4. வெளிச்சப் பூவே

0
493
Velicha Poovae

தன் கைகளுக்குள் பஞ்சு மூட்டையாய் பொதிந்து இருந்த இரமணனை குனிந்து முத்தமிட்டாள் பிரவீணா.

நான் உன்னை நம்புறேன் மா என்று அவள் கூறிய ஒரு வார்த்தையில் சகஜமானவன் இப்போது கண்ணீர் மறந்து தன் சித்தியிடம் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அவனது பள்ளிச் சீருடை சட்டையை உயர்த்தி வயிற்றில் ஊதினாள் பிரவீணா. கெக்கலிட்டு சிரித்தவன்…சித்தி …என மறுபடி வயிற்றைக் காட்ட மறுபடி ஊதி ‘ப்ர்ர் ர்ர்ர்ர்’ எனச் சப்தமெழுப்ப சிரிப்புத் தொடர்ந்தது.

சுத்தம் செய்து வந்த ரவீணா சில நொடிகள் தங்கையையும் மகனையும் இரசித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘வாம்மா குட்டி, துணி மாற்றி விட்டுச் சாப்பிடலாம்’ மகனை அழைக்க அவன் அம்மா திட்டியதை எண்ணி முகம் திருப்பினான். மறுபடி கோபத்துடன் சித்தியிடம் தஞ்சம் புகுந்தான்.

ரவீனாவின் முகம் வாடியது. பிரவீணா அவனிடம்…

‘அப்ப நீ அம்மா கிட்ட போகலை…’

‘போகலை’ தலையை மறுத்து ஆட்டினான்.

‘உனக்குப் பசிக்கலை, மம்மு சாப்பிடலை…’

மறுபடியும் இல்லையெனத் தலையாட்டினான்.

அப்ப சரி நான் போறேன்பா…‘அக்கா என்னைத் தூக்கு’…இரு கைகளையும் விரித்தவளை தாயும் மகனும் முறைத்தனர்.

‘என்ன முறைப்பு? பொறந்த அன்னியிலிருந்து எங்கக்கா தான் என்னைத் தூக்கினாளாம்…நீ எல்லாம் இப்ப வந்த பொடிப்பய…’

‘வாக்கா தூக்குக்கா ப்ளீஸ்கா’…எனக் கெஞ்ச…

‘ம்ம்ம்…அது என் மம்மி’ என்று இரமணன் சிணுங்கினான். தன் இடத்தைச் சித்தி கைப்பற்றிக் கொள்வாளோ எனும் அவசரத்தில் தாயிடம் தாவினான்.

சிரித்தவாறே மகனை தூக்கிக் கொண்டு சென்று சுத்த படுத்தி உடை மாற்றி வெளியே வரவும் தலை முடி திருத்தி, ஜீன்ஸிற்கு மற்றோர் டாப்பை மாற்றி முகம் கழுவி நின்று இருந்தாள் தங்கையவள்.

இனிதான் போகணுமா பிரணிமா?

ஆமா அக்கா ஒரு இண்டர்வியூ இருக்கு.

ஸ்னாக்ஸ் சொல்லிட்டேன்…குட்டிக்கும் சேர்த்து சொல்லியாச்சு…மேல் அறையினின்று பேசிக் கொண்டே இறஙகியவர்கள் உணவு மேஜையில் அமர, உணவு ஒவ்வொன்றாய் வந்து கொண்டு இருந்தது.

சாப்பிட்டுக் கைகழுவி முடித்தனர்.

உடைந்த வாஸ் அங்கே மூன்று துண்டாய்க் கிடந்தது. ரவீணா அதைப் பார்த்துப் பதட்டத்தில் இருந்தாள்.

என்னாச்சு இப்ப?

இது அம்மா ஃபேவரைட் டி …

ஆம் தீபா இப்படிப் பல்வேறு கலெக்‌ஷன்ஸ் தேடி தேடி வாங்குவார், வீட்டை அலங்கரிப்பார். அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு…இது உடைந்ததாகத் தெரிந்தால் அவ்வளவுதான்.

கேர் டேக்கரை அழைத்தாள் ‘சொல்லுங்கம்மா’

‘இந்த மாதிரி வாஸ் இன்னும் நாலு இடத்தில இருக்கில்ல?’

‘ஆமாம்மா…’

நீங்க முதல்ல என்ன செய்றீங்கன்னா…இது போல இருக்கிற வாஸ் எல்லாம் எடுத்து பத்திரமா ஸ்டோர் ரூம்ல வைக்கிறீங்க…

சரிங்கம்மா…

வீட்டு திரை எல்லாம் இப்ப இருக்கிற பச்சை நிறத்தை எடுத்துட்டு, நீல நிற செட்டுக்கு மாத்துறீங்க…

சரிம்மா…

அப்புறமா அம்மா போன தடவை ட்ரிப்ல வாங்கிட்டு வந்த வாஸ் செட் இருக்கில்ல…அந்த மயில் நிறமும் நீல நிறமும் கலந்து வருமே…அதை பொருத்தமா அலங்கரிச்சு வைக்கிறீங்க…

ரொம்ப யோசிக்காதீங்க ண்ணா… அம்மா கேட்டா நான் சொன்னதா சொல்லுங்க… ஒன்னும் சொல்ல மாட்டாங்க…

தலையசைத்தார்.

அம்மா வர இராத்திரி பதினோரு மணியாகும் அதுக்குள்ள இத்தனை வேலையும் முடிஞ்சிரும்ல?

இத்தனை மணி நேரம் இருக்கிறதா? பரவாயில்லையே… ஹப்பாடா… எனும் ஆசுவாச உணர்வு அவர் முகத்தில் தெரிந்தது.

உடைந்த ஒரு வாஸிற்காகத் தங்கை வீட்டை தலைகீழாக மாற்றுவதை வாயில் கை வைத்து பார்த்திருந்தாள் ரவீணா. “இவளை கணிக்கவே முடியாது” என்று முன்பு எத்தனையோ முறை சிந்தித்தது போன்று மறுபடியும் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

‘இப்ப இதை என்ன செய்யறதுடி முதல்ல அதைச் சொல்லு’…உடைந்த வாஸை காண்பித்தாள்.

‘இது எத்தனை டாலர் தெரியுமா?’

‘அதுக்கென்னவாம்…பொருள்னா உடையதான் செய்யும்’.

‘நான் உடைக்கல சித்தி’…மறுபடி ஆரம்பித்தான் இரமணன்.

‘நான் கண்ணால பார்த்தேன்…அப்படியும் அவன் சொல்லுறதையே சொல்லுறான்’ முணுமுணுத்தாள் ரவீணா.

அக்காவை கண்டு கொள்ளாமல்

‘அப்புறம் எப்படி உடைஞ்சது குட்டிப் பயலே…’

‘நான்… நான்… பூ எட்க்க போனேனா…எனக்கு அது எட்டலியா இப்பி எட்டி எடுத்தேனா அதுவா விழுந்து உடைஞ்சிட்டு’…இரு கைகளையும் விரித்து அபிநயம் பிடித்துக் காட்டியதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

‘என்னடி இரசனை?’ தங்கையை அதட்டினாள்.

‘அவன் எவ்வளவு சரியா சொல்லுறான் பாரேன்…அவன் வாஸை உடைக்கலை…பூ எடுக்கும் போது அது தவறி விழுந்துட்டு…நீ அதுக்குப் போய் அவன் வாஸை உடைச்சதா அவனைத் திட்டுற அது என்ன நியாயம் சொல்லு?’

‘ஆங்…’திகைத்து நின்றாள் அவள்.

‘இங்கே வா இரமணா…’

‘இப்ப இந்த உயரத்தில பூ இருக்குன்னு வச்சுக்கோ அப்ப அதை எப்படி எடுக்கணும்?’…உயரத்தில் ஏறவும் எதையும் விழத்தட்டாமல் பொருளை எடுக்கவும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தாள்.

‘ஃபைவ் டைம்ஸ் செஞ்சாச்சு சித்தி…இனி பூ எடுக்கும் போது வாஸ் விழாதே’ கண்கள் மலர்த்தி, தலையைச் சாய்த்து உற்சாகமாகக் கூறியவனைத் தூக்கி முத்தமிட்டு இரண்டு நடன அசைவுகள் கொடுத்து கொண்டாடி கீழே விட்டாள்.

ஆட்டத்தினால் மூச்சு இரைக்க அமர்ந்தவள்

‘முகிலா கொஞ்சம் இங்கே வாயேன்’…பணியாளரை அழைத்தாள்.

சொல்லுங்க அக்கா…

நீ அந்த க்ராஃப்ட் கோர்ஸ் படிச்சிட்டு இருக்கில்ல…

ஆமாக்கா

அக்காக்கு ஒரு ஹெல்ப்…

சொல்லுங்கக்கா…

இந்த ஜாடியை ஒட்டி தரணும்…அதுவும் இது முன்னாடி உடைஞ்சதுன்னு யாருக்கும் புரியாத அளவுக்குத் துல்லியமா புதுசு போல ஒட்டித் தரணும். முடியுமா? முடியாதா?

டீலா? நோ டீலா?

அருகே வந்து துண்டுகளைப் பரிசோதித்துப் பார்த்தவள்…

முடியும்கா…

இதை மட்டும் செஞ்சு தந்துட்ட உனக்கு ஒரு பெரிய கிப்ட் தருவேன் ஓகே…

அதெல்லாம் ஒன்னும் வேணாம்கா …பத்திரமாய் அவற்றைப் பொறுக்கிக் கொண்டவள் புன்னகைத்து நகர்ந்தாள்.

இன்னிக்கு நம்ம வீட்ல ஏதாச்சும் வாஸ் உடைஞ்சிருந்துச்சு? அது பத்தி யாருக்காச்சும் தெரியுமா? சத்தமாய்க் குரல் கொடுக்க,

‘அப்படி எதுவுமே நடக்கலியேக்கா’

அங்கங்கிருந்து வீட்டின் பணியாளர்கள் அவளுக்குப் பதில் கொடுக்க…

‘அஃது’ இவள் காலரை நிமிர்த்தும் முன்னரே

‘சித்தி அது அந்த வாஸ் நான் பூ எடுக்கப் போனேனா …’

‘டேய் உன்னைய எல்லாம் வச்சிட்டு… மிடிலடா’

அக்காவும் தங்கையும் சப்தமாய்ச் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிரித்து முடித்து …

கையோடு கொண்டு வந்திருந்த தன் லேப்டாப்பை திறந்து சில கோப்புகளைச் சரி பார்த்து வைத்தவள்…தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம்

‘அப்படியே ஆஃபீஸ் போய்ட்டு வரணும்கா’

ம்ம்…

அத்தான் எப்ப வருவாங்க? இன்னும் காணவில்லை.

அவங்க வரலியே …நாளைக்கு டெல்லி மினிஸ்டர் சந்திப்பு இருக்காம். அதான் ஆஃபீஸ்லருந்தே புறப்படுறாங்களாம்.

‘ஓ அதான பார்த்தேன் லவ் பர்ட்ல ஒன்னு வழி தெரியாம இங்கே வந்திடுச்சேன்னு… ம்க்கும் ம்க்கும்’

‘சித்தி…லவ் பர்ட்ஸ்…லவ் பர்ட்ஸ்…’

‘இவன் முன்னால பார்த்து பேசுன்னு சொன்னா கேட்கிறியா நீ’

‘ஹி ஹி…லவ் பர்ட்ஸ் வீடியோவில் பாருடா கண்ணா’

வீட்டின் அந்த மெகாத்திரையில் பறவைகள் வீடியோ போட்டு அவனைத் திசை திருப்பிய போது சந்தியாவும் இரமணனோடு இணைந்துக் கொண்டாள்.

இன்னமும் பிரவீணாவிடம் அவளுக்குக் கோபமாம்…அவளை தவிர்த்து ரவீணாவிடம் மட்டும் பேசிக் கொண்டு இருந்தாள்.

ஏ சந்தி…அப்புறம் உன் ப்ரெண்ட் கிட்ட அந்தப் போட்டோ விபரம் கேட்க மறந்துராதே சரியா?

அக்கா… கோபத்தில் முறைத்தாலும் சொன்னது செய்வாள் எனத் தெரியும் என்பதால் அவளை டீலில் விட்டு விட்டாள் பிரவீணா.

சக ஊழியன் ப்ரேமின் அலைபேசி அழைப்பு வரவும் அக்கா, சந்தியா மற்றும் இரமணனிடம் விடைப் பெற்றுச் சென்றாள்.

Press எனப் போட்டிருந்த அந்தக் கார் அவர்கள் மாளிகையை விட்டு நகர்ந்தது.

நள்ளிரவு வீடு திரும்பும் போது அம்மாவும் அப்பாவும் அவளுக்காகக் காத்திருந்தனர்.

நானே சொல்லணும்னு நினைச்சேன் என் பொண்ணு செஞ்சிட்டா… எவ்வளவு அழகா இருக்கு இப்ப வீட்டை பார்க்கிறதுக்கு…வீட்டோட லுக்கே மாறிப் போச்சு பார்த்தீங்களா?

மகளுக்கு நெட்டி முறித்தார்.

சந்தியா, அக்கா, சின்னவன் எல்லோரும் தூங்க போயாச்சாம்மா…

ஆமாடா நீ சாப்பிட உட்காரு…

சாப்பாடு முடியும் வரை அம்மா அப்பாவோடு பேச அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

‘நாளைக்கு மதியம் வீட்ல இருப்பேதானேம்மா…’ தீபா கேட்டார்.

ஆமாம்மா காலை போய் ரிப்போர்ட் கொடுத்துட்டு வந்திடுவேன்.

‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்பிரதாயமா உன்னை நாளைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்க தங்கம்…’பிரபாகர் கூறிக் கொண்டு இருந்தார்.

எல்லாம் அந்த மெட்ரோசிட்டி மால் ஓனர் ஜனார்த்தனம் மகன் அக்‌ஷய் தான்…

சரிப்பா… இன்முகமாய்ச் சொல்லி எழுந்தாள்.

தன் லேப்டாப் பையைத் தன் அறைக்குக் கொண்டு வரச் சொல்லி பணியாளருக்கு கூறியவள் அலுப்பாய் படியேறினாள்.

மெட்ரோசிடி மால் என்றதும் ஏனோ விக்ரமாதித்யனை முதன் முறை பார்த்த ஞாபகம் வந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here