பிரியமானவளே 2

0
670
Bharathi _ Priyamanavale

மணி சென்றவுடன் அழுது ஓய்ந்த பல்லவியின் மனம் முழுதும் கழிவிரக்கம் சூழ்ந்து கொண்டது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் பிரியம் வைக்கும் அனைவரும் ஏன் என்னை ஏமாற்றுக்கிறார்கள் என்ற கேள்வி மட்டும் உள்ளத்தில் எழும்பியது.

சிறு வயதில் பல்லவிக்கு அப்பா என்றால் உயிர். எத்தனை வளர்ந்தாலும் அப்பா கையில் தான் சாப்பிடுவாள். அப்பாவின் அம்மாவே கூட சில சமயங்களில் அவரை திட்டினால் என் அப்பாவை எப்படி திட்டலாம் என்று சண்டைக்குப் போவாள். அம்மா கூட சில நேரங்களில் சலித்துக் கொள்வார் ஆயிரம்தான் நாம ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் பொம்பள புள்ளைங்க அப்பா மேல தான் பாசமா இருப்பாங்க. அவ்வளவு பாசம் அப்பா மீது.அப்படிப்பட்டவள் தனது 13வயதிற்கு பிறகு அப்பாவிடம் சரியாக முகம் கொடுத்து பேசியதேயில்லை. காரணம் அவர் அப்பா இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை அறிந்து கொண்டது

ஆம். ஒரு நாள் இரவு பல்லவி அரைத்தூக்கத்தில் விழித்திருந்த போது தூங்குகிறாள் என நினைத்து இவள் அம்மா அழுதபடியே அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.

நம்ம பொண்ணுக்கு 13 வயசு ஆச்சு. இன்னமும் அவ சகவாகசத்தை விட முடியலையா உங்களால. ஊர்ல நாலு பேருக்கு தெரிஞ்சா உங்க மரியாத என்னாகுறது. நீங்க பெத்த பொண்ணுக்கூட உங்களை மதிக்காதுங்க வேணாங்க.

ஏய் இப்ப எதுக்குடி ஒப்பாரி வைக்கிற. ஊர்ல எவனும் பண்ணாத தப்பை நான் பண்ணிடல.இப்ப என்ன ஆகிடுச்சுனு ஒக்காந்து பொலம்பிட்டிட்டு இருக்க. இன்னொரு பொண்டாட்டி இருந்தா என்ன உன்ன என்ன வீட்ட விட்டு துரத்தியா விட்டுட்டேன்? இல்லை நகைநட்டு எதுனா குறையா இருந்தா கேட்டு வாங்கிக்க. வீணா உனக்கு தேவையில்லாததுல தலையிடாத கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் சொன்னார்.

அதன்பிறகு தொடர்ந்த அவர்கள் உரையாடல்களில் பல்லவிக்கு கவனமில்லை. தன் அப்பா இப்படிப்பட்டவரா என அப்பாவின் இன்னொரு முகத்தை அறிந்த அதிர்ச்சியில் இருந்தாள்.
அன்றிலிருந்து அப்பாவிடம் வைத்திருந்த அலாதி அன்பு, ஒட்டுதல் எல்லாம் காணாமற் போய் விலகல் உண்டாயிற்று. பல்லவியின் தந்தை பிள்ளை வளர்ந்துவிட்டாள் எனறெண்ணி அந்த விலகலை ஏற்றுக். கொண்டார்.

பல்லவியின் தனக்கு வரப்போகும் கணவன் தன்னை மட்டும் நேசிப்பவனாக தனக்கு மட்டுமே உரியவனாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு அச்சாரமிட்டது இந்த நிகழ்வுதான். அம்மாவிடம் முன்பை விட அதிக நேரம் செலவழித்தாள். ஏனெனில் அந்த நிகழ்வின் பிறகு தான் இதுவரை அம்மாவின் துயரை கவனிக்கவில்லையே என்ற குற்றவுணர்வு எழுந்தது.நினைவு தெரிந்த வரையில் அவள் பெரும்பாலும் அவளின் அப்பாவுடன் மட்டுமே சுற்றி திறிந்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது.

எல்லா கடவுள்களிடமும் பல்லவி வைத்த வேண்டுகொள் ஒன்றே ஒன்றுதான். தனக்கு வரப்போகிற கணவன் உடலளவிலும் சரி மனதளவிலும் சரி தனக்கு மட்டுமே உரியவனாக இருக்க வேண்டுமென்பது. அவளுக்கே அவளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு தனக்கு வரப்போகிற கணவனுக்கு தான் உண்மையாக இருக்கவேண்டுமென்பது. அதன்படி பள்ளி கல்லூரிக் காலங்களில் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினாள். இளவயது ஈர்ப்புகளுக்கு மனதில் சற்றும் இடம் கொடுக்கவில்லை.

இந்த எதிர்பார்ப்புகள் தான் மணியின் முன்னாள் காதலி பற்றி அறிந்த நொடியில் அவளது மனம் சுக்குநூறாக காரணமாக அமைந்தது.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here