அன்புள்ள தோழிக்கு,
நலம் விசாரிப்புகள் தேவையில்லை சகி. அது உன்னை காயப்படுத்தும் என்றறிவேன்.
காதல் தோல்வியில் ஏமாற்றத்தின் உச்சம் உணர்ந்து கண்களை கசிய விட்டிருப்பாய்.
இளகிய மனம் படைத்தவள் நீ
நினைவிருக்கிறதா,
கோவில் தெப்பக்குளத்தருகிருந்த அந்த அரசமரத்தின் தடிமனான கிளையில் அமர்ந்திருந்த ஏதோ ஓர் காட்டுப்பறவையை புறாவென்றென்னி ரசித்துக்கொண்டிருந்தாய். திடுமென அந்த பட்சி ஓடும் ஓணானை தலையில் மிதித்து துடிக்க துடிக்க கொல்லும் காட்சியை கண்டவள் தாமரைக் கண்கள் இன்னும் விரிய அலறி ஓரடி பின்சென்று அதிர்ச்சியில் உறைந்திருந்தாய்.
அந்நிகழ்வை ஒத்ததுதான் உன் காதலும் தோல்வியும் என்று நன்கறிவேன் தோழி.
இன்றும் புரியவில்லையடி
இளகிய மனம் கொண்டவள் நீ.
பத்து வருட நட்பை நீ முறித்துகொள்ள பள்ளி பருவத்தில் காதல் வேண்டாம் என்ற என் ஒற்றை எச்சரிக்கை போதுமானதாய் தோன்றியதா உனக்கு. சரி விடு.
இன்று மனம் சோர்ந்து பரிதவித்திருக்கும் உன்னை ஆரத்தழுவி ஆறுதலுரைத்து தேற்ற ஆசைதான். ஆனால் என் முகம் பார்க்கையில் நமக்கிடையே என்றோ விழுந்த இடைவெளி “நான் எச்சரித்தது நடந்துவிட்டது பார்த்தாயா”என்று எள்ளல் செய்வதாய் எண்ணவைக்கும் உனை. அவ்வெண்ணம் உன் துயரத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகையால் இந்நிலையில் அந்த சந்திப்பு வேண்டாம்.
இந்த வாழ்வின் மற்றுமொரு பரிமாணத்தை கண்டிருப்பாய். ஏமாற்றத்தின் உச்சத்தில் அது ஏதோ ஓர் பாடம் கற்றுக் கொடுத்திருக்கும் உனக்கு. உன்னுடைய தேவை என்னவென்பதை நீ உணர்ந்திருப்பாய். காத்திரு. காலம் வருகையில் உனக்கானவனை நீ தேர்ந்தெடு.அவனது அன்பு உன் மனக்காயங்களுக்கு மருந்தாகும்.
இனி ஏதோ ஓர் நாளில் உன்னவனுடன் நீ பேசி சிரித்து வலம் வருகையில் தற்செயலாக என்னைக் கண்டால் உயிர்நிறைந்த மலர்ச்சியொன்றை உன் இதழ் வழி உணர்த்து. அதுபோதுமெனக்கு. முழுதாய் சாய்க்கப்பட்ட என் நட்பின் அடிமரத்தை மழைக்காளான்கள் அலங்கரித்ததாய் ஆனந்தம் கொள்வேன்.