2. வெளிச்சப் பூவே

0
530
Velicha Poovae

அத்தியாயம் 2

அந்த மாளிகையின் கேர் டேக்கர் ஆன பாசிக் ஆறே முக்கால் அடி உயரமும்,நன்கு பருமனும் கொண்ட திட உருவம் கொண்டவர். அவரது வயது ஐம்பதை தாண்டிவிட்டது என்று பார்த்துக் கணிப்பது மிகக் கடினம். அவரது வீடு அசாம் பகுதியில் இருப்பதாக மட்டும் கூறி இருக்கின்றார்.

வருடத்திற்கு இரு முறை லீவு எடுத்து தன் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் தனக்குப் பதிலாக இன்னொருவரை அவ்வீட்டின் பொறுப்புக்களில் அமர்த்திவிட்டே அவர் செல்வார்.

பெயரளவில் தான் அவர் வீட்டின் கேர் டேக்கர் ஆனால் நிஜத்தில் அவர் விக்ரமின் பாதுகாவலர். அவர் அந்த வீட்டில் இருப்பதால் மட்டுமே எதிரிகளின் எத்தனையோ முயற்சிகள் தாண்டியும் விக்ரம் உயிரோடு இருக்கின்றான்.

அவரது கட்டுப்பாட்டில் தான் வீடு செவ்வெனே இயங்குகின்றது அவர்கள் கவலையற்று என்று இருக்க முடிகின்றது என்பதால் விக்ரமின் உடன் பிறப்புகள் அவர் மேல் எத்தனை வன்மம் இருப்பினும் இதுவரையிலும் வேலையை விட்டு தூக்கவில்லை.

அப்படி அவரைச் சட்டென்று வேலையை விட்டு எடுக்கவும் விடாத வண்ணம் அவர்கள் தந்தை ஒரு சில ஏற்பாடுகள் செய்து இருந்ததுவும் கூட ஒரு காரணம் எனலாம்.

விக்ரம் சமையல் டேபிளில் இருந்து எழுந்து சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த தாய் தகப்பனின் படத்தில் கண்ணைப் பதித்துக் கொண்டு நிற்பதை கவனித்தவர் அவன் அறைக்குத் திரும்பும் முன்னதாகத் தான் செய்ய வேண்டிய வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

தினமும் விக்ரமின் அறையை முற்றும் முழுதாக அவர் பரிசோதித்து முடிந்த பின்னரே விக்ரமை அவன் அறைக்குச் செல்ல அனுமதிப்பார். அப்படி ஒரு வழக்கத்தைச் சில வருடங்களாக அவர் கையாண்டு வருகின்றார்.

ஒரு முறை விக்ரம் வீட்டிற்கு அணியும் காலணியின் உள் பகுதியில் மிகுந்த விஷத்தன்மை கொண்ட கருந்தேள் ஒன்று பாசிக்கால் கண்டு பிடிக்கப் பட்டது.

மற்றொரு முறை மிகவும் விஷம் வாய்ந்த Saw-scaled viper வகைப் பாம்பு ஒன்று அவன் படுக்கையின் கீழ் இருந்தது.

இரண்டையும் அவனது படுக்கை அறையில் இருந்து பாசிக் தான் வெளியே கொண்டு போய் விட்டதுவும், அடித்துக் கொன்றதுவும்.

விக்ரமின் அறைக்கு அடுத்தப் பகுதி அடர்ந்த செடி கொடிகள் கொண்ட கானகம் போன்ற தோற்றம் அளிக்கும் இடம் அதனால்தான் தன்னுடைய அறைக்கு அடிக்கடி இப்படி விருந்தாளிகள் வருகின்றனர் என்று அவன் மிகச் சாதாரணமாகவே எண்ணிக் கொண்டான். இதற்காகவெல்லாம் அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை.

ஏதோ சாதாரணப் பாம்பும், தேளும் என்று எண்ணி கொண்டு இருப்பவனுக்கு அவை சாதாரணமாகக் காணப்படும் தேளோ, பாம்போ கிடையாது.

வெளிநாட்டிலிருந்து மெனெக்கெட்டு வருவிக்கப் பட்டவை என்பதைப் பாசிக் ஒருபோதும் தெரிவித்தது இல்லை. அவனுக்கு இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளில் இதையும் எதற்குச் சொல்லி அவனைத் துன்புறுத்த வேண்டும்? குறைந்தபட்சம் அவனுக்கு நிம்மதியான தூக்கத்தையாவது கொடுக்கலாமே என்று அவர் அவனைத் தற்காத்து வந்தார்.

ஆம்…

பாசிக் அவனது அறையைச் சுத்தம் செய்து எல்லாப் பக்கமும் ஆராய்ந்து அதன் பின்னரே அவனை உள்ளே அனுமதிப்பார். அவன் எதையும் சாப்பிடும் முன்பாகவும் கூடப் பாசிக் அதை முதலில் உண்டு பார்த்த பின்னரே அனுமதிப்பதுண்டு.

விக்ரம் தூங்கி எழும் வரையிலும் அவனது அறைக்கு வெளியில் அவர் காவல் இருப்பார்.

அவரது விக்ரமிற்கான பாதுகாப்பின் எல்லை அந்த அரண்மனைக்குள் மட்டுமே.அந்த பங்களாவிற்குள் அவனது உயிருக்குப் குந்தகம் ஏற்படுத்துகின்றவைகளை மட்டுமே அவரால் தடுக்க இயலும். அதைத்தாண்டி அவரால் என்ன செய்ய முடியும்?

ஒவ்வொரு நாளும் அடிப்பட்ட குழந்தையாய், மனம் கசங்கி வருகின்ற அவனை இழுத்து அணைத்து அரவணைத்துக் கொள்ளவோ, அல்லது அறிவுரை சொல்லி வழி நடத்தவோ கூடிய அளவு உரிமையும், சொந்தமும் அவரிடம் இல்லையே.

என்ன சொல்லி அவனிடம் அவர் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவார்? அவர் தன்னுடைய எல்லையை மீறி செயல்பட்டால் அடுத்தக் கணமே தன்னுடைய வேலையினின்று தற்போதைய பெரிய முதலாளிகளால் தூக்கி எறியப் படுவது நிகழும் என்று அறிந்தவராக இருந்தார்.

அவர் செய்வது ஒன்றே தன்னுடைய ஐந்து வேளை தொழுகையிலும் இறைவனிடம் விக்ரமின் பாதுகாப்பு, மற்றும் எதிர்காலம் நன்கு மகிழ்ச்சியாக அமைய வேண்டும் வேண்டிக் கொள்வார்.

பாசிக் விக்ரமின் அறையில் ஒவ்வொரு பக்கமாகத் தேடி, துளாவி, ஒவ்வொரு பகுதியையும் கூர்மையாக ஆராய்ந்து, தன் கையில் இருக்கும் கம்பால் அடித்துச் சப்தம் எழுப்பி, எனத் தன் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து பார்த்து வெளியில் வரவும் விக்ரம் அவரைச் சற்று புன்னகையோடு எதிர்கொண்டான்.

எப்போதும் போல உங்கள் வேலையைச் செய்தாயிற்று அப்படித்தானே தாது?

பாவம் அந்தப் பாம்பு தினம் தினமும் என்னுடைய அறைக்கு வந்து கொண்டிருப்பதா அதன் வேலை?
அதனைத் தினமும் தேடுகிறீர்களே? உங்கள் கண்ணில் பட்டதால் அன்று அது வீணாக உயிரை விட்டு விட்டது எனச் சிறிது இலகுவாகப் பேசவும்… பாசிக் அவனது அரிதிலும் அரிதான அந்த இலகுத் தன்மையை ரசித்தவாறு பதில் எதுவும் கொடுக்காமல் புன்னகைத்து கடந்து சென்றுவிட்டார்.

மனதை அரிக்கும் அத்தனை சங்கடங்களோடும் விக்ரம் படுக்கையில் தலை சாய்ந்தான்.

தினந்தோறும் தான் எதிர்கொள்ளுகின்றவை தானே இவை எல்லாம்? என்ற எண்ணம் வர மனக் கசப்போடு விட்டத்தை வெறித்தான்.

எந்த நேரத்தில் பிறந்தோமோ? என்கின்ற சலிப்பு ஒரு சிலருக்கு வருமல்லவா அந்த மனநிலையில் விக்ரம் இப்போது இருந்தான்.

பிறந்த போது தாயை பறிகொடுத்தது கூட அவ்வளவு பெரிய இழப்பாகத் தோன்றவில்லை. சில வருடங்கள் முன்பு தன் அருமை அப்பாவோடு சிரித்துச் சிரித்துப் பயணித்த அந்தப் பயணத்தில் விபத்தில் மாட்டி தகப்பனை பறிகொடுத்ததில் இருந்தே அப்படிதான் உணர்ந்து வருகின்றான்.

எதற்காக இந்தப் பிறவி?

என்ற கேள்வி அடிக்கடி எழுகின்றது. ஆனால் என்ன செய்வது?

பிரச்சனைகளை எதிர்கொள்வதா? அல்லது அவற்றினின்று தப்பித்து
ஓடுவதா?

கேள்விகள் மட்டும் விஞ்சிய, சலிப்புற்ற மனம் ஏதேதோ சிந்தித்தது.

தன்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்களும் கூடத் தொடர்பற்று போய்விட, நாளாவட்டத்தில் யாரிடமும் எதையும் அவனால் மனம் விட்டு பகிரவும் முடியவில்லை.

தொடர்ந்து இவனுக்கு எதிரானவைகளே பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பிக்க, பெண்களும் இவனைக் குறித்து அடிக்கடி
செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்த்து இகழ்ச்சியான முறுவலுடனே இவனைப் பார்க்க, இவன் மனதில் எதிர்பாலினர் மீது அளவிற்கு அதிகமான வெறுப்பு சூழ்ந்து விட்டிருந்தது.

பெண்கள் அவனை ஏளனமான பார்வையோடு எதிர்கொள்வதும், அவன் பின்னால் அநாகரீகமான வார்த்தைகளை வெளிப்படுத்துவதையும் உக்கிரமான வார்த்தைகளால் திட்டுவதையும் பார்த்து, பார்த்து அவன் மிகவும் மனம் சோர்ந்தவனாக இருந்தான்.

உலகத்தின் முன்பாக தான் நிர்வாணப்படுத்தப் பட்டது போல, அவமானகரமாய் உணர்ந்தான்.

இன்றைய பார்ட்டியில் நிகழ்ந்தது எத்தனையாவது நிகழ்வு? என்று அவனுக்கே ஞாபகமில்லை. தான் அந்தப் பெண் யாரென்றே அறியாதிருக்க அவளோ அவன் அருகே வந்து,

” டேய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் இவ்வாறு ஆள் விட்டு கேட்பாய்?” என்று தன் செருப்பை கழட்டித் தூக்கி அடிக்க விழைந்தாள்.

அதேநேரம் அவன் நின்ற இடத்தில் ஒளி வெளிச்சம் பாய்ச்சப் பட்டதைக் குறித்துக் கொண்டவனின் மனம் பதறியது.

பத்திரிக்கை அளவில் அவருடைய பெயர் மறுபடியும் வந்துவிடுமோ? மறுபடியுமா?

ஆம், இது அவனுக்கு முதல் முறை அல்ல.

“முதன்முதலில் நடிகை ஒருவர் விக்ரம் அவள் இடையில் பலவந்தமாகக் கையிட்டு அணைத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக பேட்டி அளித்து இருந்தது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதிலிருந்து அவனைக் குறித்து அடிக்கடி செய்திகள் வர ஆரம்பித்தன. அதற்கேற்ற வண்ணம் எந்தப் பெண்ணுடனாவது விக்ரம் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படம் தவறாமல் நாளிதழில் வெளிப்படும்.

அவனுக்கென்ன கோடீஸ்வரனப்பா? எத்தனை பெண்களோடு சர்ச்சை வந்தால் தான் என்ன? அவன் குடும்பத்தினர் மென்மேலும் பிரச்சனை ஆகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

நல்ல குடும்பத்தில் இப்படி ஒரு கேடுகெட்ட பையன் ம்ஹீம்…எனப் புலம்பிக் கொள்வர்.

இரவு கடந்து காலை விடிந்தது. விக்ரம் தன் ஒரே வரப்பிரசாதமான நித்திரா தேவியின் மடியில் துயில் கொண்டு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருக்க…

அதே நகரத்தின் மற்றோர் வீட்டில்…

“ஷப்பா இவன் ஆரம்பிச்சிட்டானா? மூஞ்ச பாரு மூஞ்ச குரங்கு மாதிரி ஒரு பொம்பளைய விடுறதில்ல?”

சந்தியா தன் அக்காவிடம் சப்தமாக செய்தி வாசித்து காண்பித்தாள்.

“ஐந்து நட்சத்திர ஹோட்டல் பாரடைஸின் முதலாளி ‘விக்ரமாதித்யன்’ பார்ட்டி ஒன்றில் பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி. அந்த வீரமான பெண்ணோ அவரின் பணபலத்திற்கு அஞ்சாமல் அவரை எதிர்த்து அவரை அடிக்கவும் தயங்காமல் செருப்பை கழட்டி அடிக்க ஓங்கினார். தன் தம்பிக்காக பாரடைஸ் குழுமத்தின் ஏனைய சொத்துகளை நிர்வகித்து வருகின்றவர்களும் பெண்பித்தன் விக்ரமாதித்யனின் மூத்த நான்கு அண்ணன்களும் மன்னிப்பை கேட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்தனர்.

வாசித்து முடித்ததும்…

அந்த பொண்ணு கழட்டும் செருப்பு வரைக்கும் க்ளீனா போட்டோவில் தெரியுது. நல்ல ஃபோட்டோகிராஃபி இல்ல?

கேட்டவளிடமிருந்து நாளிதழை வாங்கிப் பார்வையிட்டவளோ…

இல்லையே…என்றாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here