1. நீ _ கவிதை _ பாரதி

0
469

முதிர்பருவத்தில்
தனித்துவிடப்பட்ட தேர்ந்த
கைவைத்தியக்காரியிடம்
குழந்தை பருவமதில்
அவளது மடியில் தவழ்ந்த
ஏதோ ஓர் சிறுவன்
வளர்ந்தின்று முகம் மலர
நலம் விசாரிக்கையில்
நரை கிழவியின் இதழ் உதிர்க்கும்
புன்னகை. நீ

எங்கள் வீட்டு
குளியலறை பக்கவாட்டு
சுவரின் ஆளுரயத்திற்குமேல்
ஒரு செங்கல் அளவு இடைவெளியில்
வாடகையின்றி கூடமைத்த பறவையை
சத்தமிடாமல் ஒளிந்து நின்று பார்க்கையில்
வரும் சுவாரஸ்யம். நீ

சுட்டெரிக்கும் வெயிலின்
அலைந்து திரித்து
களைத்து வீடடைந்து
பருகும் ஒரு கோப்பைத்
தண்ணீரின்
சுவை நீ

வாரத்தின் ஆறுநாள்
இயந்திரத்தோடு
இயந்திரமாய் உழைத்து
அலுத்தவனின்,
மேற்பார்வையாளர்களின்
ஏச்சுக்களும்
இரைச்சல்களும் மட்டும் பழகிய
செவிகளில்
ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி
வழி ஒலிக்கும் இன்னிசை நீ

ஆகமொத்தம் நீ
என் வாழ்வின் அர்த்தமிகு தருணம்
என் வாழ்வின் சிறுமகிழ்ச்சி
என் வாழ்வின் ஆசுவாசம்
என் வாழ்வின் உன்னதம்

என் மனராஜ்ஜியத்தில் நீ ஆட்சி செய்த காலம்
என் வாழ்வின் பொற்காலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here