3. வெளிச்சப் பூவே

0
535
Velicha Poovae

அத்தியாயம் 3.

சந்தியா தன் அக்காவிடம் சப்தமாக முன் தினம் விக்ரம் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட செய்தி வாசித்து காண்பித்தாள்.

வாசித்து முடித்ததும்…

அந்த பொண்ணு கழட்டும் செருப்பு வரைக்கும் க்ளீனா போட்டோவில் தெரியுது. நல்ல ஃபோட்டோகிராஃபி இல்ல?

சந்தியாவிடம் அந்த நாளிதழை வாங்கிப் பார்த்த பிரவீணா…

இல்லையே…என்றவாறு டீப்பாயில் அந்தப் பத்திரிக்கையை விட்டெறிந்தாள்.

ஏன் கா இப்படிச் சொல்ற? எத்தனை க்ளியரா இருக்கு பார்த்தியா?

உன் ப்ரெண்ட் எடுத்த ஃபோட்டோன்னா நீ அப்படித்தான் சொல்லுவ? எங்கே அந்தத் தண்டப் பய கிட்ட அங்கே அந்த நேரத்தில எப்படிக் கரெக்டா போய் நின்னான்னு எனக்குக் கேட்டுச் சொல்லுறியா?

அக்கா… கோபத்தில் தரையில் தன் கால்களை உதைத்தவாறு தன் அறைக்குள் சென்று விட்டாள் சந்தியா.

தன் பள்ளித் தோழனை தன் உயிருக்கு உயிரான அக்கா புகழாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. தண்டப் பய என்று எப்படிச் சொல்லலாம்? அவளுக்குக் கோபம் சிலிர்த்துக் கொண்டு வந்தது.

கல்லூரி விடுப்பில் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் சித்திப் பெண் சந்தியாவைச் சீண்டி விட்டவளது முகத்தை இப்போது புன்னகை ஆக்கிரமித்து இருந்தது.

‘டேய் ப்ரேம்’, ஒலித்த தன் அலைபேசியைச் சாந்தப் படுத்தி எதிர்முனையில் இருப்பவனிடம் பேச ஆரம்பித்தாள்.

எதிர் முனையில் கேட்ட ஏதோ பேச்சிற்கு…

‘ஆமாம்டா அதே வீரப் பெண்மணி பற்றித் தான்…ஹா ஹா ஹா’

சிரித்தவள் வெகு வசீகரமாக இருந்தாள். இண்டஸ்ட்ரியலிஸ்ட் பிரபாகரின் இரண்டாவது மகள் பிரவீணா…ஜர்னலிஸம் எடுத்துப் படித்துத் தற்போது பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருப்பவள். தமக்கை ரவீணா தொழிலதிபர் ஈஸ்வர் குடும்ப மூத்த மகனான சைத்யனுடன் திருமணம் முடிந்து சிறப்பான இல்லத்தரசியாகவும், 5 வயது மகனின் கண்டிப்பான தாயாகவும், பிரபாகரனின் தொழில் முறை வாரிசாகவும் திகழ்ந்து வருகிறாள்.

பிரவீணா சில வருடங்கள
தனக்கு விருப்பமான துறையில் பணியாற்றி விட்டு அப்பாவின் சாம்ராஜ்யத்தில் இணைந்து கொள்வதாகக் காலத் தவணை கேட்டுள்ளதால் இதுவரையில் அவளது சாகச வாழ்க்கையில் எந்தத் தடங்கலும் ஏற்பட்டதில்லை. குடும்ப வழக்கத்தின் படி அவளுக்குத் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

திருமணம் அவ்வீட்டு பெண்களின் தற்சார்பு வாழ்விற்கும், சுய சாதனைகளுக்கும் ஒரு போதும் தடையாக இராததால் அதற்கு மறுப்பு சொல்ல அங்கே ஒன்றுமில்லை. ஏன் ரவீணா பிரவீணாவின் தாயாரான தீபாவும் கூட இன்றளவும் தனது தகப்பன் வழி தொழிற்சாலைகளில் சில பொறுப்புகளை வகித்து வருவதோடு கூடக் கணவருக்கும் தோள் கொடுத்தே வருகின்றார்.

சரி அப்படித் தனக்கு மணாளனாக யாரைதான் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறார்கள் என்றுதான் பார்ப்போமே மலர்ந்து சிரித்துக் கொண்டாள் அவள்.

ஆம் அவளுக்கு எதிர்கால அச்சங்கள் கிடையாது. அதீத தன்னம்பிக்கை கொண்டவள். என் வாழ்க்கையின் அதிகாரி நானே எனும் இறுமாப்பு கொண்டவள். தன்னுடைய அத்தனை செயல்களுக்கும் நெஞ்சு நிமிர்த்தி விளைவுகளேற்க விளைபவள்.

ப்ரேமிடம் பேசி வைத்த பின்னர்ச் சற்று நேரம் தன் லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தவள் தோற்றம் கோடீஸ்வரியை போன்று டாம்பீகமாக இருக்கவில்லை.

பொதுவாக ஒரு விஷயம் சொல்வார்கள். தலைமுறை தலைமுறையாக வசதி படைத்தவர்கள் தங்கம், வைரம் என்று அள்ளி அள்ளி அணிந்துக் கொள்வதில்லை.

அவர்கள் தோற்றத்தில், நடை உடை பாவனைகளில், சரும மினுமினுப்பில் அந்தப் பணக்கார களை மினு மினுங்குமே தவிர ஆர்ப்பாட்டமாக அவர்கள் தங்களை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

பிரபாகர் பெரும்பாலும் வெள்ளைச் சட்டை அடர் நிற பேண்டில் தான் காணப்படுவார். க்ளையண்ட் மீட்டிங் இருந்தால் அதனோடு கூடத் தகுந்த கோட்டும் சேர்ந்து விடும்.

தீபாவோ பார்க்க சாதாரணமாகத் தோற்றமளிக்கும் விலை உயர்ந்த காட்டன் சேலைகளில் கம்பீரமாகப் பரிமளிப்பார்.

ரவீணா பெரும்பாலும் காட்டன் சல்வாரில் தான் இருப்பாள்.

பிரவீனாவோ வேலைக்கு ஏற்ப ஜீன்ஸீம் , எளிமையான டாப்புமாகப் பெரும்பாலும் காணப் படுவாள்.

திருத்திய புருவம், உதட்டிற்கு லிப்க்ளாஸ் தவிர அவளுக்கென்று எந்த அதீத அலங்கரிப்பும் தேவைப்பட்டதில்லை. உதட்டிற்கு மேலான அந்தக் குட்டி மச்சம் முதல்முறை பார்ப்பவர்களைச் சித்தம் தடுமாறச் செய்யும் வகையிலானது.

ரவீணா வந்து விட்டாள் போலிருக்கிறதே என்று அவளது கார் பார்க்கிங் செய்த சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள் சற்று நேரத்தில் ஏதோ உடையும் சப்தமும் அதைத் தொடர்ந்து இரமணனின் அழுகைக் குரலும் கேட்க ,’ இவளுக்குப் பிள்ளையை அடிப்பதை தவிர வேறு வேலையில்லை எனச் சலித்துக் கொண்டவள் இரமணனின் அழைப்பிற்காக லேப்டாப்பை நகர்த்திக் காத்திருந்தாள்.

சித்தீ…அலறியவன் அவளது அணைப்பில் அடங்கித் தேம்பினான்.

‘நான் வாஸை உடைக்கல சித்தி…அம்மா நம்ப மாட்டுறாங்க’

அவன் பின்னாலேயே உக்கிரமாய் வந்து நின்றாள் ரவீணா.

வீட்டுக்குள்ள வந்து இரண்டு நிமிசமாகல்ல அதுக்குள்ள அந்தக் காஸ்ட்லி ‘பிராசிலியன் வாஸை’ நொறுக்கி வச்சிருக்கிறான். அவள் பற்கள் நெறிப்பட்டன.

‘பிராசிலியன் வாஸ் காஸ்ட்லியா? உன் புள்ள காஸ்ட்லியா?’

தங்கை கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்ற ரவீணா கோபத்தில் தன் அறைக்குள் சென்று விட,

ப்ராமிஸா சித்தி…நான் அதை உடைக்கவே இல்ல…’ அவன் கண்களில் சித்தி தான் கூறியதை நம்ப வேண்டுமே என்கின்ற பரிதவிப்பும், ஐயோ நான் செய்யாத குற்றத்தை என் மேல் சாட்டி விட்டார்களே? எனும் மனக் குன்றலும் , அதிர்ச்சியும் எனப் பல்வேறு உணர்வுகளும் தொக்கி இருக்க…

நான் உன்னை நம்புறேன்மா…நீ அதை உடைக்கலை…சரியா?..தன் மாரோடு இழுத்து அணைத்து வருட துவங்கினாள்.

எதிரில் டீப்பாயில் கிடந்த நாளிதழின் புகைப்படத்தில் சற்றுமுன் இரமணனின் முகத்தில் கண்ட அதே அதிர்ச்சியும், பரிதவிப்பும், மனக் குன்றலும் விக்ரமாதித்யனின் முகத்தில் தென்படத் தன்னையறியாமல் பிரவீணாவின் கரம் அவன் புகைப்படம் நோக்கி நீண்டது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here