7. வெளிச்சப் பூவே

0
547
Velicha Poovae

ஆஃப் வைட் நிற ஜார்ஜெட் சல்வார், அதில் அதன் துப்பட்டாவில் எனப் படர்ந்திருந்த பிங்க் நிறப்பூக்கள், அதனூடாக இழையோடிய தங்க நிற சரிகை என உடை அணிந்திருந்த பிரவீணா தன் வழக்கமான முக அலங்காரத்தில் அழகில் அசத்தினாள்.

‘சித்தி’ என அடிக்கடி இரமணன் வந்து அவளைப் பார்ப்பதும் ஓடிச் செல்வதுமாக இருந்தான். வழக்கத்திற்கு மாறாக வீட்டில் சித்தி நல்ல உடை அணிந்து இருப்பதுவும் பகல் நேரம் தாத்தா, பாட்டி இருப்பதுவும் அவனுக்கு அதிசயமாய் இருந்திருக்கக் கூடும்.

தன்னைப் பெண்பார்க்க வருகின்றார்கள் என்பதற்காகப் புறப்பட்டு இருந்தவள் தனது மடிக் கணிணியில் வேலையில் ஆழ்ந்திருந்தாள். அவளைப் பொருத்தவரை எதற்கும் சட்டென்று உண்ர்ச்சிவசப் படுவதுமில்லை, ஏராளமாக எதிர்பார்ப்புகள் வைப்பதுமில்லை.

இன்றைக்கு வருகின்றவர்களைப் பொதுவாகப் பல பார்ட்டிகளில் கண்டு இருக்கின்றாள் தான். அக்ஷய் சில வருடங்களாக இந்தியாவில் இல்லை. அவனது யூ எஸ் சார்ந்த சில பிசினஸீகளைக் கவனித்துக் கொள்வதாக அறிந்து இருந்தாள்.

எதிரில் காணும் போது ‘ஹாய்’, ‘ஹாய்’ எனச் சொல்லி புன்முறுவலோடு கடந்து செல்லும் எனும் சாதாரண நட்பான பேச்சுக்கள் மட்டும் அவர்களுள் உண்டு.

‘இதோ வந்தாச்சு’ ரவீணா பதறிய சப்தம் கேட்டதும் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

இந்த அக்காவுக்கு இதே வேலைதான், என நினைத்தவள் காலையில் ரவீணா தன் கணவன் சைத்யனின் அலைபேசி அழைப்பை தனக்கு வந்து கொடுத்ததை நினைவு கூர்ந்தாள்.

‘நல்லாயிருக்கீங்களா அத்தான்? போன வேலை சக்ஸஸா?’

‘இல்ல ரவுடி பேபி இனிதான் மீட்டிங்க்…’

‘மங்களம் உண்டாகட்டும்’

‘யாரந்த மங்களம்? அவ உண்டாகட்டும்னு என் கிட்ட ஏன் சொல்லுற? உங்கக்கா என்னை ரவுண்ட் கட்டுறதுக்கா?’

‘அடப் போங்க அத்தான், ஒரு ஆசீர்வாதம் கொடுத்தா வாங்குறீங்களா நீங்க?

‘சரி விளையாட்ட விடு, இன்னிக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க இல்ல, நான் இன்னிக்கு ஊர்ல இல்லைன்னு உங்க அக்காக்கு ரொம்ப வருத்தம், எனக்குமே இது எதிர்பாராத ட்ரிப் தான். தப்பா நினைச்சுக்காத…’

‘இல்ல அத்தான் அதெல்லாம் தப்பா நினைக்கலை, நீங்க இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க, அவ கொஞ்சம் அம்மா மாதிரி. சட்டு சட்டுன்னு எமோஷனல் ஆவா உங்களைப் படுத்தி எடுத்திருப்பாளே?’ சிரித்தாள்.

‘ம்ம்…’ புன்னகைத்தவன்… ‘அக்ஷய் ரொம்ப நல்ல மாதிரி பிரவீணா, நான் பார்த்த வரையில் இன்னும் ஒரு வார்த்தை அந்தப் பையனை பற்றித் தப்பா யாருமே பேசியதில்லை. உனக்குப் பிடிச்சிருந்தா எதையும் யோசிக்காம ஓகே சொல்லு’

‘சரி அத்தான்’

என்றதோடு அவர்கள் உரையாடல் நிறைவுற்று இருந்தது.

கீழே முன்னறையில் இருந்து அம்மா இண்டர்காமில் அழைக்க வெண்ணிற தேவதையாய் மென் நடையில் முன்னறையைப் பிரவீணா அடைந்தாள்.

ஜனார்த்தனன் அவர் மனைவி மஹாலட்சுமி, அக்ஷய் மற்றும் அவனது அக்கா குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர்.

இவளைத் தவிர்த்து சந்தியா, ரவீணா இரமணன், பிரபாகர் தீபா எல்லோரும் ஹாலில் குழுமி இருந்தனர்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துப் பிரவீணா அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இரமணன் அடிக்கடி வந்து பிரவீணாவின் மடியில் வந்து அமர்ந்துக் கொண்டு இருந்தான்.

அவனை மடியில் இருத்திக் கொண்டு தலையை வருடியவாறு அவள் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்க ,அக்ஷயின் தமக்கை மகள் இரமணனிடம் வந்து பேச முயல்வதும் விலகுவதுமாக இருந்தாள். ஓரிரு வயதே பெரியவளான அவளையும் தன்னருகில் இருத்திக் கொண்டாள் பிரவீணா.

பேச்சினூடே சில ஸ்னாக்ஸ் வகைகளும் வர சாப்பிட ஆரம்பித்தனர். இரமணன் எதையோ எடுக்கப் போக அந்த ஜீஸ் கிளாஸ் பிரவீணாவின் மீது சரிய இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த அக்ஷயோ சட்டென்று எழுந்து நின்று விட்டான்.அதனை மிக நிதானமாகத் தடுத்து டேபிளில் வைத்தவள் முகம் புன்னகை மாறவே இல்லை.

‘பிரவீணா நாம் தனியாகப் பேசலாமா?’

என அழைத்தவனை விசித்திரமாகப் பார்த்தாலும் தகப்பனின் புறம் பார்த்து அனுமதி கேட்டவள்,

‘ஓ நிச்சயமாக’

எனத் தனது அறைக்கு வெளியில் எப்போதும் தான் அமரும் அந்தக் காற்றோட்டமான இடத்தில் இருந்த கவுச்சில் அவனை அமர வைத்து தான் எதிரில் அமர்ந்தாள்.

அக்ஷய் பிரவீணாவை பார்ப்பதற்கு முன்பிருந்தே அவளைத் திருமணம் செய்வதில் மிக விருப்பமுள்ளவனாக இருந்தான். தனக்கு எல்லாவித பொருத்தங்களும் உள்ள பெண்களுள் முதலிடத்தில் அவன் அவளையே வைத்திருந்தான்.

ப்ளான் ஏ தகர்ந்தால், ப்ளான் பி, ப்ளான் சி என இன்னும் சில பெண்களும் அவனது லிஸ்டில் உண்டு. என்றாலும் கூட முதலில் ப்ளான் ஏ பிரவீணாவை நோக்கியே அவனது குறிக்கோள்.

‘உன்னைப் பற்றி நான் கேள்விப் பட்டதைப் போலவே இருக்கிறாய்… ’ என்று அக்ஷய் ஆரம்பித்தான்.

அதென்ன எடுத்த எடுப்பில் ஒருமையான பேச்சு மனதிற்குள் அவனைக் குறித்த முதல் 10 மதிப்பெண்கள் குறைவுற்றன. அவனுக்குத் தான் மரியாதையான பதிலளிப்பதாக நினைத்திருந்ததை அந்நொடி மாற்றினாள்.

‘அப்படியா அக்ஷய், மிக்க மகிழ்ச்சி’ முறுவலித்தாள்.

‘வந்தது பெண்பார்க்க என்பதை மறந்து கீழே சந்தைக் கடை போலப் பேசியதை பார்த்தாயா? தங்கள் இருவரின் வீட்டினரையுமே சிடுசிடுத்தவாறு பேசியவன் இன்னொரு பத்து மதிப்பெண்கள் கீழிறங்கினான்.

‘மூன்று பேராகச் சென்றால் ஆகாது என்று ஒரு எண்ணிக்கைக்கு அக்காவையும் அழைத்து வந்தால் அவள் மகள் இருக்கிறாளே? வழி நெடுக அழுது என் மூடைக் கெடுத்து விட்டாள்’ புலம்பினான்.

பதில் பேசாமல் புன்னகைத்தவாறு இருந்தாள்.அவன் தலைவலி என்றதும்
‘உங்களுக்காகக் கொஞ்சம் காஃபி வரவழைக்கட்டுமா?’ என விருந்தோம்பினாள். அவன் தலையசைக்கவும் சமையலறைக்கு இண்டர்காமில் அழைத்துக் காஃபி சொல்லி அமர்ந்தவள் அடுத்தப் பத்து நிமிடத்தில் தனக்குத் தலைவலி போக்க இஞ்சி டீ போட சொல்ல வேண்டியதாயிற்று.

அடுத்தப் பத்து வருடங்களுக்கான திட்டங்கள் அவனிடமிருந்தன. அது தவறே இல்லை. ஆனால், அத்தனையும் அவளிடம் பத்தே நிமிடத்தில் அவள் மண்டையில் புகுத்த நினைத்தது தான் தவறு.

‘உன் வசதிக்கு இரவு பகல் பார்க்காமல் பணி புரியும் இந்த ரிப்போர்ட்டர் வேலை எல்லாம் தேவையா?’

என்று ஒரு முறை சொன்னவன். வேலையை விட்டு விட்டு அவள் தனது யூ எஸ் பிசினஸ்ஸிற்காக எவ்வாறு இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்பதையும் சொன்னான். இப்படி அவன் மூளை யூ எஸ்ஸில் இருக்க வெற்றுடம்பாய் அவன் இந்தியாவில் தனக்கெதிரே இருந்து பேசிக் கொண்டு இருப்பதாகத் தோன்றிற்று.

‘சித்தீ’ உற்சாகமாய் அழைத்தவாறே வந்த இரமணனைப் பார்த்ததும் ,

‘ஹப்பாடா இந்த அறுவையிடமிருந்து எனை காத்து விட்டாய் என் பரமா’ எனப் பாட தோன்றியது.

வந்தவன் அவள் கழுத்தை கட்டிக் கொண்டான். அவள் கேட்ட டீ அதன் பின்னர் வந்தது.

இரமணன் தன்னைக் கட்டிக் கொண்டதும் அக்ஷயின் முகத்தில் எழுந்த அசூயை உணர்வை கண்டு கொண்ட பிரவீணாவின் மனதில் இப்போது அவன் மைனஸ் 50 மார்க்குகள் வாங்கினான்.

‘உனக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவு விருப்பமா?’

என்றவனுக்கு உடனே அவள் பதில் கூறவில்லை… தன் இடக்கையில் இரமணனை பிடித்திருந்தவள் வலக்கையில் இருந்த டீயை நிதானமாகப் பருகி முடித்து நிமிர்ந்தாள். இப்போது தலைவலி மட்டுப் பட்டிருந்தது.
இரமணனும் அவள் கைப் பிடியில் இருந்து இறங்கி எதையோ வைத்து விளையாட ஆரம்பித்து இருந்தான்.

‘குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது… என்று முடிப்பதற்குள் அவன் பதில் கொடுத்தான்.

‘எனக்குப் பிடிக்காது…’

‘ஓ…’

‘குழந்தைகள் இருந்தாலே ஒரே சப்தம், நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. நானெல்லாம் குழந்தைகள் உடனே பெற்றுக் கொள்வதாக இல்லை. இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்ததும் ஹாஸ்டலில் விட்டு விடுவேன் அப்போதுதான் ஒழுக்கமாக வளர்வார்கள். நீ என்ன சொல்லுற?’

‘நீ உன் புள்ளய விடு, அதுக்குத் தலைவிதி என் புள்ளைய நான் எதுக்கு விடப் போறேன்? என் கிட்ட வந்து என்னத்துக்குக் கேட்கிற? மனதிற்குள் பொரிந்து விட்டிருந்தாள் பிரவீணா.

‘ஒரு குழந்தை போதும் இல்ல?’ என்றவனுக்கு மைன்ட் வாய்ஸில்

‘எனக்கு ஒன்னு போதாது… ஒன்பது பிள்ளை பெத்துக்கணும் உன் வேலையைப் பாருய்யா வேற எவ கிட்டயாவது போய்ப் பேசு’ என்றாள்.

இருபது நிமிடங்களை இருபது யுகங்களாகக் கழித்து முன்னறைக்கு வந்து சேரும் போது இரண்டு குடும்பங்களும் பேச்சில் ஒன்றி விட்டிருந்தனர்.
விருந்தாளிகள் செல்லும் வரையில் முகம் மாறாமல் புன்னகை பூத்து நின்றால் பிரவீணா.

தனது பேச்சிலேயே கவனம் செலுத்தி இருந்த அக்ஷய்க்கு பிரவீணாவின் இந்தப் புன்னகை புதுத் தெம்பையே அளித்து விட்டிருந்தது என்பதைச் சொல்லவும் தேவையில்லை.

தீபா மகளின் புன்னகை கண்டு மகிழ்ந்து விட்டார். ரவீணா தங்கையைக் கணிக்க முடியாமல் தடுமாறினாள். தன்னை விடச் சைத்யனிடம் அவள் மிகத் தோழமையாய் பழகுவாள் என்பதால் தன் தங்கை மனதில் என்ன என்பதைக் கணவனிடம் கேட்க சொல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

அனைவரும் சென்ற பின்னர் இலகு உடை மாற்றி வந்தவளை தன் அருகே அமர்த்திக் கொண்டார் பிரபாகர்.

‘என்னம்மா?’

‘அப்பா மேரேஜ் லைஃ பத்தி எனக்கு ரொம்ப எல்லாம் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், லைஃ பார்டரா வரக் கூடிய நபரோட பத்து மணி நேரம் செலவழிச்சா கூடப் பத்து நிமிசம் செலவழிச்ச மாதிரி ரொம்பச் சுவாரஸ்யமா , இரசனையா இருக்கணும்னு நினைக்கிறேன்பா…’

‘சரிதானேடா… சரியா தான் சொல்லுற…’

‘எனக்கு இன்றைக்கு இருபது நிமிசம் இல்ல, இருபது மணி நேரம் செலவழிச்ச உணர்வு…’

பிரபாகருக்கு மகளின் பேச்சில் புன்னகை விரிந்தது. அவள் சூட்டிகைத்தனத்தை இன்றும் வெகுவாக ரசித்தார்.

‘ம்ம்…’

இரமணன் என்னைத் தேடி வந்ததும் ‘ என்னைக் காப்பாற்ர வந்த இரட்சகா’ந்னு தோணுச்சுப்பா தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

‘நாள் முழுக்க வேலை செஞ்சாலும் இத்தனை டயர்ஃடாகி இருக்காது’, சோர்ந்து கொட்டாவி இட்டவள்

‘கொஞ்சம் தூங்கி வரேன்பா’ சென்றே விட்டாள்.

‘அவ என்ன சொன்னாங்க?

தீபா வந்து விசாரிக்க ரவீணா பின்னே நின்றிருந்தாள்.

‘வேற மாப்பிள்ளை பார்க்கலாம் தீபா’ முறுவலித்தார்.

தீபாவிற்கு இந்த வரனை விட மனதில்லாததால் தனக்குள் பொறுமிக் கொண்டார்.

சோர்ந்து படியில் ஏறிக் கொண்டிருந்தவளிடம் ஓடோடி வந்தாள் சந்தியா…

அக்கா…

என்னடா குட்டி…?

‘அந்த ஃபோட்டோ விபரம் கேட்டியே’

‘போட்டோவா? நானா? எப்ப?’ வேண்டுமென்றே தங்கையைச் சீண்டினாள்.

‘நீ கூட என் ஃப்ரெண்ட தண்டப் பய சொன்னியே?’

‘ஓ அந்தத் தண்டப் பயலை பத்தியா?’

‘அக்கா, அவன் என் ப்ரெண்டுக்கா…’ விட்டால் அழுதுவிடுவாள் என்பது போலிருக்க,

‘சரி சரி விடு, நீயும் தண்டப் பய சொன்ன, நானும் சொன்னேன். ஒன்னுக்கு ஒன்னு சரியா போச்சு. சரி என்ன விபரம் சொன்னான் உன் பிரண்ட்?’

……

சந்தியா கூறியதை கிரகித்தாள்.

தங்கையின் கன்னத்தை நிமிண்டினாள். ‘நன்றிடா குட்டி’

தமக்கையின் கொஞ்சலில் மகிழ்ந்தவள், ’அக்கா அந்த மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா? சூப்பரா இருக்கார் அக்கா. நல்லா வெளுப்பா, வளர்த்தியா? ரொம்ப ஹேண்ட்சம்கா’

‘உனக்கு அந்த அக்ஷய் பிடிச்சிருக்கா?’

‘ஆமாம்கா ரொம்ப நல்லா இருக்கார்’

‘அப்ப சித்திட்ட உனக்கு அவரைப் பார்க்க சொல்லட்டுமா? கட்டிக்கிறியா?’

அவளிடம் கேட்டவாறு கடந்து செல்ல…

முதலில் உறைந்தவள் ’அக்கா’ எனக் கடுப்பில் படியில் தொம் தொம்மென்று இறங்கிச் சென்றாள். அவளுக்கும் அவள் அக்காவுக்குமான ஊடல் மறுபடி ஆரம்பித்து விட்டது.

தனது படுக்கையில் படுத்தவள் அலைபேசி எடுத்து எண்ணை அழுத்தினாள்.

‘டேய் ப்ரேம்’
….

‘கேட்டியா இந்த விபரத்தை?..’

….

‘இந்தத் தடவை இந்தக் கேம் நம்ம விளையாண்டா எப்படியிருக்கும்?’

சூப்பர்ல?

டன் டன் பாய்…( bye)

கொட்டாவி விட்டவள் ஏசியை அதிகரித்து அந்த ரேஷம் (பட்டு) போர்வையை இழுத்து மூடி தன்னைப் போர்த்தித் தூங்கி விட்டிருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here