5. வெளிச்சப் பூவே

0
553
Velicha Poovae

பிரவீணா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வருடங்கள் அவை. கல்லூரி வகுப்புகளுக்குப் பின்னதாக அவளது நட்புக் குழுவோடு அவர்கள் செலவழிக்கும் வழக்கமான இடம் தான் மெட்ரோசிட்டி மால்.

மெட்ரோசிட்டி மாலை அடுத்து இன்னும் சில பெரிய கட்டிடங்களும் இருந்தன. பெரிய பெரிய அலுவலகங்களும் அமைந்திருந்தன. மிகப் பெரும் பணக்காரர்கள் அடிக்கடி வந்து போகும் இடமாக அது திகழ்ந்தது.

மெட்ரோசிட்டி மால் அதனோடு கூட ஒட்டியது போல அமைந்திருந்த சில கட்டிடங்கள் இவை அனைத்திற்குமாகப் பொதுவாக அந்தப் பெரிய கார் பார்க்கிங் தரைத்தளத்தில் அமைந்திருந்தது .பகல் நேரமாதலால் அதிகமான கார்கள் அப்போது அங்குக் காணப் படவில்லை.

KFC ல் கோழியை ஒரு வெட்டு வெட்டிவிட்டுத் தோழிகளுக்கு விடை கொடுத்து தன் காரை நோக்கி உற்சாக எட்டுகள் போட்டு சென்று கொண்டு இருந்த பிரவீணாவிற்கு எங்கோ தூரத்தில் அந்தக் கார் டயர் தேயும் வண்ணம் வேகமாக வரும் சப்தம் சன்னமாய்க் கேட்டது.

யாரது இத்தனை வேகமாய்?..அதுவும் இந்நேரம்?

என்று எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குச் சற்றுத் தூரத்தில் ஹீடி அணிந்து மெலிதான நடனமாடும் நடையோடு ஒருவன் தென்பட்டான்.

பார்க்கிங்கில் உலகத்தை மறந்த இலயிப்போடு இவனுக்கு என்ன வேலையாம்? மறுபடி சத்தம் வந்த திசையைப் பார்க்க வேகமாகக் கடக்க இருக்கும் அவ்வாகனம் அவனது பக்கமாகக் கடந்து செல்லும் போலும் என்றுணர்ந்தவள்…

தூரத்தில் இருந்தே…

‘ஏ மிஸ்டர் ஏ மிஸ்டர்’ எனச் சப்தமெழுப்பிப் பார்த்தாள். அவன்
அசைந்தும் கொடுப்பதாயில்லை

தனது கண் முன்னாலேயே அவன் மீது…கார் வந்து மோதி விட்டால் என்ன செய்வது? பதறியவள் அரக்க பரக்க அவனை நோக்கி ஓடினாள்.

அருகில் சென்றவள் அவன் கையைப் பற்றி இழுக்க ஆண்மகன்
வலுமிக்க உடலையோ அவளால் சட்டென்று அசைக்கவும் இயலவில்லை. இரும்பாய் நகருவேனா என்பது போல் நின்றான்.

காதில் மாட்டியிருந்த ஹெட்செட் அதிலிருந்து வெளிப்பட்ட இசையில் இலயித்து இருந்தவனுக்குச் சட்டென்று யாரோ தன்னை இழுப்பதாகப் புரியவும் ஒன்றும் புரியாமல்

‘யாரது தன்னை இழுப்பது?’ எனக் கோபத்தில் ஏறெடுத்து முறைத்தான். அவனைச் சட்டை செய்யாமல் இன்னுமாய் முழுப்பலம் கொடுத்து அவள் இழுக்க, இப்போது அவன் தடுமாறினான்.

தடுமாறியவன் அவள் மேல் விழப் போக , விழுந்து விடுவோமா என்கின்ற அச்சத்தில் தன் பலத்தில் ஊன்றி நிற்க முயன்றும் முடியாமல்… அவள் புறமே சாய்ந்து அவளையும் இழுத்துக்கொண்டு அந்தப் புறமாக உருண்டு செல்லும் தருணம் அந்த வேகமாய் வந்த வாகனம் சர்ரென்று கடந்து சென்றது.

தன்னை இழுத்தவள் மீது விழுந்து கிடந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அதிர்ந்து அவளை உதறித் தள்ளினான்.

இதென்னடா வம்பாகப் போயிற்று…உதவி செய்யப் போனால் இப்படித்தான் நடந்து கொள்வான் போலும் சட்டென்று கோபம் வராத பிரவீணாவிற்கே கோபத்தில் முகம் சிவந்து போனது.

விழுந்துக் கிடந்தவளை கண்டு கொள்ளாமல் சட்டென்று எழுந்து நின்றவன் அக்கம் பக்கம் மறுபடி பார்த்துக் கொண்டான்.

தூரத்தே விழுந்து கிடந்த தன் மொபைலையும், ப்ளூ டூத்தையும் சேகரித்தவன் கழுத்தில் கிடந்த ஹெட் செட்டை சரி செய்துக் கொண்டான். தன் பின்னால் வந்து நின்றவளை கவனிக்கவில்லை.

‘நான் கொஞ்ச நேரம் முன்னே பிடிச்சு இழுக்காட்டா நீ அந்தக் கார்ல அடிப்பட்டு, இன்னிக்கு செத்து நாளைக்குப் பாலாகிருப்பே மேன், கொஞ்சமாவது கர்டஸி இருக்கா…ஒரு நன்றி கூடச் சொல்லலை, உன்னால விழுந்து கிடந்தவளை தூக்கியும் விடலை. இதுதான் உன் மேனர்ஸா?’

படபடவென்று பொரிந்தவளை கண்டு கொள்ளாமல், திரும்பியும் பாராமல் தனக்கு வந்த அலைபேசி அழைப்பை ஏற்று…

‘இதோ வந்துட்டேன் அப்பா, இரண்டு நிமிசத்தில அங்கே இருப்பேன்.’

அலைபேசியைத் துண்டித்தவன் …

‘பொண்ணுங்க கையால உயிர் காப்பாத்திக்கிறதுக்குப் பதிலா செத்தே போகலாம்’

அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னவன் விறுவிறுவெனக் கடந்து சென்று விட்டான்.

அவன் தான் அவளைப் பார்க்கவில்லையே தவிர அவள் அவனோடு உருளும் போது அவனை நன்கு கவனித்து இருந்தாள்.

சமீப காலமாய்ப் பத்திரிக்கைகளில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் முகமாயிற்றே. இலண்டனிலிருந்து திரும்பிய பாரடைஸ் குழும இளைய வாரிசின் லீலைகள் என்று பெண்கள் சூழ அவன் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்ததே காரணம்.

அப்போது அவன் செயலுக்கும் பத்திரிக்கை செய்திகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு அவளை மிக இலேசாக உறுத்தியது.

ஓ … ஒருவேளை வெளிநாட்டுப் பெண்கள் தான் அவனுக்குப் பிடிக்கும் போல, இந்திய பெண்கள் என்றால் இளக்காரமாக இருக்கும் அதனால்தான் தன்னை அப்படிப் பேசிவிட்டான்… எனத் தனக்குள் அனுமானித்துக் கொண்டாள்.

அதற்குப் பிறகும் அவனைக் குறித்த செய்திகளுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை.

‘பெரிய கிருஷ்ண பரமாத்மா சுத்தி எப்ப பாரு கோபியர்கள் தான்’ என எண்ணி சிரித்துக் கொள்வாள்.

அடுத்த மாதமே கார் ரேஸ் ஒன்றில் அவன் விபத்திற்குள்ளாகி சிகிட்சை பெற்றதும்… சில வாரங்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி திரும்புகையில் எதிர் வந்த லாரி மோதி அந்த விபத்தில் அவன் பலத்த காயங்களோடு கோமாவில் சில மாதங்கள் இருந்ததும், அவனோடு கூடப் பயணித்த தகப்பனை இழந்ததும், மூன்று மாதங்கள் கழித்துக் கோமாவில் இருந்து திரும்பி தந்தை இறந்ததைத் தெரிந்து துடித்ததும், என அவனைக் குறித்த நல்ல கெட்ட செய்திகள் எல்லாம் மக்களுக்கு மனனமாகிப் போனது.

‘அன்னிக்கு நான் காப்பாத்தி இருக்காட்டு நீ செத்து போயிருப்படா டுபுக்கு’ அரைத் தூக்கத்தில் சொல்லியவாறு பிரவீணா கண்ணயர்ந்தாள்.

மறு நாள்

விக்ரமின் வழக்கமானதொரு காலை

அவசரமாய் எழுந்து புறப்பட்டுப் பாசிக் எடுத்து வைத்திருந்த உணவை உண்டு மதியத்திற்கும் உணவாக அவர் கொடுத்ததையே வண்டியில் வைத்தவன் புறப்பட்டுப் போனான்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முதலாளியான அவனுக்கென்று உயர்ரகக் காரில்லை…காருக்கு டிரைவர் இல்லை. வகை வகையாய் அவன் நிர்வகிக்கும் ஹோட்டலில் உணவு வகைகள் இருந்தாலும் பாசிக் தரும் உணவையே உண்டாக வேண்டும்.

ஒரு சில அவன் மேல் திணிக்கப் பட்டவையெனில் மீதி அவனது தந்தை இறக்கும் தருவாயில் அவனுக்குச் சொல்லிச் சென்றவை.

அதிகாலையில் ரிசப்சனில் மேனேஜர் மட்டும் இருக்கத் தன் கம்பீர நடையோடு பாரடைஸ் ஹோட்டலுக்குள் உட்புகுந்தான் அவன்.

விக்ரமாதித்ய அரசன் அரியாசனையில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்குள்ளே வீரமும், ஞானமும் பெருகி நெஞ்சு நிமிர் தைரியமும் பெருகிடுமாமே…

அது போல இந்த விக்ரமாதித்யனுக்கும் தனது அரியாசனமாகிய பாரடைஸ் ஹோட்டலுக்குள் வந்தாலே தானாகவே நடையில் கம்பீரம் சேர்ந்து விடும்.

பெண்பித்தன் என உலகம் அவனை ஆயிரம் பேசினாலும் அவனது ஊழியர்கள் அவன் முன் தலை நிமிர்ந்து பார்க்கவும், இகழ்ச்சியாய் உதட்டை வளைக்கவும் இயலாது. அடுத்த நாளே தங்கள் வேலையை இழக்க அவர்களுக்கென்ன ஆசையா? அவன் முன் பவ்யமாகவே இருந்தாக வேண்டும்.

பின்னும் கூட முதலாளி அவன் பெண்பித்தனாய் இருந்தால் அவர்களுக்கு ஆக வேண்டியது என்ன? தேவையானது மாத சம்பளமும், போனசும், வருடாந்திர சம்பள உயர்வும் அவ்வளவே. ‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்’ நமக்கென்னப்பா? என்பதே அவ்வூழியர்களின் பொதுவான மன நிலை.

வேலையில் சுத்தமும், நேர்த்தியும் அவனால் விட்டுக் கொடுக்கப் பட முடியாதவைகள். எனவே, விக்ரம் வெகு கண்டிப்பாக இருப்பான்.

அவனது அணுகுமுறைகளால் கடந்த வருடங்களில் பாரடைஸ் குழுமத்தின் இலாபக்கணக்கு ஏறி நிற்க, தொழிற்முறையில் முடிசூடா மன்னனாக, அசைக்க முடியா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.

என்ன? எத்தனையாக வல்லமை மிகுந்தவனாக இருந்தும் அவன் தோளில் தொங்கிக் கொண்டு இருக்கும்…அசராமல் பல வருடங்களாக அவன் சுமக்கும் வேதாளத்தை(வேதாளங்களை) மட்டும் எப்போது இறக்கி வைத்து ஓய்வெடுப்பான் என்பது மட்டுமே அவனுக்கே புரியாத புதிராகிப் போனது.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here