமையைப் பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொண்டு இருந்தது.

சரி அதை விடு இன்னிக்கும் விக்ரம் முகம் கருத்தப்ப பார்க்கிறதுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்திச்சு இல்ல?

“ஆமாம் அக்கா” தேவதர்ஷிணி அவ்வீட்டின் மூன்றாம் மருமகளும் இணைந்து கெக்கலித்தாள்.அவளுடைய உடை பிரபல டிசைனரால் இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே தயாரிக்கப் பட்ட ஒன்று. முன்னாள் மாடலாக இருந்ததால் அவள் மீது மீடியாவின் கவனம் அடிக்கடி படுவது உண்டு.

தேவதர்ஷிணியின் கணவன் ராஜ் எனும் ராஜேந்திரன் காதலாகி கசிந்துருகி அவளைக் கைப்பற்றி இருந்தாம். தன் மற்ற சகோதர்களைப் போலல்லாது கொஞ்சம் சமீபத்திய காலத்தவன் போல நவீன தோற்றமளித்தான். இனிப்பாய் பேசவும், பிறரை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும் அவனுக்குத் தெரியும். அவனைக் குறித்த நல்லெண்ணங்கள் பிறருக்கு உண்டு. என்ன வேடமிட்டாலும் நரி நரி தானே?!

ஓ அக்காஸ் நான் தூங்க போறேனப்பா…அடுத்து விக்கிரமை எப்படி டீஸ் செய்ய வேண்டுமெனச் சொல்லி விடுங்கள் முன்பே திட்டமிட்டு அவனை வச்சுச் செய்யலாம் என்ன? சரிதானே என்றவள் மெல்லிடையாளான ரீனா ரகுவீர்…முன்னாள் நடிகை இன்னாள் கோலிவுட் ப்ரொட்யூசர் டைரக்டர்.

முட்டி வரையில் அவள் அணிந்திருந்த சன்னமான உடை இன்றைய பார்ட்டியில் பல்வேறு நபர்களின் தூக்கத்தை விரட்டி அடித்திருக்கும் என்பதென்னவோ உண்மை.

அவள் கணவன் நெடு நெடுவென வளர்ந்த வெள்ளை வெளேர் நிறத்தவன் அவ்வீட்டின் மற்றொரு இளவல் ரவி என்று அழைக்கப் படும் இரவீந்திரன்.

ரீனா புறப்பட்டதைத் தொடர்ந்து எல்லோருமே தங்கள் போதைகள் கண்ணைச் சுழற்ற தடுமாறி தடுமாறி தங்கள் அறைகளுக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டனர்.

இரவு கடந்து கொண்டு இருந்தது. சலனமே இல்லாமல் அம்மாளிகை முன்பு ஃபோர்ட் ஒன்று வந்து நிற்க, வெகு அலட்சியமாக நிதானமாகச் செக்யூரிடி கால் மணி நேரம் கழித்தே வந்து கேட்டை திறந்தான்.

அத்தனைக்கும் பழக்கப் பட்டிருந்த அந்தக் காரை ஓட்டியவன் அமைதியாகத் தன் காரை ஓட்டி உள்ளே வந்தான்.

ஐந்தே முக்காலடி மட்டுமே இருப்பான் அவன். சாந்தம் தவழும் முகம், சிரிப்பு மறந்த உதடுகள், நீண்ட மூக்கு, இருபத்தி ஐந்தே வயதுக்கான உடல் வனப்பு. எந்த வித உடற்பயிற்சிகளோ எதுவும் செய்யாமல் சாதாரணப் பக்கத்து வீட்டுப் பையனை பார்ப்பது போன்றதொரு தோற்றம்.

அந்த மாளிகையில் வசிக்கும் மற்றவர்களுக்கும் அவனுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு படுத்திப் பார்க்க இயலாத அளவிற்கு உடலமைப்பு, தோற்றம், உடைகள், நடவடிக்கையில் மிக எளிமையானவனாக இருந்தான்.

சோர்வாகத் தன்னையறியாமல் சாப்பாட்டு மேடையில் அமர்ந்தவன் முன்பு பழத்துண்டங்களும் பால் கிளாஸிம் வைக்கப் பட்டன.

அதீத பசியால் பழங்கள் சட்டெனத் தட்டில் மாயமாகி அவன் வயிற்றில் இடம் பெற்றுக் கொண்டிருக்க மேலும் இரண்டு ஆப்பிள் பழங்களை நறுக்கினார் அவர்.

வேண்டாம் போதும் “தாதூ” என்று அவரைத் தடுத்தவன். அந்தப் பெரிய கிளாஸீன் பாலை மடக் மடக்கெனக் குடித்தான்.

வயிற்றின் அரவம் அடங்கியது.

எந்தச் சொந்தமுமல்லாத தன்னை “தாதூ” ( தாத்தா) என அழைக்கும் தன் சின்ன முதலாளியை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் “பாசிக்” Basik பல வருடங்களாக அம்மாளிகையின் கேர் டேக்கராக இருப்பவர்.

நிரந்தர ஊழியர்களாகச் சமையல் , துப்புறவு, தோட்டம், காவல் என முப்பது பேர் பணி புரியும் அவ்வீட்டில் எதெது எங்கே இருக்க வேண்டும் என்பது முதல் எப்போது எவ்வாறு வீட்டின் அலங்காரம், சாப்பாட்டைக் கவனிக்க வேண்டும் என்பது வரை அத்துப்படி.

விக்ரமை பார்த்தால் அவர் மனம் எப்போதும் உருகும். அவன் எதிர்கொண்டவற்றில் பலவற்றை நேரில் கண்டவரல்லவா?

பாசிக்கிடம் அவனது தந்தையின் இறுதி வேண்டுதலே தன் மகனை காப்பதாக இருக்க, அவர் ஒரு போதும் அதில் தவறியதே கிடையாதல்லவா?

இன்றும் அந்தப் பெரிய கம்பெனி ஒன்றின் விழாவில் தன்னை அவமானப் படுத்திய தன் அண்ணிகளை எண்ணி மனம் நடுங்கியது. இன்று அந்தப் பெண் என்னை அடிக்கச் செருப்பைத் தூக்கவிருந்தாள்…

ஆண் மகன் உள்ளம் நடுங்கினான்.

எதற்காக இவர்கள் இப்படிச் செய்கிறார்களாம்?

ஒன்றும் புரியாமல் தாய் தந்தையின் பெரிய புகைப்படங்களின் முன்பு நின்றான்.

தகப்பனின் கனிவு இன்னும் புகைப்படம் தாண்டியும் தன்னை வருடுவதாக உணர்ந்தான்.

தாயின் முகத்தையே பார்த்து நின்றான்…ஏன் அம்மா எதற்காக என் அண்ணன்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை?

வெற்றுப் புன்னகையோடு, உயிரோடு உறவாடாத அந்தப் புகைப்படம் அவன் உள்ளத்தில் அமைதியையோ, ஆறுதலையோ எந்த ஒரு உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

ஏனோ?

( தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here