9. வெளிச்சப் பூவே

0
741

அத்தியாயம் 9

பிரவீணாவும் பிரேமும் கல்லூரி காலம் முதல் தொடரும் நீண்ட நட்பு கொண்டவர்கள். ஒட்டி திரியும் இருவரும் காதலர்கள் எனக் கல்லூரி அவர்களைக் குறித்து ஓயாது பேசி தொலைத்தது. ஆனால், பிறர் கருத்துக்கு இவர்கள் எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

இருவருக்குமிடையில் அந்தஸ்து பேதம் தவிர இருவருமே ஒத்த இரசனைகள், நோக்கங்கள், ஆர்வங்கள் கொண்டவர்கள். முதலில் இருவரையும் காதலர்களாக இருப்பார்களோ எனப் பேசி தீர்த்த அதே கல்லூரி பிரேம் இறுதி ஆண்டில் அதே கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் கவியைக் காதலிப்பதை அறிந்ததும் இவர்களை ட்வின்ஸ் என்று அழைக்க ஆரம்பித்தது. இப்போது மட்டும் என்ன? பிரேமுக்கும் பிரவீணாவுக்கும் பிறர் யூகங்களுக்குப் பதிலளிக்கும் ஆர்வம் என்றும் இருந்ததில்லை அதனால் வழக்கம் போலவே கண்டு கொள்ளவில்லை.

பிரேமுக்கும் கவிக்குமான நேரம் தவிரப் பிரேமும் பிரவீணாவும் சேர்ந்தே இருப்பார்கள். ஜர்னலிசமும் இருவரும் சேர்ந்தே கற்றனர். அவர்கள் விவாதிக்கும் விஷயங்களை அருகில் அமர்ந்து இருந்தாலுமே மூன்றாவது நபரால் யூகிக்கக் கூட முடியாத நிலை இருக்க…அவர்கள் இருவருடைய உரையாடலில் கவி ஒரு போதும் கலந்து கொண்டதில்லை.

ரெண்டும் மறை கழண்ட கேஸ் என்பது கவியின் கண்டுபிடிப்பு. பிரேமுக்கான ஒருத்தி பிரவீணாவுடனான நட்பை சரியாகப் புரிந்து கொண்டது போலப் பிரவீணாவிற்கான ஒருவன் பிரேமுக்கும் அவளுக்குமான நட்பை புரிந்துக் கொள்வானா? நிச்சயமாகக் கேள்விக்குறியான ஒன்றுதான்.

கல்லூரியில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஒரு ஒரு ஜொள்ளு ப்ரொஃபசரின் காணொளி எடுத்து உயர் நிர்வாகத்துக்கு அனுப்பி வேலையிலிருந்து தூக்கியது, பிரேமின் ஏரியா கவுன்சிலரிடமிருந்து லைப்ரரியை மீட்டெடுத்தது, டியூசன் செண்டர் ஒன்றில் நடந்து கொண்டிருந்த போதை மருந்து பறிமாற்றத்தை நிறுத்தியது, போலீஸே விபச்சார விடுதி நடத்தி வந்ததை அறிந்து அதனை வெளிப்படுத்தியது எனக் கல்லூரி காலத்திலேயே தங்களைச் சுற்றி நிகழுகின்றவைகளைக் கவனிப்பதுவும், அதற்கான நடவடிக்கைகளைத் தங்களை வெளிப்படுத்தாமல் யாரையாவது முன்னிறுத்தி எடுப்பதும் மிகவும் பிடித்தமான செயலாகி போனது.

ஆனால், இவர்களுடைய திட்டங்கள் இவர்கள் இருவருக்கு மட்டுமே எப்போதும் தெரிந்து இருக்கும். தங்களது இரகசிய செயல்பாடுகள் குறித்துப் பிரேம் தன் காதலி அறிந்து கொள்ளக் கூட அனுமதித்தது இல்லை. எல்லாச் செயலிலும் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் எதையும் சிந்திக்காமல் இருவரும் இறங்குவார்கள். எதிர்பார்த்த வண்ணம் நிகழ்ந்தால் சரி, இல்லாவிட்டாலும் சரி ஆனால் எந்த நிலையிலும் இருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது இல்லை.

கல்லூரிக்காலத்தில் செயல்பட்டதை விடவும் ஒரே படிப்பை படித்து, ஒரே இடத்தில் பணிக்கு சேர்ந்ததில் இருந்து இவர்கள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டவைகள் தான் அதிகம்.

பொதுவாகப் பத்திரிக்கை துறையில் செய்தி தாள்களில் வருகின்றவை முழு உண்மைகளாக இராது. பெரும்பாலான விஷயங்களை ஊடக தர்மமென மறைப்பார்கள். உதாரணத்திற்குப் பெரிய விபத்துக்களில், இயற்கை பேரழிவுகளில் மரித்தவர்களின் உண்மையான எண்ணிக்கைகளை யாரும் குறிப்பிடுவதில்லை. குறைவான எண்ணிக்கையை மட்டுமே வெளியிடுவார்கள். சில நேரம் அதன் காரணம் மக்கள் நலனாக இருக்குமென்றால், பல நேரம் ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக இருக்கும்.

என்னதான் செய்தியில் வெளிவராவிடினும் இவர்களுக்கு அரசல் புரசலாகவாவது உண்மை நிலைமை தெரியுமல்லவா?

எனவே இவர்களாக எவரது வாழ்வின் உண்மை நிலையை வெளிப்படுத்த விரும்பினால் தீவிரமாக அதில் இறங்கி செயல்படுவதும், அரசு மூலமாக அதை வெளிப்படுத்த இயலாதெனில் தங்களது மாற்று எண்கள், முக நூல், வாட்சப் ஐடிகள் மூலம் வெளிக்கொணர்ந்த உண்மைகளைக் காணொளிகளாகப் பகிர்வதும் உண்டு.

அனைத்து கட்சிகளும், நடிகர்களும் தங்களுக்குச் சாதகமாக வீடியோக்கள், மீம்ஸ் எனப் பகிரும் குழுக்கள் வைத்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், இலட்சக்கணக்கான இணையத் தகவல்கள் பகிரப்படும் இன்றைய சூழ்நிலையில் இவர்களைக் கண்டு பிடிக்குமளவு யாரும் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை.

முதன் முதலாக வருடாந்திர விருதுகளுக்குப் பாஸ் கிடைத்திருக்க நண்பர்கள் இருவரும் சென்ற போது அங்கு அந்த நடிகைக்கு அவ்வாண்டிற்கான ‘சிறந்த நடிகை’ விருது வழங்கப் பட்டதைக் கண்டபோது அவ்வளவாக நெருடவில்லை. ஆனால், இந்த நடிகையை விட அந்தப் படத்தில் அந்த நடிகை நல்லா நடிச்சிருந்தா இல்லையா? என இருவரும் வீடு திரும்புகையில் பேசிக் கோண்டே வந்திருந்தனர்.

‘பெரும்பாலான நேரங்களில் விருதுகள் எல்லாம் விலைக்கு வாங்கப் படுகின்றவைதான் உனக்குத் தெரியாததா என்ன? என்ன அர்த்தமில்லாமல் பேசுகிறாய்’ என்றவன்.

விழாவுக்குப் போனோமா, நல்லா சாப்பிட்டு குடிச்சு இருந்தோமா, ஃபிகருங்களைச் சைட் அடிச்சோமான்னு இல்லாம தேவையில்லாம …. இழுத்தவனிடம்…

போடா நான் எங்கே சைட்டுக்கு போக?

அதான் நல்லாதானே இருந்தானுங்க…

லிப்ஸ்டிக் போட்ட பசங்களையே எனக்குப் பிடிக்காதப்பா… முகத்தைச் சுளித்தாள்.

உனக்குப் பிடிச்ச பையனை தயாரிச்சு தான் கொண்டு வரணும் போ…

தயாரிச்சுடு… உனக்கும் கவிக்குக் கல்யாணம் ஆனதும் பொறக்குற முத பையனை எனக்குக் கட்டி வை சரியா போய்டும்.

ச்சே ச்சே இவ்வளவு ஏஜ் டிஃபரென்ஸ்ல எனக்கு மருமக வேண்டாமப்பா..

டேய் மாமனாரு… மரியாதையா எனக்குப் பையன கட்டி வைக்கிற சொல்லிட்டேன்…

ஏய் அதெல்லாம் முடியாது…
டேய் மாமா உன் பையனை கொடு, ஆமா சொல்லிக் கொடு….

பேசியபடியே கலாட்டாவில் அவள் வீடு வரை கொண்டு சேர்த்திருந்தான்.

அடுத்து சில மாதங்கள் கழித்துச் சென்ற ஃபேஷன் ஷோவில் ஷோ ஸ்டாப்பராக வந்து நின்றாள் அந்த மாடல்.

அன்றைய தின பேச்சில் மார்க்கெட் இல்லாத அந்த மாடல் நடிகை ஷோ ஸ்டாப்பரானது விவாதிக்கப் பட்டது.

அதன் பின்னர் ஒரு வருடம் கழிந்திருந்தது அவர்கள் தங்கள் இரகசிய செயல்பாடுகளில் பல வேலைகளைச் செய்து முடித்திருந்தனர். அதில் சமீபத்தில் கணவன் மீது பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்லி கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் பெற்றிருந்த மனைவியை அம்பலப்படுத்தி இருந்தனர்.

ஒரு காசு பிரயோஜனம் இல்லாம நாம ஏண்டா இதெல்லாம் செய்யுறோம்? என்று பிரவீணா சிரிக்க… த்ரில் தான் வேறென்ன என்று பதிலளித்து இருந்தான். அந்தச் சுவாரஸ்யம் தான் அவர்களை இது நாள் வரையில் செலுத்தி வந்திருக்கின்றது.

பிரேமுக்கும் கவிக்கும் சில மாதங்கள் முன்பு திருமணம் முடிந்திருந்தது.வார இறுதியில் கவி பிரவீணாவை வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்க அவளும் சென்றிருந்தாள்.

‘தினம் தினம் இந்த மூஞ்சை தான் பார்க்குறேன் இன்னிக்கும் இவளை நீ கூப்பிட்டிருக்க?

என்றவனுக்குப் பிரவீணா முதுகில் அடியை கொடுத்து விட்டு கவியோடு பேசிக் கொண்டும் அவள் சமையலறை செல்லும் போதெல்லாம் கூடவே வால் பிடித்துச் சென்று கொண்டும் இருந்தாள்.
அவர்களைப் பேச விட்டு விட்டு டிவியில் ஆழ்ந்திருந்தான் பிரேம். மனைவியின் குரல் கேட்கவில்லையே தவிர,

ஓ போகலாமே, நான் கூட வரேன். ஆனா, ஏன் என்ன விஷயம்?

ஓ சூப்பர் சூப்பர் பிரேம் கிட்ட சொல்லிட்டியா?

நீ முதல்ல அவன் கிட்டதானே சொல்லிருக்கணும்…

சரி நீ சொல்லுறதும் சரிதான், முதல்ல கன்ஃபர்ம் பண்ணிக்குவோம்.

தோழியின் குரல் கேட்டது.

‘லூசு இவளுக்கு மெதுவா பேசவே தெரியாது’ எனச் சிரித்துக் கொண்டவன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு புறப்பட்டான்.

சற்று நேரத்தில் ஹாலில் டீயும் பிஸ்கட்டுமாக வந்து அமர்ந்து அளவளாவ தொடங்கியவர்கள் வெளியில் இருந்து வரும் பிரேமை பார்க்க,

எங்க போன பிரேம், திடீர்னு ஆளையே காணலை? பிரவீணா முந்திக் கொண்டு கேட்க,

ஆங்க் உனக்கு மாப்பிள்ளை தேட போனேன்.

மாமா உன் பையனை கொடு…. மெலிதாக முணுமுணுத்தவள் சிரித்தவாறே

ஏ பிரேம் நாளைக்கு எனக்கு ஹாஸ்பிடல் போக வேண்டி இருக்கு நான் கவியையும் எனக்குத் துணையா அழைச்சுட்டு போகவா? என்றாள்.

அதெல்லாம் நான் அழைச்சுட்டுப் போய்க்கிறேன், இந்தா ஸ்வீட் சாப்பிடு எனக்குக் குழந்தை வர போகுது என்றவன்…. ஆனா என் குழந்தைக்கு அம்மாகாரி இன்னும் வரை என் கிட்ட ஒன்னுமே சொல்லலை என்றான்.

கவி கூச்சத்திலும் வெட்கத்திலும் நிற்க தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்.

அட உனக்கு எப்படித் தெரிஞ்சது பிரேம்? நீ ரொம்ப ஸ்மார்ட் என்றாள் பிரவீணா அவனுக்கு மட்டும் தெரிய கண்ணடித்தவாரே…

அவன் காது பட வேண்டுமென்றே பேசி க்ளூ கொடுத்தவளல்லவா? கவியின் கூச்ச சுபாவம் தெரிந்தே செயல்பட்டிருந்தாள்.

அவ கொஞ்ச நாளாவே டல்லா இருந்தா, கணவனா இருந்துட்டு அவளோட மாத சுழற்சி தெரியாமலா இருக்கும். அதனாலதான் நானே
அவளை நாளைக்கு அழைச்சுட்டுப் போகிறதாக இருந்தேன். உன்னை அழைச்சதும் இதற்காகத்தான் இருக்கும்னு நினைச்சேன் பெருமிதமாய்ப் பெரிதாய் புன்னகைத்தான்.

டேய் வெட்கப் படுறாடா என் முன்னால என்ன ரோமான்ஸீ, நான் போகிற வரைக்கும் சும்மா இருடா.

அதான் டீ குடிச்சிட்டல்ல… பிரேம் சொல்ல,

அட என்னங்க? கவி பதற,

அப்ப என்னைப் போகச் சொல்லுறியா? இவள் முறைக்கக் கவியின் பதட்டத்தைப் பார்த்து இருவரும் சிரித்து வைத்தார்கள்.

‘மறை கழண்ட கேஸீகள், நான் தான் அடிக்கடி ஏமாந்திடறேன்’ முணுமுணுத்துக் கொண்டே கவி உள்ளே செல்ல இருவரும் மறுபடி வெடித்துச் சிரித்தனர்.

எந்த ஹாஸ்பிடல் போகணும்னு ப்ளான்? என்றவனிடம் கவி சொன்ன மருத்துவமனையைக் குறிப்பிட்டு இந்த ஹாஸ்பிடல் தான் இப்ப ரொம்ப ஃபேமஸ். புதுசா ஆரம்பிச்சிருக்காங்க, நிறைய வெளி நாட்டில் படித்த மருத்துவர்கள் என்று தனக்குத் தெரிந்தவற்றை அவள் அடுக்க,

அலைபேசியில் இணையத்தில் விபரங்களைத் தேடிய பிரேம் அதிர்ச்சியுற்றான்.

சட்டென்று தனது லாப்டாப்பை எடுத்து பழைய செய்திகள் ஒவ்வொன்றாகத் தேடி தேடி அங்கங்கே குறிப்புகள் எடுத்துக் கோர்க்கலானான். அப்போதுதான் அன்றைய தினம் தான் விக்ரம் அவனைச் சுற்றியுள்ள மாயவலையை அறுத்தெறிவது அவர்களது அடுத்த இலக்காகிற்று.

தேதிகளையும் பெயர்களையும் சம்பவங்களையும் அடுக்கலானான். அத்தனையும் முடிந்த பின்னர்ப் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்த பிரவீணாவையும், தனக்காக டீ கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு அருகே அமர்ந்திருந்த மனைவியையும் ஏறிட்டவன்.

கவிமா நாம வேற ஹாஸ்பிடலுக்குப் போகலாம் சரியாடா?

சரியெனத் தலையசைத்து புன்னகைத்தாள் கவி.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here