11. வெளிச்சப் பூவே

0
836

அத்தியாயம் 11

விக்ரம் நம்ப முடியாதவனாக அன்றைய நாளிதழை புரட்டி பார்த்துக் கொண்டு இருந்தான். நடப்பவை உண்மைதானா என ஐயம் தீர, ஆவல் மிகத் தன்னையே கிள்ளிக் கொள்ள அவனது மனம் தூண்டியது. தன்னையறியாமல் அவன் முகத்தில் இனியதொரு முறுவல் படர்ந்திருந்தது. பாசிக் அவனை மிகவும் இரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

கல்லூரிப் படிப்பிற்காக வெளி நாடு சென்று திரும்பிய காலக்கட்டத்தில் அவனிடம் இருந்த முறுவல் அது. பல்வேறு விபத்துக்களைப் பார்க்கும் முன்பாகத் தகப்பனோடு ஒட்டி உறவாடிய தருணங்களில் வழக்கமாக வெளிப்படும் முறுவல் அது. கடந்த சில வருடங்களில் தொலைந்து போயிருந்த அந்த முறுவலை மீண்டும் கண்டதில் பாசிக் வெகுவாக மனம் கனிந்து போயிருந்தார்.

தனது ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வருடாந்திர லாபத்தில் ஒரு பகுதியை தகப்பனின் பெயரில் ட்ரஸ்ட் வைத்து முதியவர்கள் பலரின் மருத்துவச் செலவினங்களை விக்ரம் கவனித்து வந்தான்.விடுமுறை நாட்களில் அதன் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவான்.

தனக்காகத் தன் வாழ் நாள் முழுவதையுமே அளித்து, தன்னை உளியாய் செதுக்கி, செதுக்கி உருவாக்கிய தகப்பனை தான் தன்னுடைய சொந்த காலில் நின்ற பின்னர்க் கண்ணுக்குள் வைத்து காத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அவனது ஆசை நிராசையாகி போன போது நொறுங்கியவன்தான் அதன் பின்னர் இந்த ட்ரஸ்ட் மூலமாகத் தன் தாய் தந்தை போன்ற முதியவர்களுக்கு உதவ ஆரம்பித்தான். அதில் அவனுக்கொரு மன திருப்தி.

பொதுவாகப் பெரிய அறுவை சிகிச்சை எல்லாவற்றிற்கும் உதவி செய்யும் சேவை நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின்னர்த் தேவைப்படும் சத்தான ஆகாரம், மாத்திரை மருந்துகள் இவையெல்லாம் வறுமையின் காரணமாகப் பல முதியவர்களுக்குக் கிடைப்பதில்லை.

பலரோ சிகிச்சை முடிந்த பின்னர்ச் சில நாட்களில் மறுபடி வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை என்று இருக்கும்.இப்படி இருக்கையில் பணி நிமித்தம் ஓய்வு எடுக்க முடியாத நிலைமையில் அறுவை சிகிச்சைகளின் பலன் இல்லாது போய் விடும். சிலருக்கு இதனாலேயே விரைவாக நோய் தொற்றுகள் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்வதுண்டு.

விக்ரமின் ட்ரஸ்ட் செய்யும் பணி யாதெனில் அவனது ட்ரஸ்டின் ஒரு குழு அரசு மற்றும் மானியம் பெறும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் பின்புலம் ஆராயும். அந்தக் குழுவின் பரிந்துரையின் படி உதவி பெறுவோர் மாதம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தெரிந்தெடுக்கப் படுவார்கள்.

அவர்களுள் எவருக்கெல்லாம் உதவிகள் தேவையோ, அப்படிப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், உணவு பொருட்கள், வேலைக்குச் செல்லாமல் ஓய்வு எடுப்பதனால் தடைப்படும் சம்பளத்தைத் தாமே அளித்து ஓய்வெடுக்கச் செய்வது, போன்ற அத்தனை உதவிகள் அளிப்பர். தனி நபருக்கான உதவியாக இல்லாமல் அந்த நபரை சார்ந்து அந்தக் குடும்பம் இருப்பின், அவரது நோயுற்ற காலக்கட்டத்தில் குடும்பத்தின் தேவைகள் அதாவது குழந்தைகளின் ட்யூசன், பள்ளி மாதாந்திர கட்டணங்களைச் செலுத்துவதும் தேவைகள் அனைத்தும் சந்திக்கப் படவும் உதவுவர்.

தனது தந்தையின் நினைவாகச் செய்யும் இச்செயலை அவன் எப்போதுமே வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அதைத் தெரிந்து கொண்டு தன்னை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பாராட்டுவார்கள் என்றோ இத்தனை பெரியதாக அந்தச் செய்தி பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் வரும் என்றோ அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதிலும் முக்கியமாகப் பூங்கொத்து நீட்டிய பெண் கேமராவை பார்த்து இவனிடம் பேச தொடங்கவும், அவனது நான்கு அண்ணன்களும் அண்ணியர்களும் இவனைச் சூழ்ந்து நின்று கொண்டு அந்த ட்ரஸ்ட் நடத்துவதற்கான அத்தனை ஐடியாக்களையும் அவர்கள்தான் அவனுக்கு வழங்குவது என்று அளந்தும் அளக்காமலும் பொய்களை வீசி எறிந்த போது திகைத்து தான் போய் விட்டான். அவர்கள் கூறியதற்கு மறுப்புச் சொல்லாமல், அதே நேரம் ஆமோதிக்காமலும் கூட வெளியுலகு அறியா வண்ணம் அமைதியாக நின்று கொண்டான்.

அந்த நிகழ்விற்கு அடுத்தடுத்து பல்வேறு பத்திரிக்கைகள் அவனைச் சந்திக்கப் பேட்டிகள் எடுக்க அனுமதி கேட்டிருந்தனர். விக்ரம் வேலை சமயம் தவிர மற்றெல்லா நேரமும் கூச்ச சுபாவி தான். அதனால் ரிஷியிடம் தான் நேரடியாகக் கலந்து கொள்ளத் தேவையில்லாத அத்தனை வேலைகளின் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொண்டு இருந்தான். முதலில் ட்ரஸ்ட் குறித்த எந்தச் செய்தியையும் போட வேண்டாமென்று மறுத்துப் பார்த்தான். ஆனால், உங்களைப் பின்பற்றிப் பலரும் உதவிகள் செய்ய வாய்ப்பாகும் என்று கூறவும், அதைத் தடுப்பானேன் என்று அவன் செய்திகள் வெளியிட அனுமதித்தான். நேரில் எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை.பேட்டி என்றதும் அலைபேசியில் குறுகிய நேரம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடித்துக் கொண்டான்.

அவர்கள் கேட்டதற்கு இணங்க ஓரிரண்டு புகைப்படங்களை அனுப்பி வைத்தான். ஆனால்,அவன் குடும்பத்தினரோ பேட்டிக்கு அழைக்கப் படாத போதிலும் கூட ட்ரஸ்டை பார்வையிட பத்திரிக்கையாளர்கள் வந்த சமயத்தில் அங்குக் குவிந்து இருந்தனர்.

ஹாஸ்டலில் இருந்த தங்கள் குழந்தைகளையும் கூட வரவழைத்து அவர்களோடு கூட நின்று போட்டோக்கள் எடுத்து, ட்ரஸ்டின் நிர்வாகியாகவும் மிகுந்த அன்பு வாய்ந்த குடும்பம் போலவும் காட்டிக் கொண்டனர். அவர்கள் பத்திரிக்கை சந்திப்பில் காட்டிய ஆர்வத்தில் எப்படியும் தன் வீட்டினர் பெயர்கள் தான் பத்திரிக்கையில் வரப் போகின்றது என்று எண்ணிக் கொண்டான். அது குறித்து அவன் பெரிது படுத்துவதாகவும் இல்லை.

அடுத்த மாதம் அவனது ட்ரஸ்ட் குறித்த மிக விபரமான செய்தி ஒன்றை அந்தப் பிரபலமான பத்திரிக்கை பதிவிட்டபோது ஆனந்த அதிர்ச்சியுற்றான்.

அவனை முன்னிறுத்தியே அந்த முழுக் கட்டுரையும் அமைந்து இருந்தது. அவன் குடும்பத்தினர் என்று கூறி மற்ற அனைவரையும் ஒரே ஒரு சிறிய போட்டோவில் காண்பித்து விட்டு, அந்தக் கட்டுரை முழுக்க முழுக்கப் பதிவிட்டு இருந்தது விக்ரமாதித்யன் குறித்து மட்டுமே.அவன் படிப்பு, நட்சத்திர ஹோட்டல் ஆரம்பிப்பதற்கான கனவு, நிறைவேற உதவியவர்கள். முக்கியமாக விக்ரமாதித்யனுக்கும் அவனது தந்தை சுமரேந்திர ஆதித்யனுக்கும் உடனான அன்பையும் அவரது பெயராலேயே அந்த ட்ரஸ்ட் நடத்தப் படுவதையும் அதனோடு கூடத் தகப்பனும் மகனுமாகப் பெரிதாகப் புன்னகைக்கும் புகைப்படத்தை அந்தக் கட்டுரையில் அலங்கரித்து இருக்கவும் கண்கள் கசிய அதனை வருடினான்.’அப்பா…’ மனதிற்குள்ளாக அழைத்துக் கொண்டான்.

பத்திரிக்கையில் அவனது ட்ரஸ்டின் செயல்பாடுகள் விளம்பரப் படுத்தப் பட்டிருந்தது. அந்தக் கட்டுரைக்குப் பின்னர் அவனது தொழில் துறை நட்புகள் அனைவரிடமிருந்தும் வாழ்த்துகளுடன் மாற்றி மாற்றிப் போன் கால்களும் செய்திகளும் வந்து அவனைத் திணறடித்தன.

அதனூடாக இரண்டு முறை சாவித்திரி தன்னுடைய ஹோட்டலின் ஷேரை தரும்படி கேட்டு வர, அவன் அந்தப் பெண்மணியிடம் பேசி தன்னுடைய மகிழ்ச்சியான மனநிலையைக் கெடுக்க விக்ரம் விரும்பவில்லை, ரிஷி மூலமாகவே அவரிடம் பேசி விரட்டாத குறையாகத் திரும்பச் செய்தான். இந்த முறை சாவித்திரியிடம் அவன் பேசி இருக்கலாமோ? மனம் மாறி அவன் நலனுக்காக அந்தப் பெண் ஏதோ சொல்ல வந்ததை அவன் கேட்டிருக்கலாமோ? சரி விதி யாரைத்தான் விட்டு வைத்தது? அப்படியே அவர் கூறி இருந்தாலும் விக்ரம் அவரை நம்ப வேண்டுமே?

இருளில் ஒரு சின்ன ஒளிக்கீற்று போல வந்த அந்தப் பாராட்டும், பத்திரிக்கை செய்தியும் கொண்டு வந்த மகிழ்ச்சியால் விக்ரமிற்குத் தன் வாழ்க்கையே அழகானது போலத் தோன்றியது.இவன் மகிழ்ச்சி நிலைக்குமா?


பிரேம் மற்றும் பிரவீணா…அவர்கள் அலுவலகத்தில்

இருவரும் அன்றைய வார இறுதியில் பத்திரிக்கையில் வெளியாகவிருக்கும் அந்தக் கட்டுரையில் எதையெல்லாம் வெட்டி வீசினால் இன்னும் சுருக்கமாய், அழகாய் அமையும் என்பதை ஆலோசித்துச் செய்து இறுதி வடிவத்தை எடிட்டருக்கு அனுப்பி விட்டு ஆசுவாசமாக அமர்ந்தனர்.

இருவரும் சேர்ந்து செய்யும் வேலை எப்போதும் சிறப்பாக அமைந்து விடுவதால் அந்தக் கூட்டணிக்கு எப்போதும் யாரும் இடைஞ்சல் செய்வதில்லை. அதனாலேயே அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே அவர்கள் தங்களது மற்ற(?) வேண்டிய மற்றும் வேண்டாத வேலைகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது.

‘ஏன் பிரேம் அந்த ஆபரேஷன் கே என் சக்ஸஸ் தானே?’

‘யெஸ்’ கட்டை விரலை உயர்த்திக் கண்ணடித்தான்.

ஆபரேஷன் கே என் என்பது கண்ணன் நடராஜன் எனும் கல்லூரி மாணவன் ஒருவன் குறித்த கேஸ். இவர்கள் இரவு பணியிலிருந்து திரும்பியபோது வெகு வேகமாக வந்து ரோட்டில் மோதி விழுந்து கிடந்தான் ஒரு வாலிபன். போலீஸ் துரத்திக் கொண்டு வந்து அவனிடம் விசாரித்து, 150 சிசி வேகத்தில் வண்டியை செலுத்துவது எவ்வளவு ஆபத்தானது என அறிவுரை சொல்லி, கண்டித்து அவனிடம் அபராத தொகை வாங்கிக் கொண்டு நகர்ந்தது.

அந்த பையன் போதை வஸ்து எதுவுமே உட்கொண்டு இருக்கவில்லை, ஆனால் அவன் நார்மலாகவும் இல்லை. இது இந்த இருவருக்கும் புரிந்தது.தங்கள் வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்ததை நிறுத்தி, அவர்கள் அவனை பின் தொடர்ந்தனர். அவன் போனில் யாரிடமோ கத்தி பேசிக் கொண்டு இருந்தான்.

‘அடப்பாவி, இது அவன் பைக் இல்லை போலவே? அடுத்தவன் பைக்கை விழத்தட்டிட்டு அவனையே திட்டுறான்?’ என்றாள் பிரவீணா.

‘அவன் நார்மலா இல்ல ப்ரவி…’

‘அதுதான் பார்த்தாலே தெரியுதே’

அதன் பின்னர் அவனைப் பின்தொடர்ந்து அவர்கள் விபரம் சேகரித்தவர்கள், பல நாட்களாக அவனைக் குறித்த தகவல்களைத் திரட்டி பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவன் 150 சி சி வேகத்தில் வண்டியை செலுத்தி அதற்கான அபராத தொகை கட்டிய நகல் மற்றும் பல விபரங்களும் இருந்தன.

அந்தக் கே என் னுக்கு ஆல்கஹால் பழக்கம் எதுவும் இல்லை ஆயினும் உற்சாகப் பானம் என்று சொல்லப் படும் சிகப்பு காளை ( நீங்களெ ஆங்கிலப் படுத்திக் கொள்ளுங்கள்) எனும் பானத்தை அருந்தியதில் அதீதமாக அதில் இருந்த இனிப்பும் காப்பித் தன்மையும் உறங்க விடாமல் நிதானம் இழக்க வைத்து விட்டது. பொதுவாகச் சிலர் ஒரு நாளைக்கு ஒன்று என்று எடுத்துக் கொள்வார்களாகில் இவனோ அன்றைய தினம் நான்கு பானங்கள் எடுத்துக் கொண்டிருந்தான்.

தூங்கவும் , உண்ணவும் விடாமல் அது அவனை பைத்தியக்காரனைப் போல செலுத்திக் கொண்டிருந்தது. தனது கட்டுப்பாட்டுக்குள் தானே னிற்க முடியாமல் அவ்வளவு வேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி இருந்திருக்கிறான். அவன் நல்ல நேரம் உயிர் பிழைத்தான், இப்படிப்பட்ட சம்பவங்களில் வாலிபர்கள் உயிரை இழப்பதோ, கை கால்களை இழப்பதோ மிகவும் சாதாரணமான ஒன்று.

இன்றைய தலைமுறைகள் விளம்பரத்திற்கு அடிமையாகி, உடலுக்குத் தேவையான ஓய்வு கொடுக்காமல் செயற்கையான முறையில் தூக்கத்தை விரட்ட, சோர்வை போக்க பல்வேறு பொருட்களை உண்டு குடித்து உடலை குப்பைக் கூழமாக ஆக்குவதில் முனைந்துள்ளது. இதன் பின்விளைவுகள் எங்குக் கொண்டு போய் விடுமோ?

‘என்ன ஆக்ஷன் எடுத்திருக்காங்க?’

‘அவங்க அப்பா பையனை இரகசியமா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து தகுந்த சிகிச்சை அளிக்கச் செய்திருப்பாங்க போலிருக்கு. வர வர நம்ம இளைய சமுதாயம் போகும் போக்கு சரியில்ல…’

‘ம்ம் உண்மைதான் இனியாவது அந்தப் பையன் நிதானமா இருந்தா சரிதான்.’

தங்களது இரகசிய செயல்பாட்டால் ஒரு வாலிபனின் உயிரை காத்த பெருமிதம் இருவரிடமும்.

‘சரி உட்காரு ஒரு விஷயம் சொல்லணும்’ என்றவன் தன் லேப்டாப்பில் சில செய்திகளை, விஷயங்களைக் கோர்த்தான்.

‘என்ன பிரேம் யோசனை?’

‘ரொம்ப ஆச்சரியமாயிருக்கு நம்ம நடத்தின அந்தக் கேஸ்?

‘எந்தக் கேஸ்?’

‘ஆபரேஷன் வி (விக்ரமாதித்யன்)’

‘அதுதான் முடிச்சிட்டோமே…?’

‘இல்லை முடிக்கலை…’

‘ஏன்? நீதானே சொன்ன ஒரு அட்டெம்ப்ட் மட்டும் செஞ்சு பார்க்கணும் என்று…’

‘ஆமாம் நான் தான் சொன்னேன். விக்ரமாதித்யன் தான் நெகடிவ் பப்ளிசிட்டிக்காக எல்லாம் செய்றான்னு நம்பினதால் சொன்னேன், அவனை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி வழக்கத்திற்கு மாறாக நடக்க வைத்தால் என்ன ஆகும் என்று அவதானிக்கச் சொன்னேன்.’

‘தன் பெயரை கெடுத்து ஒரு வகையான எதிர்மறை விளம்பரம் தேடுகின்ற அல்லது பேசுபொருளாக விரும்புகின்ற நபராக விக்ரமாதித்யன் இருப்பானென நம்பினேன். இந்தக் கேஸில் எளிதாக உட்புக முடியாமல் தவித்த போதும் கூட அதற்கெல்லாம் காரணம் விக்ரம் தான், தன்னுடைய இரகசியங்களை நாம் அறிந்து விடக் கூடாது எண்ணுகின்றவனுடைய முன்னேற்பாடு என எண்ணினேன்.’

‘ஏன் இப்போது என்னவாம்? அன்னிக்கு விக்ரம் இடிச்ச புளி மாதிரி தான் நின்னான் பிரேம். அவனுக்குத் திட்டம் மாறியதில் அதிர்ச்சி என்று முகமே காட்டி கொடுத்ததே? நிச்சயமாய் இதெல்லாம் அவனே தான் செய்கிறான்’

‘அது அன்று அவன் ரியாக்ஷன் காட்டாமல் இருந்ததன் காரணம் அதிர்ச்சி தான் ஆனந்த அதிர்ச்சி என்று நான் சொல்கிறேன் பிரவி’

‘வர வர புரியாம பேச ஆரம்பிச்சுட்ட நீ…தெளிவா சொல்லு.’

‘நீ வீடியோவில் விக்ரமை பார்த்த நான் நேரில் பார்த்தேன் அதுவும் ரெண்டு மூணு அடி பக்கத்தில…கிட்ட நின்னு பார்த்த எனக்கு அவனுடைய முகபாவம் புரியுமா? இல்லை எனக்குப் புரியுமா?’

‘சரிப்பா நான் உன் விக்ரமை ஒன்னுமே சொல்லலை, உனக்குத்தான் டா அவன் முகபாவம் புரியும், எனக்குப் புரியாது…சரி மேல சொல்லு…’

‘அவன் முன்னே அந்தச் சோசியல் சர்வீஸ் செய்யும் பெண்மணி பூங்கொத்து நீட்டினதும், அடுத்து கேமரா வெளிச்சம் விக்ரம் மீது விழுந்ததும் அவன் ஷாக் ஆகி நம்ப முடியாம திகைச்சு நின்னான். அந்த லேடி கிட்ட பேசவே அவ்வளவு தயங்கினான்.’

‘ஓ…’

‘உடனே அவன் குடும்பம் முழுக்கச் சுத்தி நின்னு புகழ்ந்துச்சு…அவன் அப்பவும் கம்ஃபர்டபிளா இல்லை.’

‘ம்ம்ம்…’

‘எனக்கு அப்பவே ரொம்பக் குழப்பமா இருந்தது…’

‘என்ன குழப்பம்?’

‘எப்பவும் அவன் ஏதாகிலும் பெண்கள் விஷயத்தில் அசிங்கமாக நடந்து கோள்ளும் போதும், உடனே அவன் குடும்பம் அவனைச் சுற்றிக் கொண்டு அவனுக்காக மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிச்சு வைப்பாங்க’

‘ஓ’

‘அதெப்படி அந்த ஒட்டு மொத்த பேரும் குறிப்பிட்ட நேரத்தில, உடனே அந்த இடத்துக்கு வந்து, பிரச்சனை இரசாபாசம் ஆகாம காப்பாத்துறாங்க? ஒவ்வொரு முறையும் இதுவே தான் நடந்து வருது, இதுவரை ஒரு தடவை கூட மிஸ் ஆனதில்லை.

ஒரு நாடகம் அல்லது திரைப்பட ஸ்க்ரிப்ட் போல எல்லாம் அப்படிச் சொல்லி வைத்தார் போல நடக்குது இது உனக்கு மர்மமா தெரியலியா?’

‘தெரியலியே’

‘உனக்கு வயசாகிடுச்சு போ’

உதட்டை பிதுக்கிய நண்பியை கவனியாதவன் போலத் தொடர்ந்தான்.

‘அதுக்கப்புறம் மறுபடி அவனைப் பற்றித் தெரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்பு என்று நம்ம ஆபீஸ் டீம் மூலமா ட்ரஸ்ட் விஷயம் ஆர்டிகளா ஆக்குறதுக்கு அடிக்கடி போய் வந்தோம் இல்லையா? அதில் நானும் அப்பப்ப இருந்தேன். எனக்கென்னவோ மர்மமாவே இருக்கு’

….

அது போக அன்றைக்கு நாம விக்ரம் இடத்திலருந்து அப்புறப்படுத்தின பெண்ணை பின் தொடர்ந்ததில் ஒரு சில வித்தியாசமான நிகழ்வுகள் நடந்திருக்கு, இந்த கேஸை இன்னும் ஆழமா கவனிக்கணும், மறுபடி ஆரம்பிப் போமா?

‘முதல் தடவையா ஒரு கேஸை இரண்டாவது தடவை எடுக்குறோம்டா’

ம்ம்… தேவை இருக்கு… அங்க ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு என் மனசு சொல்லுது’

‘எனக்கென்ன தோணுது தெரியுமா?’

‘சொல்லு?’


‘விக்ரமை பார்த்து நீ மயங்கிட்ட, அடிக்கடி அவனைப் பார்க்குறதுக்குத்தான் இப்ப ப்ளான் போடுற’

‘அடச்சீ ச்சீ… த்தூ த்தூ… போடீ’

தனக்கு உடன்பாடு இல்லாவிடினும் நண்பனுக்காக அந்த ஆபரேஷன் ‘வி’யில் அவளும் பங்கேற்றாள்.

முதல் முறையாக ஒரு கேஸை இரண்டாவதாகப் பின் தொடர தாம் தீர்மானித்திருப்பது குறித்துத் தான் பின்னர் வருந்த நேரிடும் என்றோ, தன் நண்பியை தான் சிக்கலில் மாட்டி விடப் போகிறோம் என்றோ பிரேம் அப்போது அறிந்து இருக்கவில்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here