6. வெளிச்சப் பூவே

0
530
Velicha Poovae

விக்ரம் தனது அந்த விசாலமான கேபினில் கணிணியில் தன் வேலையில் ஆழ்ந்திருந்தான். என்னதான் தினம் தோறும் ஒவ்வொரு மேலாளரிடமிருந்தும் ரிப்போர்ட் வந்தாலும் கூட முதலில் ரிப்போர்ட்டுகளைச் சரி பார்த்து விட்டு அதன் பின்னர்த் தினமும் சுற்றிலும் எல்லாம் சரிவர நடக்கின்றதா? எனப் பார்க்க செல்வது அவனது வழக்கம்.

அவனது எண்ட்ரி எப்போதும் சர்ப்ரைஸாகவே அமையும் என்பதால் ஹோட்டலில் எல்லா ஊழியரும் எப்போதும் அட்டென்ஷன் மோட் ( attention mode) லேயே இருப்பர்.

ஒரு முறை அந்தப் பெரிய சமையலறைக்குள் படீரென நுழைந்து ஒவ்வொருவருடனும் பேசுவானென்றால், மற்றொரு முறை அவர்கள் ஹோட்டலின் அப்பெரிய நீச்சல் குளத்தை ஒட்டிய ஸ்பாவிற்கு விசிட் அடிப்பான்.

செக் இன் ஃபெசிலிடீஸ் எல்லாம் சரிவர நடக்கின்றனவா என ஒருமுறை கவனிப்பானென்றால் ரிசப்ஷனில் உள்ள உயர்தர இருக்கைகள், டேபிள்கள் அவற்றின் சுத்தம் இவற்றைப் பூதக்கண்ணாடி கொண்டு சோதிப்பது போலச் சோதித்தறிவான்.

பிசினஸ் செண்டராகத் திகழும் கான்ஃபெரென்ஸ் அறைகளின் சுத்தங்கள் , ப்ரோஜெக்டர்கள் அத்தனையும் அடிமட்ட ஊழியன் போலச் சோதித்து அறிவான்.

24 மணி நேர பட்லர் சர்வீஸ், ரூம் சர்வீஸ், இன் ரூம் பார் இவையெல்லாம் சரிவர இயங்குகின்றனவா? என ஒரு முறை சோதித்து அறிவானென்றால், மறுமுறை விருந்தினர்கள் தங்கள் சர்வீஸ் குறித்து எழுதி இருக்கும் ஃபீட்பேக் எனும் கருத்துக்களைக் கண்ணில் விளக்கெண்ணை விட்டு வாசிப்பான்.

டீலக்ஸ் ரூம் அல்லது சாதாரண வகையைச் சார்ந்த சுபீரியர் ரூம்

ப்ரீமியம் அல்லது எக்ஸிக்யூடிவ் ரூம் என அழைக்கப் படுகின்ற அதற்கும் மேம்பட்ட அறைகள்,

இயற்கையைத் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ள அறைகள்,

லவுஞ்ச் அமைப்பும் சேர்ந்து அமைந்துள்ள அறைகள்.

ஜீனியர் ஸ்யூட் கள் (Junior suite)

தி ஸ்யூட் ( the suite)

தி ப்ரெஸினென்ஷியல் ஸ்யூட் ( the presidential suite)

எனும் ஏழு வகையான அறைகளும் அவற்றில் தங்கி இருப்போருக்கான சேவைகளும் சரிவர நடக்கின்றனவா என்று ஒற்றையாளாகக் கவனிப்பது சிரமமாயினும் மிக ஆர்வத்துடனே செய்வான். கல்லூரி படிப்போடு கூட ஹோட்டல் நிர்வாக மேலாண்மை குறித்து அவன் இலண்டனில் படித்து வந்தது வீண்போக வாய்ப்பில்லை.

அவனைப் பொருத்தவரை அந்த ஹோட்டல் அவன் உயிருக்கு நிகரானது. ஆம், இங்கு அவன் ஆர்வத்திற்காக இவ்வாக்கியம் கூறப்பட்டாலும் அவன் “உயிர்” இந்த ஹோட்டலுக்காகவே குறி வைக்கப் பட்டுள்ளதை என்னவோ அவன் அறியான்.

அனைத்து ரிப்போர்ட்டுகளையும் சரி பார்த்தான். முழுமையடையாத சில கோப்புகள் விபரங்கள் குறித்து அவனது காரியதரிசி கோகுலிடம் கேட்கவும், கோகுலும் உடனடியாக அவற்றிற்காக ஏற்பாடு செய்தான்.

ஆம், அவனுக்குக் கீழ் நேரடியாக வேலை செய்கின்றவர்கள் அனைவரும் ஆண்களே.ஹாஸ்பிடாலிடி என்று வந்த பின்னர் அத்துறையில் பெண்கள் இல்லாமல் அவன் பணி நிறைவுறாது என்பதால் அவன் சாராத மற்ற பணிகளில் பெண்கள் இருந்தாலும் கூட, அவர்களை அவன் ஒருபோதும் தானாக நேர்முகத் தேர்வு செய்வதில்லை.தன்னுடைய தேவைக்கேற்ப தெரிவு செய்யச் சொல்லி மனிதவளத்துறையிடம் சொல்வதோடு அவன் வேலை முடிந்துவிடும்.

ஏதேனும் தவறான தேர்வாக அமைந்து விட்டாலோ, பெண் ஊழியர்கள் தவறு செய்து விட்டாலோ அவனிடம் அதற்குக் கடுமையான தண்டனைகள் உண்டு.இவனது கெடுபிடிகள் காரணமாகவே அடிக்கடி பல பெண்கள் பணியிழக்க நேரிட்டதும் உண்டு.

பெண்கள் என்றாலே அவனுக்கு எப்போதும் மனதில் அசூயை உணர்வு தான். உலகத்தில் இல்லாத வழக்கமாகப் பாரடைஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலில் மட்டும் பெண் ஊழியர்களுக்கு அதிகக் கெடுபிடிகளும், ஆண் ஊழியர்களுக்குச் சலுகைகளும் இருந்தன. ஆயினும் பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களும் நிகழாத வண்ணம் நிர்வாகத்தில் anti harassment அமைப்புகள் வைத்திருந்தான்.

அந்த வகையில் விக்ரமாதித்யன் ஒரு புரிதலுக்கு அப்பாற்பட்ட அதிசய பிறவிதான்.

சார்… என்றவாறு தயங்கிய வண்ணம் கோகுல் விக்ரமின் எதிரில் வந்து நின்றான். கருமை நிறம் என்றாலும் நன்கு உயரமும் சிக்ஸ் பேக்குடனும் திகழும் இளைஞன்தான் கோகுல். விக்ரம் பாரடைஸ் ஹோட்டலின் பொறுப்பு ஏற்கும் முன்னதாகவே அவன் தந்தையின் கீழ் இங்குப் பணிபுரிந்து வருகின்றான்.

விக்ரம் தனது விபத்துக் காயங்கள் ஆறி, உடல் தேறி பொறுப்பேற்க வந்ததிலிருந்து கோகுல் அவனது காரியதரிசி ஆக இருக்கின்றான்.

‘சார்…’

கோகுலின் தயக்கமான குரலை கேட்டவாறு என்னதான் இருக்கும் என்று அறிந்து கொள்ள விக்ரம் அவனை நிமிர்ந்து பார்த்தான்.

‘அந்தச் சாவித்திரி மேடம் உங்களைப் பார்க்க காத்துட்டு இருக்கிறாங்க ‘என்றான். அவனது சுருதி இறங்கி இருந்தது.

என்னதான் செக்யூரிட்டி முதலாகத் தடுத்தாலும் அந்தப் பெண்மணி தவறாமல் அவனை வந்து பார்ப்பதும், அந்தப் பெண்மணி வந்து சென்ற பின்னர் விக்ரம் அன்றைய நாளை அமைதியின்றிக் கழிப்பதும் ஏன் என்று கோகுலுக்குத் தெரியாத போதும் அந்தப் பெண்மணியின் வருகை அவனுக்குப் பிடிக்காத ஒன்றாக ஆயிற்று.

“சாவித்திரி” என்ற பெயரை கோகுல் உச்சரித்ததும் விக்ரமின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன.

அந்தப் பெயரை கேட்டதும் முதலில் மனதில்’சத்தியவான் சாவித்திரி’ என்ற வாக்கியம் தோன்ற உடனே அருவருத்து ‘ச்சே ச்சே சற்றும் பொருத்தமில்லையே’ மனதுக்குள் சொல்லிக்கொண்டவனுக்கு உடனே நகைப்பு உண்டாயிற்று.

சாவித்திரி என்னும் அந்தப் பெயருக்கு நடிகையர் திலகம் ‘சாவித்திரி’ எனப் பொருள் கொண்டால் …ஆஹா என்ன ஒரு பொருத்தமான பெயராக இருக்கின்றது. பிரமாதமான தேர்வு என அவருக்குப் பெயர் வைத்தவரை மனதிற்குள்ளாகப் பாராட்டினான்.

‘வரச்சொல்லு’

என்று கூறியவன் குரலில் வழக்கத்திற்கு மாறான துணிவு இருந்தது.

கோகுல் சென்ற சில மணித்துளிகளுக்கு அப்புறமாக அலட்டலாக அவனது கேபினுக்குள் நுழைந்த அந்தச் சாவித்திரி பழைய கால நடிகை போலத் தன்னை வெகுவாக அலங்கரித்து இருந்தாள். அவளது உடலில் முகத்தில் நகையும், மேக்கப்பும் வயதிற்குத் தேவைக்கு அதிகமாக டால் அடித்தது.

விக்ரமின் கேபினுக்கு உள்ளே வந்ததும் வராததுமாக விக்ரமை நோக்கி அவள் ஆணவமாக,

‘என்னவோ பெரிய ஆம்பள பத்தினி போல என்னிடம் வேடம் போட்டாயே? இப்போது என்னவென்றால் ஒரு பொண்ணையும் கூட விடாமல் பின்னாடி நாயைப்போல நாக்கை தொங்க விட்டு அலையுறியே?

பத்திரிக்கை காரன் உன்னைக் கிழி கிழி என்று கிழிப்பதை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றது தெரியுமா?

அடுத்தமுறை வெறுமனே செருப்பைக் காண்பிக்காமல், யாராவது செருப்பால் உன் முகத்தில் அடிக்கின்ற புகைப்படத்தை நான் பார்க்க வேண்டும் அதுதான் என் ஆசை’

என்றாள். அவளது பேச்சும் குரலும் சாட்டை அடி போல இருந்தது.

வழக்கம்போல அதிராமல் சாதாரணமாக இருந்த விக்ரம் அமைதியாக அவளுக்குப் பதில் கொடுத்தான்.

‘தமிழில் பத்தினி எனும் வார்த்தை பெண்களுக்கு மட்டும்தான் உரியது என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆம்பளை பத்தினியா? இது நீ கண்டுபிடித்த புது வார்த்தையா? சிறப்பாக இருக்கின்றது. அருமை, மிகச் சந்தோஷம்.

அதே நேரத்தில் இந்தப் பத்தினி எனும் வார்த்தை உன் வாயில் இருந்து வருவது கேட்டு இன்னும் மிகவும் பெருமையாக இருக்கிறது. மெய் சிலிர்க்கின்றது…

சரி சரி நீ காலையிலேயே என்னைத் தேடி எதற்காக வந்தாய்? அதனைச் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்…போ…

நான் ஆம்பளை பத்தினியாக இல்லாமலே போனாலும் யாருடன் உறவில் இருக்க வேண்டும், யாருடன் உறவில் இருக்கக் கூடாது என்ற விருப்பம் என்னுடையது மட்டுமே… மிக முக்கியமாக …

தகுதி தராதரம் இல்லாத உன்னைப்போன்ற கீழ்த்தரமான பெண்களை…கிழவி என்று சொல்ல வேண்டுமோ? அப்படிப்பட்டவர்களை நான் ஒரு போதும் நாடுவது இல்லை. இனியும் நாடுவதாக இல்லை…

வயது கூடக் கூட அறிவு வரும் என்பார்கள்…கிழவியானாலும் உந்தன் வெட்கம் கெட்ட பேச்சிற்குக் குறைவில்லாமல் போயிற்று.’

அசிங்கமாய்ப் பேச கூசும் விக்ரமாதித்யனுக்கு இன்று என்னவாயிற்று?

தான் குட்டக்குட்ட குனிகின்ற விக்ரம் இன்று எதிர் பேச்சுப் பேசியதில் அதிர்ந்து நின்றவள் கோபத்தில் பொழியலானாள்

‘யாரடா கிழவி? என முதலில் உறுமியவள்…என்னுடைய ஹோட்டலிம் 20 சதவிகித பங்குகளை உடனே திருப்பித் தா’ என்று கோபத்தில் வீறிட்டாள். அவளது கணவன் நடத்தும் ஹோட்டலில் பங்குகள் சமீபத்தில் விக்ரம் அவற்றை வாங்கி இருந்தான்.

‘நான் ஒன்றும் இலவசமாக உந்தன் ஹோட்டலின் பங்குகளை வாங்கவில்லை கோடிக்கணக்கான ரூபாய்களை உனக்குத் தந்து தான் வாங்கி இருக்கின்றேன் இதில் உனக்கு எதற்காக நான் திருப்பித் தரவேண்டும் என்று ஏதேனும் ஒரு காரணத்தை எனக்குச் சொல் நான் அதுகுறித்து யோசிக்கிறேன்’ என்றான் விக்ரம்.

…கோபத்தில் உறுமிய வண்ணம் எதிரில் நின்றிருந்தாள் அவள்.

‘நேற்றுதான் பங்குகளை வாங்கியது நானென்று உனக்குத் தெரிய வந்திருக்குமே’ இகழ்ச்சியாகச் சிரித்தான்.

அடிப்பட்ட வேங்கையாக நின்றாள் சாவித்திரி. ‘நீ வேறு ஒருவர் மூலம் என் பங்குகளை வாங்கி உனதாக்கி இருக்கிறாய். உன்னை விட மாட்டேன்’…சொடக்கிட்டு எச்சரித்தாள்.

‘சும்மா இருந்தவனைச் சீண்டியவள் நீ, விளைவுகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்’

என்றவன் தன் கைகடிகாரத்தைப் பார்த்தான்…மொத்தம் 54 நொடிகளே இருக்கின்றது…

அறையை விட்டு நீ செல்கின்றாயா? அல்லது…’

வந்த வேகத்தில் விருட்டெனச் சென்று விட்டாள் சாவித்திரி.

தன்னைச் சமன்படுத்த கண்ணாடி சாளரத்தின் அருகே சென்று நின்றான் விக்ரம்.

தன்னை அசிங்கப்படுத்திய, படுத்திக் கொண்டிருக்கின்ற, பெண்ணினம் என்றாலே வெறுப்பை ஏற்படுத்திய முதல் பெண்ணை மறுபடி சந்தித்ததில் அவனது இரத்த அழுத்தம் மிகுந்திருந்தது.

கண்ணாடி சாளரத்தின் அப்புறம் யாரது? கோகுலா? கூட இருக்கும் அந்தப் பெண் …கவனம் அங்கே சிதறவும் தன் அலைபேசியில் கோகுலுக்கு அழைத்தான்.

சார் இதோ வரேன் …ஒரு மீட்டிங்கில் இருந்தேன்…கோகுல் அலைபேசியைத் துண்டிக்க,

ம்ம்… என்றவனுக்கு அவனது மீட்டிங் குறித்துக் கோபம் எழுந்தது.

‘பெண்கள் மோசக்காரர்கள் ஆயிற்றே… என்ன படித்து இருந்து என்ன லாபம் ? இந்தக் கோகுலுக்கு அறிவில்லையா? போயும் போயும் ஒரு பெண்ணுடன் பழகிக் கொண்டு இருக்கின்றானே?’ என அருவறுத்தான்.

பாவம் அவனுக்கு அந்தப் பெண் கோகுலின் மனைவி என்பதுவும், விக்ரமின் கோட்பாடுகளால் கோகுல் தனக்குத் திருமணம் ஆனதை இன்னும் தெரியப்படுத்தாமல் தவிர்த்து கொண்டிருப்பதுவும் தெரிய வாய்ப்பில்லை.

அலைபேசியைத் துண்டித்த கோகுலிடம் அவன் மனைவி ராதா சினமுற்றாள்.

‘கொஞ்ச நேரம் நாம பேசினால் பொறுக்காதே உடனே போன் பண்ணிட்டான் அந்த முசுடு பாஸ், பேசாம நீ அவனையே கல்யாணம் செய்து இருக்கலாம். நானாவது தப்பிச்சு இருப்பேன் ’ முகத்தைத் திருப்பினாள்

‘அடி ,ஏன் கோபப்படுற கொஞ்ச நாளைக்குத் தானே ப்ளீஸ் பொறுத்துக்கோடி’ கெஞ்சினான்.

‘உனக்காகப் பொறுத்து பொறுத்து எத்தனை நாள் ஆச்சு? இன்னும் ஆபீஸ்ல இன்னும் கல்யாண விஷயம் சொல்லாம இருக்கிறது. உன் கூடப் போக,வர இருக்கிறது, தங்கி இருக்கிறது, இதையெல்லாம் யாராவது பார்த்து என்னைத் தவறா பேசினால் நான் உயிரையே விட்டு விட வேண்டியதுதான்’ கலங்கினாள்.

‘அட லூசு யாராவது கேட்டால் உண்மையைச் சொல்லிட வேண்டியது தானே? என்னதான் நாம ஆஃபீஸ்ல சொல்லவில்லை என்றாலும், நமது திருமணம் நம் சொந்தங்கள் கூடி நடந்த திருமணம் தானே? நாம் திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையே?’ சமாதானப்படுத்தினான்.

‘பெரிய பாஸ் தான் இறப்பதற்கு முன்பாகக் கொடுத்த சில வேலைகளை முடிக்கும்வரையிலும் விக்ரம் சார் என்னை இதே பதவியில் தொடர்ந்து வைத்து இருக்க வேண்டியது அவசியம்.விக்ரம் சாருக்குப் பெண்கள் என்றாலே பிடிக்காது.

என்றவனை இடை மறித்தாள் அவள்.

‘அவருக்கு பெண்கள் பிடிக்காதுன்னு நீ மட்டும் தான் சொல்லுற, அடிக்கடி வரும் செய்திகள் பார்த்தால்…

இழுத்தவளின் வாயில் விரல் வைத்து மூடினான்.

இதைப்பற்றி நான் இப்போது சொல்ல முடியாது. நான் சொல்வதில் கவனம் செலுத்து…கடந்த மூணு வருஷமா முயன்று ஏறத்தாழ முடிவை நெருங்கிட்டு இருக்கக் கூடிய தருணம் இது. உன் வீட்டிலே நெருக்கடி கொடுக்கவும் ஆறு மாசம் முன்னாடி நாம திருமணம் செய்து கொண்டோம்.’

பெரிய பாஸ் சொன்ன வேலை முக்கியம் தான்.அதே நேரம் என் பொண்டாட்டி மானம் எனக்கு ரொம்பவே முக்கியம்.என்னிக்காவது நாம் சொல்லாமலே, உண்மை தெரிய வந்தா வந்துவிட்டு போகட்டும். நான் சமாளித்துக் கொள்வேன்.

கணவனின் வார்த்தையில் சமாதானம் ஆனவள்…

‘… அதுதான் ரகசியம் என்று சொன்னீர்கள் இல்லையா? நான் உங்க ரகசியத்தை வெளியே சொல்லி விட்டால் என்ன செய்வீங்க?’

‘இரகசியம் என்று சொன்னேன்…எந்த இரகசியம் என்று சொன்னேனா?’

கண்ணடித்து விட்டு மனைவியிடம் கையசைத்து விடைப் பெற்ற கோகுலை செல்லக் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருந்தாள் ராதா.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here